மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி

This entry is part 4 of 21 in the series 2 ஜூன் 2013

டாக்டர் ஜி.ஜான்சன்

பெண்களுக்கு இடது புற நெஞ்சு வலி

நெஞ்சு வலி என்றதுமே அது மாரடைப்பாக இருக்குமோ என்ற பீதி உண்டாவது இயல்பே. காரணம் இருதயம் இடது பக்கம் உள்ளது அனைவரும் அறிந்ததே.

ஆனால் எல்லா இடது பக்க நெஞ்சு வலியும் இருதயம் தொடர்புடையது என்று கூற இயலாது. அதிலும் பெண்களுக்கு மெனோபாஸ் எய்தும் முன் மாரடைப்பு உண்டாவது குறைவு. காரணம் மெனோபாஸ் வரை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நல்ல கொலஸ்ட்டராலைக் கூட்டுவதுடன், தமனிகளில் கொழுப்பு படிந்து அடைப்பை உண்டுபண்ணுவதையும் குறைக்கிறது. இதனால்தான் ஆண்களைவிட பெண்களுக்கு மாரடைப்பு குறைவாகவே காணப்படுகிறது.

பெண்களுக்கு நெஞ்சுப் பகுதியில் மார்புகளுக்கு அடியில் நெஞ்சு தசைகள்,நெஞ்சு எலும்புகள், நரம்புகள், நுரையீரல்கள், உணவுக் குழாய்கள் , இருதயம் ஆகிய உறுப்புகள் உள்ளன. இவற்றில் எதில் குறைபாடு உண்டானாலும் வலி வரலாம் .

இதை வைத்து நெஞ்சு வலியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

இருதயம் தொடர்பான வலி

அஞ்சைனா வலி ( Angina Pain ) – இருதய தமனிகளில் அடைப்பு உண்டாகி இருதய தசைகளுக்கு போதுமான பிராண வாயு இல்லாமல் போவதால் இந்த வலி உண்டாகிறது.இந்த வலியுடன் வியர்வை, குமட்டல், மயக்கம், கழுத்திலும் இடது கையிலும், இடது பக்க முதுகிலும் வலி போன்றவை ஏற்படலாம்.

வலி பிசைவது அழுத்துவது , சுருக் சுருக் என்று குத்துவது போலவும் இருக்கலாம். இது அஞ்சைனா நெஞ்சு வலிதானா என்பதை ஈ .சி .ஜி. மூலம் எளிதில் கண்டறியலாம்.

* மயோகார்டைட்டீஸ் – ( Myocarditis )

இதை இதயத் தசை அழற்சி எனலாம்.வைரஸ் தோற்றால் இருதயத்தின் தசைநார்களில் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகலாம். இது ஏற்பட்டால் நெஞ்சு வலியுடன் காய்ச்சல், தலைவலி, மூச்சுத் திணறல், மூட்டு வலி, கை கால்கள் வீக்கம் போன்ற இதர அறிகுறிகள் தோன்றலாம்.

*பெரிகார்டைட்டீஸ் – ( Pericarditis )

இதை இதய உறை அழற்சி எனலாம். இருதய தசையைச் சுற்றியுள்ள பை போன்றது இது. நோய்த் தோற்று காரணமாக இதில் வீக்கம் உண்டாகும். அப்படி நேர்ந்தால் நெஞ்சில் கூர்மையான வலி உண்டாகும். இருமும்போதும், மூச்சு இழுக்கும்போதும், படுக்கும்போதும் வலி அதிகமாகும்.

* மாரடைப்பு – ( Myocardial Infaction )

இதுவே மிகவும் ஆபத்தானது. இருதயத்துக்கு இரத்தம் கொண்டு வரும் காரோனரி தமனிகளில் முழு அடைப்பு உண்டானால் இருதய தசைகளுக்கு பிராண வாயு இல்லாமல் கடும் நெஞ்சு வலி எழும். இந்த வலி சில நிமிடங்கள் நீடிக்கும். வலி கழுத்து, முதுகு, இடது தோள்பட்டை, இடது கை போன்ற பகுதிகளுக்கு பரவும். வலியுடன், வியர்வை, மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி , மயக்கம் போன்றவையும் உண்டாகும். இதற்கு உடனடி அவசர சிகிச்சை தேவை. இல்லையேல் உயிருக்கு ஆபத்தாகும்இரத்தப் பரிசோதனை , ஈ .சி .ஜி., அன்ஜியோகிராம் ( Angiogram ) போன்றவற்றால் இதைக் கண்டறியலாம்.

இரைப்பை குடல் தொடர்பான வலி

* இரைப்பை உணவுக்குழாய் மேலெழும் வியாதி – Gastro -oesophageal Reflux Disease ( GERD ).

இதில் இரைப்பையில் உள்ள அமிலமும் திரவகமும் மேல்நோக்கி உணவுக்குழாய்க்குள் ஏறுவதால் நெஞ்சில் எரிச்சலும் வாய்க் கசப்பும் உண்டாகும். இதைத்தான் நாம் நெஞ்சு கரிப்பு என்கிறோம். கர்ப்பமுற்ற பெண்கள் , அதிக உடல் பருமன் கொண்டவர்கள், அதிக காரம் புளிப்பு உண்பவர்கள் ஆகியோரிடம் இது அதிகம் காணப்படும்.

* இரைப்பைப் புண் – ( Peptic Ulcer )

இதை நாம் வயிற்றுப் புண், கேஸ்ட்ரிக் வலி என்றும் கூறுகிறோம். இது வயிற்றில் அதிகமான அமிலங்கள் சுரத்தல், தவறான உணவு வகைகள், மது, புகைத்தல், ஹெலிக்கோபேக்டர் பைலாரி எனும் கிருமிகள் தொற்று ஆகியவற்றால் ஏற்படுகிறது. இது வயிறு தொடர்புடையது என்றாலும் நெஞ்சு வலி போன்ற உணர்வையும் உண்டுபண்ணும்.

நுரையீரல் தொடர்பான வலி

* புளுரைட்டீஸ் – Pleuritis

இது நுரையீரலைச் சுற்றி இருக்கும் இரு அடுக்கு கொண்ட உறை போன்றது. கிருமித் தோற்று , வைரஸ் தோற்று , காசநோய், நிமோனியா போன்றவற்றால் இதில் அழற்சி உண்டாகி இருமும்போதும், மூச்சு விடும்போதும் நெஞ்சில் கூறிய வலி உண்டாகும்.

* நிமோனியா – Pneumonia

இதை சீதசன்னி, நுரையீரல் காய்ச்சல், நுரையீரல் அழற்சி என்று கூறுவர். பேக்டீரியா , வைரஸ் தோற்று காரணமாக இது உண்டாகிறது. இதில் காய்ச்சல், குளிர், இருமல், சளியில் இரத்தம் போன்ற இதர அறிகுறிகளும் காணப்படும்.

ஆகவே நெஞ்சு வலி இதுபோன்று பல்வேறு காரணங்களால் ஏற்படலாம்.

ஆனாலும் அந்த வலி மாரடைப்பின் அறிகுறியா என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது

நல்லது. மெனோபாசுக்கு முன் பெண்களுக்கு மாரடைப்பு வருவது குறைவு என்றாலும் அது வேறு

விதமாகவும் தோன்றலாம். அவை வருமாறு:

*மூச்சுத் திணறல்

* நெஞ்சு கரிப்பு

* காரணமின்றி களைப்பு

* தூக்கமின்மை

* பலவீனம்

* மயக்கம்

* குளிர் வியர்வை

* ஈரமான தோல்

* கை, கழுத்து வலி

இவை நெஞ்சு வலியுடனும் உண்டாகலாம், அல்லது நெஞ்சு வலி இல்லாமலும் உண்டாகலாம்.

மாரடைப்பு உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணும் என்பதால், நெஞ்சுவலி என்றாலே, உடன் மருத்துவரை அணுகி ஓர் ஈ .சி .ஜி . எடுத்துப் பார்ப்பதே சாலச் சிறந்தது!

( முடிந்தது)

Series Navigationகவிதாவின் கவிதைகள்எதிர்பாராதது
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *