அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தமயந்தியின் குரல்

This entry is part 15 of 32 in the series 13 ஜனவரி 2013

பெரும்பாலும் வெகுஜனஇதழ்களிலும், கொஞ்சம் இலக்கிய இதழ்களிலும் படித்த தமயந்தியின் சிறுகதைகள் அவரின் பிறப்பு, ஜாதி சார்ந்த அடையாளங்களைக் காட்டியதில்லை. அவரின் நாவல்” நிழலிரவு” படிக்க ஆரம்பித்தவுடன் கிறிஸ்துவ

சமூகம் சார்ந்த அவரின் அனுபவங்கள் அவரின் பெயர், கிறிஸ்துவ சமூகம் பற்றிய எண்ணங்கள் அவரின் இன்னொரு முகமாய் வெளிப்படுத்தியது.

தமிழ்ச்சூழலில் கிறிஸ்துவ இலக்கியம் பற்றிய யோசிப்பில் எழுத்தாளர் பட்டியல் விடுபட்டுப்போகிறது. சிஎல்எஸ், பூக்கூடை எண்பதுகளில் நடத்திய இலக்கியம் சார்ந்த கருத்தரங்குகள் ஞாபகம் வந்த்து.நண்பர்வட்டம் பத்திரிக்கை சரோஜினி பாக்கியமுத்து மறைந்து போனார். ” அரும்பு “ சிறுவர் இதழாகவே நின்று விட்டது. அதன் இலக்கிய தரம் அவ்வப்போது அதன் ஆசிரியராய் அமர்த்தப்படும் பாதிரியார்களின் இலக்கிய அக்கறை சார்ந்தே வெளிப்பட்டிருக்கிறது,

“ கோணல்கள்” தொகுப்பின் பாதிப்பில் நாங்கள் வெளியிட்ட “ நாலு பேரும் பதினைந்து கதைகளும்” தொகுப்பில் இடம்பெற்ற கார்த்திகா ராஜ்குமார் அப்போதைய ஸ்டார் எழுத்தாளர். இப்போது கிறிஸ்துவ மத போதக விசயங்களை சின்னத்திரையில் பரப்புகிறவராகி விட்டார், காஞ்சிபுரம் எக்ஸ்பர்ட் சச்சிதானந்தமும் எழுதுவதில்லை. தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவர்களின் ஜாதீய சிக்கல்களை பாமா, ராஜ்கவுதமன், ஆர். எஸ்.ஜேக்கப் கொஞ்சம் எழுதியிருக்கிறார்கள். பத்தாண்டுகளில் முஸ்லீம் மக்களின் வாழ்க்கை தமிழில் குறிப்பிட்த்தக்கதாய் சொல்லப்பட்டது போல் கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கை முன் வைக்கப்படவில்லை.நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ இதழ்கள். சிலது விடுதலை இறையியலைப் பேசுகின்றன. அவற்றில் இலக்கியப் பதிவுகள் ரொம்பக்கம்மி.

தமயந்தியின் “ நிழலிரவு “ நாவல் கூட ” சிறகுகள்” என்ற கிறிஸ்துவ இதழில் வெளிவந்ததுதான்.அதன் வடிவம் பின்நவீனத்துவம் சார்ந்தது.பெருங்கதையாடலின் வடிவத்தை, மரபான நாவலின் நேர்கோட்டு வடிவத்தை உடைத்திருக்கிறார். பாட்டியின் கடைசி தின்ங்கள் சொல்லப்படுகின்றன். பேத்தியின் கடிதங்கள் . ஆசிரியர் சமூகம் பற்றிய ஒரு சிறுகதை . அதன் மீதான விமர்சனகுரல்கள், அபிப்பிராயங்கள், மார்ஸ் ஏசு சந்திப்பு விவாதங்கள் என்ற ரீதியில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்நாவலின் காலம் இந்திய அரசியலின் இருண்ட காலமான நெருக்கடி நிலமைப் பிரகடனகாலம். மிசா கைதுகள், தலைவர்களின் தள்ளாட்டங்கள் குறிப்புகளாய் அங்கங்கே விரிகின்றன.கிறிஸ்துவ மனிதர்கள் அவர்களுள் நாடார்கள் ஆதிக்கம், மதம் மாறிய கிறிஸ்தவர்கள், ஆங்கிலேயர்களின் வாரிசானவர்கள், இவர்களின் முரண்பாடுகளாய் விரிகிறது.

பெண்களின் பார்வையில் ஆண்கள் என்ற வரிசையில் மோசமான நிறைய ஆண்கள் தென்படுகிறார்கள் ஆரோக்கியதாஸ் போன்றவர்கள். புரோட்டா மாஸ்டர் செல்லப்பாவின் கனவுகள் வித்தியாசமானவை.பலியாகிற நிறைய பெண்களும் காட்டப்படுகிறார்கள். மாமனாரோடு வாழ்ந்து தற்கொலை செய்து கொள்கிற அகஸ்டஸ் டீச்சர், குழந்தைப்பேறு இல்லாத வசவால் வாழ்கிற இளவரசி, தீக்குளித்து இறந்து போகிற பாதிரியாரின் மனைவி, பொட்டு வைத்ததால் விமர்சிக்கப்படும் பெண், மாதவிலக்குக் காலத்தில் முக்காடிடாமல் பாதிரியிடம் போகும் பெண்ணின் அவஸ்தை, கதையெழுகிறதால் கண்டனத்திற்கு ஆளாகும் பெண், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் நட்ததும் சீட்டில் சேராத ஆசிரியைகள் மீதான வசவுகள்….

பெரும் நிறுவனங்களாகி விட்ட கிறிஸ்துவ மெசினரிகளின் ஊழல், தேவாலயங்களின் பொய்க்கணக்குகள், கோவில் தேர்தல் தில்லுமுல்லுகள், ஓரினச்சேர்க்கைக்கு மாணவர்களை உட்படுத்தும் பாதிரியார்கள்,மெசினரி பள்ளிகளில் வேலை வாங்க த்லைவிரித்தாடும் லஞ்சம்,பள்ளிகளில் பழிவாங்கும் நடவடிக்கைகளாய் வேலை மாற்றங்கள், அதை ரத்து செய்ய சாக்லெட், இனிப்பு சகிதமாய் அலையும் ஆசிரியைகள் என சிக்கலான நுணுக்கமாய் காட்ட நிறைய கதாபாத்திரங்கள் இதில் உண்டு.

மதம் மாறிய கிறிஸ்தவர்கள், பிற்பட்ட ஜாதியைச் சார்ந்த கிறிஸ்தவர்களை பாதிரிகள் நடத்தும் தீண்டாமைக் கொடுமை பல இடங்களில் விரிகிறது. பிணம் புதைக்கிற இடத்தில் கூட பாகுபாடு. பொங்கல் மாடுகள் மந்திரிரிப்பில் கூட வேற்றுமை என் நீள்கிறது. இதன் முன்னுரையில் பிரபஞ்சன் குறிப்பிடும் தேவாலயங்களில் மதம் மாறியவர்கள், ஒரிஜனல் கிருஸ்தவர்கள் உட்கார்ந்து ஜெபம் செய்யும் இடங்களில் தடுப்புச் சுவர், நீதிமன்றத்தலையீடுகளுக்குப்பின் அவை பெஞ்சால் தடுக்கப்படுதலை இங்கும் காண்கிறோம். பா. விசாலத்தித்ன் ” உண்மை ஒர்ளிர்கவென்று பாடவோ “ இவற்றைக் நாவல்களிலும் காணலாம்.

இந்நாவல் தேவாலய சபை அரசியல், ஆசிரியர் சமூக அரசியல், மதம்மாறி கிறிஸ்தவர்களை ஒதுக்கும் அரசியல் ஆகியவற்றின் மீதான் அதிகாரம் பற்றிய விமர்சனமாக விரிந்துள்ளது. கர்த்தரை கோவிலுக்குள் விற்பது பற்றிய விமர்சனம் வலுவாகவே வைக்கப்படுகிறது.காரல்மார்ஸ், ஏசுவின் சந்திப்புகளில் தொழிற்சங்க அரசியல் அதிகாரம், பொதுவுடமைக்கட்சிகளின் மீதான விமர்சனம் மேலிடுகிறது. கிறிஸ்துவ சபை அதிகாரத்தை கேள்விக்குறியாக்கும் தமயந்தி தொடர்ந்து காவல்துறை சார்ந்த அதிகாரத்தை கேள்விக்குறியாக்குவதை சமீபத்தில் வெளிவந்த “ கோட்டை காவல் நிலையம்” போன்ற நிறையக் கதைகளிலும், அவர் பங்கு பெறும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ” ரவுத்தரம் பழகு” போன்ற நிகழ்ச்சிகளிலும். புதிய தலைமுறை பத்திரிக்கையில் அவர் சமீபத்தில் எழுதி முடித்த “ இந்த நதி நனைவதற்கல்ல “ தொடரிலும் காணலாம். காணலாம்.கல்வித்துறையின் ஊழல், அதிகாரத்துவம், பாலியல் சுரண்டல் குறித்து தான் எழுதிய ஒரு கதைக்காக தன் விரல் முறிக்கப்பட்டதையும், அது தந்த உளவியல் பாதிப்பிலிருந்து விடுபட நீண்ட காலம் ஆனதையும் ஒரு உரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.விவேகானந்தர் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவத்திற்கு திரும்ப வேண்டும் என்றார், தமயந்தி கிறிஸ்தவர்கள் மனித நேயத்திற்குத் திரும்ப வேண்டும் என்கிறார்.இவரின் நடை வெகு நுணுக்கமான ரசனைப்பதிவாகவும், தி.ஜானகிராமன், மாலன், பிரபஞ்சன் பாதிப்பிலான கலவையாகவும் சுவாரஸ்யமான வாசிப்பிற்குள்படுத்துவதாகும்.இந்த நாவல் பத்தாண்டுகளுக்கு முன் காவ்யா பதிப்பக வெளியீடாக வந்தது மறு பிரசுரம் காணவில்லை. பிரபஞ்சன் இதன் முன்னுரையில் குறிப்பிடப்படுவது போல் இது 1000 பக்கங்களில் விரிவாக எழுதப்பட்டிருக்க வேணடிய களமாகும்.

( கோவையில் இலக்கியச் சந்திப்பு அமைப்பு நடத்திய தமயந்தியின் படைப்புலகம் கருத்தரங்கில் பேசியதன் கட்டுரை வடிவம். அக்கருத்தரங்கில் கோவை ஞானி, நாஞ்சில்நாடன், நாவலாசிரியர் மா,நடராசன், அக்னிபுத்திரன் , பூஆ ரவிந்திரன், பொன்சந்திரன், வேனில், இளஞ்சேரல், தியாகு,பொன் இளவேனில்,இயற்கை சிவம், தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். தமயந்தியின் மூன்று சிறுகதைத்தொகுப்புகள் பற்றி சுமதி ராம், சக்திசெல்வி, நித்திலன் ஆகியோர் உரையாற்றினர்)

= சுப்ரபாரதிமணியன்

Series Navigationமணிராமின் “ தமிழ் இனி .. “பெண்ணுடலும் பாலியல் வன்முறையும்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Comments

  1. Avatar
    சுப்ரபாரதிமணியன் says:

    வணக்கம், தமயந்தி பற்றிய கட்டுரை நான் ( சுப்ரபாரதிமணீயன் ) எழுதியது . வேறு ஒருவர் பெயரில் வந்துள்ளது. உடனே திருத்தவும். நான் அவன் இல்லை

    சுப்ரபாரதிமனீயன்

    corrected

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *