‘அப்பு’வின் மகாராணியும் ‘ஆதி’யின் பகவானும்

This entry is part 10 of 29 in the series 24 மார்ச் 2013

இரண்டுமே பெண் சாயல் கொண்ட ஆண் வேடம். ஆனால் பிரகாஷ்ராஜின் மகாராணி கொஞ்சம் பச்சை. இருக்குமிடம் அப்படி. அதுவமல்லாமல் வசந்த் ( இயக்குனர் ), அவரை திருநங்கையாகவே காட்டுகிறார். இதில் ஒரு சமூக வக்கிரம் கூட உள்ளது. திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், அதை ஒரு திருநங்கையே ‘மேடமாக’ இருந்து நடத்துவதும் கொஞ்சம் ஓவர்தான். கதை நாயகன் அப்பு (பிரசாந்த்- நல்ல நடிகர், காணாமல் போய் விட்டார்) ஹீரோயிசம் எல்லாம் காட்டவில்லை. தான் விரும்பிய பெண்ணை பணத்தைக் கொடுத்தே கூட்டிப் போகிறார். கடைசியில் அந்தப் பெண்ணையே இழக்கிறார். பாலியல் தொழிலுக்கு ஒப்படைக்கப்பட்ட பெண், எந்த வழியும் இல்லாது, நிர்கதியாகவே நிற்பாள் என்பது வசந்த தத்துவம். அப்புவின் அக்கா தற்கொலை செய்து கொள்வதும், காதலி இறப்பதும் எந்த தர்மம் என்று தெரியவில்லை. ரியலிஸ்டிக் சினிமா என்று ஏதாவது பிதற்றுவார்கள். விட்டு விடுவோம்.

சமீப ‘பகவான்’ ஜெயம் ரவிக்கு வருவோம். இது நாள் வரை அண்ணனின் அரவணைப்பில் இருந்தவர், சமீபத்தில்தான் விடுபட்டு ஜனநாதன், அமீர் என்று பயணித்திருக்கிறார். ஜனநாதன் கோவணம் கட்டிப் பார்த்தார். அது ஒரு சினிமா செண்டிமெண்ட். 16 வயதினிலேவுக்குப் பிறகு, தொற்றிக் கொண்ட சாங்கியம். பூஜாரி பாரதிராஜா. இப்படித்தான் சேற்றுச்சண்டை என்று,  ஷங்கர் ஆரம்பித்து வைத்தார். எல்லோரும் புரள ஆரம்பித்தார்கள்.

அமீர் ஒரு படி மேலே போய், கொடூர வில்லன் என்பதை, அழகுத் திருமேனியாக காட்டி இருக்கிறார். கீச்சு குரல் என்னமாய் ஒத்துழைக்கிறது ரவிக்கு. அந்த நடையும், நளினமும், ஒரு நல்ல நடிகராக அவரை,  அடையாளம் காட்டுகின்றன. ஆனால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர், மோசமான படத்தில் நடித்ததினால். ஆனால் அமீர் கடைசி வரை அந்த மேனரிசத்தை தக்க வைக்கிறாற் போல், ரவியை ஆட வைத்திருப்பது, பாராட்டுக்குரியது. ரவியும் டிராகுலா உதட்டுச் சாயம், கதக்களி கண் மை, இமைக்கு தோடு என்று ஜமாய்த்திருக்கிறார்.

100 பக்க செய்தித்தாளில், விரும்பியதைப் படிப்பதைப் போல, இதை மட்டும் பார்த்து திருப்தி பட்டுக்கொள்ள இது ஒன்றும் 3 ரூபா சமாச்சாரம் இல்லை. 120 ரூபாய் + பாப்கார்ன்+ பெப்சி+ வாகனம் நிறுத்தும் கட்டணம். 200க்கு இதைப் பார்ப்பதை விட, சூப்பர் காட்சிகளில் சன், ஜெயாவில், பார்த்துக் கொள்ளலாம்.

எல்லாம் சொல்லியான பிறகு, இதை விட சூப்பரான ஆக்டிங் பார்க்க வேண்டுமென்றால், ‘தல’ யின் ‘வரலாறு ‘ பாருங்கள். மனிதர் பின்னியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் கூட நடன அசைவுகள் என்று ஆரம்பித்து, சாகும் காட்சி வரை அதை விடாமல் தொடர்ந்திருப்பது, அவருக்கான இடம் திரையுலகில் கெட்டியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. பின் கதையை, ரொம்பவும் ‘பின்னால்’ வைத்து, ஆர்வத்தை அதிகமாக்கிய டைரக்டர் ரவிகுமாருக்கு சபாஷ். பாத்திரத்தின் தன்மை தெரிந்து விடக்கூடாது என்று, ஊனமானவரைப் போல நடிக்கும் அப்பா அஜீத், ஒரு சூப்பர் டிவிஸ்ட்.

இனி பந்தயத்தில் இடங்களைத் தேர்வு செய்யச் சொன்னால், முதலிடம் அஜீத், இரண்டாவது ஜெயம் ரவி, மூன்றாவது பிரகாஷ்ராஜ். என்ன சரிதானே?

0

கொசுறு :

சமீப காலமாக அரங்குகளில் குடிதண்ணீர் வைக்கப் படுவதில்லை. போதாக்குறைக்கு மல்டிப்ளெக்சில் நாம் கொண்டு போகும் பாட்டில் தண்ணீரை குலுக்கி வேறு பார்க்கிறார்கள். நுரை தப்பினால் அது ஷேம்பெய்னாகக் கூட இருக்கலாம். இல்லை 7அப், லிம்கா போன்ற பானங்களாக இருக்கக் கூடும் என்கிற ஐயம் தான். அப்படி யாராவது வண்ணமில்லாத சுவை பானத்தை எடுத்துக் கொண்டு வந்து விட்டால், ஒரு லோட்டா பானத்தை எப்படி ஐம்பது ரூபாய்க்கு விற்க முடியும் என்கிற பீதியாகக் கூட இருக்கலாம்.

சமீப கால எரிச்சல், கட்டைக் குரலில் ஒருவர் பேசும் “ நுரையீரல் பஞ்சு போன்றது “ என்கிற புகையிலை எதிர்ப்பு பிரச்சார படம் தான். வாரம் நான்கு சினிமா பார்க்கும் என் போன்றோர்க்கு கான்சரே தேவலாம் என்று ஆக்கிவிடுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், வாசற்படியில் நின்று படம் ஆரம்பித்து விட்டதா என்று பார்க்கும் இளைஞர் கூட்டம் மேற்படி பிரச்சாரப் படம் முடியும் வரை வெளியே புகைத்துக் கொண்டு தான் இருக்கிறது. பான் பராக்கை விடமுடியாத மாடிப்படி ‘மாது’கள், செக்கிங்கிலிருந்து தப்ப, ஜட்டியில் மறைத்து வருவது விபரீத வேடிக்கை. அங்கே மறைத்தால் எய்ட்ஸ் வராதோ.. சுப்! தெரிந்தால் அதற்கொரு விளம்பரப் படம் போட்டுவிடப்போகிறார்கள். “–ஞ்சு பஞ்சு போன்றது “ என்று!

0

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 49தொல்காப்பியம் ஆந்திரசப்தசிந்தாமணி கூறும் எழுத்தியல் கோட்பாடு
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *