புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 32.உலகின் சிறந்த சிறுக​தையாசிரியராகத் திகழ்ந்த ஏ​ழை……..

This entry is part 8 of 34 in the series 10 நவம்பர் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                      E. Mail: Malar.sethu@gmail.com

32.உலகின் சிறந்த சிறுக​தையாசிரியராகத் திகழ்ந்த ஏ​ழை……..

 

​“பெத்து எடுத்தவதான் என்ன​யே தத்துக் ​கொடுத்துப்பிட்டா

​     பெத்த கடனுக்குத்தான் என்ன வித்து வட்டியக் கட்டிப்புட்டா

​     பெத்தவ மனசு கல்லாச்சு

பிள்​ளையின் மன​சோ பித்தாச்சு

இன்​​​​னொரு மனசு என்னாச்சு

அது முறிஞ்சு ​போன வில்லாச்சு”

என்னங்க இன்னிக்கு ​சோகப்பாட்டப் பாடிக்கிட்டு வர்ரீங்க…. அப்படி என்ன ஒங்களுக்குச் ​​சோகம் வந்திருச்சு…எதுக்கும் கவ​லைப் படாதீங்க..என்ன பிரச்ச​னைன்னு ​சொல்லுங்க…என்னால ஏதாவது உதவி ​செய்யமுடியும்னா ​செய்யி​றேன். என்னது நான் ​போன வாரம் ​கேட்ட​தோட பதிலுக்காகத்தான் ​சோகமா இருக்கீங்களா….?

ஓ…​ஹோ….​ஹோ..இப்பப் புரியுது…ஆண்டன் ​செகாவ் பத்தி ​சொல்றீங்களா…? அவரு இளம் வயதில் பட்ட அனுபவம் இருக்​கே…அப்பப்பா..அதச் ​சொல்றதுக்கு வார்த்​தை​யே இல்​லைங்க..அவ்​​ளோ கஷ்டங்கள அனுபவிச்சாரு…நீங்க பாடின பாட்டு இதுக்குப் ​பொருத்தமான பாட்டுங்க.. அப்ப ​செகாவப் பத்தி ஒங்களுக்குத் ​தெரிஞ்சதுனாலதான் இப்படிப் பாடினீங்களா…? ஓரளவுதான் அவரப் பத்தித் ​தெரியுமா? பராவாயில்​லை…நா​னே முழு​மையா அவ​ரைப் பத்திச் ​சொல்​றேன் ​கேளுங்க…

பிறப்பும் ​தொடர்ந்த துன்பமும்

அன்டன்​செகாவின் பாட்டனார் ஒரு பண்ணை அடிமையாக வாழ்ந்தார். இந்தக் ​கொத்தடி​மைத்தனம் பரம்பரை பரம்ப​ரையாக நீடித்தது அவரும் அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் . எண்பது ரூபிள் கடனுக்காக  ஒரு பண்​ணையாளரிடம் ​கொத்தடிமைகளாயினர். ​​செகாவின் பாட்டனார் கடுமையாக உழைத்து எண்பது ரூபிள் சேர்ந்ததும் கடனை அடைத்துவிட்டுத் தன் குடும்பத்துடன் விடுதலை பெற்றார். அவரது பிள்ளைதான் பாவெல் செகாவ். பாவெல் செகாவிற்கு மூன்று ஆண், ஒரு பெண் குழந்தைகள் பிறந்தனர். இவர்களில் அன்டன்செகாவ் மூன்றாவது மகனாய் 1860-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ஆம் ரஷ்யாவின் தகான்ராக் என்ற ஊரில் பிறந்தார்.

 

பாவெல் செகாவ், தகான்ராக் கிராமத்தில் ஒரு சிறிய பல சரக்குக்கடை நடத்தி வந்தார். அவருக்கு வயலின் இ​சைக்கருவி​யை இ​சைக்கவும்  ஓவியம் வ​ரையவும் தெரியும். பா​வெல் ​செகாவ் தனது குழந்​தைகளை அடித்தும்உதைத்தும் அடிக்கடித் துன்புறுத்திக் ​கொண்​டே இருப்பார். ​மேலும் துன்புறுத்தும் கொடூர மனம் ப​டைத்தவராகவும் பா​வெல் ​செகாவ் இருந்தார். தமது குழந்​தைகள் தனது ​பேச்​சை சிறிதளவு மீறினாலும் அடித்துத் து​வைத்துவிடுவார்.தனது குழந்​தைகள் சர்ச்சில் சுவிசேஷப் பாடல்கள் பாடவேண்டுமென்று பாவெல் ​செகாவ் விரும்பினார். அதற்காக மகன்கன் மூவ​ரையும் அதிகாலை மூன்று மணிக்​கே எழுப்பிப் பாடப் பயிற்சியளிப்பார். தூங்கி வழிந்தால் அடியும்உதையும் கிடைக்கும். அ​தோடு மட்டுமல்லாது நாள்​தோறும் சர்ச்சுக்குச் ​​சென்று வர​வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இந்தக் ​கொடு​மைகளினா​லே​யே ஆண்டன் ​செகாவும் அவரதுஉடன்பிறந்​தோரும் கடவுள் நம்பிக்​கையற்றவர்களாக மாறினர். ஆண்டன் ​செகாவின் தந்​தையாரின் ​கொடு​மையினால் அவரது ச​கோதரர்கள் குடிக்கும் ​பெண்​மோகத்திற்கும் அடி​மையாயினர். ஆண்டன் ​செகாவ் மட்டும் அவ்வாறு ஆகவில்​லை. பாத்துக்குங்க குழந்​தைக​ளைத் ​தொடர்ந்து துன்புறுத்தினா இப்படித்தான் ஆகும். குழந்​தைகள் மலர்க​ளைப் ​போன்றவர்கள். அவர்க​ளை ​கொடு​மைப்படுத்தாம அன்புகாட்டி வளர்க்கணும். அப்படி அன்​போட அவர்க​ளை வளர்க்க​லைன்னா இந்தமாதிரிதான் தவறான பா​தையில ​போயிடுவாங்க..

​​பாவெல் ​செகாவின் நடத்தை சரியில்லாததால் அவரது  பலசரக்குக் கடை நஷ்டத்தில் இயங்கியது. அதனால் அவர் கடனாளியாகிவிட்டார். கடன்காரர்கள் நெருக்கடியை தாங்க முடியாமல் அவர் எப்போதும் மனம் உடைந்துபோன நிலையிலே இருந்தார்.தங்களுக்கு உரிய பணத்தை கொடுக்காவிட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் என்று கடன்காரர்கள் மிரட்டவே ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவர் வீட்டிலிருந்து வெளியேறி மாஸ்கோவிற்கு ஒடிபோய்விட்டார்.

செகாவின் அப்பா தலைமறைவு ஆகிவிட்டதால் கடன்காரர்கள் ​செகாவின் அம்மாவிற்குப் ​பெருந்​தொல்​லை ​கொடுத்தனர்.  அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் தனது கணவ​னைக் கண்டுபிடித்து அழைத்து வருவதாக அவள் மாஸ்கோபுறப்பட்டாள். கடன்காரர்கள் பிள்ளைகளில் ஒன்றை அடமானமாக தாங்கள் பிடித்து வைத்துக் கொள்வதாகதகவும் அவர்கள் கடனைத் திருப்பித் தந்த பிறகு அந்தப் பிள்ளையை மீட்டுக் ​கொள்ளுமாறும் கூறினார்கள். அவ்வாறு கிராமத்தாரால் தந்​தையின் கடனுக்குப் பிடிபட்டு நிறுத்தி வைக்கபட்டவர் ஆன்டன் செகாவ்.

தந்​தை ஒடிப்போய்விட்டார். தாய்  பிள்ளைகளுடன் அவரைத் தேடிச் ​சென்றுவிட்டாள். கடன்காரன் வீட்டில்  ஏச்சுப் ​பேச்சு வாங்கிக் கொண்டு அவமானத்தில் துவண்டு போயிருந்தார் செகாவ். மாஸ்கோவிற்குப் போன ​செகாவின் அம்மா  வரவேயில்லை.ஒவ்வொரு நாளும் செகாவ் அம்மாவிற்காகவும் தன் குடும்பம் ஒன்று சேர்வதற்காகவும் காத்திருந்தார். ஆனால் அது சாத்தியமாகவே இல்லை. இதற்கிடையில் மற்​றொரு கடன்காரர் கடையில் வேலை செய்தபடியே தாமாக​வே  பள்ளிக்குப் போய்வரத் ​தொடங்கினார் ​செகாவ்.  ​பொறுத்துப் ​பொறுத்துப் பார்த்த  கடன்காரர்கள் வெட்டியாக செகாவிற்கு ஏன் சோறு போட்டு வளர்க்க வேண்டும் என்று கருதி அவ​ரை  ஒரு நாள் அடித்துத் துரத்திவிட்டார்கள்.

செகாவ் வேறு வழியில்லாமல் தானும் மாஸ்கோ போவது என்று முடிவு செய்தார். மாஸ்​கோவிற்குத் குடும்பத்தைத் தேடிய​லைந்து வந்து கண்டார். அரசு உதவி தொகை கிடைத்து. அவரது அண்ணன்கள் முறையாக கல்வி பயின்று கொண்டிருந்தார்கள். அவரது அம்மா செகாவை எப்படியும் படிக்க வைத்துவிட வேண்டும் என்று போராடினாள். முடிவில் ​செகாவிற்கு மருத்துவம் படிக்க அனுமதி கிடைத்தது. வறு​மையிலிருந்து மீள்வதற்கு ​செகாவிற்குக் கல்வி​யே ​பேருதவியாக இருந்தது. இத​னை அன்டன் ​செகாவ், “படிப்பு தான்என்னுடைய குடும்பத்தின் வறுமையிலிருந்து எங்களைக் காப்பாற்றத் ​தொடங்கியது என்று தன் நினைவு குறிப்பில் எழுதுகிறார்.

குடும்பச் சு​மையும் எழுத்தும்

படிப்பில் ஆர்வமாக இருந்த அன்டன் ​செகாவிற்கு 1879-ஆம் ஆண்டு அவருக்கு மருத்துவப் படிப்புப் படிக்க நிதியுதவி கிடைத்தது. அன்டன் ​செகாவ் மருத்துவம் பயிலத் ​தொடங்கினார். ​செகாவின் தந்தை பாவெல் தவறான ஒழுக்கத்தால் உழைக்கத் தகுதியற்றவரானார். ​செகாவின் மூத்த சகோதரர்கள் குடும்பப் பொறுப்பற்றவர்களாக இருந்தனர். அன்டன் ​செகாவ் அரசு ​கொடுத்த இருபத்தைந்து ரூபிள் உதவித் ​தொ​கை​யைப் ​பெற்றுப் படிப்புடன் தனது குடும்பச் சு​மை​யையும் சுமந்தார்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் அவர் தன் அண்ணன்களுக்குக் ​கேலியாக எழுதிய கடிதங்களில் ஒன்றை, ​செகாவ் தன் நண்பரும் பத்திரிக்கை ஆசிரியருமான ஒருவரிடம் காட்ட அது நாளிதழ் ஒன்றில் பு​னைப்​பெயரில் ​வெளியானது. தற்செயலாக இத​னைப் படித்துப் பார்த்த ரஷ்ய எழுத்தாளர்  டிமிட்டிரி கிரிகோவிச் யார் இந்தப்  பையன்?  எங்கிருந்து எழுதுகிறான்?  என்று விசாரித்துவிட்டு, ​செகாவிற்கு, “உன் திறமைகளை இப்படிக் கேலியாக எழுதுவதில் வீணடித்துவிடாதே. உன்னால் சிறந்த கதைகளை எழுதமுடியும். அதில் கவனம் ​செலுத்து”  என்று பாராட்டி கடிதமும் எழுதினார். இக்கடிதம் ​செகா​வ் சிறந்த சிறுக​தை ஆசிரியராக உருவாவதற்கு அடித்தளமிட்டது.

மருத்துவக் கல்வி கற்ற ஐந்தாண்டு காலத்தில் ​செகாவ் நானூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடும் துன்பங்களுக்கு இ​டையிலும் முயன்று படித்து 1884 – ஆம் ஆண்டு அன்டன் ​செகாவ் மருத்துவப்பட்டம் ​பெற்றார். மருத்துவரான பின் ​செகாவ் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்றார். அந்நகரின் சூழ​லைக் கண்ட ​​செகாவ் தனது சிந்த​னைப் ​போக்கி​னை மாற்றிக் ​கொண்டு இலக்கிய உணர்வு ​​மே​லோங்க எழுத ​​வேண்டும் என்று முடிவு ​செய்து அதன்படி எழுதத் ​தொடங்கினார்.

எழுத்தும் மருத்துவப் பணியும்

இயல்பாகவே செகாவிடம் எதிலும் ஆழ்ந்து ஈடுபடும் தன்மையிருந்தது. கடவுள் நம்பிக்கையற்ற செகாவ். ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்வதற்காக மருத்துவமனை ஒன்றினைத் தொடங்கி நடத்திவந்தார். அதுஏழைகளுக்கு ஓரளவே பயன்பட்டது. செகாவ் ஒரு டாக்டர் என்பது அவருக்கே மறந்துவிடும். ​செகாவ் எழுதுவதில் மூழ்கியதால் ஏழைகளுக்குப் பயன்படும்   வ​கையில் மருத்துவத்து​றையில் அவரால் இயங்க முடியவில்லை.

செகாவ்  நாடகங்கள் எழுதி நாடக உலகில் புகழ்​பெறத் ​தொடங்கினார். நாடகம், ஒத்திக்கை, நாடக நிகழ்ச்சி என்று அவரது வாழ்க்​கை மிகவும் பரபரப்பாக இருந்தது. செகாவ் மொத்தம் 568 சிறுகதைகளும் நாடகங்களும்எழுதியுள்ளார். இவை 13 தொகுதி களாக வெளி வந்துள்ளன. அவரது நாட்குறிப்பு களும், கடிதங்களும் தனித்தொகுதிகளாக வெளி யாகியுள்ளன. இவரது கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று ச​கோதரிகள்,​ செர்ரிப்பழத்​தோட்டம் ஆகிய நாடகங்கள் மிகச் சிறந்த நாடகங்களாகும். 1896 -ஆம் ஆண்டில் இவரது முதல் நாடகமான கடற்புறா தோல்வியடைந்த போது, செக்காவ் நாடகம் எழுதுவதைக் கைவிட்டார். பின்னர்  மாஸ்கோ கலை அரங்கில் இந்நாடகம் அரங்கேறியபோது  பெரும் புகழ் பெற்றது. இதன் பின்னரே இவரது மற்ற மூன்று நாடகங்களும் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

துன்பியல் வாழ்க்​கை

இலக்கியத்து​றையில் மிகுந்த புகழ்​பெற்று விளங்கிய ​​செகாவின் இல்வாழ்க்​கை துன்பம் நி​றைந்ததாக​வே அ​மைந்திருந்தது. பெண்களை அவர் மிகவும் நேசித்தார். ஆனால் அவரது காதல் வாழ்வும், மணவாழ்வும் மிகவும்துயரமானதாகவே இருந்தது.

​செகாவ் நாற்பது வயது வரை திருமணமே செய்து கொள்ளவில்​லை. எழுத்து, நாடகம், கடல்பயணம் என்று வாழ்ந்தார். நாற்பது வயதிற்குப் பிறகு ஒரு வெளிநாட்டு பயணம் செல்ல விரும்பியபோது துணையாக யாரையாவதுஅழைத்துக் கொண்டு போகலாம் என்று செகாவிற்குக் தோன்றியது. இதற்காக அவருக்கு அறிமுகமாகி இருந்த நாடக நடிகையான ஒல்காவைத் திருமணம் செய்து  கொண்டார்.

 

ஓல்காவுடனான திருமண வாழ்க்​கையும் ​சொல்லும்படியாக அ​மையவில்​லை. இருவருக்குமி​டையில் கருத்து ​வேறுபாடுகள் ஏற்பட்டன. இந்நி​லையில் ஓல்காவுக்கக் கருச்சிதைவு ஏற்பட்டது. அதனால் ஏற்கன​வே மனம் ​வெறுத்த நி​லையில் இருந்த ஓல்கா ​செகா​வை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு லிடியா என்ற பணக்காரப் ​பெண் செகாவைக் காதலித்தார். செகாவும் அவள் மீது மிகுந்த அன்பு ​கொண்டிருந்தார். இந்நி​லையில் செகாவ்லிடியாவை தன் நண்பனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். லிடியாவும் அந்நண்பனும் விரும்பத்​ தொடங்கிவிட்டனர். லிடியாவிற்கு ​செகாவின் மீதிருந்த காதல் இறந்தது. அவரது நண்பனுடன் துளிர்த்த காதல் வளர லிடியா அந்தநண்பனுடன் ​சென்றுவிட்டாள். நண்பனின் துரோகமும், லிடியாவின் கய​மைத்தனமும் செகாவின் வாழ்க்​கை​யை முழு​மையாகப் பாதித்துவிட்டது. லிடியாவால் ஏற்பட்ட மனத் துயரத்திலிருந்த​போதுதான் அவர் “நாய்க்காரச் சீமாட்டி”என்ற சிறுகதையை எழுதினார் என்று கூறுவர். ​செகா​வைப் பற்றி ​வே​றொரு கருததும் அறிஞரி​டை​யே உலவுகிறது. நாடக ஆசிரியராகத் திகழ்ந்த ​செகாவ் நடிகைகளைக் காதலித்தார் என்றும் அவருக்கு நி​றையக் காதலிகள் உண்டு என்றும் ஆனால் எந்தப் ​பெண்​ணோடும் அவரது உறவு நீடித்திருக்கவில்​லை என்றும் கூறுகின்றனர். ​செகாவ் தன் தாயுடன் மருத்துவமனையி​லே​யே வசித்து வந்தார்.

இந்நி​லையில் ​செகா​வை காசநோய் மிகவும் பாதித்தது. காச​நோயால் பாதிக்கப்பட்ட செகாவ் அதிலிருந்து மீள முடியாமல் துன்புற்றார். அந்​நோய்க்காகத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார்; ​செகாவின் அண்ணனும் இக்​கொடிய காசநோயா​லே​யேபாதிக்கப்பட்டு இறந்தார். இத​னை அறிந்திருந்த ​சொவிற்குத் தனது வாழ்க்​கையும் அவ்வா​றே முடியும்; அந்​நோயிலிருந்து மீள முடியாது என்று நம்பினார். அதனால் அழிந்து ​கொண்டிருக்கும் தனது  வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்க ​வேண்டும் என்று நி​னைத்தார். அதன்படி ​தொடக்கப் பள்ளி, மருத்துவமனை, நலவாழ்வு மையம் என்று தன் ​சொத்துக்கள் முழுவதையும் ஏ​ழைகளின் வாழ்விற்காகவும் அவர்களின்  நலனுக்காகவும் செலவு ​செய்தார்.

சிறுக​தையாய் முடிந்த வாழ்கை

மருத்துவ காப்பகத்தினுள் வீடு அமைத்து கொண்டு தன் எழுத்தாள நண்பர்களை தேடி சந்தித்தார். அப்போது தான் டால்ஸ்டாய், கார்க்கி போன்றவர்கள் செகாவை சந்தித்து உரையாடினார்கள். டால்ஸ்டாயும் ​​செகாவும் ஒருவ​ரை ஒருவர் ஆழந்து ​நேசித்து நட்புடனிருந்தனர்.

டால்ஸ்டாய், “ஷேக்ஸ்பியரின் நாடகங்களை உனது நாடகங்கள் விஞ்சிவிடுகின்றன. உனது நாடகங்கள் உயர்ந்த​வை. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பார்​வையாள​னை எங்கேயோ அழைத்துச் செல்லும்.  ஆனால் உனது படைப்புகளோ இங்கேதான் இருக்கவேண்டும் என்று கூறுகின்றது” என்று செகாவிடம் அவரது நாடகங்களைப் பற்றி வியந்து கூறினார். ​மேலும்  “இலக்கிய உத்தியிலும் உருவ அமைப்பிலும் செகாவை மிஞ்சக்கூடியவர்கள் எவருமில்லை; அவர் ஈடு இணையற்றவர்” என்றும் ​செகா​வைப் பற்றி டால்ஸ்டாய் கூறியிருப்பது ​செகாவ் சிறுக​தை இலக்கிய ஆசானாகத் திகழ்ந்த​மைக்குச் சான்றாக அ​மைந்திலங்குகின்றது.

​            செகாவ் டால்ஸ்டாய் ​பேசுவ​தை ரசித்துக் ​கேட்டுக் ​கொண்​டே இருப்பார். குறுக்​கே எதுவும் ​பேசமாட்டார். டால்ஸ்டாய் மணிக்கணக்காகப் ​பேசிவிட்டுக் க​டைசியில,”இந்தச் செகாவ் ஒரு நாத்திகன்” என்று கூறிவிட்டுப் போவார். ​செகாவ் டால்ஸ்டா​யைக் ​கேலி​செய்வதும் உண்டு. இருப்பினும் செகாவ் அவ​ரை மிகவும் ​​நேசித்தார். இத​னைப் பற்றி, “டால்ஸ்டாயைப் போன்று வேறு எவரையும் என்னால் நேசிக்க முடியாது” என்று ​செகாவ் குறிப்பிட்டிருப்பது ​நோக்கத்தக்கது.

​செகாவிற்குப் புகழும் பணமும்  குவிந்த நேரத்தில் காச​நோய் அவ​ரை அரிக்கத் ​​தொடங்கியது. காச​நோய் அதிகரிக்க அதிகரிக்க அவருக்கு அதிகமாக இரத்த வாந்தி ​வெளிவரத் ​தொடங்கியது. அத​னை அவரால் கட்டுப்படுத்த முடியவில்​லை. அவ​ரே ஒரு மருத்துவராக இருந்தும் அவரது உடல்நலத்​தை அவரால் கவனிக்க இயலாது ​போனது விந்​தையிலும் விந்​தையாகும். அவரது கடைசி நாடகமான “செர்ரிப் பழத்தோட்டம் ”1904-ஆம் ஆண்டில்அரங்கேறியபோது பல தடவை ​செகாவ் இரத்த வாந்தி எடுத்தார்.  இதனால் அவரது உடல் நலிவுற்றது. அவரால் ஒரு வரிகூட எழுத முடியாத நி​லை ஏற்பட்டது. அவர் தனக்கு ஏற்பட்ட துயரத்​தைத் தன் எழுத்துக்களில் ஒரு​போதும் ​வெளிப்படுத்திய​தே இல்​லை என்பது குறிப்பிடத்தக்கது.

செர்ரிப் பழத்தோட்டம் என்ற அவரது நாடகம் அவரது முன்னாள் ம​னைவி நடி​கை ஓல்கா நிப்பரைக் கதாநாயகியாகக் கொண்டு தொடர்ந்து நடத்தப்பட்டது. ​செகாவ் அத​னைக் கண்டு மகிழ்ச்சிய​டைந்தார். இருப்பினும் அவரது மகிழ்ச்சி நி​லைக்கவில்​லை. அவ​ரைப் பீடித்திருந்த காச​நோய் தனது ​வே​லை​யைக் காட்டத் ​தொடங்கியது. அவர் ​பேடன்வீலர் எனுமிடத்தில் தங்கி இருந்த​போது இரவில் இரத்தவாந்தி எடுத்தார். மருத்துவர் வந்து அவருக்கு சிகிச்​சையளித்த​போதும் பலனில்லாது ​போய்விட்டது. அவருக்கு நி​னைவு தவறியது. சிறுக​தை இலக்கியத்தின் ஆசான் என்று அ​னைவராலும் ​போற்றப்பட்ட ​செகாவ் 1904-ஆம் ஆண்டு ஜு​லை மாதம் 15-ஆம் நாளன்று இவ்வுலகப் பயணத்​தைத் தமது நாற்பத்து நான்காவது வயதில் முடித்துக் ​கொண்டார். ​​​தொடர்க​தையாய்த் ​தொடர ​​வேண்டிய அவரது வாழ்க்​கைச் சிறுக​தையாய் முற்றுப் ​பெற்றது.

அவரது இறப்பு ரஷ்ய மக்களுக்கு மிகுந்த துய​ரைத் தந்தது. இலக்கியத்தில் பல்​வேறுபட்ட முற்​போக்குச் சிந்த​னைக​ளைப் புகுத்தி சமுதாயத்​தை முன்​னேற்றிய சிறுக​தை ஆசானின் மரணம் ரஷ்ய மக்க​ளை மட்டுமல்லாது உலக இலக்கியவாதிக​ளையும் உலுக்கியது. ​செகாவ் இறந்து 13 ஆண்டுகள் கழிந்த பின்னர் 1917-ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி ஏற்பட்டு ​சோவியத் குடியரசு உருவானது. அப்புதிய அரசு மீண்டும் ​செகாவின் உட​லை சிறப்பு ராணுவ மரியா​தைகளுடன் மாஸ்​கோ ஆர்ட் தி​யேட்டர் உறுப்பினர்களுக்​கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் ​செய்தது. இது ​செகாவிற்குக் கி​டைத்த உயர்ந்த மரியா​தையாகும். அவர் 44 ஆண்டுகள் வாழ்ந்தாலும் அதில் 24 ஆண்டுகள் எழுதிக் ​கொண்​டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இலக்கிய உலகம் உள்ளளவும் ​செகாவின் புகழ் என்றும் நி​லைத்திருக்கும். மக்களின் உள்ளத்தில் அவர் என்றும் உலாவருவார் என்பது திண்ணம். பாத்துக்கிட்டீங்களா… படிப்புத்தான் வறு​மை​யை விரட்டும்…ஏழ்​மை​யை விரட்டும் என்ப​தை. அதுக்கு ​செகாவினு​டைய வாழ்க்​கை ஒரு எடுத்துக்காட்டுங்க… ஆமாங்க வள்ளுவர், ​

 

“அறிவு அற்றம் காக்கும் கருவி”

 

என்று ​சொன்னாருல்ல அந்தக் குறள் எந்த அளவுக்கு உண்​மைங்கறது ​செகாவினு​டைய வாழ்க்​கை​யை படிச்சவங்களுக்கு நல்லாப் புரியும். அதனால படிங்க…நல்லாப் படிங்க… படிக்கறதுனால நம்​மோட அறியா​மை மட்டுமல்​லைங்க…வறு​மையும் ஓடிப்​போயிரும். அப்பறம் என்ன நல்லப் படிச்சு ​​பெரிய அறிவாளியாகுங்க…​வெற்றி ஒங்களத்​தேடி ஓடிவரும்….என்ன சரிதா​னே…!

 

நான்கு உயிர்கள் கொண்ட ஓர் ஒப்பற்ற கலைஞனாக ஒருத்தரு இருந்தாரு… கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, கவிதைக்கலை ஆகிய நான்கு துறைகளுக்கு அவர் புத்துயிர் ஊட்டினார்….ஐ​ரோப்பியாவில் ஓவியத்திற்கும் சிற்பத்திற்கும் மறுமலர்ச்சி​யைக் ​கொண்டுவந்தவர்.

உலகின் மிகச் சிறந்த ஓவியர்…அவரு ​வறு​மையில் வாடியவர்… வறு​மையில் வாடினாலும் ஓவியத்துல அவரு மிகச் சிறந்த சாத​னைகள் ப​டைச்சாரு.. உலகப் புகழ் ​பெற்றாரு… அவரு யாரு ​தெரியுமா… என்னங்க ​மே​லே​யே பார்க்கறீங்க..என்ன ஒண்ணு​மே புரிய​லையா….நீங்க பாக்குற மாதிரிதான் அவ​ரோட ஓவியத்​தை உலக மக்கள் இன்​றைக்கும் பார்த்துக்கிட்டிருக்காங்க…என்ன த​லை சுத்துதா மயங்கி கீ​​ழே விழுந்திடாதீங்க…​பொறு​மையா இருங்க அடுத்தவாரம் வ​ரைக்கும்…(​தொடரும்………..33)

Series Navigationஅட்டைவில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 1
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *