“அம்மா அவசரமா ஒரு முன்னூறு ரூபா வேண்டியிருக்கு. வர்ற மாச சம்பளத்துல புடிச்சுக்குங்க.”
“எதுக்கு முன்னூறு. பிடிக்கதுக்கு அங்க என்ன மிச்சமிருக்கு. மொத்தமா வாங்குனது, நடுவுல வாங்குனது எல்லாம் போக இந்த முன்னூறும்னா என்னத்த கைக்கு வரும்?”
கோதை மறுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் ‘பளிச்’ என்று கேட்டு விட்ட கமலத்துக்கு சங்கடமாய் போயிற்று.
“என்னம்மா செய்யறது? பொண்ணுக்கு வர்ற வாரம் பொறந்தநாள் வருது. புதுசு வாங்கணும்னு கண்ணக் கசக்கிட்டு நிக்கு. ஸ்கூல்ல, அக்கம்பக்கத்து சிநேகிதிங்ககிட்டல்லாம் வேற சொல்லி வச்சிருக்காம். அதென்னவோ காக்ராவாமே. அது வாங்கணுமாம்.”
“அதுங்க அப்படித்தான் கண்ணக் கசக்கும். அடம் பண்ணும். எல்லாத்துக்கும் வளஞ்சு வளஞ்சு போனீயான ஒம்பாடுதான் திண்டாட்டம். குடும்ப நெலம புரிய வேண்டாமா? மொதல்ல எதுக்கு இப்ப புதுத் துணி. பாப்பாவோட துணியெல்லாம் அவளுக்குதானே தர்றேன். ரெண்டு மூணு தடவையே போட்டதெல்லாம் கூட புதுசு போலக் கொடுத்துருக்கேனே. அதுல ஒண்ண போட்டுக்கச் சொல்லு.”
“வாஸ்தவந்தாம்மா. ஆனா புதுசு கட்டின மாதிரியாகுமா?”
“ஆமா பிசாத்து நீ முன்னூறு ரூவாய்ல வாங்குற புதுச விட மூவாயிர ரூபா ட்ரெஸ்ஸை போட கசக்குதாமா ஒம் பொண்ணுக்கு?”
‘தினம் தினம் மிஞ்சின பிரியாணியும், கறி சோறும் இங்கே கொட்டிக் கொடுத்தாலும், வீட்டில ஒரு வா கஞ்சி வச்சுச் சூடா உறிஞ்சுக் குடிக்கிறதுதாம்மா தேவாமிர்தம்’ நினைத்ததைச் சொல்ல முடியாமல் கமலம் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
“எல்லாம் உன் நல்லதுக்குதான் சொல்றேன். பொட்டைப் பசங்களுக்கு ரொம்ப இடம் கொடுத்து வைக்காதே. இன்னிக்கு கஷ்டந்தெரியாம அதக் கொண்டா இதக் கொண்டான்னு கேட்கிற மாதிரியேதான் கட்டிக்கிட்டுப் போனபிறகும் இருக்கும்ங்க” பின்னாடியே வந்து சமாதானம் பண்ணுகிற மாதிரி சொல்லிச் சென்றாள் கோதை.
இரண்டு நாட்கள் சென்றிருக்கும். துணிகளை ஒவ்வொன்றாக வாஷிங் மிஷினில் போட்டுக் கொண்டிருந்த கமலம், வீட்டு எஜமானரின் சட்டைப் பையில் ஏதோ தட்டுப்பட கைவிட்டுப் பார்த்தாள். மொடமொடப்பாய் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள். நேராக மதிய தொலைக்காட்சித் தொடரில் மூழ்கியிருந்த கோதையின் முன் வந்து நோட்டுக்களை நீட்டினாள்.
“சாரோட சட்டைப் பையில இருந்துச்சும்மா. சலவைக்குக் கூடையில போடும் போதே பாத்து போடுங்கம்மா.”
அசடு வழிய நோட்டுக்களை வாங்கிக் கொண்ட கோதை “நல்ல வேளையா பார்த்தே. மிஷினில் போட்டிருந்தியானா ஆயிரம் ரூவாயும் அரோகரான்னு போயிருக்கும்” என நெளிந்தாள்.
அடுத்த ஒரு மணியில் பம்பரமாய் சுழன்று அத்தனை வேலைகளையும் முடித்து விட்டு கமலம் கிளம்புகையில் கோதை அழைத்தாள்.
“இந்தா பிடி முன்னூறு ரூவா. அன்னிக்குக் கேட்டியே..”
“பொண்ணுக்கு துணி வாங்கவா? வேண்டாம்மா. எனக்கு தெரிஞ்ச ஒரு வீட்ல வேலைக்காரம்மா லீவு போட்டிருச்சு. நாலஞ்சு நாள் அங்கே செய்யறதா ஒத்துட்டிருக்கேன். கணிசமா தருவாங்க. அதுல சமாளிச்சுப்பேன்.”
“அன்னிக்கு எடக்கு முடக்கா ஏதோ சொல்லிட்டேன்னு ராணியம்மாக்குக் கோவமோ?”
“ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனாப் பாருங்க. இந்த வெள்ளி வந்தா பொண்ணுக்கு பன்னெண்டு முடியுது. அறியா வயசு. ஒரு நா அதுக்குப் புரியும் என் சிரமம். நாமளும் இதெல்லாம் தாண்டி வந்தவங்கதானே. அடம் வளரும்னு நீங்க பாக்கறீங்க. அது கண்ணுல தண்ணி வரப் படாதுன்னு இந்த தாய் மனசு பாக்குது. ஏழைப்பட்டவங்களுக்கு நாளு, கெழமை, பண்டிகை எதுவும் வராமப் போனா நல்லாருக்கும். ஆனா வருதே. போகுது விடுங்க. நாலுநாளு கூடுதலா கஷ்டப்பட்டது, எம்புள்ள கண்ணு மலர்ந்து சிரிக்கயில மறஞ்சு போகும். நீங்க சொன்னாப்ல மாசம் பிறந்தா கைக்கு வர கொஞ்சங் காசாவது உங்க பக்கம் நிக்கட்டும். வரேம்மா.”
‘கடனா இல்லே. அன்பளிப்பாதான் கொடுக்க வந்தேன்’ சொல்லும் திராணி அற்று நின்றிருந்தாள் கோதை.
***
-ராமலக்ஷ்மி
- இழவு வீடு
- முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..
- வேஷங்கள்
- பயணம்
- வேடிக்கை
- “கானுறை வேங்கை” விமர்சனம்
- பெண்பால் ஒவ்வாமை
- தாய் மனசு
- தூசு தட்டப் படுகிறது!
- மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்
- என்னைச் சுற்றிப் பெண்கள்: நூல் அறிமுகம்
- அந்த ஒருவன்…
- பிரியாவிடை:
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
- மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம்
- எதிர் வரும் நிறம்
- அவள் ….
- ஸ்வரதாளங்கள்..
- வலி
- வட்டத்துக்குள் சதுரம்
- 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா ? கட்டுரை 7
- அபியும் அப்பாவும்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 6 பத்திரிகை சந்தா
- நினைவுகளின் தடத்தில் – (72)
- ஜென் – ஒரு புரிதல் பகுதி (1)
- பூமராங்
- ராணி., பெண்ணாதிக்கம் இரு கவிதைகள்.
- “தமிழ்ச் சிறுகதையின் தந்தை “
- ஓரிடம்நோக்கி…
- சோ.சுப்புராஜ் கவிதைகள்
- நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்!
- அழையா விருந்தாளிகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4)
- தூரிகையின் முத்தம்.
- விழிப்பு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 8
- பகுப்பாய்வின் நிறைவு