தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

29 மார்ச் 2020

ப மதியழகன் கவிதைகள்

ப மதியழகன்

Spread the love

மோட்ச தேவதை

 

கிணற்று நீரில்

விழுந்த தனது பிம்பத்தை

எட்டிப் பார்த்தது

குழந்தை

வானவில்லை விட

அம்மாவின் சேலை வண்ணம்

மிகவும் பிடித்திருந்தது அதற்கு

தன்னுடன்

சோற்றுக் கவளத்துக்கு

போட்டியிடும் நிலாவுக்கு

காய் விட்டது குழந்தை

லாலிபாப் வாங்கிக் கொடுத்தால்

கன்னத்தில் முத்தம் பதிக்கும்

யாரையும் சீரியல்

பார்க்கவிடாமல்

கார்ட்டூன் சேனல்களில்

லயித்துப் போய்

தொலைக்காட்சி முன்னால்

தவமிருக்கும்

அழைப்பு மணி ஒலிக்கும்

கணத்தில்

தொலைபேசி அதன்

கையிலிருக்கும்

மழலை மொழியில்

ஹலோ என்பதை

வீடே பார்த்து ரசிக்கும்

பாட்டியை

கதை சொல்லச் சொல்லி

நச்சரிக்கும்

அம்மாவின் தாலாட்டைக்

கேட்டுக் கொண்டே

கண்ணுறங்குவது

அதற்கு மிகவும் பிடிக்கும்.

காகித மலர்கள்

 

உச்சி வெயில்

கால்கள் தானே போகின்றது

நிழல்களை நோக்கி

 

நள்ளிரவு

எங்கோ தூரத்தில்

அழுகுரல் கேட்டது

 

விடியலை

வரவேற்கின்றன

பறவைகள்

 

பிச்சைக்காரன்

திருவோட்டில்

தங்கக்காசு

 

மயங்கிச் சரிந்தான்

கண் விழிக்கையில்

அவன் உடலைக் காணோம்

 

பேய் மழை

வீதியெங்கும்

வெள்ளக்காடு

 

ஓட்டுனரின்றி

வாகனம்

நகர்ந்தது

 

மணி அடிக்கும்

மாணவனை

எதிர்பார்க்கும் குழந்தைகள்.

 

 

 

 

 

 

சாயை

 

ஜனங்கள் வேகமாக

நகர்ந்து கொண்டிருந்தார்கள்

யார் எங்கே போகிறார்கள்

இந்த வீதி எங்கே முடிகிறது

விபத்தை எதிர்கொண்டவன்

யாரைப் பார்க்க கிளம்பி இருப்பான்

சகஜ வாழ்க்கைக்கு

மழை தடைபோடுகிறது

எல்லோரும் எதிர்பார்க்கிறோம்

எப்போது மழை நிற்குமென்று

மருத்துவமனையிலிருந்து

வெளியே வந்த பெண்ணொருவள்

தலையிலடித்து அழுது கொண்டிருந்தாள்

யாருடைய கணக்கை

கடவுள் முடித்து வைத்தாரோ

என்று எண்ணியபடி

சாலையைக் கடந்தேன்

எதிர்பாராத சந்திப்பு

ஒரு காபி மற்றும் சம்பிரதாய

நலம் விசாரிப்புகளுடன்

முடிந்துவிடுகிறது

கனவுலகில் நுழைவதற்கான

கடவுச் சொல்லை

நீங்கள் அறிவீர்களா

அச்சத்தோடு திரும்பிப் பார்த்தேன்

இந்த நள்ளிரவில்

என்னை பின்தொடர்ந்து வந்தது

எனது நிழல் மட்டும் தானா…

 

 

 

 

Series Navigationஅவனேதான்அழுகையின் உருவகத்தில்..!

Leave a Comment

Archives