தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை

This entry is part 24 of 34 in the series 10 நவம்பர் 2013

தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு

வெங்கடேஷின் நாவல், இடைவேளை

p47கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து  தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வளர்ச்சி, இந்திய படித்த இளைஞர்களிடையே ஒரு பெரிய கனவுலகத்தைச் சிருஷ்டித்தது. அவர்கள் என்றும் நினைத்தும் பார்த்திராத பொருளாதார வளத்தையும் அவர்கள் காண்பது கனவல்ல என்ற நினைப்பையும் தந்தது. தகவல் தொழில் நுட்பம் நுழையாத துறை இல்லை என்று ஆகியது. அது இல்லாது வளர்ச்சி அடையும் துறை இல்லை என்றாகியது. எல்லா பொறியியல் துறைகள் மாத்திரமல்ல, கல்வியிலிருந்து தொடங்கி பலசரக்கு வியாபாரம் வரை அதன் வியாபகம். ஒரு காலத்தில் நமக்குத் தெரிந்த சிவில், எலெக்ட்ரிகல், மெக்கானிகல் கல்லூரிகளுக்கு இருந்த மவுசும், தலைநிமிர்வும் குறைந்து தகவல் தொழில் நுட்பத்துக்குத் தாவியது. கல்லூரி வாசலில் வேலை வாய்ப்புகள் தேடி வந்தன. படிப்பு முடிந்ததும் நாலு அல்லது ஐந்து இலக்க சம்பள வாய்ப்புக்களைத் தேடி அலைந்த காலம் போய் கல்லூரி வாசலில் ஆறு இலக்க வாய்ப்புக்கள் தேடி வந்தன. செங்கல் புழுதி முகத்தில் படிய வெயிலில் நிற்க வேண்டாம். கை கரியாகாது, உடையில் எண்ணைக் கரை படியாது.  பிரம்மாண்ட குளிர் பதன கட்டிடங்களுக்குள் தூசி படியாது வியர்க்காது உடையின் மடிப்பு கலையாது வேலை. அலுவலகத்தில் இருப்பு ஒரு சின்ன தடுப்புக்குள் தான், இருந்தாலும் என்ன! அமெரிக்காவும், ஜெர்மனியும் ஃபின்லாந்தும் தில்லியோ சென்னையோ என ஆயிற்று. சென்னை பெண்ணுக்கு அமெரிக்காவிலிருந்து வரும் மாப்பிள்ளை, புதிதாகத் தோன்றும் முப்பது மாடி, கட்டிடத்தில் ஒரு ஃப்ளாட். பழசாகிவிட்டது என்று எண்ணி அடிக்கடி மாற்றும் புது மாடல் கார்கள். திடீரென தகவல் தொழில் நுட்பம் படித்தவர்கள் எங்கோ ஒரு உச்சத்தில் தான் உட்கார்ந்து கொண்டார்கள்.

இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றம். சென்னை, பங்களூர் போன்ற நகரங்களின் தோற்றமும் மாறத் தொடங்கின. ஒரு புதிய கலாசாரத் தீவு ஒவ்வொரு பெரிய நகரத்திலும். மக்கள் மத்தியிலும் இவர்கள் ஒரு புதிய கலாசார தீவு தான்.

இந்த வளம், பொருளாதார ஏற்றம் இங்கு பிறந்ததல்ல. இது வெளியிலிருந்து பெறப்படுவது. ஒரு காலத்தில் வேலை வாய்ப்புத் தேடி வெளிநாடுகள் சென்றதுண்டு லக்ஷக்கணக்கில். தென் ஆப்பிரிக்கா இலங்கை, மலேயா என்று.. இப்போது மேலை நாடுகளிலிருந்து குத்தகைக்கு எடுத்தது போன்று இங்கு வேலை வாய்ப்புகள் இறக்குமதியாகின்றன. காரணம் அவர்களுக்கு இங்கு குத்தகைக்கு வேலை இறக்குமதி செய்வது மலிவாக இருக்கிறது. அந்த மலிவு நமக்கு “கொட்டிக்கொடுப்பதாக” இருக்கிறது. நாம் சொர்க்க போகத்தில் திளைத்தோம். இங்கு வேலை உற்பத்தி ஆவது கொட்டிக்கொடுக்காவிட்டாலும் நாட்டுக்கு வளம் சேர்ப்பது.  நிரந்தரமானது. குத்தகைக்கு வரும் வேலை, குத்தகை நின்றதும் எல்லாமே நின்றுவிடும் அபாயம் கொண்டது. கர்நாடகம் தரும் தண்ணீர் மாதிரி தான்.  ”சொட்டுத் தண்ணீர் கூட தரமாட்டோம்” என்று சொல்லி நிறுத்தினால் இங்கு நம் வயல்கள் பாழடைந்து விடும். உற்பத்தி அங்கு. இங்கு தரப்படுவது.

தென்னை மரத்துக்குத் தேள் கொட்டி பனைமரத்துக்கு நெறிகட்டும்மா? கட்டும். வேடிக்கை அல்ல. 2009 லிருந்து நிகழ்ந்து வரும் நிஜம்.

2009 –ல் அம்மாதிரியான ஒரு நிலையின் ஆரம்பங்கள் நமக்குத் தெரிய வந்தன. அமெரிக்கர்களின்  வேலை வாய்ப்புக்களை இந்தியர்கள் பறித்துக் கொள்வதாக குற்றம் சாட்டினர். அது பிரசாரப்படுத்தப்பட்டது. இங்குள்ள கம்பெனிகளுக்கு வரும் வேலைகளும் வருமானமும் குறையத் தொடங்கின. அனேக தகவல் தொழில் நுட்ப கம்பெனிகள் தம் ஆட்குறைப்பைத் தொடங்கின. திடீரென மேலதிகாரியின் அறையிலிருந்து அழைப்பு வரும். “மன்னிக்கவும். அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி உங்களுக்குத் தெரியும். உங்கள் யூனிட்டை மூடிவிடத் தீர்மானித்து விட்டோம். வேறு வழியில்லை. வேலையை விட்டு நீங்குவதாக எழுதிக்கொடுங்கள். மூன்று மாத சம்பளம் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.” அவ்வளவு தான். வீட்டுக்குப் போகலாம்.” என்ற காட்சி அனேக இடங்களில் நடந்தன.

அம்மாதிரியான ஒரு காட்சியுடன் தான் வெங்கடேஷின் “இடைவேளை” நாவல் தொடங்குகிறது. அப்படி வேலை இழந்தோர் சிலர் தம் வாழ்க்கையில் தடுமாறுவதும், சிலர் நிலை குலைவதுமாக நாவல் நீள்கிறது. கடைசியில் ஒரு தற்கொலையுமாகத் தான் நாவல் முடிகிறது. இது ஒரு சிலரை மாத்திரம் பாதித்த கதை அல்ல. பெரும்  புயலடித்த நாசத்தின் ஒரு காட்சி.

 

ஆர்த்தி, கல்யாண், ரஞ்சன் என்று மூவர் குடும்பங்கள் திடீர் என்று முகத்தில் அடித்த வேலை இழப்பை எதிர்கொள்ளும் தவிப்பைச் சொல்கிறது கதை. வெங்கடேஷ் அறிந்த உலகின் சில மாதிரிகள் இக்குடும்பங்கள். அவரும் எதிர்கொண்ட வாழ்க்கை தான். அவரால் இன்னும் பலரால் நீந்திக் கரை ஏற முடிந்திருக்கிறது சில தடுமாற்றங்களோடு. தடுமாற்றங்களில் வீழ்ந்தவர்களும் உண்டு. நீந்திக் கரை ஏறினாலும் முன்னர் இருந்த கௌரவம் பல சௌகரியங்களின் இழப்பு இவற்றோடு வாழ்வதும் கனவு கலையும் விஷயம் தானே.

 

இவர்களோடு தம் பணி ஓய்வு கிடைத்த வாழ்க்கையில் பங்குச் சந்தையில்

தம் பணத்தைப் போட்டு அன்றாட ஏற்ற இறக்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்த்தியின் வளர்ப்புத் தந்தை சேவியர அமல்தாஸ்  மல்டி ட்ரேடிங்கில்காலம் கடத்தும் அம்மா பத்மஜா. எல்லோரும் பாதிக்கப் படுபவர்கள் தான். அமல்தாஸும் பத்மஜாவும் வயதானவர் இல்லத்துக்குப் போகலாம் என்று நினைக்கிறார்கள். இவர்களை தன்னுடன் வைத்துக் காப்பாற்ற எண்ணும் ஆனால் சொல்லத் தைரியமில்லாத ஆர்த்தி. வேலை இழந்து அம்மாவுடன் மல்டி ட்ரேடிங்கில் உதவ நினைக்கிறாள். அதிலும் பயனிருப்பதில்லை. ஆர்த்திக்கு நோயல் என்று ஒரு லவ்வர் பாய். கல்யாணம் செய்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று யோசனையில் இருப்பவர்கள்.

நோயலுக்கு தன் முந்தைய மனைவி தன்னை ஏமாற்றிய பயம். இப்போது ஆர்த்தியிடம் தயக்கம்

 

ஆர்த்தியின் அம்மா பத்மஜாவுக்கும் சேவியர் இரண்டாம் கணவன். சேவியருக்கும் பத்மஜா இரண்டாம் மனைவி தான். இரண்டு பேரும் முதல் கல்யாண வாழ்க்கையில் ஏமாந்தவர்கள். ஆர்த்தியாவது நோயலைக் கல்யாணம் செய்து கொண்டு தன்னைப் போல் அல்லாது சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று அம்மா பத்மஜா விரும்புகிறாள். மல்டி ட்ரேடிங்கில் கால் வைத்த பிறகு, ஆர்த்தி வாடிக்கை தேடும் மும்முரத்தில் அம்மாவை வெறுத்து ஒதுங்கி யிருக்கும் சித்தியைப் பார்க்கச் செல்கிறாள்.  “ஏண்டி நீயாவது கல்யாணம் பண்ணிக்கப் போறியா இல்லை,  உன்  அம்மா மாதிரி சீரழியத்தான் போறியா. நீ யாரோடேயோ என்னமோ லிவ் இன் கிறாளே அந்த மாதிரி இருக்கியாமே?” என்று சித்தியின் ஏளனப் பேச்சைக் கேட்க வேண்டி வருகிறது.

இடையில் நோயல் குளியல் அறையில் விழுந்து கால் எலும்பு முறிந்து மருத்துவ மனையில்.

 

ரஞ்சன் வியாபாரத்தைப் பெருக்கும் நுணுக்கங்களைப்பற்றி நன்கு பேசத் தெரிந்தவன். கல்லூரிகளில் பேச அழைக்கப் படுகிறான். சிலருக்கு ஆலோசகராக அழைக்கப்படுகிறான். ஒரு லெக்சருக்கு, ஆலோசனைக்கு என்று அழைத்து உபசாரம் செய்து கௌரவிப்பது போல ஒரு சிறு தொகையில் காரியம் நடத்திக்கொள்வது எல்லாம் தன்னை குறைந்த செலவில் பயன்படுத்திக் கொள்ளத் தான் விரும்புகிறார்கள் என்பது ரஞ்சனுக்குத் தெரிகிறது. ஆனாலும் வேறு வழியில்லை. பத்திரிகைகளுக்கு புதிய வெப் சைட் உருவாக்கிக் கொடுக்கிறான். அது பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப் படுகிறது. ஆனால் பணம் கிடைப்பதில்லை. வெப் சைட்டினால் வருவாய் பெருகினால் தானே. அதுவும் வீணான உழைப்பு ஆகிறது.

 

கல்யாண்  எப்போதும் இன் முகத்துடன் உற்சாகமாக இருப்பவன். அவனது சுறுசுறுப்பும் சிரித்த முகமும் அவனுக்கான விளம்பரம். அவனது பலங்கள். ஒரு ஆண்ட்டி வைரஸை விற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பின் அதே குறியாக நாள் முழுதும் ஆழ்ந்து போகிறான். நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று சிபாரிசு பெற்று அந்த ஆண்ட்டி வைரஸை பலருக்கு விற்கிறான். ஆனால் அது பழுது பட்டது, கணிணியில் அது பாதுகாப்பதை விட அழிப்பது அதிகம் என்று புகார்கள் வருகின்றன. ஆண்ட்டி வைரஸை உருவாக்கி தனக்கு அறிமுகப் படுத்தியவரைக் கேட்டால், “அதில் குறைகள் சில உண்டு தான். அதை நீக்க முயன்று வருகிறோம்.” என்று சமாதானம் சொல்லப் படுகிறது. அதை முன்னரே சொல்லி எச்சரிக்காமல் ஏன் என்னிடம்  விற்கக் கொடுத்தீர்கள்? என்று கேட்டால், ”எல்லாம் சொல்லணும்னு இருக்கா?” என்று அலட்சிய பதில் வருகிறது. இந்நிலையில் அவன் மனைவி லதா கர்ப்பம் தரித்திருந்தவள் மருத்துவ மனையில் சேர்க்கப் படுகிறாள். கல்யாண் அருகில் இல்லை. ஆண்ட்டி வைரஸ் கிளப்பும் புகார்களில் ஒரு அரசு நிறுவனம் போலீஸில் புகார் செய்கிறது. யாரும் தனக்கு உதவ முன்வராது போகவே. அவமானத்தால் கல்யாணம் தற்கொலை செய்துகொள்கிறான்.

 

ஆர்த்தி, நோயல், ரஞ்சன் எல்லோரும் கல்யாணத்தின் தற்கொலைச் செய்தி கேட்டு மருத்துவ மனையில் சந்திக்கிறார்கள். போஸ்ட் மார்ட்டம் இல்லாது உடலை எடுத்துச் செல்வதற்கு யாரைப் பார்ப்பது என்று அவர்கள் யோசித் துக்கொண்டிருக்கிறார்கள்.

 

நான் இப்படி பெயர்களாக, சம்பவங்களாகச் சொல்லிச் சென்றுள்ளேனே தவிர, வெங்கடேஷ் மிக சுருக்கமான உரையாடல்களாலும், சிறு சிறு சொற் சித்திரங்களாலும் பாத்திரங்கள் நிகழ்ச்சிகள், அவர்களிடையேயான  உறவுகள் எல்லாவற்றையும் தொய்வில்லாது, எவ்வித அலட்டலும் இல்லாது சாதாரண நடையிலேயே மிகச் சரளமாகச்  சொல்லிவிட முடிகிறது.

 

ஒவ்வொரு சம்பவத்தையும் சொல்லும் முன் ஒரு செய்திக் குறிப்புடன் வெங்கடேஷ் தொடங்குகிறார். அதில் பிரதம மந்திரியின் ஆசுவாசம், கவலை, அமெரிக்க பொருளாதார சரிவு, விமான கம்பெனிகளின் வீழ்ச்சி, பங்குச் சந்தையின் கலவரம் இருந்தாலும் இந்தியா அதை நம்பிக்கயுடன் எதிர்கொள்ளும் என்னும் ஆரூடம் பல இடங்களிலிருந்து வரும் இப்படியான செய்திக் குறிப்புகளே ஒரு விடம்பனமாகவும் கவலை மாத்திரம் தெரிவிக்கும் கவலையற்ற மனத்தையும் நமக்குச் சொல்லாது சொல்லுகின்றன. இன்று அவற்றைப் படிக்க வேடிக்கையாகத் தான் இருக்கின்றன.

 

வெங்கடேஷே ஒரு இடத்தில் சொல்வது போல, தகவல் தொழில் நுட்பத்தின் வேலைப்பெருக்கத்தில் வாழ்ந்தோர் கனவுலகத்தில் வாழ்ந்தனர்.  பொருளாதார சரிவு கனவைக் கலைத்தது. சுய மதிப்பை சுக்கு நூறாக்கியது. சமூக மதிப்பும் சரிந்தது. 2009- தொடங்கியது மறைந்துவிடவில்லை, இன்று மறுபடியும் எழுந்து நிற்பது போல் தோன்றினாலும். இது பொருளாதார சவால் மட்டுமல்ல. அரசியல் சவால். நான். அது பற்றி இன்னும் சொல்லவில்லை என்கிறார் வெங்கடேஷ்.

 

தமிழ் எழுத்தில்  இந்த உலகம் பற்றி நமக்குப் படிக்கக் கிடைப்பதில்லை. அரசியலும், சினிமாவும் கூட இன்னம் தமிழ் எழுத்தில் நுழையவில்லை. அவையும் கனவுத் தோற்றம் தரும் அவலங்கள் நிறைந்த உலகங்கள் தான்.

 

 

இடைவேளை: (நாவல்): ஆர் வெங்கடேஷ்.  வெளியீடு: நேசமுடன். வேத பிரகாசனம், 142. முதல்மாடி, க்ரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலை புரம், சென்னை-28, விலை ரூ. 100

 

Series Navigationமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்என்னுலகம்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *