நீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள்

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

rsudamani5

ஆர். சூடாமணி! இந்தப் பெயரை உயர்ந்த இலக்கிய உலகத்தோடு தொடர்பு உடையவர்கள் அறியாமல் இருக்க் முடியாது.
இவரைச் சந்திக்கும் வாய்ப்பு, பல ஆண்டுகளுக்கு முன்னால் எனக்குக் கிடைத்தது. 1972 என்று ஞாபகம். காலஞ்சென்ற எழுத்தாளர்களாகிய திரு மகரம் அவர்கள், குயிலி ராஜேஸ்வரி ஆகியோருடன், திருமதி ராஜம் கிருஷ்ணனும் நானும் ஒரு நாள் மாலையில் அவரது வீட்டுக்குச் சென்றோம். ஒரு வாசகி என்கிற முறையில் நான் சூடாமணி அவர்களின் பரம ரசிகையாக இருந்து வந்தேன். எனவே நான் கலைமகளில் வந்த அவரது புகைப்படத்தை மட்டுமே பார்த்திருந்த நிலையில், அவரை நேரிலேயே சந்திக்கப் போகிறோம் என்பதில் அளவற்ற மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் அடைந்திருந்தேன்.
அந்தச் சந்திப்பின் போது குறிப்பிடத்தக்க உரையாடல் எதுவும் எங்களுக்குள் நடக்கவில்லை. வெறும் சம்பிரதாயமான வார்த்தைப் பரிமாறல்காள்தான். எங்களுக்குக் காப்பி கொடுத்து உபசரித்தார்கள். சூடாமணி அவர்கள் அதிகம் பேசவில்லை. நானும்தான். மற்றவர்கள்தான் நிறையவே பேசினார்கள். அவர் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்ததோடு சரி. பொதுவான அவ்வுரையாடலுக்குப் பிறகு நாங்கள் விடை பெற்றோம். அன்று முழுவதும் எனக்குச் சூடாமணி அவர்களின் நினைப்பாகவே இருந்தது. கலைமகளில் வந்த அவரது புகைப்படத்திலேயே தெரிந்த அவரது ஆழமான பார்வையைக் கண்டு நான் வியந்ததுண்டு. நேரில் அவரைக் கண்டபோது அவர் விழிகளில் தெரிந்த ஊடுருவல் இன்னும் அதிகக் கூர்மையுடன் இருததைத் தெரிந்துகொள்ள முடிந்தது. பிறர் மனங்களுக்குள் புகுந்து பார்க்கும் திறன் படைத்தவர் அவர் என்பது அந்த அவருடைய ஊடுருவல் பார்வையிலேயே வெளிப்பட்டது. வெளி உலகத்தோடு பெரிய அளவில் தொடர்பு இல்லாத நிலையிலும், மிகப் பெரிய மனத்தத்துவவாதியாக அவர் திகழ்ந்தது அந்தப் பிறவித் திறமையால்தான் என்பதில் ஐயமே இல்லை.
அவர் கதைகளில் மனத்தத்துவ ரீதியிலான வரிகள் நிறையவே இருக்கும். Writers are born psychologists என்று ஆங்கிலத் தில் சொல்லுவார்கள் அல்லவா! சூடாமணி அவர்களின் விஷயத்தில் அது மிகவும் பொருந்தும். அவர் மிகச் சிறந்த மனத்தத்துவவாதி என்பதை அவர் கதைகளைப் படிப்பவர்கள் மிக விரைவில் புரிந்துகொண்டு வியப்பார்கள். மனித மனங்களின் எண்ணப் போக்கையும் அதன் விளைவாக மனிதர்கள் செயல்படும் விதங்களையும் அதற்கான அடிப்படைக் காரணங்களையும் எளிய நிகழ்வுகள் மூலம் நமக்குப் புரிய வைப்பார்கள்.
அவர் கதை மாந்தார்க்ள் நமக்குப் பரிச்சயமானவர்களாய்த் தோன்றுவார்கள். சில கதாபாத்திரங்களின் எண்ணங்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் அவர் கதையினின்று ஒதுங்கி நின்று வாசகனுக்குச் சொல்லும் போது, நம் வாழ்க்கையில் நாம் ஒருவரைப் புரிந்துகொள்ள இயலாமல் போனதும், அவரிடம் குறை கண்டதும் நம் நினைவுக்கு வரும். இது போல், மனத்தத்துவம் வரிக்கு வரி ஊடாடும் வண்ணம் எழுதுபவர்கள் மிகக் குறைவு. இந்தக் குறைவான எழுத்தாளர்களிலும் மிகச் சிறந்த – அனைவரிலும் மகுடமாய் விளங்கும் – எழுத்தாளர் சூடாமணி அவர்கள் என்று அடித்துச் சொல்லலாம்.
அவர் எழுதிய கதைகளில் எதுவுமே வெறும் பொழுதுபோக்குக் கதையாக இருந்ததில்லை. ஒவ்வொன்றும் ஒரு சேதியையோ ஒரு தத்துவார்த்த உண்மையையோ உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடவடிக்கைக்கும்¸ பேச்சுக்கும் பின்னால் அந்தக் கதாபாத்திரத்தின் பின்னணியாக, அவனது அல்லது அவளது ஒரு நியாயம் இருக்கும்.
அவருடைய கதை மாந்தர்கள் நமக்கு உணர்த்தும் இன்னொரு விஷயமும் உண்டு. அதாவது –
எந்த மனிதனும் முழுக்க முழுக்க நல்லவனாகவோ, அல்லது முழுக்க முழுக்கக் கெட்டவனாகவோ இருக்க மாட்டான் என்பது. நல்லவையும் கெட்டவையும் கலந்தே ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளன என்பது அவர் கதைகளைப் படிப்பவர்க்கு நன்கு புரியும். ஆனால் சூடாமணி அவர்கள் தம் எழுத்தின் மூலம் பிரசாரம் செய்யவே மாட்டார். ஒதுங்கித்தான் இருப்பார். எனினும் அவர் படைக்கும் கதைமாந்தர்களின் சிந்தனைப் போக்கும், செயல்பாடுகளும் நமக்கு இந்த எளிய உண்மையைப் புரியவைக்கும். இந்த மகத்தான திறமை சில எழுத்தாளர்க்கு மட்டுமே கைவந்த கலை. இதில் சூடாமணி அவர்கள் தலைசிறந்தவர்.
நாகர்கோவிலில் உள்ள காலச்சுவடு பதிப்பகம் ”தனிமைத் தளிர்” என்னும் தலைப்பில் சூடாமணி அவர்களின் 63 சிறுகதைகளின் தொகுதியை வெளியிட்டுள்ளது. பிரபல எழுத்தாளரரும், முன்னாள் கல்கி ஆசிரியருமான திருமதி சீதா ரவி அவர்களும், சூடாமணி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி பாரதி அவர்களும் இணைந்து தேர்ந்தெடுத்த கதைகள் அவை. அவற்றில் சிலவற்றைப் பற்றி மட்டும் இங்கே சொல்லுகிறேன். அவை எல்லாவற்றையும் இன்னும் படித்து முடிக்கவில்லை. முதல் சில்வற்றை மட்டுமே படித்துள்ளேன். இவற்றுக்குப் பின் வந்துள்ளவை இவற்றைக் காட்டிலும் இன்னும் மேலானவையாக இருக்கக் கூடும். தெரியாது.
இத்தொகுதியின் தலைப்புக் கதையை முதலில் பார்ப்போம்….. திருமணமான சில நாள்களுக்குள் ஒருத்திக்குக் குழந்தை பிற்ந்து விடுகிறது. அது தங்கள் தனிமைக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அந்தப் பெண் குழந்தையை அதன் அம்மாவைப் பெற்ற பாட்டியின் வீட்டிலேயே விட்டு விடலாம் என்று கணவன் சொல்லுகிறான். பெற்ற தாய்க்கு அதில் சம்மதமில்லா விட்டாலும், கணவன் கட்டாயப்படுத்துவதால் அரை மனத்தோடு அதற்குச் சம்மதிக்கிறாள். குழந்தை தாயன்புக்குத் தவிக்கிறது. பிற குழந்தைகள் அம்மாவின் அன்பில் திளைக்கும் போது தான் மட்டும் தனிமையில் வாடுவதை எண்ணி எண்ணி வருந்தி ஏங்குகிறது. விடுமுறை நாள்களில் மட்டுமே பெற்றோரின் ஊருக்கு அது போய்த் தாயுடன் இருக்கிறது. ஆனால் அங்கும் தகப்பனின் மிரட்ட்லும் உருட்டலும்தான் அதற்குக் கிடைக்கின்றன. நாள்கள் நகர்ந்து அந்தப் பெண் வளர்ந்து விவரம் தெரிந்தவள் ஆனதும் டில்லியில் இருக்கும் அவள் பெற்றோர் அவளை நிரந்தரமாய் அழைத்துக்கொள்ளத் தயாராகிறார்கள். தாயன்பு அதிகம் தேவைப்பட்ட காலத்தில் தனிமையில் துடித்த அந்தப் பெண், ஒரு வெறுப்பில், ‘பாட்டி! நான் ஊருக்குப் போக வேணாம். நான் உன்னோடயேதான் இருப்பேன்’ என்று சொல்லுவதுடன் கதை முடிகிறது. ”வெறும் சதைப் போக்கான மதிப்பீடுகளுக்கு மேல் உயராதவன்“ என்னும் சொற்களால், அந்தக் கணவனைச் சூடாமணி மறைமுகமாய் விமர்சிக்கிறார்.
இத்தொகுதியில் உள்ள நோன்பு எனும் முதல் கதை ஒரு சிறுமி தன் வீட்டு வேலைக்காரரின் மகனும் தன் விளையாட்டுத் தோழனும் ஆன கந்தன் நோய்வாய்ப்படும் போது, வீட்டில் உள்ளவர்கள் கணவனின் நலத்துக்காக நோன்பு செய்து சரடு கட்டிக்கொள்ளுவதைக் கண்டு தானும் அவ்வாறே வேண்டிக்கொள்ளுகிறாள். தான் கந்தனையே மணம் செய்துகொள்ளப் போவதாகவும் எனவே அவனைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கடவுளிடம் வேண்டுகிறாள். கந்தனுக்காகப் பலரும் வேண்டிக்கொண்ட போதிலும், கள்ளமற்ற சிறுமியின் வேண்டுதலுக்கே கடவுள் செவி சாய்த்து அவனைக் குணப்படுத்தினார் என்று நம்மைச் சூடாமணி அவர்கள் ஊகிக்க வைக்கிறார்.
அன்பு உள்ளம் எனும் கதையில் தன் மூத்தாளின் குழந்தையைத் தன்னுடையது போன்றே நேசிக்கும் ஒரு சிறந்த மாற்றாந்தாயின் உணர்வுகளையும், அதைத் தடுக்க முயலும் அவள் தாயின் கொடூரச் சொற்களால் தவித்து அஞ்சும் மூத்தாள் குழந்தையின் உணர்ச்சிகளையும் சூடாமணி அருமையாக விவரிக்கிறார். இறுதியில் ‘அம்மா! நீ என் அம்மா இல்லையாமே? பாட்டி சொல்லுகிறாள்’ என்று வருந்தும் அந்தக் குழந்தையை அவள் அணைத்துத் தேற்றி அப்படி இல்லை என்று அதை நம்ப வைக்கும் போதும், அந்தக் குழந்தை நம்பி மகிழும் போதும் நமக்கும் நிம்மதியாகிறது.
யோகம் எனும் கதையில் தன்னைப் பராமரிக்காமல் ஒதுக்கும் பிள்ளைகளுக்கும் கூட தன் சம்பளத்தைக் கொடுத்து உதவவே விரும்பும் ஒரு தாயின் இயல்பான பண்பைப் பற்றிச் சொல்லுகிறார். ‘என்ன பிள்ளைகள்!’ என்கிற சலிப்பும் தாய்மையின் தியாக உணர்வின் மீது பிரமிப்பும் ஏற்படுகின்றன.
அவன் வடிவம் எனும் கதையில், சின்னவீடு வைத்துள்ள கணவனை வெறுக்கும் மனைவி பற்றிச் சொல்லுகிறார். இவள் மகன் ஊனமுற்றவன். படுத்த படுக்கையில் உள்ளவன். இவளே அவனுக்கு எல்லாமாக இருக்கிறாள். அவ்வப்போது வந்து போகும் அவள் கணவன் ஒரு நாள் தன் இன்னொரு மகனைச் சாப்பாட்டுக்கு அழைத்து வருவதாய்க் கூறுகிறான். இன்னொருத்தியின் அந்த மகன் தன் வீட்டுக்குச் சாப்பிட வருவதில் அவளுக்கு விருப்பமில்லை. மாடிக்குப் போய் ஊனமுற்ற மகனுக்கு அருகில் உட்கார்ந்து விடுகிறாள். அவளுடைய இன்னொரு மகள்தான் தகப்பனையும் அந்த இளைஞனையும் உபசரிக்கிறாள். சாப்பிட்டு முடிதததும் மாடிக்கு வந்து கணவன் அவளைக் கண்டிக்கிறான். ஆனால் இறங்கி வந்து அவனைப் பார்க்க அவள் தயாராக இல்லை. மறுக்கிறாள். ’சாப்பிட்டதும் அவனுக்குப் பாக்கு வேண்டும்’ என்று கேட்கும் கணவனிடம், ‘பாக்கு இல்லை. தீர்ந்து விட்டது’ என்று ஒரு வெறுப்பில் பொய் சொல்லுகிறாள். அவன் இறங்கிப் போய்த் தோட்டத்தில் நின்றுகொண்டிருக்கும் மகனிடம் போகிறான். எட்டிப் பார்க்கும் அவள் ஆறடி உயரத்தில் அழகனாய் நிற்கும் அந்த இளைஞனைப் பார்க்கிறாள். தான் பெற்ற மகனின் சாயலில் இருப்பதைக் கவனிக்கிறாள். ஊனமுற்றுப் பிறந்திராவிட்டால்- தன் மகனின் கால்கள் சரியாக இருந்திருந்தால் – தான் பெற்ற மகன் அவனைப் போலவே இருந்திருப்பான் என்கிற நினைப்பில் அவள் பாக்கை எடுத்துக்கொண்டு அவனிடம் விரைகிறாள். ‘அந்தப் பையன் நன்றாக இருக்கட்டும்’ என்று கடவுளிடம் வேண்டுகிறாள். ஒரு மனைவியாய்க் கணவனை வெறுத்த ஒரு பெண் ஒரு தாயாய் எப்படிச் சிந்திக்கிறாள் என்பதைக் காட்டும் கதை இது.
ஓவியனும் ஓவியமும் என்கிற கதையில் ஒரு கலைஞன் தன் கலைப்படைப்புகளுக்காக வருமானம் ஏதும் இல்லாவிட்டாலும், அவற்றைப் படைத்ததற்காகவே அவன் திருப்தியும் மகிழ்ச்சியும் அடையவேண்டும் என்பதைச் சொல்லுகிறார் சூடாமணி.
அக்கா எனும் கதையில், குழந்தை பெறாத ஒரு விதவை அக்கா தங்கையுடன் வசிக்கிறாள். அவள் தங்கை ஒரு நாள் வாயறியாமல் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறாள். அவள் வேண்டுமென்றே அதைச் சொல்லவில்லை. தங்கை குழந்தைக்குப் பால் புகட்டும் போது அது அழுகிறது. ‘உனக்கு இதெல்லாம் தெரியாதுக்கா. இப்படி எங்கிட்ட குடு’ என்று கூறி, குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக்கொள்ளுகிறாள். வாய்தவறி வந்து விழுந்த சொல் அது. அக்காவை அது புண்படுத்திவிடுகிறது. ஆனால் தங்கை அதை உணரவே இல்லை.
அக்கா பர்வதம் மன உளைச்சலில் வெளியே போய்ச் சுற்றிவிட்டு வருகிறாள். ‘எங்கே அக்கா போயிட்டே? இவ்வளவு நேரமாச்சேன்னு எனக்கு ஒரே கவலையாயிடுத்து..’ என்று தங்கை அங்கலாய்க்கும்போது அவளது அன்பு அக்காவுக்குப் புரிகிறது. தங்கையின் பெரிய குழந்தை, ‘பெரியம்மா! பசிக்கிறது!’ என்கிறாள்
பர்வதம் சிறிது தயங்கி. “குழந்தைகளுக்கு நீ வேணுமானால் சாதம் போட்றியா?” என்கிறாள். ‘
“ஏனாம்? நீயே போடுக்கா. உன் ஆசைக்கையால நீ போட்டு குழந்தைகள் எத்தனை தேறி இருக்கு, பாரு!” என்று தங்கை சொன்னதும் அக்காவின் இதயம் லேசாகி முகத்தில் சிரிப்புத் தோன்றுகிறது. தங்கை குத்தலாக வேண்டுமென்றே அப்படிச் சொல்லவில்லை என்பது புரிய,அந்தச் சிறு புண்ணை விழுங்கிவிட்டு அக்கா குழந்தைகளூக்கு உணவு போடச் செல்லுகிறாள் என்று கதை முடிகிறது.
இரண்டின் இடையில் என்பது, சிறுவன் என்கிற பருவத்திலிருந்து பெரியவனாகும் பருவம் நோக்கிச் செல்லும் இளம்பருவத்து மாணவன் ஒருவனின் மனமாற்றங்களை அருமையாய் எந்த விரசமும் இன்றிச் சித்திரிக்கும் கதை. கத்தி முனையில் காயப்படாமல் நடப்பது சூடாமணி அவர்களுக்குக் கைவந்த திறன் என்பதைத் துல்லியமாய் விளக்கும் சிறுகதை இது.
அந்த நேரம் என்கிற கதையில் அங்கவீனத்துடன் பிறக்கும் குழந்தை மீது ஒரு தாயின் அக்கறையும் பாசமும் அதிக அளவில் இருக்கும் என்பதைச் சொல்லுகிறார் சூடாமணி.
உரிமைப் பொருள் என்கிற கதையில் ஒரு தாய்க்குத் தன் குழந்தை மீது இருக்கக்கூடிய உரிமை கொண்டாடுதல் எனும் – அதாவது possessiveness எனும் – உணர்வை நயம்படச் சித்திரிக்கிறார். ஒரு தாய் தன் குழந்தையைப் பிறர் கொஞ்சுவதையும் சகிப்பதில்லை, அதைக் கண்டித்தாலும் பொறுப்பதில்லை என்பதைச் சில சுவையான நிகழ்வுகள் மூலம் சூடாமணி எடுத்துக் காட்டுகிறார். தாய் ஒருத்தியின் தன் குழந்தை தன்னுடையது மட்டுமே எனும் சொந்தம் கொண்டாடும் உணர்வை மனத்தத்துவம் இழையோடும் நடையில் அவர் கூறும் பாங்கு மிக நேர்த்தியானது.
கடிதம் வந்தது எனும் கதையில், தன் பேத்திக்கு அசட்டுத்தனமாய்க் காதல் கடிதம் எழுதும் இளைஞனுக்குச் சுடச் சுட ‘உடம்பு எப்படி இருக்கு ‘ என்று கேட்டு ஒரு பாட்டி கடிதம் எழுதுவது பற்றிச் சொல்லுகிறார். தன் இளவயதில் அதே போல் தன்னை விடாப்பிடியாய்ப் பின் தொடர்ந்துகொண்டிருந்த ஒருவனைத் தானே திரும்பிப் பார்த்துக் கண்டித்து அனுப்பியதாய்ப் பாட்டி பேத்திக்குத் தெரிவிக்கிறாள். அந்த இளைஞனை அவன் என்று சொல்லாமல், அவர் என்று சொன்னதைச்க் கேட்டதும், அந்த இளைஞன் தன் தாத்தாவேதானோ என்று பேத்திக்குச் சந்தேகம் வருகிறது. “ஏன் பாட்டி, தாத்தா வந்து…” என்று அது பற்றிப் பேத்தி கேட்கத் தொடங்கியதும், “பழைய விஷயமெல்லாம் எதுக்கு? நேரமாறது. போய்ப் படுத்துண்டு இனிமேலாவது நிம்மதியாத் தூங்கு!’ என்று சொல்லிவிட்டுப் பாட்டி தானும் கண்ணை மூடிக்கொண்டாள் என்று சூடாமணி கதையை முடிக்கிறார். பாட்டி கடைசியில் அந்த இளைஞ்னைத்தான் மணந்துகொண்டார் என்று புன்னகையுடமன் நம்மை ஊகிக்க வைக்கும் நயம் அதில் வெளிப்படுகிறது.
என் பெயர் மாதவன் எனும் கதையில், மாதவன் எனும் பார்வை பறிபோன இளைஞன் மீது அன்பு கொண்டு ஒருவர் தம் வீட்டில் தம் மனைவியின் ஆங்கிலக் கதைகளைத் தட்டெழுதும் பணியை அவனுக்குத் தருகிறார். அவன் தட்டெழுதுகையில், அவனுக்கு வேலை கொடுத்தவரின் தாய், “அட! குருடன் எத்தனை கெட்டிக்காரனா இருக்கான்! டைப் அடிக்கக் கூடத் தெரியுதே!” என்கிறாள்.
பார்வையற்ற இளைஞனின் முகம் உடனே மாறுகிறது: “என்னை வாசல் வரைக்கும் கூட்டிட்டுப் போறீங்களா? அதுக்கு மேல நானே போயிடுவேன். ரோடு பழக்கம்தான்!!” என்ற பின், அந்த அம்மாளின் குரல் வந்த திசையில் திரும்பி, “என் பேர் குருடன் இல்லை….என் பேர் மாதவன்” என்று அறிவித்துவிட்டு வெளியேறிவிடுகிறான். இனி அவன் வர மாட்டான் என்பது அவருக்குப் புரிகிறது. ஊனமுற்ற ஒருவருக்குப் பெயர் என்று ஒன்று இருக்கும் போது அவரை அநத ஊனத்தின் பெயரால் குறிப்பிடுவதும் அழைப்பதும் எவ்வளவு புண்படுத்தும் என்பதை எடுத்துக் காட்டுகிறார் சூடாமணி.
இத்தொகுப்பில் உள்ள திருமஞ்சனம் எனும் குறிப்பிடத்தக்க கதையைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். மனைவியை இழந்த, ஆசார சீலரான ஒரு வைஷ்ணவ பட்டாச்சாரியிடம் சிறு வயதிலேயே விதவையாகி வந்து விட்ட மகள் துளசி ஒரு ஹரிஜனச் சிறுவன் மீது ஒரு தாய்க்குரிய பற்றுக்கொள்ளுகிறாள். அப்பா இல்லாத நேரங்களில் அவனுக்கு அடிக்கடி தின்பண்டங்கள் கொடுக்கிறாள். அவன் ஒரு ஹரிஜன் என்பதைத் தவிர வேறு அடையாளம் இல்லாத அந்த அநாதைச் சிறுவனைத் தத்து எடுக்க விரும்புகிற அளவுக்குப் போகிறாள்.. வைஷ்ணவ பட்டாச்சாரி திடுக்கிடுகிறார். எனினும் மகளைப் புண்படுத்த்த் தயங்குகிறார். தினமும் அவளைக் கோயிலுக்கு வரச் சொல்லுகிறார். ஆனல் அவள் அதில் அதிக ஆர்வம் காட்டாமல். என்றேனும் அரிதாகவே போகிறாள். ஒரு நாள் கோயிலில் கடவுளின் விக்கிரகத்துக்குத் திருமஞ்சனம் செய்து விட்டு – அதாவது திருமுழுக்காட்டிவிட்டு¬ – வீட்டுக்கு வரும் பட்டாச்சாரிக்கும் அவளுக்குமிடையே ஓர் உரையாடல் நிகழ்கிறது. துளசி திருமஞ்சனம் எனும் அந்தச் சடங்கே தனக்குப் பிடிக்கவில்லை என்கிறாள். ‘கடவுளுக்கு நாம் குளிப்பாட்டுறதாவது!’ என்கிறாள். அதற்கு அவர் அது ஒருவருக்குக் கடவுளின் மேலுள்ள அன்பைக் காட்டுவதாய் பதில் அளிக்கிறார். மனிதர்களுக்குச் செய்வது போன்றே கடவுளுக்கும் ஜலதோஷம் பிடிக்காமல் இருப்பதற்காக, சாம்பிராணி முதற்கொண்டு காட்டுவதாய் அவர் சொன்னதும், “என்ன அபத்தம்ப்பா! சாமிக்குக் கூட நம்மைப் போல ஜலதோஷம் பிடிக்குமா?” என்று கேலியாய் மகள் கேட்கிறாள். மேலும் கேலியாய்ப் பேசிவிட்டு, அடக்க மாட்டாமல் சிரிக்கிறாள். “ஏம்ப்பா! தெய்வம்னு ஒரு மகத்துவத்தை நாம நம்பினா, நம்மையே அந்த தெய்வத்துல பார்த்துக்கிறதுதான் சிறப்பா? தெய்வத்தை யல்லவா நம்மில் பார்க்கக் கத்துக்கணும்?” என்றும் கேட்கிறாள். மகளின பொருள் பொதிந்த இந்தக் கேள்வி அவரை உலுக்கிவிடுகிறது. அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டாற்போல் உணர்கிறார். துளசியும், “அப்பா! என்னை மீறிப் பேசிட்டேன். நீங்க படிக்காத சாஸ்திரமில்லே. உங்களுக்கு எடுத்துச் சொல்ல எனக்கென்னப்பா தெரியும்? மன்னிச்சுடுங்கோ!” என்கிறாள்
“உனக்கு, என்ன தெரியுமா? உனக்கு என்ன தெரியுமா!” என்று அக்கேள்வியைத் தாமே மறுபடியும் மறுபடியும் கூறி, அவளுக்கு இருந்த ஞானம் தமக்கு இல்லை என்பதை அவர் உணர்த்துகிறார்.
“… எனக்குத் தெரிஞ்சதெல்லாம்…” என்று தொடங்கிப் பின் தயங்கி, “அந்தக் குழந்தை என் இதயத்துக்கு வேணும்கிறது ஒண்ணுதான்!” என்கிறாள்.
அப்போது “தீண்டத்தகாதவர்”களுக்கு ஹரிஜனங்கள் என்று பெயர் சூட்டிய மகாத்மா காந்தியின் படத்தின் மீது அவர் பார்வை விழுகிறது. சிறிது நேரம் கழித்து, இரண்டு ஹரிஜனப் பிள்ளைகளை ஏதோ சண்டையில் வட மாகாணம் ஒன்றில் யாரோ எரித்துக் கொன்று விட்ட சேதி காதில் விழுகிறது. ‘சக மனிதர்கள்மீது இவ்வளவு வெறுப்பா! அவர்கள் ஹரிஜனங்கள் என்பதாலா?” என்று யோசிக்கிறார். அவர்து இரத்தம் கொதிக்கிறது.
பிறகு, “இந்த வித்தியாசமெல்லாம் போகணும். சாமிக்குத் திருமஞ்சனம் அவசியமில்லை, துளசி. மனுஷனுக்குத்தான் அது வேணும். அழுக்கைப் போக்கிண்டு தூய்மையும் தெய்விகமும் அடையறதுக்கு!” என்கிறார் புதிதாய் வந்த ஞானத்தோடு.
தன் மடியில் அம்மா என்று அழைத்தபடி அந்த ஹரிஜனச் சிறுவன் புரள்வதை அந்தக் கணத்தில் அவளால் உணர முடிகிறது என்று கதை முடிகிறது. பெரியவர் அவனை அவள் தத்து எடுத்துக்கொள்ளச் சம்மதிக்கப் போவதைச் சூடாமணி சூசகமாய் நமக்குத் தெரிவிக்கிறார்!
சூடாமணி அவர்களின் எழுத்தில் ஆங்காங்கு நகைசுவையும் உண்டு. அதைப் படித்துத்தான் ரசிக்க வேண்டும்.
எழுத்தாளர்களாக வேண்டும் என்று நினைப்பவர்கள் நாகர்கோவிலில் உள்ள காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள சூடாமணி அவர்களின் “தனிமைத் தளிர்” எனும் சிறுகதைத் தொகுப்பை வாங்கிப் படிக்கலாம்.
எங்களது முதல் சந்திப்புக்குப் பிறகு நாங்கள் நேரில் சந்தித்தது இரண்டே தடவைகள்தான். ஆனால், 1973 இல் தினமணி கதிரில் நாவல் போட்டியில் எனக்குப் பரிசு கிடைத்த போது தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டினார். அதன் பின் நாங்கள் அவ்வபோது தொலைப்பேசியில் உரையாடுவதுண்டு. அரசியல், இலக்கியம் என்று பொதுவான பேச்சாக அது இருக்கும். யாரைப் பற்றியும் குறைத்தோ அவதூறாகவோ சூடாமணி பேசவே மாட்டார். ஆண்டு தோறும் நாங்கள் புத்தாண்டு வாழ்த்து அனுப்பிக்கொள்ளூவோம். எங்கள் கதைகள் பற்றிய கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளுவோம். மற்றபடி நெருக்கமான பழக்கம் இல்லை. இருந்த போதிலும், எங்களிடையே ஒரு நல்ல் நட்பு நிலவியது. அதில் சந்தேகமில்லை.
சூடாமணி ஏழைகளின் மீது இரக்கம் மிகுந்தவர். அதனால்தான் நாலரைக்கோடி மதிப்புள்ள தம் குடும்பச் சொத்து முழுவதையும் விற்று ராமகிருஷ்ணா மிஷனின் கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிக்குமாறு உயில் எழுதிச் சென்றார். தம் நெருங்கிய தோழி திருமதி பாரதி அவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றார்.
எளிமை, பண்பு, அன்பு, எழுத்துத் திறமையோடு ஓவியத்திறமை ஆகியவற்றைப் பெற்றிருந்த சூடாமணி அவர்கள் எழுத்தாளர்களுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்.
அற்புதமான எழுத்தாளராகிய இவருக்கு இந்திய சாகித்திய அகாதமி விருது அளித்து கவுரவப்படுத்தவில்லை. இதன் மூலம் சாகித்திய அகாதமி தன்னைத்தானே அகவுரவப் படுத்திக்கொண்டுவிட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது. இதற்குக் காரணம சாகித்திய அகாதமியின் உறுப்பினர்களாக இருந்த தமிழ் எழுத்தாளர்களே யாவர். குற்றவாளிகள் இவர்களே!
அதனால் என்ன! சூடாமணியின் புகழ் மங்கிவிடாது. அது மங்கவும் இல்லை. அது என்றென்றும் அவருடைய அரிய படைப்புகளில் சுடர்மணியாக மேலும் மேலும் ஒளி வீசிக்கொண்டிருக்கும்.
………

Series Navigationஆத்மாநாம்வலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

5 Comments

  1. Avatar
    Jyothirllat Girija says:

    சூடாமணி அவர்கள் ராமகிருஷ்ணா மிஷனுக்கு மட்டும் நாலரைக் கோடி ரூபாய்கள் கொடுத்ததாகவும், மேலும் பல அறக்கட்டளைகளுக்கு ஏழு கோடி கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
    ஆக மொத்தம் பதினொன்றரைக் கோடி.
    ஜோதிர்லதா கிரிஜா

  2. Avatar
    Dr.G.Johnson says:

    சூடாமணியைப் பற்றியும் அவருடைய படைப்புகள் பற்றியும் எழுதப்பட்டுள்ள அருமையான படைப்பு இது. பாராட்டுகள் ஜோதிர்லதா… டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      Jyothirllat Girija says:

      அன்புமிக்க ஜான்சன் அவர்களே, அரிய எழுத்தாளர் அமரர் சூடாமணி அவர்களின் சார்பில் நன்றி.
      ஜோத்ர்லதா கிரிஜா

  3. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    1960 இல் கலைமகள் மாத இதழ்களில் வந்து கொண்டிருந்த எழுத்தாளர் சூடாமணியின் ஒப்பற நாவல்கள், “விடிவை நோக்கி” “மனத்துக்கு இனியவள்” என்னை மிகவும் கவர்ந்தன. அவற்றைப் பாராட்டவும், நான் அவரைக் காணவும் சென்னையில் அவரது இல்லத்துக்குச் சென்றேன். அவரும், அவரது சகோதரியும் என்னை வரவேற்றார். அவரது சகோதரி எனக்கு காஃபி கொடுத்தார். சிறிது நேரம் அவரது படைப்புகள் பற்றி உரையாடித் திரும்பினேன்.

    பிறகு அவருடன் கடிதத் தொடர்பு இருந்தது.

    இரண்டு வருடம் கழித்து நடந்த என் திருமணத்துக்கு, அவர் எழுதிய மூன்று கதைப் புத்தகங்களை எனக்குத் திருமணப் பரிசாக அனுப்பியிருந்தார்.

    நெஞ்சில் மறக்காமல் இருப்பவை அந்த நிகழ்ச்சிகள்.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      Jyothirllat Girija says:

      அன்புமிக்க ஜெயபாரதன் அவர்களே!

      உங்கள் நினைவலைகள் அமரர் சூடாமணி அவர்களுக்குக் கண்டிப்பாய் மகிழ்ச்சி யளிக்கும். மிக்க நன்றி.
      ஜோதிர்லதா கிரிஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *