தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

29 நவம்பர் 2020

தெளிதல்

எம்.ரிஷான் ஷெரீப்

Spread the love

 

 

ஏமாற்றத்தின் சலனங்களோடு

மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்

அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது

மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்

இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்

எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள்

மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன

வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை

 

மகிழ்ச்சி ததும்பிய நேற்றின் தருணங்கள்

ஒரு புகையென மறைந்து அழிந்துவிட்டன

நூதனங்களை மிஞ்சிய பழங்காலத் தடயமொன்றைப் பேணிக் காக்கும்

மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து திரிவதில்

விசனப்படத்தான் வேண்டியிருக்கிறது

 

மிக எளிய ஆசைகள் கொண்டு

நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ

புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது

வெளிச்சம் எதிலுமில்லை

 

கடற்கரையெங்கிலும் மணற்துகள்கள்

அகலும்போது உறுத்துவதைத் தட்டிவிடத்தான் வேண்டியிருக்கிறது

ஊரில் கடலற்ற சிறுவனின் பாதம் நனைக்க

அலைகளும் எங்குமில்லை

நேற்றைய சமுத்திரத்தோடு அது ஓய்ந்துவிட்டது

 

எந்த நேசமுமற்று எப்பொழுதும்

உனது தேவைகளுக்காக மட்டுமே நான் பயன்படுத்தப்பட்டேன் எனும்

ஏமாற்றத்தின் முதல் தளிரோடு

ஒரு கவிதை எஞ்சியிருக்கிறது தலைப்பேதுமற்று

 

நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை

 

– எம்.ரிஷான் ஷெரீப்

 

Series Navigationசெல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (9)ஆனந்தயாழ் – தங்கமீன்கள்

One Comment for “தெளிதல்”

  • கவிஞர் இராய. செல்லப்பா says:

    “மிக எளிய ஆசைகள் கொண்டு /நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ/ புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது/வெளிச்சம் எதிலுமில்லை” என்ற வரிகளை மிகவும் ரசித்தேன். துயரச்சுவை நெஞ்சை நெகிழவைக்கிறது. – நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.


Leave a Comment

Archives