6.26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
(விவிலியம் – மத்தேயு)
**
விஸ்வரூபம் திரைப்படம் பற்றி விமர்சனம் எழுதப்புகுந்தால், அது முழுமையாக ஆராயப்பட வேண்டும். அப்போது அதன் முழுக்கதையையும் பேச வேண்டி வரலாம் என்பதாலும், அன்றைக்கு எப்படிப்பட்ட விமர்சனங்களை விஸ்வரூபம் எதிர்கொண்டிருக்கிறது என்பதாலும், அவற்றில் சொல்லப்படாத சில விஷயங்களை பேசுவதற்காக தாமதமாக இந்த விமர்சனம் எழுதப்படுகிறது.
**
மறுபடியும், தமிழ் ஜனங்கள் தமிழ்நாட்டின் அறிவுஜீவிகளை விட புத்திசாலிகள் என்பதையும், அவர்களால் பல பரிமாணங்களில் சிந்திக்கமுடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள். இந்த படத்தின் வெற்றி, இதன் அதிரடி காட்சிகளுக்கு மட்டும் இல்லை என்பதை படம் ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறது. ஒரு நல்ல கலை அதன் பல அடுக்குகளில் பொதிந்து வைத்திருக்கும் அர்த்தங்களையும் முதல்முறையே அறிந்துவிடமுடியாது என்பதை இந்த படம் இன்னொரு முறை நிரூபிக்கிறது.
இதில் ஒவ்வொரு காட்சியிலும் படைப்பு நுணுக்கம் ஆழமாக செயல்பட்டிருக்கிறது. அவை ஒரு முழுமையான கலையின் கண்ணிகளாக வெகு நேர்த்தியாக கோர்க்கப்பட்டிருக்கிறது. இதில் நிச்சயமாக பல கலைக்கே உரித்தான தாவல்கள் இருக்கின்றன. அவற்றை கலைப்படைப்பின் சுதந்திரமாக எடுத்துகொண்டு இதனை அணுகினால், தமிழ்படத்தின் ஒரு மகத்தான படைப்பை நாம் அறிவோம்.
*
படம் புறாக்களிடமிருந்து துவங்குகிறது. இந்த புறாக்கள் படம் முழுவதும், அப்பாவி முஸ்லீம்களின் உருவகமாக வருகிறார்கள். கண்களை கருப்பு கண்ணாடியால் மறைத்துகொண்ட முதியவர் இறுகிய மனத்துடன் புறாக்களை நியூயார்க்குக்கு அனுப்புகிறார். இறுதி காட்சியில் இந்த புறாக்கள், நியுயார்க்கில் அணு குண்டு தயாரிக்க உதவுகின்றதை சொல்கிறது. இந்த புறாக்கள் அணுகுண்டு தயாரிக்க உதவும் பொருளை எடுத்துகொண்டு வருவதால் மரணமடைந்துவிடுகின்றன. தீவிரவாதிகளின் கையில் அப்பாவி இஸ்லாமின் முகம் அழிந்து இறந்துவிடுவதை குறியீட்டு ரீதியில் கூறுவதாகவும் கருதலாம்.
பறவைகளின் இயல்பே பறப்பது தான், மக்களின் இயல்பே உடலாலும், மனதாலும் அலைந்து திரிந்து அறிவையும் அன்பவங்க்களையும் சேர்ப்பது தான். “விட்டு விடுதலையாகி” நிற்பது தான் சிட்டுக் குருவியின் இயல்பு மனிதனின் இயல்பும் அதுவே.
புறாக்கள் குறியீடாக படம் முழுவதும் வியாபித்துள்ளன . உமர் புறாக்களை நாம் நியு யார்க்கில் அணு குண்டு பிரயோகிக்க பயன் படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லும்போது அவன் கால்களினால் புறாக்களை எத்திக் கொண்டு நகரும் காட்சி. அவன் தன மக்களையும் தான் சார்ந்த மக்களையும் இப்படித்தான் கருதுகிறான் என்பதற்கு பிற காட்சிகள் அவன் மற்றவர்களை நடத்தும் விதம் எப்படி என்று கோடிட்டுச் செல்கிறது படம். இந்தப் போராளிகள் தம்முடைய மக்களுக்காக போராடுகின்றனர் என்ற பிரமையை இது உடைத்தெறிகிறது. இவர்கள் செயல் திட்டத்தின் மையம் மக்கள் அல்ல இவர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு தத்துவமே. அது தவறா சரியா, நவீன உலகில் பொருத்தமானதா என்பதெல்லாம் இவர்களுக்குத் தேவையில்லாத ஒன்று,. ஒரு அழுகிப் போன தத்துவத்திற்காக தம் மக்களை பலி கொடுக்க தயங்காதவர்கள் இவர்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.
ஆரம்ப காட்சியில் இந்த புறாக்கள் ஒரு ஜன்னலில் பறக்கின்றன. அந்த ஜன்னலின் உள்ளே ஒரு அமெரிக்காவில் வாழும் ஒரு பிராம்மண பெண், தான் மத்தியவர்க்க பிராம்மண மனைவியாக வாழ்வதை தவிர்த்து அமெரிக்காவில் வாழ விரும்பி வந்ததை சொல்லிகொண்டிருக்கிறாள். அதுவும் தனது தற்போதைய பெண் தன்மை நிரம்பிய கணவனோடு கொண்ட வசதிக்கான திருமணத்தை விட்டுவிட்டு இன்னொருவனை திருமணம் செய்து கொள்ள விரும்புவதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறாள். பின்வரும் காட்சிகளில், தனது குழந்தைக்கு என்ன சொல்லித்தர வேண்டும் என்பதில் கூட உரிமை இல்லாத ஒரு ஆப்கானிய பெண்ணோடு ஒப்பிடத்தகுந்தது. அவள் முகம் மட்டும் மறையவில்லை, அவள் சுதந்திரங்கள், தன மகனைப் பற்றி முடிவு எடுக்கும் உரிமை, தன்னைப் பற்றி முடிவு எடுக்கும் உரிமை எல்லாமே மறைக்கப் பட்டிருக்கின்றன.
நிருபமாவின் விருப்பத்தில் யாரும் குறுக்கிட விரும்பவில்லை. அவளது நியூக்கிளியர் ஆன்க்காலஜி பிஹெச்டி பண்ண நியூயார்க் வந்து அங்கு வேலை செய்கிற பெண்ணுக்கு உதவுகிறார்கள்.
இந்திய கலைஞர்களின் தீராத ஊற்றாக இருக்கும் மகாபாரதம் மீண்டும் இந்த படத்தில் பல திசைகளில் பார்வையாளனை தாக்குகிறது. கண்ணன் மீது தீராத காதலோடு துவங்கும் பாடலுக்கு பெண்மை மிகுந்த விஸ்வநாத் ஆடும் நடனம், அர்ஜூனனின் பெண்வேஷமான பிருஹன்னளையை நினைவூட்டுவதை தவிர்க்க முடியாது. பாண்டவர்கள் மறைந்திருந்து வாழ்வதை யூகித்த துரியோதனாதிகள் விராத தேசத்தில் சண்டை மூட்டி அங்கு பாண்டவர்களை வெளிக்கொணர முயற்சிக்கிறார்கள். அந்த போரில் பிருஹன்னளையாக இருந்த அர்ஜூனன் தனது வேஷம் கலைத்து அர்ஜூனனாக வெளிப்படுகிறான். அதே போல, பயங்கரவாதிகளை உளவு பார்க்கும் விஸாம் மாட்டிகொண்டதும், தனது முந்தைய ரூபத்தை எடுத்துகொள்கிறான்.
விசாம் ஆப்கானிஸ்தான் உள்ளே செல்வதும் அபிமன்யு சக்கரவியூகத்தை உடைக்க எதிரியின் பாசறைக்குள் புகுவதை நினைவு படுத்துகிறது.
நீங்கள் நல்லவரா கெட்டவரா என்ற கல்விக்கு விஸாமிடம் பதில் இல்லை. தனக்கு emotional baggage இருப்பதை ஒப்புக் கொள்ளும் அவன் பின்னோக்கில் தான் அப்பாவிகளின் மரணத்துக்கு காரணமாக இருந்ததை நினைவுபடுத்திக் கொள்கிறான்.
ஆப்கானிஸ்தானின் உமர் வழங்கும் நீதியில் அவனே விசாரணை, அவனே நீதிபதி, அவனே தண்டனை நிறைவேற்றும் கொலையாளி என்று சட்டம் தொலைத்த சமூகத்தின் அராஜகம் முழுமையாய் வெளிப்படுகிறது. அவன் தான் குற்றவாளி இல்லை என்று கதறுவது கானகத்தில் ஓலமாகக் கரைந்து போகிறது. இதன் ஒப்புநோக்கில் விசாம் நியூ யார்க் போலிசால் விசாரணைக்கு உள்ளாகும் காட்சி. கிட்டத்தட்ட எல்லா சாத்தியங்களும் விஸாமை குற்றவாளியாகக் காட்ட , விசாரணையற்ற தண்டனை இங்கே இல்லை. விசாரணை கொடியதாய் இருப்பினும், பேச ஒரு சந்தர்ப்பம் அளிக்கப் படுகிறது.
இந்த கதையை பாரதக்கதையின் சகோதர யுத்தமாக பார்க்கும்போது பார்க்கும்போது இந்த படத்தின் பரிமாணங்கள் வெளிப்பட துவங்குகின்றன. இந்த கதை இஸ்லாமிய சகோதரர்களுக்கு இடையே நடக்கும் யுத்தமாக ஆகிவிடுகிறது. இந்த சகோதர யுத்தம் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேயான போராக ஆகிவிடுகிறது. அதனாலேயே விஸ்வரூபம் என்ற பெயர் பொருளுள்ளதாக ஆகிவிடுகிறது. கமல்ஹாசனின் பாத்திரம் முஸ்லீம் தான் என்று தெள்ளத் தெளிவாக நிறுவுவது இந்த அர்த்தமுள்ள குறியீட்டை நோக்கித் தான்.
இந்த சகோதர யுத்தத்தின் ஒரு பக்கத்தில் துரியோதனாதிகளான நூறுபேரும் அவர்களது சேனைகளும், ஏன் கிருஷ்ணனின் படைகளும் நிற்கின்றன. பாண்டவரின் பக்கத்தில் கிருஷ்ணனின் சேனைகள் இல்லை. ஆனால் கிருஷ்ணன் இருக்கிறான். அவனும் பார்வையாளனாக, வெறும் தேரோட்டியாக நின்றுவிடுகிறான். அவனது தார்மீக பலமே அர்ஜூனனுக்கு வலிமை கொடுக்கிறது. இந்த பாரதப்பெருங்கதையினை இஸ்லாமிய சமூகத்தின் சகோதரர்களுக்கு இடையே நடக்கும் யுத்தமாக கமலஹாசனால் பார்க்க முடிகிறது. அதையொட்டியே நல்ல முஸ்லீம் சகோதரர்களுக்கும் அழிவு திசையில் சென்ற இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இடையேயான இந்த போரில், பற்பல ஆயுதங்களுடனும், இஸ்லாமிய முல்லாக்களின் துணையோடு ஒரு புறம் நிற்க, மற்றொரு புறம் அல்லாவை மட்டும் தனது அருகில் சாரதி போல வைத்துகொண்டு விஸாம் போன்ற நல்ல முஸ்லீம்கள் போராடுவதாக கமலஹாசன் சிந்திக்கிறார். ஒரு மனசாட்சியுள்ள முஸ்லிமைப் பார்த்து நீங்கள் யார் பக்கம் என்று கேள்வியை எழுப்புகிறது.
பட ஆரம்பத்தில் உசாமா பின்லாடனின் இறப்பு தொலைக்காட்சியில் சொல்லப்படுகிறது. அதனூடாக “மனுஷாளோட சாவை இப்படியா தீபாவளி மாரி கொண்டாடறது?” என்ற கேள்விக்கு, பதிலாக “அசுராளைகொன்னா கொண்டாடத்தானெ செய்வா?” என்ற பதில். இங்கே பயங்கரவாதிகள் அசுரர்கள் என்பதும் அசுர தலைவனின் ஒவ்வொரு ரத்ததுளியிலிருந்தும் ஆயிரக்கணக்கான அசுரர்கள் தோன்றுவார்கள் என்ற இந்திய புராணக்கதையையும் நினைவில் கொண்டால், அசுர தலைவனின் மரணம் அத்தோடு முடிந்துவிடவில்லை என்று பார்வையாளன் அறிந்துகொள்கிறான்.
ஒன்னு ஒமர் சாவணும் அல்ல நான் சாவணும் அதுவரை இந்த கதை தொடரும் என்று முடிகிறது. ஒன்று பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும், இல்லையேல் கௌரவர்கள் ஜெயிக்க வேண்டும். அதுவரைதானே போர்?
முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை முஸ்லீம்களே செய்யவேண்டும் என்பதையும், அவர்களில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது, யார் நிற்கிறார்கள் இறுதியில் என்பதில்தான் முடிகிறது என்பதையும் கடைசிவரிகள் கூறுகின்றன.
இதில் ஒரு திறந்த சமுதாயத்துக்கும், ஒரு மூடிய சமுதாயத்துக்குமான வித்தியாசத்தை காட்ட தவறவில்லை. ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேடத்தில் ஆண்கள் சென்று ஜிகாதிகளாக வெடிப்பதையும் காட்ட தவறவில்லை. அதன் மூலமாகவே பெண்கள் மீதான போலீஸ் ராணுவத்தின் அத்துமீறலை ஜிகாதிகள் ஆரம்பித்துவைக்கிறார்கள். இந்த விமர்சனத்தை குழந்தைகளிலும் காட்ட தவறவில்லை. குழந்தைகளை தற்கொலைப்படையாக உபயோகப்படுத்தும்போது, அந்த குழந்தைகளை போர்வீரர்கள் எப்படி பார்க்கமுடியும்? குழந்தைகள் என்ற பரிவையா, அல்லது தற்கொலைப்படையினனாக இருக்கலாம் என்ற அச்சத்தையா? எதை ஒரு போர்வீரன் அறிவான்?
படிக்க விரும்பும் பெண்களையும் குழந்தைகளையும் பெற்றோர் ஸ்தானத்தில் இருப்பவர்கள், ஏகே47ஐயும் குண்டுகளையும் வைத்து பயிற்சி கொடுக்கும்போது, எல்லா ஊர்களிலும் குழந்தைகள் விளையாடும் துப்பாக்கி விளையாட்டு விபரீத பரிணாமம் அடைவதை பார்வையாளர் பார்க்கிறார்.
குழந்தைகள் ஆடும் ஊஞ்சலில் கூட, வன்முறைக்கும், வாழ்வுக்கும் இடையே ஊஞ்சலாடும் குழந்தைகளை காட்டி வியப்பூட்டுகிறது திரைப்படம். தான் சாகப்போகிறோம் என்று அறிந்த சிறுவன், ஊஞ்சலாடுகிறான். அது தெரியாத விஸாம், வயது முதிர்ந்த சிறுவன் இப்படி ஊஞ்சலாட விரும்புகிறானே என்று முறைத்துவிட்டு விலகிப்போகிறான். ஒளியை நோக்கி அந்த சிறுவன் ஊஞ்சலாடுகிறான். அது அவனது இறுதி குழந்தைமை என்பதை அவன் தற்கொலை ஜிகாதியாக இறந்த பின்னால் விஸாம் உணர்கிறான்.
ஆப்கானிஸ்தான் காட்சிகளில் கமல் ஹாசனின் முகம் இறுகிப்போய், சிந்தனை வயப்பட்டு, தான் புரிந்து கொள்ள இயலாத ஓர் உலகில் நிற்கிற பாவத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
நிச்சயமாக பிரச்சாரதொனியை கமலஹாசனால் விட்டுவிட முடியவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும், சொல்லாமல் சொல்லிவிட பல காட்சிகளில் முடிந்திருக்கிறது. காட்சிப்படுத்தலின் உள்ளே சொல்லப்பட்ட கதையை பார்க்கும்போது நம் முகத்தில் அறையும் புள்ளிகள் நினைவு கூறத்தக்கவை.
1) விஸாம் நுழையும் மசூதியின் ஓரத்தில் nypd video surveylance என்ற போர்டு இருப்பதை(அங்கு மசூதிக்கு வருபவர்களும் தெரிந்துகொள்ளும்படியாக) இருக்கிறது.
2) பாப்பி தோட்டங்கள் வழியே செல்லும் வண்டி சென்றதும் கார் சென்றதும் மலர்கள் உறைந்து நிற்கின்றன.
3) கண்ணை கட்டிவிட்டு தன் மகனை பரிசோதிக்கும் ராகுல் போஸ், ஏதோ ஒரு செய்தி வந்ததும் கண்கட்டுகளை அவிழ்க்காமல் வெளியேறுகிறான். அந்த சிறுவன் அருகே யாரும் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் குருடனை போல திகைக்கிறான். அந்த பெண் வந்து அந்த கட்டுகளை அவிழ்த்துவிடுகிறாள்.
4) குகைக்குள் நுழையும் கார்களை பார்த்தவண்ணம் முழுவதும் நீல நிறபுர்க்கா நிற்கிறது.
5) அமெரிக்கங்க பொண்ணு குழந்தைகளை கொல்லமாட்டாங்க. அவங்களுக்கு நம்ம உயிரு வேண்டும் என்று சொல்லி வாய் மூடுவதற்கு முன்னால், குழந்தைகள் பெண்கள் இருக்கும் வீடுகளில் அமெரிக்க குண்டு மழை பொழிகிறது.
6) ஆப்கானிஸ்தானிய பழம்பொருட்கள் விற்கும் கடையில் காட்சியின் மையமாக புத்தரின் முகம். தகர்க்கப் பட்ட பாமியான் புத்தரை நினைவுபடுத்திச் செல்கிறது. ஆயுதக் கிடங்காகிவிட்ட ஆப்கானிஸ்தானுக்கு புத்தர் வெறும் சிலையாக அர்த்தமற்று உறைந்து போயிருப்பதை நினைவு படுத்துகிறது.
7) கருகிப்போன கிராமத்துக்குள் வண்டி நுழையும் காட்சியில் பார்வையாளன் முதலில் பார்ப்பது கருகிப்போன மிக்கி மௌஸ்.
8) விஸாமுடன் பணி புரியும் ஒரு பிரிட்டிஷ் உளவுத்துறையின் நபருக்குப் பெயர் டாகின்ஸ். இது ரிச்சர்ட் டாகின்ஸ் -ஐ நினைவூட்டும் ஒரு பெயர். காட்டுமிராண்டித்தனம் என்று பாமியான் சிலைகள் அழிப்பையும், டிம்பக்டு அழிப்பையும், அலெக்சாண்டிரியா நூலக அழைப்பையும் பற்றி மிக தீவிரமாய் எதிர்வினை ஆற்றியவர். இஸ்லாமியர்களை காட்டுமிராண்டிகள் என்று அவர் அழைப்பதாக தவறாகப் புரிந்து கொண்டவர்கள் அவரைத் தாக்கிய போது “Some people (perhaps 1st language not English) think I was calling ALL Muslims barbarians. No. I was calling Islamic BARBARIANS barbarians” என்று தெளிவுபடுத்தியவர். இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி பல அறிவிஜீவிகள் பூசிமெழுகிய பார்வைகளை முன்வைத்தபோது தெளிவாக அது பற்றி கருத்துத் தெரிவித்தவர்.
9) தமிழ்மொழியை ஆப்கானிஸ்தானை மையமாக வைத்த கதையில் புகுத்தி கதை சொல்வதன் சிக்கலை விடுவிக்க முயற்சிக்கும்போதே, மொழி – மதம் பற்றிய உரையாடலையும் எடுத்துச்செல்லும் திறமையான வசனங்கள்.
விஸ்வரூபம் இரண்டாம் பகுதியும் பார்த்த பின்னால்தான் இந்த படம் எழுப்பும் கேள்விகளை நாம் முழுமையாக பார்க்கமுடியும் என்றாலும், இதுவரை சொல்லப்பட்ட கதையும் அதன் விதமும் இந்த படத்தை தமிழ் படங்களின் ஒரு மைல்கல் என்ற அளவுக்கு உயர்த்தியுள்ளன.
(அடுத்த வாரம் இந்த படத்தின் விமர்சனங்களை பற்றிய விமர்சனம்)
- காவல் நாய்
- ரேபீஸ்
- ‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’
- “சூது கவ்வும்” இசை விமர்சனம்
- டௌரி தராத கௌரி கல்யாணம்…!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -3 மூன்று அங்க நாடக
- கந்தா ( தமிழ் )
- தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள்
- பரதேசி டாக்டர் – நல்லவரா..? கெட்டவரா…?
- கூலித்தமிழரே நம் தோழர்கள், சொந்தங்கள்…
- கவிதைகள்
- நாகூர் புறா.
- நம்பிக்கை
- விவசாயிகள் போராட்டமா?
- அமீரகத் தமிழ் மன்றத்தின் 13-ஆம் ஆண்டு விழா
- கேள்
- ஆத்தா…
- போதிகை (Bearing)
- பூங்காவனம் 12 ஆவது இதழ் மீது ஒரு பார்வை!
- ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -17 என்னைப் பற்றிய பாடல் – 10 (Song of Myself) எதிலும் நீ இருக்கிறாய் ..!
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………23 சுஜாதா – ‘இரயில் புன்னகை’
- ஜெயந்தி சங்கரின் “ திரிந்தலையும் திணைகள்”
- தாகூரின் கீதப் பாமாலை – 58 தனிமை விளிம்பிலே வனிதை !
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14
- புகழ் பெற்ற ஏழைகள் – ஷேக்ஸ்பியர்
- தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகத்தின் 74வது நிகழ்ச்சியாக நீயா நானா இறுதிச் சுற்று.
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 4
- அக்னிப்பிரவேசம்-28
- விஸ்வரூபம் – பறவைகளை நஞ்சு தாங்கிகளாக்கும் மனித அவலங்கள்
- குறு நாவல் அத்தியாயம் – 2 நன்றியுடன் என் பாட்டு…….