மொழிவது சுகம் டிசம்பர் 2 -2012

 

மின்னுவதெல்லாம் பெண்ணல்ல

 

அழகில் தேவதை, அஞ்சப்பரையும் முனியாண்டியையும் அசத்தும் சமையற் கைபக்குவம், “களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சி, கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே, உடன்போய் வரைதலும் உண்மையான வாழ்க்கைத் துணை – 19 ஆண்டுகால இல்லற வாழ்க்கை -இன்று பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டதென ஒப்பாரிவைக்கிறார் மனிதர் -பெயர் ஜான், பெல்ஜியம் நாட்டின் 64 வயது குடிமகன்.

 

இந்திய உபகண்டத்தில் ‘சர்தார்ஜி ஜோக்குகள்’ எத்தனை பிரசித்தமோ அத்தனை பிரசித்தம், ஐரோப்பியர்களிடையே – குறிப்பாக பிரான்சுநாட்டில் -பெல்ஜிய மக்களை முட்டாள்களாகச் சித்தரிக்கும் – ‘Histoire Belge’. அண்மையில் பிரெஞ்சுத் தினசரியில் வந்திருக்கும் செய்தி பிரெஞ்சு பேசும் பெல்ஜியமக்களைப் பற்றிய கருத்திற்கு வலுவூட்டியிருக்கிறது.  நமது பெல்ஜியக்கதை நாயகருக்கு தற்போது 64 வயது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்தவளைக் காந்தர்வ மணம்புரிந்து 19 ஆண்டுகாலம் இல்லறவாழ்க்கை அவருக்கு அமைதியாகவேக் கழிந்திருக்கிறது. ஜான், களவு வாழ்க்கையிலும் களவுக்குப்பின் தொடர்ந்த கற்பு வாழ்க்கையிலும் எவ்வித குறையுமில்லை என்கிறார். கடந்த வாரத்தில் அவர் சகபாலினத்தைச்சேர்ந்த ஒருவருடன் தாம் பல ஆண்டுகள் இல்லறம் நடத்தியிருக்கிற உண்மை தெரியவந்ததிலிருந்து மனிதர் பேயறைந்தவர் போலிருக்கிறார்.

 

இரண்டுமுறை விவாகரத்து செய்த மனிதருக்குக் கணக்கை நேர் செய்ய மூன்றாவதாக ஒன்று தேவைபட்டிருக்கிறது. 1993ம் ஆண்டு மோனிக்கா என்பவளைச் சந்தித்திருக்கிறார். மோனிக்காவிற்கு இந்தொனேசியா சொந்த நாடு. பெல்ஜியத்திற்குப் புலம்பெயர்ந்திருந்தாள். ஜான் உடைய சகோதரிவீட்டில் பணி. வழக்கம்போலவே சகோதரி இல்லத்திற்கு அன்றைய தினம் சென்றிருக்கிறார். கதவைத் திறந்த மோனிக்காவின் முதற்பார்வையே மோகம் கொள்ளும் வகையில் இருந்ததாம். அவள் அழகும், நடத்தையும் ஜானிடத்தில் காதலை விதைத்திருக்கிறது. சந்திப்பும் அதனைத் தொடர்ந்து காதலும் இருவருக்கிடையில் முகிழ்ந்தபோது இவருக்கு 44 அவளுக்கு இருபத்தேழு வயது. இருதரப்பிலும் குறுக்கீடுகளில்லை. நெருங்கிவந்தார்கள். உறவுக்கும் தடையில்லை. ஜானுக்குச் சின்னதாக ஒரு நெருடல். ‘ உனக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எண்ணமேதுமில்லையே?’ எனக்கேட்டிருக்கிறார். “சீச்சி அப்படியேதுமில்லை. சந்தோஷமாக இருக்கவேண்டிய வயதில், எதற்குப் பிக்கல் பிடுங்கல்”, என்றிருக்கிறாள். 44 வயதில் 4 பிள்ளைகளுக்குத் தந்தை என்ற நிலையிலிருந்த ஜானுக்கு, இருபத்தேழு வயது மோனிக்காவின் குடும்ப வாழ்க்கையைக்குறித்த கருத்தியம் மகிழ்ச்சியை அளித்தது.

 

ஏறக்குறைய இருபதாண்டுகால மணவாழ்க்கை.  மணவாழ்க்கையிலும்  அதன்பாற்பட்ட உறவுகளிலும் தம்பதிகளுக்கிடையே விரிசல்களில்லை.  வாழ்க்கைத் துணையின் பாலினம் குறித்து அவருக்கு ஐயங்கள் எழுந்ததில்லை. “உறவுக்கு முன்னும் பின்னும் மாத்திரைகள் எடுத்துக்கொள்வாள். ஆனால் என்னிடம் உண்மையை மறைக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவ்வளைவையும் செய்திருக்கிறாள்”, என்கிறார். “பாலியல் உறவில் அது சாத்தியம் என்கிறார்கள், அத்துறைசார்ந்த வல்லுனர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. மோனிக்கா பின்னிரவுகளில் வெளியில் போக ஆரம்பித்திருக்கிறார். அப்போது உடுத்திக்கொண்டவிதம் சந்தேகங்களுக்குக் காரணமாகியிருக்கிறது. அரசல் புரசலாக வதந்திகள் பரவ ஆரம்பித்து, கடைசியில் இவர் காதையும் எட்டின. மோனிக்காவின் ஒன்றுவிட்ட சகோதரன் இந்தோனேசியாவிலிருந்து வர, உண்மையைப்போட்டு உடைத்திருக்கிறான். ‘ஒரு சில நொடிகளில் எனதுலகம் இருண்டுபோய்விட்டது’ இருபதாண்டுகாலம் என்னை வன்புணர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டதாக நினைக்கிறேன், ‘ என அழுகிறார். அவரைச்சேர்ந்தவர்கள் பலருக்கும் உண்மை தெரியுமென்றபோதிலும் இவரிடத்தில் சொல்லாமல் மறைத்தது,  மனதைப் பெரிதும் பாதித்திருக்கிறது. மோனிக்காவுடனான தமது திருமணத்தைச் செல்லாதென அறிவிக்கக்கோரி ஜான் வழக்குத் தொடுத்திருக்கிறார். மோனிக்கா ஜானை மட்டுமல்ல பொய்யான ஆவனங்களை அரசுக்கு அளித்ததன்மூலம் பெல்ஜிய அரசாங்கத்தையே ஏமாற்றி இருக்கிறாள்(ர்) என்கிறார் ஜானுடைய வழக்குரைஞர்.

 

ஒருபாலினத் திருமணத்தை ஆதரித்து விரைவில் பிரான்சுநாட்டில் சட்டவரைவு கொண்டுவர இருக்கிறார்கள்; இம் முடிவை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் கடந்த சில கிழமைகளாக ஊர்வலம் ஆர்ப்பாட்டமென இறங்கியிருக்கிறார்கள். ஆதரிப்பவர்கள் இடதுசாரிகள், பெண்ணியம் பேசுகிறவர்கள், புத்திஜீவிகள். எதிர்ப்பவர்கள் வலதுசாரிகள், தீர மதச்சார்பு சிந்தனையாளர்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு உக்ரேன் நாட்டைச்சேர்ந்த ‘திறந்த மார்பு’ பெண்ணியக்கத்தினர் கணிசமாக ஐரோப்பிய நாடுகளில் பரவிக்கொண்டிருக்க அவர்களும் ஒரு பாலின திருமணத்திற்கு ஆதரவாக கொடிபிடித்துக்கொண்டு பாரீஸ் வீதிகளில் ஊர்வலம்போகின்றனர். ஒருபாலின எதிர்ப்பாளர்களுக்கும் இவர்களுக்கும் நடக்கும் அடிதடிச் சண்டைகள், காவற்து¨றையினர் தலையீட்டுடன் பார்க்க விறுவிறுப்பாக இருக்கின்றன.

 

எதிர்பாலினத்தைச்சேர்தவர்களை மணப்பதென்பது இயற்கையின்பாற்பட்டது. ஒருபாலினப் புணர்ச்சி, உலகம் தோன்றிய நாளிலிருந்து இருந்திருக்கலாம் எனினும் சமூகம் அதனை ஒதுக்கிவைத்தது. இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் ஓர் ஆண் மற்றொரு ஆனை அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணை மணப்பது தனி மனிதச் சுதந்திரத்தின் பேரால் நியாயப்படுத்தப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் ஆலந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பெல்ஜியம், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் ஒருபாலினத் திருமணத்தை ஆதரித்து சட்டங்களை இயற்றியுள்ளன. இவற்றைத் தவிர வேறு சில ஐரோப்பியநாடுகளில் திருமணச் சடங்கின்றி ஒரு பாலின மக்கள் சேர்ந்துவாழலாம் என்கிற வகையில் சட்டப் பாதுகாப்புகளை வழங்குகின்றன. அவைகளில் பிரான்சுமொன்று. பிரான்சுநாடு கூடிய விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமென அறிவிக்க இருக்கிறது. பிரான்சைச்சேர்ந்த ஒருபாலின விரும்பிகள் பலரும் அண்டைநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்துக்கொள்கிறார்கள். ஐரோப்பியரிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எங்கே மணம் செய்துகொண்டாலும் அது சட்டப்படி செல்லும் என்பதால் இந்நடைமுறை அதிகரித்துவருகிறது. அதைத் தடுக்கவும், எல்லோருக்கும் திருமணம் என்பதை ஒரு சமூகத் தேவையாகவும் உணர்ந்து ஒரு பாலின திருமணச் சட்டத்தைக்கொண்டுவரவிருப்பதாக அரசு காரணம் சொல்கிறது. ஆனால் பிரச்சினை அதுமாத்திரமல்ல. இப்போது ஒரு பாலினத் தம்பதியினர் குழந்தைகளைக் தத்தெடுக்கவும் சட்டபடி அனுமதிவேண்டும் என்கின்றனர். சில நாடுகள் அதனை அனுமதிக்கவும் செய்கின்றன.

 

ஒரு பாலினமக்கள் திருமண உரிமைகோருவது ஒருபக்கமெனில் அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்க நினைப்பது எந்தத் தனிமனிதத் சுதந்திரத்தின் பாற்பட்டதென விளங்கவில்லை. நாய்போல பூனைபோல பிள்ளைகளை வளர்க்க நினைக்கிறார்கள். என் பிள்ளைக்கு இரண்டு தந்தை அல்லது இரண்டுதாய் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். மனதளவில் பிள்ளைகளுறும் சேதத்தை இவர்கள் கணக்கில் கொள்வதில்லை.

 

இருபதாம் நூற்றாண்டிற்கான பிரச்சினையே தனிமனிதச் சுதந்திரமென்று சொல்லவேண்டும். நான்குபேர், அண்டைவீடு, தெரு, சமூகம் இவர்களுக்காகவும் நாமிருக்கிறோம் என்றிருந்த வாழ்க்கையை நமக்கே நமக்கென்று அமைத்துக்கொள்வதே இன்றுள்ள பிரச்சினை. குடும்பத்திற்குள்ளும் சரி, புறமும் சரி தன்னலவாழ்க்கை அமைந்தால் போதும். இனி மரங்களுக்குக் கிளைகள் வேண்டாம். அது எனது சுவற்றைக்கடந்து நீளலாம் துளிர்க்கலாம், பூ பூக்கலாம். காயாகாலாம் கனியாகலாம் நிழல்தரலாம் ஆகவே கூடவே கூடாது. எனது மரம் நான் வெட்டுவேன், விறகாக்குவேன் கேள்விகேட்க அந்நியருக்கு உரிமையில்லை. எப்படியும் வாழ்வேன். உனக்குக் பிடிக்காதென்றால் கண்ணைமூடிக்கொள். நான் எனது, எனது உணர்வுகள், ஆசைகள், உந்துதல்கள் முக்கியம்.  இன்னும் நாற்பது ஆண்டுகள் கழித்து நாய் பூனையைக்கூட மணம் செய்துகொள்வேன்! புத்தி சுவாதீனத்துடன்து நாற்பது பேராகி நாற்பது இலட்சம்பேராகி நான்குகோடிபேராகி நாய் பூனையுடன் திருமணம் செய்துகொள்ள நினைத்தால்  தவறேஇல்லை, தனிமனிதச்சுதந்திரத்தின் பேரால் நீங்கள் ஆதரிக்கவேண்டும். நான் அறிவுஜீவி. எனவே செய்வது சரி. கேட்பார் கூடாது.

 

பர்மெனிட் (Parménide) கிரேக்கத் தத்துவவாதி. பிறப்பு, இறப்பு, ‘இருத்தல்’ ஆகியவற்றை விவாதித்தவர் அவர் உயிர்வாழ்க்கை நெறியை இருவகைபடுத்துகிறார். ஒன்று உண்மை மற்றது அபிப்ராயம் அவற்றின் தொடர்ச்சியாக. இருத்தல் மற்றது இருத்தலின்மை என்ற இரு சொற்களை உபயோகித்தவர். இருத்தலின் பணி உறபத்தியில் ஈடுவது, உற்பத்தி முடிவுக்கு வருகிறபோது இருத்தலின்மையாகிறது. ‘இருத்தலை’யும் (être) ‘இருத்தலின்மையையும் (Non-être) உயிரி, பிணம் என்றும் எழுதலாம். பர்மெனிட்டின் சிந்தனைப்படி செயல்பாடற்ற, உற்பத்தியில் ஈடுபடாதவை பிணம்.

 

———————————————

author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *