தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

27 செப்டம்பர் 2020

கவிதைகள்

ப மதியழகன்

Spread the love

ஜென் கனவு

 

கலைத்துப் போடப்பட்ட

பொருட்களின் மத்தியில்

வெளிநபர்களின்

பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட

மதுக்கிண்ணங்கள்.

 

இவ்வளவு

அவசரப்பட்டிருக்க வேண்டாம்

தாழிடப்படாத கதவை

திறப்பதற்கு

அலங்கோலமாக உள்ள

வரவேற்பறைதான்

எத்தனை அழகு.

 

அலுவலக பணி நிமித்தம்

முகமன் கூறி

கைகுலுக்கும் போது

புன்னகைப் பிரதி ஒன்றை

வெளிப்படுத்த நேர்கிறது.

 

எவராலும்

கண்டுபிடிக்க முடியாத

மறைவிடம் தேடினேன்

எங்கேயும் பின்தொடர்ந்து

வந்துவிடுகிறது

நிழல்.

 

 

அவள் நனைவதால்

கரைந்துவிடுவதில்லை தான்

இருந்தாலும் அவளின்றி

குடையில் செல்ல

எனக்கு மனமில்லை.

 

 

தேவாலயத்தில்

காலணி காணாமல்

தேடினாயே

களவாடியது நான் தான்

நீ இதயத்தை தர

மறுத்தாய்

உன்னைத் தாங்கியதாவது

என்னிடம் இருக்கட்டும் என்று

உன் நினைவாய் பத்திரப்படுத்தி

வைத்தேன்.

 

பூக்களுக்கு

புனிதர் பட்டம்

உன் கூந்தலை

அலங்கரித்ததினால்.

 

மாலையில் தான் பூங்காவில்

அவளைப் பார்த்து வந்தேன்

இருந்தாலும்

கதகதப்பு தேடும்

இரவு தான்

எத்தனை நீளம்.

 

அஸ்தமனத்துக்கு பின்

பூமியில் பிரகாசம்

உனது சிரசைச் சுற்றி

ஒளிவட்டம்.

 

பனியால்

உடல் நனைகிறது

இருந்தாலும் நீ

ஆசைப்பட்டுவிட்டாயல்லவா

மலையில் தனித்திருக்கும்

மலரொன்றை.

 

 

 

 

 

ஜென் தோட்டம்

 

உறக்கம் வரவில்லை அவளுக்கு,

படுக்கையில் கண்மூடியபடி

உன் நினைவெனும்

சப்த நெசவை

அசைபோட்டவாறு

நேரம் கழிகிறது.

 

நீரலைகளில் அசைகிறது

நிலவின் பிம்பம்

அள்ளிய தண்ணீரிலும்

அதே பிம்பம்.

 

சிகரெட்

கொஞ்சம் கொஞ்சமாக

சாம்பலாய்ப் போவதைப் போல

நினைவுகளும்.

 

நீண்ட இரவு

ஆடைகளின்றி வானம்

விடைபெற்றுக் கொள்ளும் நிலவு

அந்தியில் உதயமான

அதே நிலவு தானா?

 

மார்கழி அதிகாலை

இலைகளிலிருந்து வழியும்

பனித்துளி

சேலையால் முக்காடிட்டால்

அழகு புதைந்துவிடுமா?

 

வாழ்க்கை கதையின்

இறுதி அத்தியாயத்தை

யார் எழுதுவது.

 

உதிர்ந்த இலை

சருகாகி

கூட்டிய வாசலை

குப்பையாக்கும்.

 

பேசியது பேசியபடியே

எல்லை மீறிபடியே

நீ விளக்கை அணைத்தாலும்

இருளையும் ஊடுருவும்

அவன் கண்கள்.

 

கடந்த காலக்

குப்பையில்

எது கிடைத்தாலும்

புதையல் தான்.

 

வேண்டுதல்களோடு

வரிசையில் பக்தர்கள்

தவழும் குழந்தையை

தூக்கி கொஞ்ச

பத்து கரங்கள் போதவில்லை

கடவுளுக்கு.

 

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 22இரகசியமாய்

Leave a Comment

Archives