தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

பிரியாவிடை:

சபீர்

Spread the love

பிரியா விடைகளும்
பிள்ளைகளுக்கு
முத்தங்களும்
என
வாழ்ந்து கொண்டிருந்தது
விமான நிலையம்

எட்டிய உயரத்தில்
கிட்டிய நெஞ்சில்
மகனை முகர்ந்தது
மூதாட்டி உம்மா

கடவுச் சீட்டு
அடங்கிய கைப்பை
முழங்கையில் தொங்க
கடைக்குட்டியை
கைகளில் ஏந்தி
வாப்பா
பயணம் சொல்ல
குழந்தை
தானும் வருவதாகச்
சொன்னது.

எல்லாச்
சொந்தங்களிடமும்
ஸ்பரிஷமோ
பாஷையோ
விடைதர…

புன்னகை போர்த்திய
முகச் சோகமும்
புர்கா மூடிய
அகச் சோகமும்
கலாச்சார நாகரிக
கட்டுக்குள் நிற்க
மனைவியின்
கண்கள் மட்டுமே
முழுப்
பெண்ணாகிப் போக…

எல்லா வினாக்களுக்கும்
ஒரே விடையாய்
மெல்லத் தோன்றி
துடைப்பதற்குள்
சிந்தியது
உள்நாட்டுக்
கண்ணீர்த் துளியொன்று.

பிரியமானவளைப்
பிரிய மனமின்றி
பொதிவண்டி தள்ளி
விதி எண்ணிப் போக
தானியங்கிப் படிகளில்
தடுமாறி
சுதாரிக்கும்போது
சிதறி விழுந்தது
வெளிநாட்டில் பிழைக்கும்
சபுராளி வாழ்க்கை!

Sabeer abuShahruk,

Series Navigationஅந்த ஒருவன்…அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

One Comment for “பிரியாவிடை:”

  • Yasir says:

    மனதை டச் செய்த வரிகள் வார்த்தைகள்…கவிகோக்களுக்கெல்லாம் கோ வோ என்று என்ன தோன்றுகிறது..சூப்பர் கவிஞரே…


Leave a Comment

Archives