மருத்துவக் கட்டுரை உணவுக்குழாய் புற்றுநோய்

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

 

தொண்டையக் கடந்து இரைப்பைக்குள் செல்லும் குழாய் உணவுக்குழாய் அல்லது உண் குழல் என்பது. இது 23 செ.மீ. நீளம் உடையது.

உணவுக்குழாய் புற்றுநோய் உலகில் தோன்றும் பரவலான புற்றுநோய்களில் எட்டாவது இடம் வகிக்கிறது. இந்த புற்றுநோய் உணவுக்குழாயின் நடுப்பகுதியில் 40 சதவிகிதமும், அடிப்பகுதியில் 45 சதவிகிதமும், மேல்பகுதியில் 15 சகிதமும் உண்டாகிறது.

உணவுக்குழாய் புற்றுநோய் இரண்டு வகைப்படும்.

1. Squamous cell carcinoma – ஸ்குவமஸ் செல் புற்றுநோய்

          2. Adinocarcinoma – அடினோ புற்றுநோய்
          இவற்றில் SCC எனும் முதல் வகைதான் ஆண்களிடம் அதிகம் ஏற்படுகிறது. தொடர்ந்து அதிக தானியங்கள் நிறைந்த உணவும், N – நைட்ரோசோ கலந்துள்ள பதனிடப்பட்ட உணவும் உண்பதால் இது ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. அதே வேலையில் கேரோட்டீனாய்டும், வைட்டமின் சீ யும் அதிகமுள்ள காய்கறிகளும் பழவகைகளும் இது வராமல் தடுப்பதாகவும் தெரிய வருகிறது.

புகைத்தல், மது அருந்துதல் போன்றவைiயும் இந்த வகை புற்றுநோய் வருவதை அதிகரிக்கின்றன.

அடினோ புற்று வகை உணவுக்குழாயின் அடிப்பகுதியில் உண்டாவதால் இரைப்பையின் அருகில் உள்ளது. இரைப்பையின் அமிலஙகளும் சீரனமாகாத நீரும் மேலெழுந்தால் நெஞ்சு கரிப்பு ஏற்படுகிறது. இது அடிக்கடி உண்டாகுபவர்களுக்கு இந்த வகையான புற்றுநோய் உண்டாகலாம் என்றும் தெரியவருகிறது.

                  அறிகுறிகள்

* பெரும்பாலும் இந்த நோய் 60 முதல் 70 வயதுடையவர்களுக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

* உணவை விழுங்குவதில் சிரமம் உண்டாவதே முதன்மையான அறிகுறி.

* அதைத் தொடர்ந்து நீர் பருகினாலும் அடைப்பு ஏற்படும்.

* நோய் உணவுக்குழாயின் சுவற்றில் பரவினால் அப்பகுதி மேலும் சுருங்கிவிடும்.

* பசியின்மை.

* எடை குறைதல்.

* உமிழ் நீரை விழுங்குவதில் சிரமம்.

* இருமல்.

* நுரை ஈரலுக்குள் நீர் புகுதல்

               பரிசோதனைகள்

* உள்நோக்குக்கருவி – Endoscopy

இப் பரிசோதனை மூலமாக உணவுக்குழாய்க்குள் நேரடியாகப் பார்த்தும் பரிசோதனைக்கு திசுக்கள் எடுத்தும் நோயை நிர்ணயம் செய்யலாம். 90 சதவிகித நோய் இவ்வாறு நிச்சயிக்கப்படுகிறது.

* பேரியம் விழுங்கும் பரிசோதனை – Barium Swallow.

பேரியம் சல்பேட் குடிக்கச் செய்து உணவுக்குழாயை படம் எடுத்துப் பார்ப்பது.

* CT ஸ்கேன் பரிசோதனை.

* MRI பரிசோதனை.

CT Scan, MRI ஆகியவை புற்றுநோய் நெஞ்சுப் பகுதிக்குள் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய உதவும்.

                  சிகிச்சை

இதற்கு வயது, உடல் நிலை, நோயின் நிலை ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்

நோயின் நிலை என்பது அது எவ்வளவு பரவி உள்ளது என்பதை அறிவதாகும். இதற்கு TNM என்னும் முறை பயன்படுத்துகின்றனர். அதன் விளக்கம் வருமாறு.

T = Tumour – புற்று கட்டி உள்ளது.

N = Node – புற்று அருகில் லிம்ப் கட்டியில் பரவியுள்ளது.

M = Metastasis – புற்று உடலின் வேறு உறுப்பில் பரவியுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த புற்றுநோய் நான்கு தடங்களாக அறியப்பட்டு, அதன்பின் 5 வருடங்கள் வாழ்வதின் வாய்ப்பு எவ்வளவு என்பதும் நிர்ணயிக்கப்படுகிறது. அவை வருமாறு:

முதல் தடம் – Stage 1…80 % 5 வருடம் வாழலாம்.

இரண்டாம் தடம் – Stage2… 30 % 5 வருடம் வாழலாம்.

மூன்றாம் தடம் – Stage 3…18 % 5 வருடம் வாழலாம்.

நான்காம் தடம் – Stage 4…, 4 % 5 வருடம் உயிர் வாழலாம்.

சிகிச்சை முறைகள் 4 வகையானவை.

* அறுவை சிகிச்சை. – இதுவே குணப்படுத்த மிகவும் சிறந்த முறை. ஆனால் புற்று உணவுக்குழாய்க்கு வெளியே பரவியிருக்கக் கூடாது. இப்படி செய்தால் 5 வருடம் உயிர் வாழும் வாய்ப்பு 80 % ஆகிறது.

* கதிரியக்க மருத்துவம் – Radiotherapy

குறைந்த அளவே பயனுள்ள இந்த முறையில் மூன்றாம் தட நோயாளி 5 வருடம் உயிர் வாழும் வாய்ப்பு 20 சதவிகிதம் எனலாம்.

* வேதியியல் மருத்துவ முறை – Chemotherapy

அறுவை சிகிச்சைக்கு முன் இந்த முறையும் பயன்படுத்தப்பட்டு வாழும் காலம் சற்று கூட்டப்படுகிறது

* நோய்த் தணிப்பு மருத்துவம் – Palliative Therapy

இந்த முறை வேறு ஏதும் செய்ய முடியாத நிலையில் கையாளப்படுகிறது. இதனால் நோய் குணமாகாது. ஆனால் நோயை ஓரளவு தணிக்க உதவும். உள்நோக்குக் கருவியின் ( Endoscope ) மூலமாக விரிவாக்கக்கூடிய உலோகத்தின் ( Expanding Metal Stent ) பயன்படுத்தி உணவுக்குழாயின் சுருக்கமுற்ற பகுதியை அகலப்படுத்தி உணவும் நீரும் பருக உதவும் முறை இது.

புற்று நோய்ப் பகுதியை உள்நோக்குக் கருவி உதவியுடன் லேசர் ( laser ) பயன்படுத்தி அழிப்பதும் ஒரு முறையாகும்.

( முடிந்தது ).

Series Navigationஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – 18
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *