மனோபாவங்கள்

This entry is part 3 of 24 in the series 9 பெப்ருவரி 2014

 

இரவு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது காலிங் பெல்  இடைவிடாமல்  ஒலித்துக் கொண்டேயிருந்தது. எரிச்சல் எழுந்தது. யாரது?. நடுராத்திரியில நாகரீகமில்லாமல். இப்படியா அடிச்சிக்கிட்டே இருப்பான்?..செல்லை ஆன் பண்ண, நோக்கியா இரவு 11–50. என்றது. அதற்குள் இரண்டு தடவை ஒலித்துவிட்டது.. திறந்தேன். வெளியே ஆபீஸ் ஹெட்கிளார்க்கும், கூடவே கிளார்க்குகள் ஏ1 ம், ஏ3யும்  நின்றுக் கொண்டிருந்தார்கள். வெளியே ஆபீஸ் ஜீப் நிற்கிறது. அய்யோ! யாரைக் கேட்டு இவங்க ஜீப்பை வெளியே எடுத்தாங்க? அதிகாரிக்கு தெரிஞ்சா கொன்னே போட்ருவாரு.

“சார்! சீக்கிரம் வாங்க. ஐயாவுக்கு ஹார்ட் அட்டாக்காம்.. அவரு ஒய்ஃப் போன் பண்ணாங்க.”

ஐயோ! கடவுளே! ஓட்டமாய் உள்ளே ஒடி, ஷர்ட்டை மாட்டிக்கிட்டு, எதற்கும் இருக்கட்டும் என்று நேற்று ஏ.டி.எம்.மில் எடுத்த என் சம்பள பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ஜீப் பறந்தது. ஈஸ்வரா! அவருக்கு ஒண்ணும் ஆகியிருக்கக் கூடாது. சத்தியத்தை கொன்னுடாதே.. பத்து நிமிட பயணம்..ஊஹும்.அதற்குள் எல்லாம் முடிந்து, குடும்பத்தினர் அழ ஆரம்பித்திருந்தனர். சடர்ன் டெத். மேஸ்ஸிவ் ஹார்ட் அட்டாக். ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல் அட்டாக் வந்து புனர்ஜென்மம் எடுத்திருந்தார். ரிடையர்மெண்ட்டில் போக இன்னும் ஐந்தாறு வருஷங்கள் இருக்கு. அதற்குள் அவசரமாக  ,இன்றைக்கே போய்விட்டார்.

எங்களுடையது சுகாதாரத்துறை. எங்கள் அதிகாரி .சுந்தரராமன் சாருக்கு சொந்த ஊர் திருச்சி பக்கம். அவருக்கு ஒரே பிள்ளை அருண், மூத்தவன். 28 வயசாகிறது. பி.இ.,சிவில் முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருப்பவன். ..அவனுக்கு பின்னால் இரண்டு பெண்கள். இரண்டும்  அரசு விதிப்படி கல்யாணத்திற்கான வயசு தகுதியை எப்பவோ அடைந்து விட்டவர்கள். சாருடைய மனைவி சொல்லிசொல்லி அழுதது மனசை உருக்குவதாக இருந்தது.

“ஐயோ! ஏங்க! எதுக்குமே வழி பண்ணாம எல்லாத்தையும் விட்டுட்டு இப்படி போய் சேர்ந்துட்டீங்களே.. நான் என்னா பண்ணுவேன்? .எனக்கு என்னா தெரியு.ம்னு இப்படி பண்ணீட்டீங்க? சொல்லுங்க..”—உயிரோடு இருப்பவரிடம் பேசுவது போலவே, பேசி அழுதுக் கொண்டிருந்தார். பெண்கள் இரண்டும் அப்பாவின் காலை பிடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்தார்கள். சே! மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. எங்கள் சாருக்கு எப்பவும்  டியூட்டி கான்ஷியஸ் அதிகம்.. வேலைகளை நேரத்தோட முடிக்கணும்னு சொல்லிக்கிட்டேயிருப்பார். பாவம் வாழ்க்கையில் அவருடைய  கடமைகளில் ஒண்றை கூடநேரத்தோட  முடிக்காம போய்விட்டார். வருத்தமாக இருந்தது.சிறிது நேரம் அங்கேயே இருந்து விட்டு,  காலையில் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம்.  நானும் ஹெட்கிளார்க்கும் நேராய் ஆபீஸ் போய் டைரக்டருக்கும், ஜே.டி.க்கும் தகவல் அனுப்பினோம், ஆபீஸ் ஸ்டாப்களுக்கும் மெஸேஜ் அனுப்பிமுடித்தோம்.. .

காலையில் சீக்கிரமே ரெடியாகி ஏழு மணிக்கெல்லாம் ஆபீஸ் வந்துவிட்டேன்.. டைரக்டர் ஆபீஸிலிருந்து மெயிலில் ஆர்டர் வந்திருந்தது. பக்கத்து மாவட்ட துணை இயக்குனர், சதானந்தன் சார், தற்காலிகமாக அடிஷனல் சார்ஜ் எடுத்துக் கொள்ளவேண்டும். நான் அதற்கான டாக்குமெண்ட்களை தயார் செய்ய ஆரம்பித்தேன். ஹெட்கிளார்க் வந்தவுடன் அய்யாவின் மரணம் பற்றி சர்குலர் தயாரிக்க ஆரம்பித்தார். எங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்  சுகாதார நிலையங்களுக்கும், பிரசவ விடுதிகளுக்கும். சர்குலர்களும், போன் கால்களும் பறந்தன. ஆபீஸ் சார்பாக போடுவதற்கு மாலைக்கு ஆர்டர் பண்ணும்போது வழக்கம்போல  ஐந்நூறு ரூபாயில் ரோஸ் மாலை போடலாமா?. இல்லே நூறு நூத்தைம்பதில பெருசா சாமந்தி மாலை போடலாமா?. என்பது சிலருடைய பேச்சாக இருந்தது.

”ஏம்பா! ஆபீஸ் சார்பா நானே ரோஸ் மாலை வாங்கிட்றேன்.”—-என்றேன் நான்

“பணம் எல்லார் கிட்டயும் இருக்கு சார். சரி…சரி….எல்லாரும் வாயை மூடிக்கிட்டு இருக்க, எனக்கு மட்டும் ஏன் பொல்லாப்பு?. கடவுள்னு ஒருத்தன் இருக்கான் சார். அவன் எல்லாத்தையும் பார்த்துக்குணுதான் இருக்கான்.” —-என்றது ஏ-5. இவன் இரண்டு மாதங்கள் சஸ்பென்ஷன் முடிஞ்சி நேற்றுதான் டியூட்டியில ஜாய்ன் பண்ணான்.. அரிசி ஆலை ஒன்றுக்கு தகுதி சான்றுக்காக இவனுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தவனே டைரக்டர் கிட்டஎழுத்துமூலம் புகார் கொடுத்துட்டான். பணத்தையும் வாங்கிட்டு, வேலையையும் முடிக்கவில்லை. எவன் விடுவான்?. அதான் விஷயம் சந்தைக்கு வந்து விட்டது. டைரக்டர்  என்கொயரியை  முடிச்சி  சஸ்பென்ஷன் கொடுத்து விட்டார். ஏ-5 க்கு அதான் காண்டு. இந்த நாட்ல எவன் சார் யோக்கியன்? வெறும் ஆயிரத்துக்கா சஸ்பென்ஷன்?..என்பது இவனுடைய  ஆர்க்யூமெண்ட் ..வித்தியாசமான கான்செப்ட் இல்லே?. இந்த நாட்டில சுதந்திரமில்லைனு எவன் சொன்னான்? அரசியல்வாதிங்க போல லஞ்சம் வாங்கி மாட்டிக்கிட்டாலும்  நான் உத்தமன்னு பேச முடியுதே. .

”“ஹும்!எனக்கும் அதேதாம்பா கேள்வி. கடவுள் இருக்காரா என்ன?.. நம்ம பாஸ்  என்ன  நிரபராதிகளுக்கா பணிஷ்மெண்ட் கொடுத்துட்டார்?..”—ஏ5 புர்ர்ரென்று தன் சீட்டுக்குப் போய்விட்டார்..

எங்கள் துணை இயக்குனர் ஒரு நேர்மையான அதிகாரி.. எந்தளவுக்கு  நேர்மை என்றால் ஒரு டீயைக் கூட லஞ்சம் என்று மறுத்துவிடுபவர். ஸ்டாப்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய எல்லா சலுகைகளையும் சரியான நேரத்தில் வாங்கிக் கொடுத்துவிடுவார். .அதேசமயம் எல்லாரும்  டியூட்டியில் சின்ஸியரா இருக்கணும்னு எதிர்பார்ப்பார். ..  இதுதான் அவருடைய நிலைப்பாடு. ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கமாட்டேன் என்று பீற்றிக் கொண்டு, சீட்டில உட்கார்ந்து வேலை செய்யாமல் சுற்றி வரும் ஏ3, ஏ6 போன்ற வறட்டு நேர்மையாளர்களை விரட்டுவார். அவ்வளவு கண்டிப்பானவர்..தவறுக்கு தண்டனைதான் பரிகாரம், என்பது அவருடைய இயல்பு. அவர் இங்கே வந்து ஜாய்ன் பண்ணி இந்த மூன்று வருஷங்களில் ஏறக்குறைய எல்லோரும் அவரிடம் தண்டனை பெற்றவர்கள்தான்.

.களப்பணியாளர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். இன்ஸ்பெக்‌ஷன் போகிற இடங்களிலெல்லாம் எல்லாருக்கும் கதிகலங்கும். மெமோ, சஸ்பென்ஷன், இங்க்ரிமெண்ட் கட், ட்ரான்ஸ்ஃபர், இத்தியாதிகள். நான்கூட வந்த இந்த இரண்டு வருஷத்தில் இரண்டு தடவை மெமோ வாங்கியிருக்கேன். ஒரு தடவை ஊதிய உயர்வை முடக்கி, அப்புறம் எச்சரிக்கை செய்து ரத்து செய்தார்… ஆயினும் அவருடைய நேர்மை எனக்குப் பிடிக்கும். காரணம் தன்னளவிலும் அவர் அதே அக்மார்க் நேர்மையாளராக இருப்பதுதான். ஆபீஸிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அவர் குடியிருக்கிற வீடு இருக்கிறது. கேம்ப் போயிட்டு திரும்ப இரவு ரொம்ப நேரமாயிடும் சமயங்களில் பத்து பனிரெண்டுக்கு மேல வர்றதாகக் கூட இருக்கும். .நேராக ஜீப்பிலேயே போய் வீட்டில் இறங்கிக் கொள்ளலாம்.எல்லா அதிகாரிகளும் அப்படித்தான் செய்வார்கள். சொல்லப்போனால் ஒவ்வொரு வேளையும் ஜீப் போய் அதிகாரிகளை வீட்டிலிருந்து கூட்டி வரும். ஆனால் இவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை.. தினசரி டி.வி.எஸ்.ஸ்கூட்டியில் தான் வருவார், போவார். மொத்தத்தில் மனுஷன் டெரர். .எங்கள் ஆபீஸில் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீஸராகிய. என்னையும்,டைரக்டரையும் தவிர்த்து மிச்சமுள்ளவர்கள் மொத்தம் முப்பது பேர்.

நாங்கள் அங்கே போகும்போது மணி பத்தரைக்கு மேல் ஆகிவிட்டது. என்ன பண்றது?. அதிகாரியின் சாவுக்குக்கூட எங்காளுங்க சின்சியராய் ஆபீஸ் டைமுக்குதான் வந்தார்கள்.. அங்கே சாவு வீடுமாதிரியே இல்லை. அழுகை சத்தம் ஏதுமின்றி.. அமைதியாக இருந்தது.. அவருடைய குடும்பத்தினர் தவிர அக்கம்பக்கம் என்று ஒரு நாலைந்து பேர் நின்றிருந்தார்கள். மனைவியும் மகள்களும் அழுது ஓய்ந்து விட்டவர்களைப் போல சோகத்துடன் உட்கார்ந்திருந்தனர். அந்தம்மா கண்களில் அழுகையை விட அதிர்ச்சியும், பயமும்தான் தெரிந்தது. பிள்ளை அருண் காதில் செல்லுடன் குறுக்கும், நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்தான். மாலையைப் போட நாங்கள் நெருங்கிய போது, டைரக்டர் மனைவி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார்கள். கடமையில் டெரர் ஆக வாழ்ந்த அந்த மனிதரை பிணமாக பார்க்க, எங்களுக்கும் கண் கலங்கி விட்டது ப்யூன் மாணிக்கம் மேல்துண்டில் முகத்தைப் பொத்திக் கொண்டு கேவினான். அக்கவுண்டண்ட் மாதவன் ஐயா! என்று ஓங்கி குரல் கொடுத்துவிட்டு விசும்பினார். ஏ4 ரவி என்கிட்ட வந்து, ரகசிய குரலில்

”ரெண்டு மாசத்துக்கு முன்ன நம்ம டைரக்டர் மேல என்கொயரி வந்துச்சே, அதுக்கு மொட்டை பெட்டீஷன் போட்டது இவர்தான் சார். இப்ப என்னமா அழுவுறார் பாருங்க.”.

“ச்சூ! பேசாத, கவனி. முடிஞ்சா போய் அழு..”—- இன்க்ரிமெண்ட் அரியர் பில்லுக்கு மாதவன் இவன் கிட்ட முந்நூறு ரூபா கறந்துவிட்ட எரிச்சல் அவனுக்கு. மற்ற ஸ்டாப்கள் ஒவ்வொருத்தராக கிட்ட போய், சற்று நேரம் நின்று சோகத்துடன் பார்த்துவிட்டு அப்படியே க்ரூப்பாக டீக்கடைக்கு கிளம்பிவிட்டார்கள்.  இப்போது ஓரமாய் நின்று அழுதுக் கொண்டிருந்த அருண் என்னிடம் வந்தான்…

.”அங்கிள்! இந்த சாவு மேளத்துக்கு யார்கிட்ட சொல்றதுன்னு தெரியல, பாடை கட்டணும், சுடுகாட்ல அடக்கம் பண்றதுக்கு யார்கிட்ட சொல்லணும்? எதுவும் தெரியாது. அங்கிள். ப்ளீஸ்! ஹெல்ப் பண்ணுங்க.”

“சேச்சே! என்னப்பா இப்படி சொல்லிட்டே?.அதெல்லாம் நாங்க  பார்த்துக்கறோம்.. ஆமா எல்லாத்துக்கும் பணம் இருக்கா? வேணுமா?.”                                                                                                              “தேங்ஸ் அங்கிள்!.இருக்கு.”

அருணை அனுப்பிவிட்டு ஏ1 ஐ கூப்பிட்டேன்..அவன் உள்ளூரு ஆள். எதுக்கு?,யார்கிட்ட?,எங்கே?.எல்லாம் தெரிஞ்சவன்

.” நாம எதுக்கு சார் ஓடணும்? இதுக்கு இங்க காமராஜ் நகர்ல தேசிங்குன்னு ஒரு ஆள் இதை காண்ட்ராக்டா எடுத்து செய்யறான். பந்தல் போட்றதிலயிருந்து எல்லாத்தையும் கனகச்சிதமா செய்வான்.”

“ அட! இதுகூட நல்லாயிருக்கே. .”                                                                           “ஆமாம்சார்! கல்யாணத்தில கேட்டரிங் காண்ட்ராக்ட், சாவுல கிரிமேஷன் காண்ட்ராக்ட். சரி சார் சொல்லி ஆளனுப்பிட்டு நான் அப்பிடியே கெளம்பறேன். கொஞ்சம் வேலையிருக்கு.ஆள் வருவான்,  நீங்க ரேட்டை பேசி விட்ருங்க.”

என் அனுமதியைக் கூட எதிர்பார்க்காமல் போய்க்கொண்டேயிருந்தான்.. இன்றைக்கு லீவுநாள் இல்லையே. ஒர்க்கிங் டே தானே?. டியூட்டிக்கு .வருவானா மாட்டானா?. இந்த வேலை செய்யறதுக்கு ஒரு நாள் டியூட்டி ஆஃப்பா?. அநியாயக் கொள்ளையாயிருக்கே..கமாண்ட் பண்ணக்கூடிய ஆள் இல்லேன்னவுடனே என்ன தைரியமா போறான் பார். நானெல்லாம்  ஒண்ணும் . கேக்கமுடியாது. லோக்கல் செல்வாக்கு, சாதி செல்வாக்கு,  அரசியல் செல்வாக்கு, சங்கத்தின் செல்வாக்கு,  ஹும்! பொறுப்பு இருந்தும் பெயருக்கு அதிகாரம். Responsibility without authority என்பது அரசுத் துறைகளில் அதிகாரிகளுக்கு இன்றைக்கு இருக்கும் சாபம். அம்மாவும் பெண்களும் மட்டும் பிணத்தருகே உட்கார்ந்து நினைத்து நினைத்து அழுதுக் கொண்டிருந்தார்கள். சடக்கென்று ஒரு நொடியில் நிகழ்ந்து விட்ட இந்த மரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து ஒருத்தரும் மீளவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்த ஆள் தேசிங்கு  வந்தான்.

”நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க சாரு. .மொதல்ல குந்தறதுக்கு இருபதடிக்கு முப்பதடி வெளியே ஷாமியானா பந்தல் போட்டு அம்பது அறுவது பிளாஸ்டிக் சேர்களை போட்டு வுட்டுட்றேன். சரியா?..  ஐஸ் பொட்டியில வெச்சி பொணத்த கெட்டுப்போவாம பார்த்துக்கிறதிலயிருந்து, பொரி, எண்ணை, சீக்காய்தூளு,கதம்பபொடி, பால், தயிரு, கோடி போட்ற துணி,வாய்க்கரிசி, கற்பூரம், கொள்ளிச்சட்டி, எரமுட்ட, பூப்பல்லக்கு, சாவு மோளம், பாடைய தூக்கிக்கிணு போவ டெம்போ, நாவிதன், ஏகாலி வரைக்கும், எங்கிட்ட இதுக்கு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்குது.. மொத்தத்தையும் நான் பார்த்துக்கறேன். ஆமா கொளுத்தணுமா?, பொதைக்கணுமா?.. கொளுத்தறதுன்னா சுலுவு. இப்ப கரண்ட் அடுப்பு வந்துட்ச்சி. அதல  குடுத்து வாங்கிடலாம். பத்து நிமிச வேலை.. என்னா முன்னாடியே போயி சலான் எழுதி பணம் கட்டணும்”—–மளமளவென்று அவன் ஒப்புவித்ததில் அவனுடைய தொழில் சிரத்தை தெரிந்தது…

.” இருப்பா உடையவங்களைக் கூப்பிட்றேன்.”                                                                                                “சீக்கிரம் சீக்கிரம் சார். பாடை கட்றவன்க லேசுல ஆப்டமாட்டான்க.. அதுங்க எங்க தண்ணியடிச்சிட்டு பெரண்டுக்கிணு கீதுங்களோ?. பூமார்க்கெட்டுக்கு போவணும். வாழைமட்டைக்கு ஆளனுப்பணும்”. .

அதற்கப்புறம் அருணை கூப்பிட்டு வைத்துக் கொண்டு பேரம் பேசி முடித்து, அட்வான்ஸ் என்று ஐயாயிரம் கேட்டான். நாலாயிரம் வாங்கிக் கொடுத்தனுப்பினேன். அருண் தேங்ஸ் அங்கிள் என்று உள்ளே போனான். சாவு வீட்டில் மதியத்திற்கு மேல்  பெரும்பாலான உறவுக்காரர்கள் வந்துவிட்டார்கள். ஒரே ஓலமும், கூக்குரல்களுமாக வீடு இரைச்சலாக இருந்தது.. வெளியே சாவு மேளம் பிளந்து கட்டிக் கொண்டிருக்கிறது. பறையடிப்பவர்களில் இரண்டுபேர் சுதி ஏற்றிக் கொண்டு அடிக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தனர். அடி வேகமாகும் போதெல்லாம் விசில் பறக்கிறது.. சற்று தள்ளி பாடை கட்டியாகிறது. பூ ரெடியாக வந்திறங்கி விட்டது…தெருவாசிகளில் சற்று வயசாளிகளும் ஆஜராகிவிட்டனர்..சுகாதார நிலையங்களின் சார்பாக சில சங்கங்களின் ஆட்கள், ஒரு சில சுகாதாரநிலையங்களின் அதிகாரிகள் வந்து மாலை போட்டுவிட்டு போனார்கள். அப்போதுதான்  கவனித்தேன். அங்கே என்னையும் ஹெட்கிளார்க்கையும் தவிர மற்ற ஸ்டாப்கள் யாரையும் காணோம். காலையில் கும்பலாய் டீ குடிக்க போனவர்கள் போனவர்களே. இன்னும் வரவில்லை. .

“ ஆபீஸ் போயிட்டிருப்பாங்க சார். சவம் எடுக்கிற நேரத்துக்கு வந்திடுவாங்க.” —-சிரித்தேன்.                                                   “ இது உன் யூகமா, நம்பிக்கையா?.”.

கொஞ்ச நேரத்தில் ஜாய்ண்ட் டைரக்டர் காரில் வந்திறங்கினார்.. எதிர்கொண்டழைக்க விரைந்தேன்.. எங்கிருந்தோ  ஓட்டமாய் ஓடி வந்த ஏ5, என்னை தள்ளிவிட்டு, ஓடிப்போய்  ஜே.டி.க்கு கூழைக்கும்பிடு போட்டுவிட்டு,அவருக்காக தயாராய் அவன் வாங்கி வைத்திருந்தான்  போல, ரோஜாமாலை.. பவ்வியமாய் எடுத்துக் கொடுத்தான்..மாலை பெருசாகத்தான் இருந்தது.அடப்பாவி மாலையோடு கமுக்கமா இருந்திருக்கான். அவர் வர்ற நேரம் தெரிஞ்சி கரெக்டா ஆஜராயிட்டான். இவன்தான் காலையில் ரோஜா மாலைக்கு நொட்டை சொன்னவன்.. ஹும். ஜே.டி. உள்ளே போய் பிணத்துக்கு மாலை போட்டுவிட்டு, சற்று நேரம் அங்கேயே நின்று விட்டு, வெளியே வந்து உட்கார்ந்தார்.. பிள்ளை அருணிடம் என்னாச்சி?, எப்படியாச்சி?, என்று விசாரித்துக் கொண்டிருந்தார். எப்படித்தான் அவர்களுக்கு தகவல் தெரியுமோ?,. ஜே.டி. வந்து பத்து நிமிஷத்துக்குள்ளே  எல்லா ஸ்டாப்களும் சர்..சர்னு டூவீலரில் வந்து ஆஜராகிவிட்டார்கள்.. சோகமாக வந்து அவரைப் பார்த்து கும்பிட்டுவிட்டு ஓரமாய் போய் நின்றுக் கொண்டார்கள். சற்று நேரம் கழித்து ஒரு கும்பல் அவரிடம் போய் ஐ.ய்.ய்.யா! என்று குழைந்தது..

“என்னாய்யா?”                                                                                                        “ ஐயா! பாடிய எடுக்கிறதுக்கு எப்படியும் சாயங்காலம் ஆறு ஏழு ஆயிடுமுங்க.. இன்னும் அம்பாசமுத்திரத்தில இருந்து அவர் மச்சான் வரலீங்க. ஐயா அதுவரைக்கும் நீங்க நம்ம ஆபீஸுக்கு வந்து ரெஸ்ட் எடுக்கலாம்க.. சாப்பாட்டு நேரம் வேற ஆயிடுச்சி. சாப்பாடு ரெடி பண்ணிட்றேன் சார்..”—-ஏ5-பவ்வியமாய் பேசினான். ஏ2  இன்னும் ஒரு படி மேலே போய்

”ஓட்டல் `அக்‌ஷயா’ வில ஏ.சி.  ரூம் ரெடியா இருக்குங்கய்யா.. நிம்மதியா தூங்கிட்டு ஃப்ரஷ்ஷா வரலாம்.. அங்க எல்லாம் வசதியா இருக்குங்கய்யா. ..”—-. அந்த எல்லாமுக்கு என்ன அர்த்தம்னு ஜே.டி.க்குப் புரியும். ஏ5 கடுப்புடன் ஏ2வை  முறைத்தான். அந்நேரத்துக்கு ஜே.டி.யிடம் இரண்டொரு வார்த்தைப் பேச, அருணுடைய அம்மா எழுந்து வந்தாள். அந்த கேப்ல ஏ5

”யோவ் ஆறுமுகம்!  நேத்து வேலைக்கு வந்துட்டு, என்னா ஆட்டம் போட்ற?, ஒரு சீனியர்னுகூட மரியாதையில்லாம முன்னமுன்ன வர்றியே போ அப்பால.. நான் ஐயா கிட்ட பேசிட்டிருக்கேன் இல்லே?..”

“அட சரிதான் சார்! இதுக்குக் கூட சீனியாரிட்டி வோணுமாங்காட்டியும். முணுமுணுத்தபடி திரும்பிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் ஜே.டி..சிரித்தபடியே வந்து ஏ5 ஐ தட்டிக் கொடுத்துவிட்டு,                                               “என்னய்யா! உங்க அதிகாரி குடும்பத்தில பிள்ளைங்க ஒண்ணு கூட செட்டில் ஆகல போலிருக்கே.”                                                              “ஆமாங்கய்யா! ரெண்டு பொண்ணுங்க. ஒண்ணை கூட கட்டிக் குடுக்கல.”                                                            “ இந்த குடும்பத்தை நெனைச்சா மனசு சங்கடப் படுதுய்யா. பொழைக்கத் தெரியாத மனுஷன். நேர்கோட்லதான் நடப்பேன்னு எல்லார்கிட்டயும் சண்டை போடத்தெரியும், இந்தாளுக்குவேறென்ன தெரிஞ்சிது?.. ரெண்டுமாசத்துக்கு முன்ன எங்கிட்ட கூடஹெல்த் ஒர்க்கர்ஸ் விஷயமா அப்படி கத்திட்டு வந்தாரு.அதிகாரின்னா ஒரு நெளிவுசுளிவு இருக்கணும்யா. இல்லேன்னா இதான் கதி. ” —

-சொல்லிக் கொண்டே ஏ2 ஆறுமுகத்திடம் தன் சூட்கேஸை கொடுத்து விட்டு, ஏ5 திகைத்து நிற்க, ஏ2 வுடன் வெளியே நடக்க ஆரம்பித்தார்  .சீனியாரிட்டி தோத்துப் போச்சுது. ஏ2வின் ஆஃபர் கவர்ச்சிகரமானது. ஜய்ங்…ஜப்…கும்பல் கூடவே ஓடியது. நாளைக்கு  குப்பை கூடைகளில் நிச்சயம் அஞ்சப்பர், நெஞ்சப்பர் என்று ஏதாவது ஒரு ஓட்டல் பைகளும், எலும்புத் துண்டுகளும் மஸ்தாவாய் கிடக்கும். வேறொன்றும் கூட. எனக்கு இயலாமையில் கோபந்தான் வந்தது.. ஒரு நேர்மையான அதிகாரியாக இருப்பது எவ்வளவு கஷ்டம்?.. அவசரத்துக்கு லஞ்சம் வாங்கி காரியத்தை முடிச்சித் தர்றதில்லைன்னு சமயங்கள்ல பொதுமக்களே திட்றாங்க., தன்கீழ வேலை செய்றவங்களை பிழிஞ்சியெடுக்கிறான்னு ஸ்டாப்களும் பின்னால திடறான்..மேலதிகாரிகளுக்கு கப்பம் கட்டாததினால மேலதிகாரிகளுக்கும் பிடிக்கிறதில்லை. ஆக நேர்மை எல்லா இடங்களிலும் உதைபடுகிறது. அது மட்டுமில்லை. இந்த நாட்டில் நேர்மையான சமூக ஆர்வலர்கள் கொல்லப்படுகிறார்கள்,நேர்மையான அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது மிரட்டப் படுகிறார்கள், ஏன்? நேர்மையான நீதிபதிகளும் கூட இதிலிருந்து தப்பவில்லை.. ஆக இத்தனை ஆபத்துக்களுக்கு நடுவே  எங்கள் டைரக்டர் இத்தனை வருஷங்கள் நூற்றுக்கு நூறு நேர்மையாளராக பணியை செய்ததில் எவ்வளவு சோதனைகளையும் ,அகௌரவங்களையும், உயிர்வதைகளையும் சந்தித்திருப்பார்?.என்னுள்ளே அவரைப்பற்றிய பிரமிப்பு இன்னும் கூடியது.

ஆயிற்று   பூஜோடிப்புடன் பாடை தயாராகி விட்டது.., ஜே.டி.யும்  ஓட்டல் அக்‌ஷயாவில் ஒரு தூக்கம் போட்டுட்டு, வாயைத் திறந்தால் லேசான லாகிரி வாடையுடன், கரெக்ட் டைமுக்கு வந்து விட்டார், கூடவே அவரின் நிழலாக ஆறுமுகமும், ஏ5 யும் வந்தார்கள். பிணத்தை குளிப்பாட்டும் போது  ஜே.டி. அருகில் வந்து நிற்க, அதுவரையிலும் ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஸ்டாப்கள் எல்லோருமே ஓடிவந்து தன் அதிகாரியின் பிணத்தை குளிப்பாட்டும் வேலையை எடுத்துப் போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பித்தார்கள். எங்கும் அழுகை. ப்யூன்களும், ஓ.ஏ.க்களும்அவர்கள் பங்குக்கு விசும்பினார்கள். வாய்க்கரிசி போட அரிசியைக் கொண்டுவந்த போது எல்லோரும் வந்து வாய்க்கரிசி போட்டார்கள். பெண்களின் கூக்குரல் எழ, பாடையைத் தூக்கி டெம்போவின் மேல் ஏற்றி கட்டினார்கள். இப்போதெல்லாம் டெம்போதான்,  யாரும் யாருக்காகவும் பாடையை தூக்கி, சிரமப்பட தயாரில்லை. அந்த நாலு பேருக்கு நன்றின்னு இனிமேல் பாடவேண்டியதில்லை. சவ ஊர்வலம் கிளம்பியது. தெருவாசிகள், உறவுகள்,எங்கள் ஆலுவலக ஊழியர்கள், என்று ஒரு நூறு பேருக்குமேல் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டிருந்தார்கள் ஹும்!.எல்லா சுகாதார நிலைய பணியாளர்களும் வந்திருந்தால் கும்பல் பெருசாய் இருந்திருக்கும், ,ஜே.டி.யின் கார் தெருக் கோடி வரை கூடவே வந்து விட்டு அப்படியே கிளம்பிவிட்டது. நானும் ஹெட்கிளார்க்கும் பாடையையொட்டி நடந்துக் கொண்டிருக்கிறோம். பின்னால் ஸ்டாப்கள் பேசிக் கொண்டு வருகிறார்கள்.

“பாவி இப்படி பாதியில போறதுக்குத்தான் எல்லாருடைய வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கிட்டான் போல.”                                     “ நம்மள வுடு, அக்கவுண்ட் செக்‌ஷன் கோபாலன் சார், பாவம் வயசான மனுஷன். அடுத்த ஜூலையில ரிடையர்மெண்ட். வசவசன்னு பசங்க, அவரை போய் சஸ்பெண்ட் பண்ணிட்டானே. ஏதோ ஒரு இக்கட்டு.பணக்கஷ்டம். ஒரு பத்தாயிரம் ரூபாயை ரெண்டு மூணு நாள்ல திருப்பி வெச்சிடலாம்னு, ஆபீஸ் பணத்திலிருந்து எடுத்துவிட்டாரு. நெனச்சபடி வெக்கமுடியல மூணு வாரம் ஆயிப்போச்சி. சரி, தப்புதான். இங்க அவர் வயசையும், குடும்ப சூழ்நிலையையும்  பார்க்கணும். அதில்லாம எப்படியோ உருட்டி பெரட்டி கொண்டாந்து உடனே கட்டிட்டார்.,தெரியாம நடந்துப் போச்சு, மன்னிச்சிடுங்கோன்னு எல்லார் எதிரிலேயும் இந்தாளு காலைப் பிடிச்சிட்டு அப்படி அழுதார்..வுட்டானா பாவி. உள்ளே கொஞ்சமாவது ஈரம் இருக்கணும்.சார். அவந்தான் மனுசன்..”

“உலகத்திலேயே  இவரு ஒருத்தர்தான் சத்தியகீர்த்தி. ஆளு கொஞ்சம் எக்ஸெண்ட்ரிக் சார்.”——இது ஏ5. ஹெட்கிளார்க் என்னை அர்த்தத்துடன் பார்த்தார் .   .

“ என்னய்யா பாக்கறே? இதான் நேர்மைக்கு கிடைக்கிற மரியாதை. பார்த்துக்கோ. உண்மை ஊழியனை ஊரே தூற்றும். இதிலிருந்து என்ன தெரியுது? எல்லாரும் நேர்மையை விரும்பறாங்கதான், ஆனா தன்வரைக்கும் மட்டும் அத தளர்த்திக்கணும்..,”.                                                                                                            ”சார்! எனக்கோரு சந்தேகம்..’                                                                                                       “ சொல்லு.”                                                                                                                       “சவ ஊர்வலத்தைப் பார்த்தே செத்தவன் நல்லவனா, கெட்டவனா?ன்னு தெரிஞ்சிக்கலாம்னு சொல்வாங்களே.?.”  “ ”ஆமாய்யா! செத்தவன் நல்லவன்னா ஊர்வலத்தில போறவங்க ஐயோ! புண்ணியவான் போயிட்டானே”—ன்னு புலம்புவார்களாம். கெட்டவன் பிணம்னா, படுபாவி ஒழிஞ்சான்யான்னு திட்டுவாங்களாம்.”

“சரீ! பின்னால நம்ம ஸ்டாப்கள்லாம் அய்யாவை திட்டிக்கிட்டேதான் வர்றாங்க?. அப்ப இவரு நல்லவரா?, கெட்டவரா?”

என்ன குசும்பு இது?.

“தெரியலையேப்பா.”——-` என்னுடைய -நாயகன்’ பதிலைக் கேட்டு, ஹெட்கிளார்க் சிரித்து விட்டார்.

சுடுகாட்டை சமீபிக்கும் போது தற்செயலாய் திரும்பி பார்த்தேன். ஊர்வலத்தில் கூட்டம் கணிசமாக குறைந்து போயிருந்தது. எங்க ஆட்களில் நிறைய பேர் காணவில்லை. மொத்தத்தில் இருபது இருபத்தைந்து பேர்தான் விஞ்சியிருந்தார்கள். இதில் ஏழெட்டு பேர் தொழிலாளிகள்.ஒரு பத்து பேருக்கு அவருடைய உறவுகள். மிச்சமிருந்தது ஸ்டாப்கள்..எவ்வளவு தேறும்னு கணக்கு போட்டுப் பார்த்துக்கோங்க. ஹெட்கிளார்க்கும் பார்த்துவிட்டு, என்னிடம் பேச முற்பட்டார்.  .

“.சரி..சரி.. விடுய்யா..”.

“அதில்ல சார் இதுக்கு முன்ன இருந்த துணை டைரக்டர் தங்கராஜ்சாருடைய ஒய்ஃப் செத்தப்போ என்னா கூட்டம்?, எம்மாம் மாலைங்க? சுடுகாடு வரைக்கும் கும்பல் குறையல சார். ஏன்?, அந்தளவுக்கு மனுசன் தங்கம்.. அவர் பீரியட்ல எல்லாரும் நல்லா பொழைச்சாங்க, தானும் கொள்ளையா சம்பாரிச்சாரு சார். ஆளு ரொம்ப திறமைசாலி.அவருக்கு எல்லா வழியும் தெரியும் சார், எமகாதகன். எந்த சிக்கலிலும் மாட்டிக்காம சம்பாரிக்கத் தெரியும், ஏன்? சம்பாச்சாரு. கெட்டிக்காரன்..”

” அதில்லைய்யா இதில ஒரு உளவியல் காரணம் இருக்கு..ஒரு சொலவடை சொல்றேன் கேட்டுக்கோ.

கூத்தியாளின் ஆத்தா செத்தா, பூப்பல்லக்கு, வானவேடிக்கைன்னு  அமர்க்களமாம்,                           கூத்தியாளே செத்துப்புட்டா, ஒண்ணுமேயில்ல

.இதான் மனுசன். இப்பக்கூட இவருக்குப் பதில் இவர் வீட்ல யாராவது செத்திருந்தா கூட்டம் கடைசிவரைக்கும் குறைஞ்சிருக்காது. சரி வுடுய்யா! ..மகாகவி பாரதியாரின் சவ ஊர்வலத்தில கூட எண்ணி இருபது பேர் போவலியாம்.”

”  ஹும்! இந்த ஆளும் பாரதி மாதிரிதான் சார், பொழைக்கத் தெரியாத ஜென்மம். தானும் பொழைக்கல., மத்தவங்களையும் பொழைக்க விடல. சதா நேர்மை, சட்டம்னு வறட்சியா பேசிக்கிட்டு, த்தூ!.ஆளு ரெண்டாங்கெட்டான் சார். ஒரு விதத்தில நூத்துக்கு நூறு நேர்மையா இருப்பேன்னு சொல்றதும்,அது மாதிரி நடக்கிறதும் நார்மல் இல்ல சார். சம்திங் அப்நார்மல், ஏ5 சொன்னாப்பல எக்ஸெண்ட்ரிக்னுதான் படுது…”

”அடப்பாவி. எக்ஸெண்ட்ரிக்னா பித்தன், அரை லூஸு,மரை கழண்ட கேஸ்,னு அர்த்தம்யா”.

”ஆமா சார்1. அர்த்தம் தெரியாமயா சொல்றேன்?.”—–சொன்ன ஹெட்கிளார்க்கை தீர்க்கமாகப் பார்த்தேன்.

.”ஹும்! ஆக்‌ஷுவலா இந்த சமுதாயமேதான் புரையோடிப் போயிருக்குய்யா.என்ன பார்வை இது?. வில்லன்களை ஆராதிக்கிறாப்பல.நேர்மையானவரை ரெண்டாங்கெட்டான், லூஸுன்னு சொல்றதும், ஊழல் பேர்வழிகளுக்கு——– திறமைசாலி, கெட்டிக்காரன் என்றும் அடைமொழி கொடுக்கறதும். .ச்சே!அந்தளவுக்கு நாம ஊழலுக்கு பழகிட்டோமா?, இல்லே ஏற்றுக் கொண்டிருக்கிறோமா?,. கண்றாவி. அடிப்படையில் நம்முடைய இந்த மனோபாவந்தான்யா மொதல்ல மாறணும்.”    .

0*******************************************************0

Series Navigationஆத்மாநாம்வலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு
author

செய்யாறு தி.தா.நாராயணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    இன்றைய புரையோடிய சமுதாயத்தில் நிலவி வரும் Hypocracy எனும் அவலத்தை வெளிக்கொணரும் வகையில் எழுதப்பட்டுள்ள அருமையான சிறுகதை பாராட்டுகள் செய்யாறு தி,தா. நாராயணன் அவர்களே.அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      தி.தா.நாராயணன் says:

      தங்களின் மேலான கருத்துக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *