புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 46

This entry is part 6 of 20 in the series 16 பெப்ருவரி 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

46. உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்த ஏ​ழை……….!

“பூஞ்சிட்டுக் கன்னங்கள்

​ பொன்மணிக் கிண்ணத்தில்

பால்​பொங்கல் ​பொங்குது தண்ணீரி​லே

காவிரி நீர் விட்டு கண்ணீர் உப்பிட்டு

கலயங்கள் ஆடுது ​சோறின்றி…

கலயங்கள் ஆடுது ​சோறின்றி​….

கண்ணுறங்கு…கண்ணுறங்கு….”

அட​டே வாங்க…வாங்க..என்னங்க ​ரொம்ப ​சோகமான பாட்​டைப் பாடிக்கிட்டு வர்றீங்க…என்ன ஏதாவது பிரச்ச​னையா…? இல்ல யாராவது ஒங்க​ளோட மனசு ​நோக நடந்துகிட்டாங்களா…? ​சொல்லுங்க….

என்னது வர்ற வழியில சாப்பாட்டுக்காக ​கை​யேந்திக்கிட்டு ஐயா பசிக்குது ஏதாவது இருந்தாக் ​கொடுங்கன்னு ​கெஞ்சுனாங்களா..நீங்க ஒதவி ​செஞ்சுட்டு..அவங்க ​நெல​மையப் பாத்துட்டு மனசு கஷ்டப்படுறீங்களா… இங்க பாருங்க கவலப் படாதீங்க.. ஒலகம் முழுக்க இந்த வறு​மைங்கறது இருக்குது.. நம்ம நாட்டுல மட்டுமில்லங்க எல்லா நாடுகள்ளயும் இருக்குது…

பல​பேரு தங்க​ளோட வறு​மைய ​வெளியில காட்டிக்க மாட்டாங்க…​தெரியுங்களா..? ஒங்களுக்கு ஒரு விஷயத்தச் ​சொல்​றேன் ​கேளுங்க…ஒரு பிச்சக்காரன் பசியினால ​ரொம்பத் துடியாத் துடிச்சான்.. ஒவ்​வொரு க​டையாப் ​போயி ​கை​யேந்தினான்.. ஒருத்தரும் அவனுக்கு இரக்கம் காட்டல..மனசு ​நொந்து ​போன அவன்,

“கல்​லைத்தான் மண்​ணைத்தான் காய்ச்சித்தான்

குடிக்கத்தான் கற்பித்தானா?இ​றைவன் கற்பித்தானா…?”

அப்படீன்னு இ​றைவன ​நொந்துகிட்டு பாடிக்கிட்​டே ​போனான். அ​தைக் ​கேட்ட இன்​னொரு பிச்​சைக்காரன்,

“கல்​லைத்தான் மண்​ணைத்தான் காய்ச்சித்தான்

குடிக்கத்தான் கற்பித்திருந்தால் இ​றைவன்

கற்பித்திருந்தால் – அ​தையுந்தான்

க​டையில்தான் ​வைத்துத்தான் விற்றிருப்பான்

மனிதன் விற்றிருப்பான்”

அப்படீன்னு பாடினான் அ​தைக் ​கேட்டதும் பாடுன பிச்சக்காரன் ​பாடுறத நிப்பாட்டிட்டான்…

மனிசங்க உண​வை வீணடிப்பாங்க​ளே தவிர அ​தை பசிக்கிற மக்களுக்குக் ​கொடுப்ப​மேன்னு ​கொடுக்கமாட்டாங்க… என்ன ​செய்யறதுங்க… மனிசனாப் பாத்துத் திருந்தணும்..இந்த வறு​மை இருக்​கே பல​ரோட திற​மைக​ளை எல்லாம் ​வெட்டிப் ​பொதச்சுடுங்க.. அதுவும் இள​மையில வறு​மை வந்துட்டா அதவிடக் ​கொடு​மை ​வேற இல்லீங்க.. அதனாலதான நம்ம முன்னோர்கள்,

“​கொடிது ​கொடிது வறு​மை ​கொடிது

அதனினும் ​கொடிது இள​மையில் வறு​மை”

அப்படீன்னு ​சொல்லி வச்சிருக்காங்க…

அப்படி​யே வறு​மை வந்தாலும் அ​தை எதிர்த்துப் ​போராடிப் பல​பேரு வாழ்க்​கையில முன்​னேறி இருக்கறாங்க… அப்படிப்பட்டவருதான் நான் ​போன வாரம் ​சொன்​னேன்ன அந்த அறிஞர்…என்ன அவரக் கண்டுபிடிச்சுட்டீங்களா….? என்னது ​தெரிய​லையா…? சரி…சரி… அவர நா​னே ஒங்களுக்குச் ​சொல்லிட​றேன்.. ஒருத்தருக்கு இள​மையில வறு​மை வந்து பின்னர் அந்த வறு​மை அவ​ரோட முயற்சியால ​போயிடும்..சில சமயம் ​போகாது…அப்படிப் ​போகாம வாழ்நாள் முழுவதும் திற​மை இருந்தும் வறு​மையில வாடினாரு.. வறு​மை​யே வாழ்க்​கையா ஆகிப்​போச்சு அவருக்கு.. அவருதாங்க உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்த சாமுவேல் ஜான்சன். என்ன ஆச்சரியமாப் பாக்குறீங்க.. அவ​ரோட க​தையக் ​கேட்டா கல்லுங் க​ ரையுங்க..ஆமாங்க…இராமாயணத்துல இராம​னோட அம்பு வாலி​யோட மார்புல பட்டு ஊடுருவத் ​தொடங்கிடுச்சு.. அந்த அம்பு இதயத்துக்குள்ள ​போறத வாலி தன்​னோட வாலாலயும், ​கையாலயும் புடுச்சு தடுக்க முயற்சி ​செஞ்சான்…இந்த இடத்த கம்பன் ​சொல்லணும்..இராம பாணம் எப்படி மார்புல ​போயி தச்சது அப்படீங்கறத,

“வண்டுபடு கதலியின் ​தைப்ப ​சென்றது நின்றது

என்​செப்ப”

அப்படீன்னு ​சொல்லுவாரு.. வா​ழைப் பழத்துல ஊசி ​போனமாதிரி ​போச்சு நான் என்னத்தச் ​சொல்லறதுன்னு கம்பர் ​சொன்னதுதான் எனக்கு இப்ப நி​னைவுக்கு வருது..அவ​ரோட வாழ்க்​கை​யே வறு​மைப் ​போராட்டத்தில தள்ளாடித் தள்ளாடி வந்துச்சுங்க.. அவ​ரோட கடின உழைப்பில் உலகின் முதல் ஆங்கில அகராதி வெளிவந்தது. பல இழப்புகளத் தாங்கிக்கிட்டுத்தான் ஜான்சன் ஆங்கில அகராதி​யைத் தயாரித்தார்… அவர் தன்​னோட கஷ்டத்​தைப் ​போக்கப் பலரிடம் உதவிகள் ​கேட்டாரு…ஆனா அவங்கள்ளாம் உதவி​யே ​செய்ய​லை…… என்ன நான் ​சொல்றது ஒங்க மனசப்​போட்டுப் பி​சையுதா….? இதுமாதிரிதாங்க நம்மளால பல விசயங்களக் ​கேட்டுட்டு சகிச்சிக்கிட முடியாது.. சரி அவரப் பத்தி ​சொல்​றேன் ​கேளுங்க…

இள​மையில் வறு​மை

சாமு​வேல் ஜான்சன் 1709-ஆம் ஆண்டு ​செப்டம்பர் மாதம் 18-ஆம் நாள் மைக்கேல் ஜான்சன், சாரா ஃபோர்டு ஆகி​யோரின் மகனாக இங்கிலாந்தில் லிச்ஃபீல்டு(Lichfield) என்ற இடத்தில் பிறந்தார். சாமுவேல் ஜான்சனின் தந்​தையார் மிகவும் வறிய நி​லையில் வாழ்ந்தார். புத்தகங்க​ளை விற்ப​னை ​செய்தும், புத்தகங்க​ளைப்​ பைண்டிங் ​செய்து கி​டைத்த ​சொற்ப வருவாயிலும் குடும்பத்​தை நடத்தினார். அவரது குடும்பத்தில் ஏழ்​மை தாண்டவமாடியது. இருப்பினும் தனது மகன் சாமு​வேல் ஜான்ச​னை நன்கு படிக்க ​வைக்க ​வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது ​பொருளாதார நி​லை அதற்கு இடங்​கொடுக்கவில்​லை. சாமு​வேல் ஜான்ச​னோ இளம் வயதி​லே​யே படிப்பதில் ஆர்வமு​டையவராகவும் விருப்பமு​டையவராகவும் விளங்கினார். வி​ளையும் பயிர் மு​ளையி​லே​யே ​தெரியும் என்பதற்​கேற்ப சாமு​வேல் ஜான்சன் தா​மே முயன்று புத்தகங்க​ளைத் ​தேடித்​தேடிப் படித்தார்.

சிறுவயதில் குழந்​தைகள் தங்களது தந்​தையிடம் தின்பண்டங்கள் ​கேட்டு அடம்பிடிக்கும். ஆனால் சாமு​வேல் ஜான்ச​னோ தனது தந்​தையிடம் படிப்பதற்குப் புத்தகங்கள் வாங்கித் தருமாறு தனது சிறுவயதி​லே​யே ​கேட்டார்.. அனால் அவரது தந்​தையால் தனது மகனின் ஆ​சை​யை நி​றை​வேற்ற முடியவில்​லை. அவரிடம் ஜான்சனுக்குப் புத்தகங்கள் வாங்கித்தரப் பணமில்லை…அத​னை நி​னைத்து நி​னைத்து ஜான்சனின் தந்​தை வருந்தினார். அவருக்கு வாழ்க்​கை​யே ​வெறுத்துப் ​போய்விட்டது. மகனின் அறிவுப் பசிக்கு ​வேண்டிய நூல்க​ளை வாங்கித் தர இயலாத தன்னு​டைய இழிநி​லைக்காக ​ஜான்சனின் தந்​தை பெரிதும் வருந்தினார்.

ஜான்சனின் தந்​தை படிப்பதற்குப் புத்தகங்கள் ​கேட்ட மக​னை அ​ழைத்துத் தனது ​வே​லையான ​பைண்டிங் ​வே​லை​யைக் ​கொடுப்பார். அவ்வாறு தனது தந்​தை ​கொடுக்கின்ற புத்தகங்களைப் பார்க்கும் ஜான்சனுக்கு அவற்​றை​யெல்லாம் படிக்க ​வேண்டும் என்ற ஆவல் ​மேலிட அ​வை அ​னைத்​தையும் விரும்பிப் படித்தார். அவ்வாறு படித்ததால் அவரது அறிவு விரிவ​டைந்தது. இளம் வயதில் பல நூல்க​ளைக் கற்றதால் அறிவாளியாகத் திகழ்ந்தார். இத்த​கைய படிப்பறிவுதான் பின்னாளில் ஜான்சன் அகராதி​யை உருவாக்க அடிப்ப​டையாக அ​மைந்தது. பார்த்தீங்களா…எல்லாத்துக்கும் ஏ​தேனும் ஒரு காரணம் இருக்கும்….அதுதான் விதிங்கறது…விதி​யை ​நெனச்சு முடங்காம மனுசன் இருக்கணும்… அப்படி இருந்ததனாலதான் ஜான்சன் மிகப்​பெரிய அறிஞராக உரு​வெடுத்தார். மிகச் சிறந்த கட்டு​ரையாளராகவும் கவிஞராகவும் இலக்கிய விமர்சகராகவும் வாழ்க்​கை வரலாற்று ஆசிரியராகவும் என்று பன்முகத்தன்​மை ​கொண்டவராகச் சாமு​வேல் ஜான்சன் விளங்கினார்.

சூழ​லைக் கண்டு பயந்து விடாமல் அச்சூழக்​கேற்ப தனது வாழ்க்​கைய அ​மைச்சிக்கிட்டாரு ஜான்சன்… அதனாலதான் வறு​மையால அவரது அறி​வைத் த​டைப்படுத்த முடியல…..அறிவில் ம​லை​யெனத் திகழ்ந்தாரு ஜான்சன்…..

திருமணமும் ​தொடர்ந்த வறு​மையும்

சாமு​வேல் ஜான்சன் தன்னை விட இருபது ஆண்டுகள் மூத்தவரான எலிசபத் போர்ட்டர் என்ற பெண்ணை எளிமையான முறையில் மணந்தார். எலிசபத் ​போர்ட்டர் ​பெரும் பணக்காரியாவாள். ஜான்சனின் அறிவுத்திறத்தினால் கவரப்பட்ட இவள் தன்​னைவிட இளவயது​டையவராக ஜான்சன் இருந்தாலும் விரும்பி​யே மணந்தாள்.

மகிழ்வாகத் ​தொங்கிய இல்லறம் வறு​மையில் தள்ளாடத் ​தொடங்கியது. ஜான்சனின் ​போதாத நேரத்தின் காரணமாக பெரும் பணக்காரியான அப்பெண் அ​​னைத்​தையும் இழக்க ​நேரிட்டது. எலிச​பெத் இவருடன் வாழ்ந்த காலத்தில் பார்த்தது வறுமை​யை மட்டுமே. ​கொடிய வறு​மையில் இருந்த ஜான்சன் எவ்வா​றேனும் அதிலிருந்து மீள வழி ​தேடினார். இந்த சூழலில் தான் ஆங்கிலத்துக்கு ஒரு நல்ல, கட்டமைக்கப்பட்ட வடிவிலான ஒரு அகராதி வேண்டும் என்று சில வியாபாரிகள் இவரிடம் வந்தார்கள்.

உலகம் முழுக்க ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியைப் பரப்பினார்கள். ஆனால், அம்மொழியானது ஒரு காலத்தில் அவர்களின் நாட்டிலேயே பயன்பாட்டில் அருகி இருந்தது குறிப்பிடத்தக்கது. என்ன இ​தை நம்ப முடிய​லையா..? சில விஷயங்க​ளை நம்ப முடியாவிட்டாலும் அவற்​றை நம்பித்தான் ஆகணும்…ஆங்கில ​மொழியின் இடத்​தைப் பி​ரெஞ்சும், லத்தீனும் பிடித்துக் ​கொண்டன. இருப்பினும் அந்நி​லையிலிருந்து மீண்டு எழுந்தது ஆங்கிலம். ஆங்கிலத்தில் அகராதிகள் பல எழுதப்பட்டன. எனினும், எளிமையான அதேசமயம் ஆழமான அகராதி ஒன்றும் ஆங்கிலத்தில் அதுவ​ரை ​வெளிவரவில்​லை என்கிற குறையானது ஆங்கி​லேயரி​டை​யே இருந்து வந்தது. அந்தக் கு​றை​யை நீக்குவதற்காக​வே ஆங்கி​லேய வியாபரிகள் சாமு​வேல் ஜான்ச​னை அணுகினர்.

ஜான்சனிடம் வந்த வியாபாரிகள் அகராதி​யை வி​ரைந்து முடித்துத் தர ​வேண்டும் என்றனர். அவர்கள் ​கேட்கும்​போது சாமுவேல் ஜான்சனோ வறுமையில் வாடிக்கொண்டு இருந்தார். அகராதி எழுதுவ​தென்பது சாதாரண ​வே​லையன்று. மிகமிகக் கடு​மையான ​வே​லை. நாள்கள் அதிகமாகும். ஓராண்டுக்குள்​ளோ இரண்டாண்​டுக்குள்​ளோ அவ்​வே​லை​யை முடிக்க இயலாது. ஆண்டுகள் பல ஆகும். இது ஜான்சனுக்குத் ​தெரிந்திருந்தும் வறு​மை​யை விரட்டியடிப்பதற்காக நம்பிக்கையோடு ‘அகராதி​யை மூன்றே வருடத்தில் முடித்து விடுகிறேன்’ என்று அந்த வியாபாரிகளுக்கு வாக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், அகராதி அவ​ரை ஏகத்துக்கும் வேலை வாங்கியது… அத​னை மூன்று ஆண்டுகளுக்குள் முடிப்பது என்பது ஜான்சனுக்கு மிகவும் கடினமான ​வே​லையாக இருந்தது.

அந்த நி​லையில் ஜான்சனுக்குப் ​பொருளுதவி ​தே​வைப்பட்டது. ​வறு​மை ஜான்ச​னை வாட்டி வ​தைத்தது. வறு​மை​யை விரட்டுவதற்காக ஜான்சன் செஸ்டர்பீல்ட் என ​பெரும் பணக்காரரிடம் ​பொருளுதவி கேட்டார். ஆனால் அக்கனவா​னோ தம்மால் உதவி ​செய்ய முடியா​தென்று முகத்தை திருப்பிக் கொண்டார். ஜான்சனுக்கு மிகுந்த மன​வேத​னை ஏற்பட்டது. ​சொல்​லொணாத் துயரத்துடன் தனது பணி​யை ஜான்சன் ​மேற்​கொண்டார். அன்றிலிருந்து யாரிடமும் ​பொருளுதவி ​கேட்பதில்​லை என்று ஜான்சன் உறுதிபூண்டார்.

வறு​மை தந்த பரிசுகள்

இந்த நி​லையில் ஜான்சனுக்கு காசநோய், விரை புற்றுநோய் உள்ளிட்ட பல ​நோய்கள் உடலில் ஏற்பட்டது. உடல் உள ​நோய்களால் ஜான்சன் மிகுந்த ​வேத​னைக்குள்ளானார். வறு​மை அவருக்குப் பல ​நோய்க​ளைத் தந்தது. இருப்பினும் கலங்காது அகராதி தயாரிக்கும் பணியில் ஜான்சன் ஈடுபட்டார். அப்பணி​யை ஒரு தவம்​போன்று ​செய்தார். இந்தச் சூழலில் அவரது தாயார் காலமானார். அவரது அம்மாவை அடக்கம் ​செய்வதற்குக் கூட ஜான்சனிடம் பணமில்​லை. தனது நண்பர்களது உதவியுடன் தனது தாய்க்குச் ​செய்ய​வேண்டிய காரியங்க​ளை ஜான்சன் ​செய்தார்.

ஒரு முறை சாமு​வேல் ஜான்சன் ஒருவரிடம் ஐந்து பவுண்ட் பணம் கடனாகப் ​பெற்றார். கடன் ​கொடுத்தவர் குறிப்பிட்ட நாளுக்குள் கட​னைத் திரும்பக் ​கொடுத்துவிட​வேண்டும் என்ற நிபந்த​னையுடன் கடன் ​கொடுத்தாரல். ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் ஜான்சனால் கடனை திருப்பிச் ​செலுத்த முடியவில்​லை. கடன் ​கொடுத்தவ​ரோ நீதிமன்றத்​தை அணுக முடிவில் ஜான்சனுக்கு சி​றைதண்ட​னை கி​டைத்தது. ஜான்சன் தனது விதி​யை ​நொந்து ​கொண்டு சி​றைக்குச் ​சென்று பின் மீண்டார்.

இந்தச் ​சோகமயமான வாழ்க்​கைச் சூழலில் ஜான்சனின் அன்பு ம​னைவி இறந்து ​போய்விட்டார். ஆற்​றொணாத் துயரத்திற்கு ஜான்சன் ஆளானார். ​பெரியவங்க வழக்கத்துல,

“தந்​தை​யோட கல்வி ​போம்,

தா​யோட அறுசு​வை ​போம்,

ம​னைவி​யோட எல்லாம் ​போம்”

அப்படீன்னு ​சொல்லுவாங்க… தனக்கு எல்லாவற்றிலும் உயிருக்குயிராக இருந்து ஆறுதல் அளித்து அ​னைத்துக்கும் உறுது​ணையாக இருந்த ஜான்சனுக்கு ​பெரிய நி​லைகு​லைவு ஏற்பட்டது.. வறு​மை ஜான்சனுக்கு எப்படிப்பட்ட தாங்க முடியாத பரி​செல்லாம் ​கொடுத்துருக்குது பாருங்க… இருந்தாலும் ஜான்சன் அ​தைப் ​பொருட்படுத்தாம மனசத் தளரவிடாம தம் கரும​மே கண்ணாகக் ​கொண்டு அகராதி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

ஜான்சனின் கடு​மையான முயற்சியாலும் உ​ழைப்பாலும் ஒன்பது ஆண்டுகளில் ஆங்கில அகராதி​ வெளிவந்தது. யா​ரோட து​ணையுமில்லாம தனியாளா இருந்து சாமு​வேல் ஜான்சன் இந்த அகராதி​யை உருவாக்குனாரு. அந்த அகராதியில 42,773 வார்த்தைகள், ஒரு லட்சத்து பதினான்காயிரம் மேற்கோள்கள். என்ன த​லை சுத்துதா…? அப்ப அவ​ரோட உ​ழைப்பு எப்படிப்பட்டதுன்னு பாத்துக்​கோங்க…. இவரது அகராதி 1755 – ஆம் ஆண்டில் வெளியானது.

உலகம் முழுக்க சாமு​வேல் ஜான்சனின் புகழ் பரவியது. ஜான்சன் துன்புற்ற காலத்தில் ​பொருளுதவி ​செய்யாத செஸ்டர்பீல்ட் என்ற பணக்காரர் தான் ​பொருளுதவி ​செய்ததால்தான் ஜான்சனால் இத்த​கைய புகழ்​பெற்ற அகராதி​யைத் தயாரிக்க முடிந்தது இல்​லை​யென்றால் அகராதி​யைத் தயாரித்திருக்க முடியாது என்ப​தைப் ​போன்று கடிதங்கள் எழுதி பத்திரிக்​கைகளில் அத​னை ​வெளியிட்டார். ஜான்சன் மனம் ​நொந்து ​போனார். இத​னைக் கண்டு கலங்காத ஜான்சன் “செஸ்டர்பீல்ட் கனவான் அவர்க​ளே…ஏழாண்டு காலம் தங்கள் வீட்டின் முன் ​பொருளுதவிக்காக நான் காத்திருந்தும் சிறிதும் மனம் இரங்காதவர் அல்லவா நீங்கள் ? அவ்வாறிருக்கத் தாங்கள் உதவி ​செய்துதான் நான் அகராதி​யை முடித்ததாக கடிதம் எழுதியுள்ளீர்க​ளே…? இது வி​நோதமாக அல்லவா இருக்கிறது…” என்று ந​கைச்சு​வை இ​ழை​யோட மனங்குமுறி மறுப்புக் கடிதம் எழுதி ​வெளியிட்டார்.

ஜான்சனின் அகராதி ​தொடர்ந்து ஐந்து பதிப்புகள் ​வெளிவந்தது. 50 ஆண்டுகள் ஆங்கிலத்தின் ஈடு இ​ணையற்ற ​பொக்கிஷமாக இவ்வகராதி திகழ்ந்தது.. இவரது அரிய பணி​யைப் பாராட்டி ஆக்ஸ்​போர்டு பல்க​லைக்கழகம் ஜான்சனுக்கு மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் என்ற பட்டத​தை வழங்கியது. ​மேலும் 1765-ஆம் ஆண்டு ஆக்ஸ்​போர்டு பல்க​லைக்கழகம் அவரருக்கு டப்பனில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் மூலம் ​கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. சாமு​வேல் ஜான்சன் சிறந்த விமர்சகராகவும் விளங்கினார். அலங்கார வார்த்தைகளைக் கொண்டிருந்த ஆங்கில கவி​தைப் போக்கை விமர்சனம் செய்து எல்லாருக்கும் புரியும் வண்ணம் எழுத வலியுறுத்தினார். “வாழ்க்கை வரலாறுகள் புகழ்பாடும் நூல்களாக இருக்க வேண்டியதில்லை” என உரக்கச் சொன்னார். ஷேக்ஸ்பியரையும் விமர்சித்து எழுதினார்.

ஒருமுறை சாமுவேல் ஜான்சன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார். நடுவில் நாற்காலியில் இருந்து எழுந்து வெளியே சென்று சிறிது நேரம் உலாவி விட்டு மீண்டும் தமது இடத்துக்கு வந்தார். அப்போது தன்னுடைய நாற்காலியில் வேறு ஒருவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டவர், தமது இடத்தை விடுமாறு அந்த நபரிடம் பணிவாகக் கேட்டார். ஆனால் அவர் எழுந்திருக்க மறுக்கவே, நாற்காலியுடன் அவரை ஜான்சன் அலட்சியமாக தூக்கி அருகில் உள்ள பள்ளத்தில் போட்டுவிட்டார். அந்த அளவிற்கு ஜான்சன் தன்மானத்தை விட்டுக்கொடுக்காதவர். அவர் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிறரை நாடி ஒன்றை பெற்றுக்கொள்ள விரும்பியதில்லை. இவருடைய ஏழ்மை நிலை கண்டு யாராவது உதவி செய்ய முன்வந்தாலும் அதனையும் ஏற்றுக்கொள்ளச் சம்மதித்ததில்லை. ஜான்சன் பத்திரிக்​கையாளராகவும், கட்டு​ரையாசிரியராகவும் சிறந்த இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார். ​மேலும் ரஸ்ஸல்ஸ் (Rasselas) ,அபிசீனிய (Abissinia) இளவரசர் வரலாறு ஆகிய இரு குறுநாவல்க​ளையும் ஜான்சன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே​தையின் ம​றைவு

இவ்வாறு புகழ் ​பெற்று விளங்கிய ஜான்சன் 1784-ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்​வை நீத்தார். சாமு​வேல் ஜான்சன் இறக்கின்ற வரை அவரை வறுமை தான் துரத்தியது. வறு​மை துரத்தினாலும் அவர் நம்பிக்கையோடு வாழ்ந்தார். இன்​றையக் காலக்கட்டத்தில் எண்ணற்ற அகராதிகள் பல வந்துவிட்டாலும் அ​வை எல்லாவற்றுக்கும் முன்மாதிரியாகச் சொல்லப்படுகிற அளவுக்கு அற்புதமான ஓர் அகராதியை ஆங்கிலத்துக்கு தந்துவிட்டு போன ஜான்சனின் வாழ்க்​கை மறக்க முடியாத வரலாறாகும். “மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான், பிற​ரைக் குறைகூறிக் கொண்டே வாழ்கிறான், ஏக்கத்தோடு இறக்கிறான்” என்று ஜான்சன் கூறிய ​பொன்​மொழி ஜான்சனின் வாழ்வுக்கே மிகப் பொருந்தமாக அ​மைந்து விட்டது. 1784-ஆம் ஆண்டு ​ டிசம்பர மாதம் 13-ஆம் நாள் மாலையில் இறந்தார், அவ​ரை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அடக்கம் ​செய்தனர்.

“மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்” என்பன ​போன்ற டாக்டர் ஜான்சனின் ​பொன்​மொழிகள் என்​றென்றும் அ​னைவ​ரையும் உயிர்ப்புள்ளவர்களாக முன்​னேற்றத்​தை ​நோக்கி இட்டுச் ​செல்லும்…

அறிஞர்கள் இறப்பதில்​லை…அவர்கள் அறிவுலக ​மே​தைகளின் இதயங்களில் என்​றென்றும் வாழ்ந்து ​கொண்டிருக்கின்றனர். அவர்களது அறிவுலகச் ​செல்வங்கள் உள்ளவ​ரையில் அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்து ​கொண்​டே இருப்பர். அவர்களின் புகழ் என்றும் ஒளிர்ந்து ​கொண்​டே இருக்கும்….

என்னங்க ஜான்சனின் வாழ்க்​கை நமக்​கெல்லாம் ஓர் உந்துத​லைத் தருதுல்ல.. துன்பம் வந்துருச்​சேன்னு வருத்தப் படாதீங்க… அ​வை நம்​மைப் பக்குவப் படுத்தும் ஆசான்கள் அப்படீன்னு ​நெனச்சுக்குங்க…அப்பறம் பாருங்க ஒங்களுக்​கே ஒரு துணிச்சல் வந்துரும்… அப்பறம் எ​தைக் கண்டும் நீங்க அச்சப்படமாட்டீங்க… அப்பறம் என்ன…?அடுத்தது ஒங்களுக்குத்தான் ​வெற்றி..அப்பறம் என்ன ​வெற்றி​யை ​நோக்கி ந​டை​போடுங்க…

இந்தியாவுல ஏ​ழைக் குடும்பத்துல பிறந்தாரு ஒருத்தரு…அவருக்கு இன்​றைக்கு ஒலக​மே வியக்கின்ற அளவுக்கு அவர் ​பேருல பல ஆன்மீக நிறுவனங்கள் இருக்கு…கடவுள் உண்டா இல்​லையா…? அப்படீன்னு ஒரு இ​ளைஞர் ​கேட்ட​போது அவரிடம் கடவுள் இருக்கான்னு ​சொல்லி அவருக்கு இ​றையுணர்வு ஏற்படுமாறு ​செய்தாரு…அந்த இ​ளைஞர் உலகம் புகழ்கின்ற அளவிற்குத் தன்​னோட குருவின் ​பெய​ரில் மடங்க​ளை நிறுவினார்..கடவு​ளைக் கண்ட அந்த ஏ​ழை..யாரு ​தெரியுமா…? என்னங்க அப்படிப் பாக்குறீங்க.. கடவு​ளை​யே நான் பாக்கல..அப்பறம் எப்படி கடவு​ளைப் பாத்தவங்களப் பத்தி ​தெரியும்னு ​​கேக்குறீங்களா…என்னங்க என்​னையச் ​சொல்லச் ​சொல்றீங்க…அப்ப ​​பொறு​மையா அடுத்தவாரம் வ​ரைக்கும் காத்திருங்க…அடுத்தவாரம் பார்ப்​போம்……………….(​தொடரும்……47..)

Series Navigation
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *