ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-28 யாதவர்களின் முடிவு

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

 

மகாபாரதத்தின் மௌசல பர்வத்தில் ஸ்ரீகிருஷ்ணர், பலராமர் மற்றும் மொத்த யாதவர்களின்  பேரழிவு குறித்துக் கூறப் பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் யாதவர்களின் இந்தப் பேரழிவைத் தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. முரணாக அவரே பல யாதவர்களை தன் கைகளினால் துவம்சம் செய்கிறார். யாதவர்களின் அழிவு மகாபாரதத்தில் இவ்வாறு விவரிக்கப் படுகிறது.

காந்தாரியின் தீர்க்க தரிசனத்தின்படி சரியாக முப்பத்தியாறு ஆண்டுகள் கழிந்த பின்பு அவர்களின் துர் நடவடிக்கைகளினால் யாதவர்களுடைய அழிவு தொடங்கியது. ஒழுங்கின்மை எங்கும் வியாபித்திருந்தது. அப்படி ஒரு மோசமான கதியில் அவர்கள் இருக்கும் பொழுது மகரிஷிகளான விசுவாமித்திரர், கண்வர், தேவரிஷியான நாரதர் போன்றோர் அவர்களைப் பார்க்க வருகின்றனர். துர்மதி படைத்த யாதவர்களில் சிலர் ஸ்ரீகிருஷ்ணனின் மகனான சாம்பனுக்கு ஒரு கர்ப்பிணி பெண் போல வேடமிட்டு  ரிஷிகளின் முன் நிறுத்துகின்றனர். அந்த முட்டாள் யாதவர்கள் அந்த ரிஷிகளிடம் ,        “ இந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று கூறுங்கள்.” என்கின்றனர்.

நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல ரிஷிகள் சட்டென்று கோபத்தால் ஆவேசப் படுபவர்களாகவே இருக்கின்றனர். அவர்களை லேசாகச் சீண்டினால் கூட சற்றும் பொறுத்துக் கோளாமல் பிடிசாபம் கொடுப்பவர்களாகவே உள்ளனர்.  இவர்கள் எவ்வாறு புலன்களை அடக்கியிருப்பார்கள், ஆன்மிகவாதிகள் என்று பெயர் எடுத்திருப்பார்கள் என்பது புரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இவர்களைக் குரூரமான மிருகங்களின் பட்டியலில்தான் சேர்க்க வேண்டும் என்று சொல்வேன். இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு  நவீன மனிதனும்  யாதவர்களின் இந்தக் குறும்புக் களியினைக் கண்டு ரசித்துச் சிரித்திருப்பார்கள். அப்படியே தாங்கள் ஏமாற்றப் பட்டதை அறிந்தால் சற்று சினம் கொள்வார்கள். அவ்வளவுதான். அதற்காக சாபம் கொடுக்கத் துணிய மாட்டார்கள். ஆனால் பண்டைய காலத்தில் பாரத ரிஷிகள் அவ்வாறு கிடையாது. அந்த சில யாதவர்களின் குறும்புத்தனமான நடவடிக்கையைப் பொறுக்காத அந்த ரிஷிகள் மொத்த யாதவ குலத்தையும் இவ்வாறு சபித்து விடுகின்றனர்.” இந்த யாதவப் பெண்ணிற்கு ஒரு இரும்பு உலக்கை பிறக்கும். அந்த உலக்கை ஸ்ரீரிகிருஷ்ணரையும், பலராமரையும் தவிர்த்து யாதவ குலம் முழுவதையும் அழித்து விடும் . “ என்று சபிக்கின்றனர்.

ஸ்ரீகிருஷ்ணருக்கு இது தெரிய வரும்பொழுது அவர் சாப விமோசனத்திற்கு முயற்சிக்கவே இல்லை.” எல்லாம் எப்படி நடக்க வேண்டுமோ அப்படியே நடக்கும். ரிஷிகளின் எண்ணம் ஈடேறும். “ என்று அமைதியாகக் கூறுகிறார்.

இதற்கு நடுவில் சாம்பன் ஓர் இரும்பு உலக்கையை ( அவன் ஆணாக இருப்பினும் ) மகவாகப் பெற்று எடுக்கிறான். அந்தச் சாபத்திற்கு அஞ்சி யாதவர்களின் அரசனான் உக்கிரசேனன் அந்த இரும்பு உலக்கையைப் பொடிப் பொடி துண்டுகளாக்கிக் கடலில் எரிந்து விட ஏற்பாடு செய்கிறான். அந்த நேரத்தில் யாதவர்களிடம் நல்லொழுக்கம் படிப்படியாகக் குறைந்து தீய நடவடிக்கைகள் பெருகத் தொடங்குகின்றன. இதனால் மனம் வெறுத்துப் போகும் ஸ்ரீகிருஷ்ணர் அவர்களுடைய மறைவுக்குக் காத்திருக்கிறார். அவர்கள் அழிய வேண்டும் என்பதை விரும்பி அவர்களைப் பிரபாசம் என்ற புனித தலத்திற்கு அழைத்துச் செல்கிறார்.( புனித தலத்தில் எவராவது இறக்க விரும்புவார்களா? )

பிரபாசத்தில் யாதவர்கள் குடித்துக் கும்மாளமிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் நடுவில்’ கலகம் மூண்டது. குருக்ஷேத்திரப் போரில் பராக்கிரமம் காட்டிய சாத்யகிதான் அந்தக் கலகத்தைத் தொடங்கி வைக்கிறான். பிரதியும்னன் அவனுடன் சேர்ந்து கொண்டு கிருதவர்மனை எதிர்க்கிறான். சாத்யகியும் கிருதவர்மனை தாக்குகிறான். கிருதவர்மனின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து சாத்யகியையும், பிரத்யும்னனையும் கொன்று விடுகின்றனர்.

இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் யாதவர்கள் அவர்களுக்கு உள்ளேயே பல பிரிவுகளாகப் பிரிந்து  கிடப்பவர்கள். முக்கியமான பிரச்சினையின் பொழுது ஒன்று சேராமல் இருப்பார்கள். பிரபாசத்திற்கு தானும் அவர்களுடன் புனித யாத்திரை மேற்கொண்ட பொழுது அவர்கள் இவ்வாறு அடித்துக் கொள்வதைக் கண்டு ஸ்ரீகிருஷ்ணர் வெறுப்புறுகிறார். பிறகு அவ்வாறு மனம் வெறுத்துப் போன ஸ்ரீகிருஷ்ணர் அங்கு நன்கு வளர்ந்திருந்தக் கோரைப் புற்களைப் பிடுங்கி யாதவர்களைத் தாக்கத் தொடங்கினார். புராணக் கதையின் படி ஸ்ரீ கிருஷ்ணர் பிடுங்கியக் கோரைப் புற்கள் சாம்பன் வயிற்றில் முளைத்த இரும்பு உலக்கையின் துகள்களால் முளைக்கப் பெற்றவை. அதே போல் அங்கிருந்த அத்தனைக் கோரைப் புற்களும் உலக்கைகளாக மாறவே அவற்றைப் பிடுங்கி  யாதவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி மாண்டு போயினர்

உடனே ஸ்ரீகிருஷ்ணர் தனது தேரோட்டியை அழைத்து ஹஸ்தினாபுரம் சென்று அர்ஜுனனை அழைத்து வர ஏவுகிறார். அர்ஜுனனிடம் அரண்மனைப் பெண்டிரை ஒப்படைத்து கலகம் மூண்டுள்ள துவாரகை நகரை விட்டு வெளியில் கொண்டு போகச் சொல்கிறார்.

இதற்கு நடுவில் நடந்தக் கலவரங்களைக் கண்ணுற்ற பலராமன் மனம் வெறுத்து இனி ஒரு கணமும் உயிர் தரியேன் என்று தற்கொலை செய்து கொள்கிறார். இதைக் கண்ணுற்ற ஸ்ரீகிருஷ்ணர் தானும் மடியத் தீர்மானித்து ஒரு மரத்தடியில் சென்று உறங்குகிறார். அவர் உறங்கும்பொழுது அவர் காலடிகளைக் கண்டு மான் ஒன்றைத் துரத்தி வந்த வேடுவன் ஒருவன் ஸ்ரீகிருஷ்ணரின் பாதங்களை மான் என்று தவறாக எண்ணி  கணை தொடுத்து விடுகிறான். தவறை உணர்ந்த பிறகு வருத்தப் படுகிறான். அவன் செய்த குற்றத்தை மன்னித்து ஸ்ரீகிருஷ்ணர் தன் இறுதி மூச்சை விடுகிறார்.

மீண்டும் அர்ஜுனன் துவாரகைக்குத் திரும்பும்பொழுது பலராமர், ஸ்ரீகிருஷ்ணர் இருவரும் இறந்த சேதியை அறிகிறான். அவர்களுக்குரிய ஈமக் கடன்களை நடத்தி முடிக்கிறான். யாதவக் குல மகளிருடன் ஹஸ்தினாபுரம் திரும்புகிறான். அவர்களுடன் சென்று கொண்டிருக்கும்பொழுது வழியில் ஆயுதம் ஏந்தியக் கொள்ளைக் கும்பலால் தாக்கப் படுகிறான். மிகவும் பராக்கிரமசாலியும், யுத்தத்தில் பீஷ்மரையும், கர்ணனையும் தன் வில்லினால் வெற்றி கொண்ட அர்ஜுனன் இப்பொழுது வெறும் கழி,கட்டைகளை ஏந்திய ஒரு சாதாரண கொள்ளைக் கும்பலை எதிர்க்க முடியாமல் திணறுகிறான். ருக்மிணி, சத்யபாமா, ஹிமாவதி, ஜாம்பவதி   போன்ற முக்கிய மகளிர் சிலரைத் தவிர மற்றவரை அவனால் காப்பாற்ற முடியாமல் போகிறது. மற்ற மகளிரை அந்த கொள்ளை கும்பல் கவர்ந்து சென்று விடுகிறது.

யாதவர்கள் பூண்டோடு அழிக்கப் பட்டதாகக் கூறப் படும் பகுதியில் இடம் பெறும் விவரிப்புகள் எல்லலாமே அதீதக் கற்பனைப் புனைவுகள் என்றுதான் கொள்ள வேண்டும். ஆனால் அவை எவற்றின் மீது புனையப் பட்டதோ அந்த அடித்தளம் உண்மையானது உதாரணத்திற்கு யாதவர்களைப் பற்றி கூறப் பட்டுள்ள சில அடிப்படை விஷயங்கள் ஏற்கனவே நன்கு விளக்கப் பட்டவை. யாதவர்களின் அளவுக்கு அதிகமான குடிப் பழக்கம் வேறு ஓர் இடத்தில் மகாபாரதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது, அவர்களுடைய இந்த மிகைக் குடிப் பழக்கத்தால் வெறுத்துப் போன கிருஷ்ண பலதேவர்கள் அளவுக்கதிகமாகக் குடிப்பவர்கள் மரணதண்டனைக்கு ஆளாக்கப் படுவார்கள் என்று ஆணை பிறப்பிக்கின்றனர். அதே போல் யாதவர்களிடம் போஜர், விருஷ்ணி என்று பல கிளைகளும் உட்பிரிவுகளும் உள்ளன.

இந்த உட்பிரிவைச் சார்ந்த யாதவர்கள் எந்த முக்கியப் பிரச்சினையிலும் ஒருமித்த முடிவை எட்டாமல் பிரிந்தே இருந்திருக்கின்றனர். விருஷ்ணிகளின் பிரிவைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணரும், சாத்யகியும் பாண்டவர்கள் பக்கம் அணி சேர்கின்றனர். அதே சமயம் போஜர்களின் பிரிவைச் சேர்ந்த கிருத வர்மன் கௌரவர்களின் அணியில் சேர்கிறான். பலராமன் இரு அணிகளிலும் சேராமல் தீர்த்த யாத்திரை சென்று விடுகிறார். மேலும் யாதவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட மன்னர் கிடையாது. உக்கிரசேனனை அடிக்கடி மன்னர் என்று குறிப்பிட்டாலும் அவருக்கு மொத்த யாதவர் மேலும் ஆளுமை இருந்ததாக எங்கும் குறிப்பிடப் படவில்லை.

தனது சொந்தத் திறமையினாலும் கடும் முயற்சியாலும் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முக்கியத் தலைவராக விளங்கினாலும் அவருடைய சொந்தச் சகோதரரான பலரமரே பல சமயங்களில் அவருடைய பேச்சைக் ஏற்க மறுக்கிறார். மகாபாரத சாந்தி பர்வத்தில் ஸ்ரீகிருஷ்ணர் தங்கள் குலத்தில் உள்ள குறைபாடுகளையும், ஒழுங்கின்மையையும் தேவரிஷியான நாரதரிடம் ஒரு முறை சொல்லிப் புலம்புவதாகக் குறிப்பிடப் படுகிறது. அவர் எத்தனையோ முறை பிரத்தயனப்பட்டு  தன் மீது யாதவர்களின் அபிமானத்தை மாற்ற முயற்சித்தும் பயனின்றிப் போனதாக இந்த இடத்தில் குறிப்பிடுகின்றார்.

சுருங்கச் சொன்னால் யாதவர்கள் அந்தக் காலத்தில் மற்றவர்களுக்கு வெறுப்பேற்றக் கூடியவர்களாக, சுதந்திரச் சிந்தனை உடையவர்களாக, சக்தி மிக்கவர்களாக, மகாக் குடிகாரர்களாக இருந்திருக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் முடிவில் நேர்ந்த மோதலில் இறந்திருக்க வேண்டும். அல்லது யாதவர்களின் அட்டகாசம் தாங்காமல் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். நாட்டார் வழக்கின்படி இட்டுக்கட்டுபட்ட கதைகள், முடிவில் நம்ப முடியாத சம்பவங்களில் கொண்டு விட்டிருக்கும்.

****************************** அடுத்த இதழில் முடியும்

Series Navigation
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *