தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

29 மார்ச் 2020

என்னால் எழுத முடியவில்லை

புதிய மாதவி

Spread the love

என்னால் எழுத முடியவில்லை

அடுக்களையில்

ஆத்தங்கரையில்

வயக்காட்டில்

வாய்க்காலில்

குளக்கரையில்

கொள்ளைப்புறத்தில்

ஒதுங்கும்போதெல்லாம்

ஓசையின்றி வளர்த்த என் மொழி

உயிரூட்டி வளர்த்த என் மொழி

குறிகளைக் கொண்டு கடித்துக்குதறி

துடிக்க துடிக்க சிதைத்து போட்டாய்

என்னால் எழுத முடியவில்லை.

 

உன் வாரிசுகளைப் பாலூட்டி வளர்க்கும் முலை

உன் பாலியல் வறட்சியைத் தீர்க்க

அணைகட்டி அழுகுப்பார்த்தப்போதே

இயல்பான என் உடல்மொழி

உன் காமத்தீயில் கருகிப்போனது

என்னால் எழுத முடியவில்லை.

 

களவும் கற்பும்

நீ எழுதிவைத்த இலக்கணம்தான்.

இரண்டும் இருவருக்கும்

பொதுவாக இருக்கும்வரை

காதலிருந்தது.

முன்னது உனக்கும்

பின்னது எனக்கே எனக்குமாய்

உன் ஆயுதங்கள் வென்ற எல்லைக்கோடுகள்

இதில் காணமால் போனது காதல்மட்டுமல்ல

என் கவிதைமொழியும் தான்.

 

உன் படுக்கையறையின் வயகராவாய்

என் ஆடைகளைத் தயாரித்து

உன் சந்தையில் பரப்பினாய்

எதைக்காட்ட வேண்டும்

எதை மறைக்க வேண்டும்

எதைத் திறக்கவேண்டும்

என் உடலின் எல்லா கதவுகளையும்

திறக்கவும் பூட்டவும்

உடைக்கவுமான சாவிகளும்

கடப்பாறைகளும் உன் வசம்.

உன் பசித்தீர்க்கும் அமுதசுரபி என

உன் வர்ணனையில்

மணிமேகலைகளும் மயங்கிப்போனார்கள்.

பனிக்குடம் சுமக்க்கும் பை ஆகிப்போனது

என் உடல்

பசியும் ருசியும் மறந்துப்போனது

இதுவே பழகிப்போனதால்

எப்போதாவது கனவுகளில்

எட்டிப்பார்க்கும் என் முகம்

எனக்கே அந்நியமாகிப் போனது.

அலறிக்கொண்டே விழித்துக் கொள்கிறேன்

கனவில் கண்ட முகம் பற்றி

எங்காவது

யாரிடமாவது

எப்போதாவது

உரையாடல் நடத்தும் தருணத்தில்

உணர்ந்தேன் என் மொழி ஊமையாகிப்போனதை.

 

என்னால் எழுத முடியவில்லை

என்னால் பேச முடியவில்லை.

 

 

Series Navigationதுண்டாடப்படலும், தனிமை உலகங்களும் – இரா முருகனின் “ விஸ்வரூபம் “ நாவல்விஸ்வரூபம் – தொடர்ந்த விமர்சனம் – வன்முறையின் தீராக் கவர்ச்சி

3 Comments for “என்னால் எழுத முடியவில்லை”

 • பொன்.முத்துக்குமார் says:

  பழகிப்போன ‘பெண்ணுரிமை’ வாசனை அடிக்கிறது. கவிதை இதை தாண்டி போக முடியும்.

 • Dr.G.Johnson says:

  என்னால் எழுத முடியவில்லை

  என்னால் எழுத முடியவில்லை

  என்று ஓலமிடும் வகையில்

  சாதுர்யமான மொழியில்

  எல்லாவற்றையுமே

  ஒளிவுமறைவின்றி

  எழுதி விட்டீரே புதிய மாதவி?

  வாழ்த்துகள்..அன்புடன்

  டாக்டர் ஜி.ஜான்சன்.

 • கவிஞர் இராய செல்லப்பா says:

  பொன்.முத்துக்குமார் சொல்வதை ஆமோதிக்கிறேன். பெண் கவிஞர்களுக்கு இன்னும் ஏராளமான கருப்பொருள்கள் உண்டு. அவற்றைக் கைக்கொள்வது பெருமை சேர்க்கும். அதை விடுத்து இன உறுப்புகளின்பால் மட்டுமே கருத்தைக் குவிப்பது, அவரின் இலக்கிய வளர்ச்சியைத் தடை செய்யக்கூடும் என்று தோன்றுகிறது. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.


Leave a Comment

Archives