(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
52.அமெரிக்காவின் சிறந்த சிந்தனையாளராகத் திகழ்ந்த ஏழை……
(நிறைவுப் பகுதி)
வாங்க…வாங்க…இப்பத்தான் ஒங்களப் பத்தி நெனச்சேன் …அடுத்த நிமிஷத்துல நீங்களே வந்து நிக்கறீங்க… என்னங்க அது கையில ஒரு புத்தகத்த வச்சிப் படிச்சிக்கிட்டு வர்ரீங்க…இங்க கொடுங்க நான் பாத்துட்டுத் தர்ரேன்…என்னது நீங்களே படிச்சிச் சொல்றீங்களா… சரி… சரி சொல்லுங்க…..
“இயற்கையையும் வாழ்க்கையையும் நமக்கு மகிழ்ச்சியுள்ளதாக ஆக்கும் மனிதனே மனிதன்”
“வீடு தன்னைக் கட்டிய கொத்தனைத்தான் போற்றிப் புகழும்”
“உனக்குப் பின்னால் வருவோர்க்குக் கதைவைத் திறந்து விடுபவனாக இரு. இந்தப் பிரபஞ்சத்தைக் குருட்டுப் பாதையாக்கி விட முயலாதே!”
இருங்க…இருங்க…இந்தத் தத்துவக் கருத்துக்களையெல்லாம் யாருங்க சொன்னாங்க…
என்னது நான் போனவாரம் கேட்டதற்குரிய விடை இதுதாங்குறீங்களா…? அப்ப யாருன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா….அடடே சரியாச் சொன்னீங்க…இந்த மாதிரி தத்துவக் கருத்துக்களைச் சொன்னவரு அமெரிக்காவின் சிறந்த சிந்தனையாளராகத் திகழ்ந்த எமர்ஸன் தான்… அப்ப அவரப் பத்தி ஒங்களுக்குத் தெரியும்னு சொல்லுங்க…என்னது அவரோட தத்துவங்களப் பத்தித்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சதா….? அவரப்பத்தி முழுமையான தகவல்கள் வேணுமா…? நானே அவரப்பத்தி விரிவாச் சொல்றேன் கேட்டுக்கோங்க…என்ன சரியா….
வறுமையில் பிறந்த மேதை
உலக வரலாற்றை எழுதுபவர்கள் உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டைப் பொன்னெழுத்துக்ளில் பொறிக்க வேண்டும். ஏன்னா பத்தொன்பதாம் நூற்றாண்டின் வரலாற்று நிகழ்ச்சிகளைப் போன்று உலகம் அதற்கு முன்பு எப்போதும் காணவுமில்லை. பெருமைப்பட்டுக் கொண்டதுமில்லை…
இந்தியாபில் காந்தியையும்(1869-1948), இரவீந்திரரையும்(1861-1941), பாரதியையுமட்(1882-1921), பிறப்பித்தது. இங்கிலாந்தில் ஜான் ஸ்டூவர்ட்மில்லையும்(1806-
“மனிதர்கள் பேராசையினில் சுய நலத்திற்காகப் பாடுபடும்பொழுது அறிஞர்கள் தனித்து நின்று உலக நன்மைக்காகப் பாடுகபடுகின்றனர்” என்ற கீதையின் உபதேசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்தான் எமர்ஸன்.
1803-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் நாள் வில்லியம் எமர்ஸன், ரூத்ஹஸ்கின்ஸ் ஆகியோரது மகனாக பாஸ்டனில் எமர்ஸன் பிறந்தார். பெற்றோர் அவருக்கு ரால்ப் வால்டோ எமர்ஸன் என்று பெயர் சூட்டினர். ரால்ப் வால்டோ என்பதுதான் பெயர். எமர்ஸன் என்பது அவரது குடும்பப் பெயர். இக்குடும்பப் பெயரே இறுதியில் நிலைத்துவிட்டது.
சாதாரண எளிய குடும்பததில் எமர்ஸன் பிறந்தார். அவரது குடும்பம் படுமோசமான மதவைராக்கியமும் வைதீகத் தன்மையையும் கொண்ட குடும்பமாகத் திகழ்ந்தது. தெய்வ நம்பிக்கையும் கட்டுச் செட்டான எளிய வாழ்க்கையும் கொண்டவர் எமர்ஸனின் தந்தை. அவர் பாட்டன் ஒருவர் “தன் சந்ததியினரில் யாரும் பணக்காரனாகாதிருக்க அருள் செய்யும்படி ஆண்டவனிடம் பிரார்த்தித்தாராம். ஏனென்றால் செல்வச் செருக்கால் தீமை புரிவதை வாழ்க்கையில் தன் சந்ததியினர் குறிக்கோளாகக் கொண்டுவிடுவாரோ என்று அஞ்சும் உள்ளம் படைத்த அறிவோனின் பரம்பரையில் வந்தவர்தான் எமர்ஸன்.
கார்க்கிக்கு அன்பிஸா கிடைத்ததைப் போன்று எமர்ஸனுக்கு அவனது அத்தை மேரிமூடி கிடைத்தாள். எமர்ஸன் பிறந்தபோது அவளுக்கு வுமார் முப்பதுவயதுதானிருக்கும். அவளுக்கு அவளது சகோதரன் வில்லியம் எமர்ஸனிடம் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவளை வில்லியம் தனது வீட்டில் மகிழ்ச்சியாகவே வரவேற்பார். அவளுக்கு குழந்தை எமர்ஸனிடம் அளவு கடந்த அன்பு. அவளே எமர்ஸனை அன்புடன் பேணி வளர்த்து அறிவூட்டிய அறிவுச் செல்வி எனலாம்.
ரால்ப் வால்டோ எமர்ஸன் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது வெளியில் யாருடனும் சேரமாட்டார். அவர் தாய் ரூத்தான் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதில் அதிக கவனம் எடுத்து வந்தாள். அவள் எமர்ஸனை வெளியில் போய் விளையாடச் சொன்னால் தீய குழந்தைகளுடன் சேர்ந்து அவரும் தீயவராகிவிடுவார் என்று அஞ்சி தெருவில் போய் விளையாடக்கூட அனுமதிக்கமாட்டாள். அத்தகைய கடும் கட்டுப்பாட்டுக்குள் வாழவேண்டியவராக இருந்தார் எமர்ஸன்.
எமர்ஸன் கண்ட இருள் உலகம்
எமர்ஸன் பெர்றோர்களின் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடந்தாலும் அவர் சிறுவயதிலேயே மிகுந்த துன்பங்களுக்கு ஆளாகிவிட்டார். அவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது அவரது மூத்த சகோதரன் ஜான்கிளார்க் எமர்ஸன் இறுந்து போனான். அதன்பின்னர் நான்கு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அவனது தந்தை வில்லியம்ஸ் எமர்ஸன் இறந்தார். இவ்விறப்பு எமர்ஸனின் குடும்பத்தைத் துன்பக் குழிக்குள் அழுத்தியது. எமர்ஸனின் தந்தையார் இறந்தபோது எமர்ஸனுக்கு எட்டுவயது.
தந்தையின் அகால மரணம் அப்பொழுது எமர்ஸனுக்குத் துக்கத்தைத் தரவில்லை. அவரும் பத்துவயதான அவரது சகோரதரன் வில்லியமும் சவஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றனர். வில்லியம் எமர்சன் இறந்த அதே ஆண்டில் எமர்சனின் தாய் ரூத் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு மேரி காரோலைன் எமர்ஸன் என்று பெயரிட்டு எமர்சனது தாய் வளர்த்தாள். அந்தோ பரிதாபம்! அக்குழந்தையும் மூன்றுவருடங்கள் இருந்துவிட்டு இறந்துவிட்டாள். இறப்புத் துன்பம் எமர்சனையும் அவரது குடும்பத்தையும் துரத்தியது.
குடும்பத் தலைவனை இழந்த நிலையில் எமர்சனது குடும்பம் தலைவனில்லாக் கப்பலைப் போன்று தத்தளித்தது. வில்லியம் எமர்சன் இறந்தவுடன் அவர் மதபோதகராகஇருந்து தொண்டாற்றிய தேவாலயம் அவரது குடும்பத்திற்குத் தற்காலிக உதவியாக வாரத்திற்கு 25 டாலர்கள் கொடுத்து வந்தது. அதன் பின்னர் ஆண்டு ஒன்றிற்கு 500 டாலர்கள் வீதம் ஏழு ஆண்டுகள் கொடுத்துவந்தது. ஓராண்டு மட்டும் அத்தேவாலயத்திற்குச் சொந்தமான வீட்டில் தங்க அனுமதித்தது.
இந்த உதவியைத் தவிர குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு வேறு கதி ஒன்றும் இல்லை. எமர்ஸனின் தாய் மிக்க சிக்கனமாகவே குடும்பம் நடத்தினாள். அவள் என்னதான் கட்டுச்செட்டாகக் குடும்பம் நடததினாலும் அந்தச் சொற்ப வருவாயைக் கொண்டு அவர்களால் குடும்பம் நடத்த முடியவில்லை. அவள் பலரிடமும் உதவி கேட்டாள். யாரும் உதவ முன்வரவில்லை. கான்கார்டுக்குப் போய் தன் பாட்டனிடம் தனது நிலையை எடுத்துக் கூறினாள் எமர்ஸனின் தாய். அவளது கண்ணீர்க் கதையைக் கேட்ட அவர் அவளின் குழந்தைகளுள் ஒன்றை மட்டும் தன்னிடம் அனுப்பிவிடுமாறு கூறினார். அதன்படி எமர்சனை அவரது தாய் பாட்டனிடம் வளர்க்குமாறு அனுப்பிவிட்டு வந்தாள்.
அப்போதும் எமர்சனின் குடும்பம் வறுமையிலிருந்து விடுபடவில்லை. அவரது குடும்பத்தை வறுமை துரத்தியது. அக்குடும்பம் வறுமையிலிருந்து தப்பிப்பதற்கு வழியில்லாததால் வீட்டிலிருந்த இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை விற்றனர். ஒரு சில புத்தகங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அவ்வாறு விற்றும் குடும்ப வறுமை ஓயவில்லை. வறுமையின் கொடுமை தொடர்ந்தது. இந்நிலையில் எமர்சனின் அத்தை அக்குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தாள்.
வறுமையிலும் படித்தல்
எமர்சனை வறுமை நிலையிலும் அவரது தாய் அவரது ஒன்பதாவது வயதில் பாஸ்டனில் உள்ள பொது இலத்தின் பள்ளிக்குப் படிக்க அனுப்பினாள். அப்பள்ளியில் மாணவர்களை நிர்வாகம் கடுமையாகத் தண்டித்தது. எமர்சன் அப்பள்ளியில் படித்தபோது ஆசிரியரிடம் கடுமையாக அடிவாங்கினார். எமர்சன் பல நாள் பள்ளிக்கு வராது பிற பிள்ளைகளுடன் சேர்ந்து ஊர்சுற்றிவிட்டுக் கடற்கரைக்குப் போய் கிளிஞ்சல், வழங்கற்கள் ஆகியவற்றைப் பொறுக்கிக் கொண்டு வந்து விளையாடுவார்.
பள்ளியில் படிக்கும்போது எமர்சனுக்குப் போட்டுக் கொள்ளக்கூட ஒரு சட்டையில்லை. இருந்த ஒரே ஒரு சட்டையை அவரும் அவரது சகோதரனும் மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டு பள்ளிக்குச் சென்றனர். அதனைக் கண்டு மற்ற மாணவர்கள் அவர்களிருவரையும் கேலி செய்தனர். எமர்சனும் அவரது சகோதரரும் ஏழைகள் என்பதால் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் அவர்களுடன் சேர்வதில்லை. இந்த நிகழ்வு எமர்சனின் மனதில் பலவிதமான எண்ணங்களைத் தூண்டிவிட்டது. அவற்றை மனதிற்குள்ளேயே அடக்கிக் கொண்டு எமர்சன் படித்தார்.
இந்நிலையில் கோவிலுக்குப் புதிய மதபோதகர் வந்துவிட்டதால் வீட்டைக் காலிசெய்யுமாறு கோவில் நிர்வாகத்தினர் வற்புறுத்தினர். எமர்சனின் தாய் மீண்டும் தனது உறவினர்களிடம் கையேந்தி உதவி கோரத் தொடங்கினாள். யாரும் உதவி செய்யக் கூடிய நிலையில் இல்லை. இந்த நேரத்தில் உள்நாட்டில் போர்மேகங்கள் சூழ்ந்ததால் நிலைமை மிகவும் மோசமாகியது.
விலைவாசி உயர்வால் உதவியின்றித் தவித்த எமர்சன் குடும்பம் வாழ வகையின்றித் தவித்தது. இந்தச் சமயத்தில் எமர்சனின் மூத்த சகோதரனை மேல்ப்படிப்பிற்காகக் கேம்பிரிட்ஜுக்கு எமர்சனின் தாயார் படிப்பதற்கு அனுப்பினாள். அத்தனை துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு தனது குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மட்டும் அத்தாயார் தலையாய செயலாகக் கொண்டிருந்தாள்.
கேம்பிரிட்ஜ் போய்ச் சேர்ந்த எமர்சனின் மூத்த சகோதரன் அங்குள்ள நிலைமைகளை விளக்கமாகக் கடிதத்தில் விவரித்து எழுதினார். அதனைக் கண்ட எமர்சனின் தாய் கண்ணீர் வடிக்கவில்லை. தன் மகனை ஆசிர்வதித்து,
“மகனே உன்னிடம் எனக்கு நல்ல நம்பிக்கையுண்டு. உன் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் எஜமானன் நீதான். உன் பெயர் புகழ் சூடி வாழகின்ற காலம் முழுமையும் உயர்ந்த நிலையில் இருப்பதற்கு உன்னை நீ தயார் செய்து கொள்வாய் என்று எண்ணுகிறேன். துன்பங்களால் மனம் உடைந்து விடாதே மகனே!” என்று அறிவுரை கடிதம் எழுதினாள். எமர்சனின் மூத்த சகோதரன் அன்னையின் ஆணையைச் சிரமேற்கொண்டு பயின்றான்.
பாத்தீங்களா…! எமர்சனின் தாய் மிகச் சிறந்தவளாக விளங்கியதை….அதனாலதான் தாயைக் கடவுளாக எல்லா உயிர்களும் நெனக்குது…. தாய்மை எவ்வளவு உயர்ந்தது என்பதை எமர்சனின் தாயின் செயல்கள் நமக்குப் புலப்படுத்துதுங்க… எமர்சன் தனது சகோதரனைவிட மிகவும் நன்கு பயின்றார். அவர் 1817-ஆம் ஆண்டில் தனது 14-ஆவது வயதில் ஹார்வார்ட் கல்லூரியில் சேர்ந்து 1821-ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார்.
எமர்சனின் பள்ளி வாழ்க்கையும், கல்லூரி வாழ்க்கையும் மிதமிஞ்சிய வறுமையும் துன்பங்களும் நிறைந்ததாக இருந்தது. அவற்றையெல்லாம் அனுபவித்துக் கொண்டே எமர்சன் கல்வி கற்றார். கல்வித் தொடர்பான செலவுகளுக்காக நண்பர்களிடமும் தேவாலயங்களிலிருந்தும் உதவில் பல பெற்றார் எமர்சன். “எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு” என்பதற்கேற்ப துன்பங்களைப் பொருட்படுத்தாது எமர்சன் கருமமே கண்ணாகக் கொண்டு கல்வி பயின்றார்.
கைகொடுத்த காதல் திருமணம்
கல்வி கற்று முடித்த எமர்சன் தனது அண்ணன் நடத்தி வந்த பள்ளியில் அவருக்கு உதவியாக மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தினார். ஆனால் எமர்சனுக்கு அப்பணியில் மனம் செல்லவில்லை. மனமொப்பாமலேயே அப்பணியை எமர்சன் செய்தார். பட்டம் பெற்றும் எமர்சனைப் பார்த்து வாழ்க்கை கேலி செய்து கொண்டிருந்தது.
இருப்பினும் எமர்சன் மனம் தளராது வாழ்ந்தார். இந்நிலையில் இளமையின் வயத்திலிருந்த எமர்சன் தனது இருபத்தைந்தாம் வயதில் எல்லன் லூயிஸா தக்கர் என்ற அழகான பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். எமர்சனை மணந்த காதல் மனைவிக்கு அப்போது 17 வயது. அவள் மிகுந்த அழகானவளாகவும் அறிவாற்றலிலும் நற்குணங்களும் நிறைந்தவளாகவும் விளங்கினாள். அவர்களது முதல் சந்திப்பிலேயே அவர்கள் ஒருவர்பால் ஒருவர் காதல் கொண்டு விட்டனர்.
காதல், ஒருவனை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் வல்லமை உடையது. ஒன்றுமே இல்லாத ஏழையான எமர்சனை காதல் மிகுந்த உயரத்தை எட்டச் செய்தது. எமர்சனின் இதயத்தில் அழகு ராணியாகக் கொலுவீற்று அவனின் ஆத்மாவையே ஆட்டி வைக்கும் எல்லனின் உருவத்தைத் தவிர அவர் எங்கும் எதிலும் வேறொன்றும் காணமுடியாதபடி அக்காதல் செய்தது. காதல் அவரது உள்ளத்தே ஆயிரமாயிரம் பொற்கனவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தது. எமர்சன் அவற்றினைக் கவிதைகளாக எழுதி அதற்கு, ”கனவுகள்” என்று மகுடம் சூட்டினார்.
அந்தக் கனவில் “உலகம் அயர்ந்து தூக்கிக் கொண்டிருக்கும்போது அவர்கள் இருவர் மட்டும் தனித்திருக்கின்றனர். சலனமின்றி ஓகெ கொண்டிருக்கும் அகன்ற ஆற்றின்கரையினூடே அவர்கள் இன்பத்தில் திளைத்துப் போய் மெளமானச் செல்கின்றனர்.
காதல் எமர்சனைக் கவிஞனாக்கியது. அவர் தன் காதலியன் பொருட்டுப் பல காதற் கவிதைகளை எழுதினார். அவளுக்கும் பல காதற் கடிதங்கள் எழுதினார். அவரது ஒவ்வொரு கடிதங்களிலும் தனது காதலைப் பற்றி விவரித்தார். தனது காதலிக்கு,
“உன் காதலால் நான் மையலாகிவிட்டேன்!
“உன் பேரழகு என்னுள்ளத்தே
காதல் நேயை உண்டு பண்ணிவிட்டது!”
என்றெல்லாம் மனம் விட்டு கவிதைகள் எழுதினார் எமர்சன். ஆனால் அவரகளது காதல் தெய்வீகமானதாகும். அந்தக் காதலைப் பற்றி, “எங்கள் காதல் ஆத்மீகமானது. காதல் அவசியம்தான். நாங்கள் அநித்தியமான உடலழகைக் காதலிக்கவில்லை. ஆத்மீகப் பொருள்களையே நாங்கள் காதலித்து வந்தோம்” என்று எமர்சன் குறிப்பிடுகிறார்.
எமர்சன் தனது காதலியை மணந்ததால் அவர் பயனுள்ள மனிதனாக மாறினார். ஆம்! காதல் அவரை சமுதாயத்திற்குப் பயன் விளைவிக்கும் மனிதனாக ஆக்கியது. தனது காதல் மனைவிக்குப் பல்வேறு புதிய உடைகளையும் புதிய நூல்களையும் வாங்கிக் கொடுத்தார். தன் இளைய சகோதரனுக்கும் உதவி செய்து வந்தார். தானும் பல்வேறு நூல்களைத் தொடர்ந்து படித்தார்.
கோலோரிட்ஜின்,”நண்பனும் காம்பியின் மனித அமைப்பு விதிகளும்” எமர்சனுக்கு மிகவும் பிடித்த நூலாகும். அவர் அவற்றைப் படித்துவிட்டுத் தன் அத்தையுடனும், தன் சகோதரர்களுடனும் விவாதித்து அக்கருத்துக்களின் உண்மையை அறிய முயன்றார். இதற்கு அவரது காதல் மனைவி மிகுந்த உதவியாக இருந்தாள். அவள் எமர்சனுடன் எதிர்நின்று சரிக்குச் சரியாக விவாதிப்பாள். எமர்சன் கருத்துக்கள் சரியாக இருந்தால் அதனை ஏற்றுக் கொண்டு அவரைப் பாராட்டுவாள். இவ்வாறு இணைபிரியாத காதலர்களாக இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
விதியின் சதி
எமர்சன் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த வாழ்க்கையில் யார் கண்பட்டதோ தெரியவில்லை. அவர்களிருவரின் வாழ்விலும் விதி விளையாடத் தொடங்கியது. ஒன்றரை ஆண்டுகள்கூடச் சரியாக நிறைவடையவில்லை. எமர்சனின் காதல் மனைவி காசநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டாள். எமர்சன் காதல் மனைவியைக் காப்பாற்றப் பெரிதும் போராடினார். எவ்வளவு பெரிய சிகிச்சைகள் செய்தாலும் அவரால் அவரது மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை. 1831-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் நாள் எமர்சனை இவ்வுலகில் தவிக்கவிட்டுவிட்டுச் விண்ணுலகடைந்தாள். எமர்சன், எல்லன் காதல் வாழ்க்கையைக் காலன் துண்டித்தான்.
தனது காதல் மனைவியின் பிரிவால் எமர்சன் ஏங்கித் தவரித்தார். அவருக்கு உயிர் வாழ்வதே மிகவும் துன்பமாக இருந்தது. அவளை அவளது விருப்பப்படியே ராக்ஸ்பரியில் அவளது தந்தையின் கல்லறைக்குப் பக்கத்தில் அடக்கம் செய்தார்கள். எமர்சன் நீண்ட காலம்வரை ஒவ்வொரு நாள் காலையிலும் காதல் மனைவியின் கல்லறையின் முன் போய் நின்று தன் காதல் மனைவியை வழிபட்டு வந்தார்….
பாத்துக்கோங்க……. எவ்வளவு உயர்ந்த பண்பாளராக விளங்கினாருன்னு… விரும்பிய காதல் வாழ்க்கை அமைந்துவிட்டால் அதுமாதிரி சொர்க்கம் ஏதுமில்லைங்க…அதைவிட அது அழியறபோது ஏற்படுத்துற வலி தாங்க முடியாதுங்க….அந்த வலிதான் எமர்சன மிகப்பெரிய சிந்தனாவதியாக ஆக்கிவிட்டதோன்னு நமக்கு எண்ணத் தோணுதுங்க….. இளமையிலிருந்தே துன்பத்திற்குள்ளான எமர்சன் சிறிது காலம்தான் சொர்க்கத்தை அனுபவித்தார். அடுத்த கட்டத்தில் அவர் நரக வேதனைகளுக்கு ஆளானார்….இதுதான் விதி என்பது….
சிந்தனையாளர் எமர்சன்
இதய அரசியான எல்லனின் பிரிவு எமர்சனைத் மீளாத் துயரத்தில் மூழ்கடித்துவிட்டது. அவனது சிந்தனைகள் எல்லனைப் பற்றியே சுழன்று கொண்டு வந்தது. அவர் மதபோதகராக இருந்து பணி செய்வது பிடிக்காததாக இருந்து வந்தது. அப்பணியில் அவர் மனம் ஒட்டவில்லை. தத்துவ ஆராய்ச்சிகளில் எமர்சன் தனது மனத்தைத் திருப்பினார். தனது சகோதரனுக்கு, “நான் அற நூல்களின் உண்மைகளை அறிய முயன்று கொண்டிருக்கின்றேன். அவைதான் நான் பிறந்தது முதல் இந்நாள்வரை என்னை எப்போதும் மயக்கிக் கொண்டு வருகின்றது….” என்று தனது மனநிலையை விவரித்துக் கடிதம் எழுதினார்.
எமர்சன் முழுநேரமும் மதபோதகராகவே இருந்தார். அவ்வாறிருந்தாலும் குருட்டுத்தனமான போக்குகளுக்குத் தலையாட்டும் பொம்மையாக அவர் இருக்கவில்லை. சமயச் சொற்பொழிவுகளின்போது வழக்கமாகக் கூறும் உரைகளுடன் அவவப்போது அவர் உள்ளத்தில் தோன்றும், “நன் மனிதன் தன்னையே வணங்குவான். தன் மனச்சான்றை வணங்குவான்” என்பன போன்ற உண்மைகளையும் சேர்த்து சமயக் கூட்டத்தாரிடையே சொல்வார். தனது ஒவ்வொரு சொற்பொழிவிலும் எமர்சன் தன்னம்பிக்கையைப் பற்றி அதிகம் வலியுறுத்திக் கூறுவார்.
இவரது புதிய கருத்துக்கள் மற்ற மதகுருக்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் எமர்சன் தனது கருத்துக்களைத் துணிந்து கூறி வந்தார். அவருக்கு மதபோதகராக இருக்கப் பிடிக்கவில்லை. மனைவி இறந்த ஒரு ஆண்டு காலத்திற்குள்ளாகவே அவரது மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
மதபோதகர் பணியை விட்டுவிட எமர்சன் துணிந்தபோது அவரது அத்தை மேரிமூடி தடுத்தார். ஆனால் எமர்சனது கருத்து அதற்கு மாறாக இருந்தது. “இந்தத் தொழில் பழைமையாகி விட்டது. இந்தப் புதிய சகாப்தத்திலேயும் கூட நாம் நம் மூதாதையர்களைப் போன்று செத்துப்போன சம்பிரதாயங்களுக்குப் வழிபாடு செய்து வருகின்றோம்” என்று எமர்சன் நினைத்தார். கவிஞர் கோல்ரிட்ஜின் விமோசனத் தத்துவமும் கலைஞர் ஸ்வீடன் பரக்கின் அற்புதக் கண்ணோட்டமும் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த்தின் ஞான ஒளிவீசும் கவிதைகளும் அறிஞர் கார்லைலின் நூல்களும் எமர்சன் உள்ளத்தைப் பெரிதும் பண்படுத்தின.
இந்நிலையில் அறிஞர் கார்லைல் எழுதிய கட்டுரை ஒன்று எமர்சனுக்குப் படிக்கக் கிடைத்தது. அதில் இடம்பெற்றுள்ள, “மனசாட்சிக்கு விரோதமாக எந்த ஒரு காரியமும் செய்வது நல்லதுமல்ல. விவேகமுமல்ல. நான் அப்படித்தான் நடக்கின்றேன். மனசாட்சிக்கு விரோதமாக நான் ஒன்றும் செய்ய மாட்டேன். ஆண்டவன் எனக்கே துணைபுரிவாராக” என்ற வாசகத்தை எமர்சன் தனது நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக் கொண்டார். அவர் மேலும் துணிந்து தன் சிந்தனைகளை வெளியிடத் தொடங்கினார்.
இதனால் வைதீகமத குருமார்கள் எமர்சனை வெறுக்கத் தொடங்கினர். இதனால் எமர்சன் பிடிக்காத மதபோதகர் பணியை உதறிவிட்டு 1832-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிப் பார்த்து தன் மனங்கவர்ந்த அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் எமர்சன் கண்டு உரையாடினார். லண்டன் மாநகரத்திற்குச் சென்று கவிஞர் கோல்ட்ரிட்ஜையும் வேர்ட்ஸ்வொர்த்தையும் சந்தித்து அவர்களது நட்பையும் அன்பையும் பெற்றார்.
அமெரிக்கர்கள் நீக்ரோக்களை அடிமைப்படுத்துவதை எமர்சன் எதிர்த்தார். நீக்ரோக்களின் விடுதலைக்குப் பாடுபடும் இயக்கங்களுடன் அவரும் சேர்ந்து அருந்தொண்டாற்றினார். ஆனால் அந்த ஒரு போராட்டமே அவரது வாழ்வின் குறிக்கோளாக இருந்துவிடவில்லை. “அந்த நீக்ரோக்களைக் காட்டிலும் படுமோசமான வேறு அடிமைகள் உள்ளனர். அவர்களையே நான் விடுவிக்க வேண்டும் என்பதை நான் உணர்வேன். சிறைப்பட்டுக் கிடக்கும் சிந்தனைகளும் ஆத்ம உர்ச்சிகளுமே அவர்கள்பால் மக்காளட்சிக்கு மிக முக்கிமானவர்கள். அவர்கள்பால் அன்புள்ளவர்களில்லை. அரைகளைப் பாதுகாப்பவர்கள் இல்லை. அவர்களுக்குக் காவற்காரர்கள் யாருமில்லை. ஆனால் நான் தான்” என்றுதம் உள்ளக் கருத்தைத் தயங்காது எமர்சன் கூறினார்.
மறுமணம்
ஐரோப்பியச் சுற்றுப் பயணத்திற்கப் பின்னர் ஓராண்டு காலம்வரை எமர்சனின் வாழ்க்கை ஓரிடத்திலும் நிலையில்லாதவாறு இருந்தது. அவரது அன்னையார் அப்போது நியூடோன் அருகில் வசித்து வந்தார். அவர் பாஸ்டனில் தம் இருப்பிடத்தை ஒவ்வொருஇடமாக மாற்றிக் கொண்டே இருந்தார். இதற்குச் சுற்றுப் பயணத்தால் ஏற்பட்ட கடன் தொல்லைகளே காரணமாகும். கடன்காரர்கள் தொல்லைகள் கொடுக்கவே தன்னுடைய வீட்டில் இருந்த தளவாடப் பொருட்களை விற்றுக் கடன்களைத் தீர்த்தார்.
ஐரோப்பிய நாடுகளில் தாம் கண்ட அனுபவங்களின் பயனாக எமர்சன் “இயற்கையின் பயன்கள்” என்ற பொருள் குறித்து சொற்பொழிவாற்றினார். அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில் மனிதனுக்கும் உலகிற்கும் உள்ள உறவைப் பற்றி ஒரு சொற்பொழிவினையாற்றினார். அதன் பின்னர் 1834-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் நாள் பாஸ்டன் மெக்கானிக் இன்ஸ்டியூஷன் எனும் நிறுவனத்தில் “தண்ணீர்” என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவாற்றினார். அதனை அடுத்து மே மாதம் பாஸ்டன் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் ஆண்டு விழாவின்போது அறிவியல் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
ஒருநாள் பாஸ்டன் தேவாலயத்தில் எமர்சன் சொற்பொழிவாற்றினார். அவரது சொற்பொழிவில் மனதைப் பறிகொடுத்த லைடியா ஜாக்சன் என்ற பெண் அவரைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டாள். அதன் பின்னர் 1834-ஆம் ஆண்டு ஒரு நாள் அவளின் சொந்த ஊரான பிளைமவுத்தில் அவரது சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தது.
எமர்சன் பிளைமவுத்தில் தளபதி ரசல் வீட்டில் தங்கியிருந்தார். அப்பொழுது ரசலின் குழந்தைகள் அவருடன் நன்கு நெருங்கிப் பழகினர். அக்குழந்தைகள் லைடியாவுக்கு நெருங்கிய நண்பர்களாவர். இதனால் அவள் எமர்சனை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தனர்.
எமர்சன் மீண்டும் பிளைமவுத்திற்குச் சென்று சொற்பொழிவு ஒன்றினை நிகழ்த்தச் சென்றபோது லைடியாவிற்கு அவர் கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தைக் கண்ட லைடியாவும் கடிதம் எழுதினாள். லைடியா எமர்சனைவிட எட்டுமாதங்கள் மூத்தவளாக இருந்தாள். இருப்பினும் இருவரும் ஒத்த அன்புடையவர்களாக இருந்ததால் காதல் கனிந்து அவர்களிருவருக்கும் திருமணம் நடந்தேறியது.
திருமணம் முடிந்த பின்னர் எமர்சன் அவளது பெயரை லிதியா என்று திருத்தி வைத்தார். அவள் அவர்மீது அளவற்ற அன்பைப் பொழிந்தாள். அவள் சிறந்த பெண்ணரசியாக எமர்சனுக்கேற்ற இல்லத்தரசியாகத் திகழ்ந்தாள். லிதியா எமர்சனுடன் ஐம்பத்தேழு ஆண்டுகள் கான்கார்டில் வாழ்ந்தாள்.
எழுத்தாளர் எமர்சன்
கான்கார்டு என்பது மிக்க அழகிய கிராமம். அது பாஸ்டன் நகரத்தின் ஒரு பகுதியாகவே நினைக்கத் தோன்றும் அளவிற்குச் சிறந்து விளங்கியது. அக்கிராமத்தில் எமர்சன் தனது மனைவியுடன் இனிமையாக வாழ்ந்தார். 1841-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று தம் கட்டுரைகளை வனாந்தரக் கட்டுரைகள் என்ற தலைப்பில் மார்ச் மாதம் முதன் முதலில் புத்தகமாக வெளியிட்டார்.
1847-ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக எமர்சன் ஐரோப்பிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு 1848-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் தாயகம் திரும்பி வந்தார். இந்நிலையில் தாம் பெற்ற பிள்ளை எமர்சன் உலகம் புகழும் அறிஞனாகத் திகழ்வதைக் கண்டு பெருமகிழ்ச்சியுடன் அமைதியுடன் வாழ்ந்து வாந்த எமர்சனுடைய தாய் ரூத் 1853-ஆம் ஆண்டின் இறுதியில் தனது 84-ஆவது வயதில் திடீரென்று இறந்துவிட்டாள். எமர்சனுக்கு இது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
எமர்சனின் நூல்கள்
எமர்சன் எழுதிய நூல்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் தொகுத்து 12 தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். எமர்சனின் முதல் நூல் இயற்கை என்பதாகும். எமர்சன் எழுதிய கட்டுரைகளின் முதல் தொகுதி 1841-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இரண்டாவது தொகுதி 1844-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.முதல் தொகுதியில் வரலாறு, தன்னம்பிக்கை, பரிகாரம், ஆத்மீகச் சட்ங்கள், அன்பு, நட்பு, விவேகம், வீரம், பரமாத்மா, வட்டங்கள், அறிவுடைமை, கலை ஆகிய 12 பொருள்கள் பற்றிய 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவது தொகுதியில் கவிஞன், அனுபவம், குணம், பழகும் முறைகள், வெகுமதி, இயற்கை, அரசியல், யதார்த்தவாதியும் சம்பிரதாயவாதியும், புதிய இங்கிலாந்தின் சீர்திருத்தக்காரர்கள் ஆகிய 9 பொருள்கள் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
1850-ஆம் ஆண்டில் பிரதிநிதித்துவ மனிதர்கள் அல்லது மனிதப் பிரதிநிதிகள் என்ற நூல் வெளிவந்தது. 1856-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் நாளன்று ஆங்கிலேயர் தன்மைகள் என்ற நூல் வெளிவந்தது.1871-ஆம் ஆண்டில் தனிமையும் சமூகமும் என்ற நூல் வெளிவந்தது. இந்நூல்கள் மனிதகுல மேம்பாட்டிற்கு உதவும் ஏணிப்படிகளாக விளங்குகின்றன.
வீட்டில் தீ
எமர்சனுடைய அறிவாற்றலைக் கண்ட ஹார்வார்ட் பல்கலைக்கழகம் எமர்சனுக்கு டாக்டர் ஆப் லாஸ் என்ற கெளரவப் பட்டத்தை வழங்கியது. அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயி தத்துவக் கழகம் எமர்சனுக்கு மிகச் சிறப்பான வரவேற்பளித்தது. அதன் பின்னர் சில மாதங்களுக்குப் பின்னர் எமர்சனின் மே தினம் உள்ளிட்ட கவிதைகள் நூலாக வெளிவந்தது.
எமர்சன் ஒருபோதும் தனது சுதந்திரப் போக்கை விட்டுக் கொடுத்து விடவில்லை. அவர் தம் சிந்தனைகளைப் பறைசாற்றப் பயப்படவுமில்லை. மூட நம்பிக்கைகளையும் மதக்கோட்பாடுகளையும் எதிர்ப்பதைத் தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டார் எமர்சன்.
1872-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24-ஆம் தேதி காலை எமர்சன் தனது படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீடு தீப்பற்றிக் கொண்டது. அந்தத் தீயின் சப்தத்தைக் கண்டு எமர்சன் திடுக்கிட்டு எழுந்தார். அந்தச் சத்தம் அப்போது அவருக்கு மழை பெய்யும் சத்தத்தைப் போன்று கேட்டது. அவர் அறைக்குள்தான் மழைபெய்கிறதோ என்று ஒரு கணம் நினைத்தார். அதன் பின்னர் தான்தமது இல்லம் தீப்பற்றி எரிவது அவருக்குத் தெரிந்தது.
அத்தருணத்தில் அவரது மகள் எல்லன் வெளியே சென்றிருந்தாள். அவரது மனைவி லிதியா வெளியில் ஓடிவந்து உதவி கோரினாள். எமர்சனும் வெளியில் ஓடிவந்தார். பின்னர் வீட்டிற்குள் ஓடிச் சென்று தாம் எழுதி வைத்திருந்த கையெழுத்துப் பிரதிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடிவந்தார். மற்றவர்கள் வந்து மற்ற பொருள்களை தீக்கிரையாகாது எடுத்தனர். பலரும் அந்நிகழ்விற்காக வருந்தினர். எமர்சன் காப்பீடு செய்திருந்ததால் அந்தத் தொகை அவருக்குக் கிடைத்தது. அத்தொகை யானைப் பசிக்குச் சோளப் பொறி போன்றிருந்ததால் எமர்சன் மிகுந்த துயருற்றார்.
பலரும் உதவிகள் செய்தாலும் அச்சம்பவம் அவரது உள்ளத்தைக் கெடுத்ததோடல்லாமல் உடல் நலத்தையும் கெடுத்தது. அந்த நிலையிலும் அவர் ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொள்ள விழைந்தார். 1872-ஆம் ஆண்டில் அவர் இங்கிலாந்துக்கு மூன்றாவது முறையாகப் பயணம் செய்தார். இத்தாலி, எகிப்து, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் அமெரிக்க மேதையான எமர்சன் பயணித்துச் சொற்பொழிவுகள் ஆற்றினார்.
சிந்தனையாளரின் இறுதிநாள்கள்
பல நாடுகளையும் சுற்றிப் பார்த்துவிட்டுத் தாயகம் திரும்பிய எமர்சனை பாஸ்டன் நகரில் உள்ள கான்கார்டு கோவில் மணிகள் 15 நிமிடங்கள் சேர்ந்தாற்போன்று அடிக்கவும் அங்கிருந்து அவர் கான்கார்டுக்குப் புறப்பட்டு வரும் வண்டியைப் பற்றியும் மணிகள் அடித்து மக்களுக்கு அறிவிக்கத் திட்டமிட்டிருந்தனர்.
புகைவண்டி நிலையத்தில் எமர்சனை வரவேற்க மக்கள் அதிகளவில் கூடிவிட்டனர். அவ்வளவு மக்கள் கூட்டத்தைக் கண்ட எமர்சனின் மகள் எல்லன் வியப்புற்றாள். பள்ளிச் சிறுவர் சிறுமியரும்கூட கூட்டத்தில் நிறைந்து காணப்பட்டனர்.
குழந்தைகள் வாழ்க தாயகம் என்ற வரவேற்புப் பாடலைப் பாடினர். கூட்டம் புகைவண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டு ஊர்வலமாகச் சென்றது. அவர்களிடம் எமர்சன் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குள் சென்ற பின்னரும் நேடுநேரம் வரையிலும் கூட மக்கள் அவ்விடத்தைவிட்டுக் கலைந்து செல்லவில்லை. எமர்சனுடைய இல்லத்தை அவர்கள் அனைவரும் வணங்கிச் சென்றனர்.
1874-ஆம் ஆண்டு எமர்சன் தனது கடைசி மகன் எட்வர்ட்டுக்கு அன்னிகீயஸ் என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார். எமர்சனுக்கு 70 வயதுக்கு மேலும் ஆனது. அவ்வளவு வயதிலும் எமர்சன் பொதுநலத்தொண்டைத் தொடர்ந்து செய்து வந்தார். ஹார்வார்டில் உள்ள இறந்த இராணுவ வீர்களின் குடும்பங்களுக்கு நிதி வசூலித்து உதவிகள் பல செய்தார். கல்லூரிகளுக்கும் நன்கொடைகள் வழங்கினார்.
அவரால் முன்போல எழுத முடியவில்லை. எமர்சனின் சிந்தனைகள் உலகம் எங்கும் பரவி ஒளிர்ந்தன.ஜெர்மன் நாட்டுப் பத்திரிக்கைகள் அவரது புகைப்படங்களை வெளியிட்டு அவரது தத்துவத்தையும் அவரைப் பற்றியும் புகழ்ந்து எழுதின. அவரது நூல்கள் ஆங்கிலம், பிரெஞசு, டேனிஷ் ஸ்வீடிஸ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.
1880-ஆம் ஆண்டின் இறுதியில் எமர்சனின் உடல்நலம் குன்றத் தொடங்கியது. எமர்சன் சிறிது நேரம் தொடர்ந்தாற் போன்று பேசுவதற்குக்கூட ஆற்றலற்றவரானார். அந்நிலை ஏற்படுவதற்கு முன்னதாகவே அவர் தாம் செய்ய வேண்டிய செயல்களை ஒன்றையும் மறவாது செய்தார். தம் சொத்துக்களைத் தம் மனைவிக்கும் தம் பிள்ளைக்கும், இரு பெண்களுக்குமாகப் பரித்து எழுதி வைத்தார். அச்சொத்துக்கள் மனைவி லிதியாவின் மேற்பார்வையிலிருந்து வருவதென்றும் அவளுக்குப் பின்னர் மகள் எல்லன் மேற்பார்வையிலிருந்து வருவதென்றும் 1876-ஆம் ஆண்டிலேயே உயில் எழுதி வைத்துவிட்டார்.
1881-ஆம் ஆண்டில் அந்த உயிலில் மேலும் சில திருத்தங்களைச் செய்தார். எமர்சனின் இறுதி நாளன்று கூட அவர் படுத்த படுக்கையாகக்கூடக் கிடக்கவில்லை. நெருப்பின் அருகில் அவர் குளிர் காய்ந்து கொண்டு அமர்ந்திருந்தார். சாவு அவருக்கருகிலிருந்து குடைபிடித்துக் கொண்டிருப்பதை அவரது மனைவியோ, மகனோ, மகளோ மற்றவர்களோ அறியவில்லை. எமர்சன் இயற்கை தேவனான எமனைக் கண்டு கொண்டார். 27.08.1882-ஆம் நாளன்று இரவு ஒன்பது மணிக்கு எமர்சன், எமன் என்ற இயற்கையோடு இரண்டறக் கலந்தார்.
அவரது இறப்பை அறிவிக்கத் தேவாலயத்தின் மணிகள் 79 முறை ஒலித்து. அந்த மாக சிந்தனையாளரின் மரணச் செய்தியைக் கேட்டு வானமே துன்புற்றதைப் போன்று மழை பொழிந்தது. அந்த உயர்ந்த சிந்தனையாளரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் நாலா திசைகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் வந்து குவிந்தனர். அவர் உடல் யூனிட்டேரியன் சர்ச்சில் உயர்ந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மற்றவர்களின் மேம்பாட்டிற்காக அல்லும் பகலும் பாடுபட்ட உன்னதச் சிந்தனையாளரான எமர்சன் அருவமாக இன்றும் அவரது சிறந்த கருத்துக்களின் வாயிலாக வாழ்ந்து கொண்டே இருக்கின்றார். உலகம் உள்ளளவும் அவர் மக்களின் இதயங்களில் என்றென்றும் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
“அடிமைத்தனமே இருக்கக் கூடாது. அதனால் தீண்டப்படும் ஒவ்வொன்றும் நஞ்சாய் நாசமடையும்!”
“உடல் அழகு அழிகிறது அல்லது மறைகிறது. அறிவின்அழகு கால நிலைகளையும், வயதையும் பொறுத்தது. அதன் மதிப்பில் குறுகி நிற்கிறது. ஆந்தத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் உடையதாக இருக்கிறது. ஆனால் ஒழுக்கத்தின் அழகோ கவர்ச்சிகரமானது. அழிவற்றது. பரிபூரணமானது!”
“உள்ளுணர்ச்சியின் உத்வேகமின்றி எதையும் யாரும் உருவாக்க முடியாது”
“கற்பனை என்பது எல்லா அம்சங்களிலும் உட்புகுந்து வாழ்வை உன்னதமாக்குகிறது”
“கடவுளை வெளியுலகத்தில் எங்கும் காண முடியாது! நம் வீட்டிற்குள்தான் அவன் எப்போதும் வாசம் செய்கிறான்!”
இவையெல்லாம் எமர்சனுடைய உயர்ந்த சிந்தனைகள்…இந்தச் சிந்தனைகள் உலகை விழிப்படையச் செய்தன..ஒங்களுக்குள்ளும் இவை ஒரு மாற்றத்தைச் செய்யும்… எமர்சனோட வாழ்க்கை நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உந்து சக்தியா இருந்து வழிகாட்டுது..
வறுமையை நினைச்சு மூலையில முடங்கிப் போகாம எமர்சன் பல அறிஞர்களோட நூல்களைப் படிச்சிக்கிட்டே இருந்தாரு. வறுமைக்கு வறுமையக் கொடுத்தாரு…உலகமே போற்றுகின்ற உயர்ந்த சிந்தனையாளரா ஆனாரு…இதுக்கெல்லாம் அவரோட உழைப்பும் விடாமுயற்சியும்தான் காரணம். எனக்கு,
“வறுமை நிலைக்குப் பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே”
அப்படீங்குற பட்டுக்கோட்டையாரின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வருது.
உங்களுக்குள்ளே பல திறமைகள் ஒழிஞ்சிக்கிட்டு இருக்குது..அவற்றைக் கண்டுபிடிச்சி வெளியில கொண்டாங்க…அந்தத் திறமைதான் ஒங்களோட செல்வம்…ஒங்கள ஒலகத்துல உயர்த்தும் கருவி…அதனைப் புரிஞ்சுக்கோங்க…
ஏதோ ஒரு முக்கியமான காரணத்துக்காகத்தான் இறைவன் உங்களைப் படைச்சிருக்காரு…உங்க மூலமா சில சிறந்த செயல்களைச் செய்யப் போறாரு. இதுதான் உண்மை. அந்த நல்ல செயல்களுக்கு உங்கள நீங்கத் தயார்ப்படுத்திக்கோங்க… வாழ்க்கை வசந்தமா மாறும்…
“வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு”
இந்தக் கருத்தை மனசுல வச்சுக்கோங்க… என்ன சரியா…..?
வறுமை கனவுகளை சிதைக்கும். ஆனால் அதனைக் கண்டு நீங்கள் துவண்டு விடாதீர்கள். மாறாக கடின உழைப்பினால் மீண்டும் பலருக்கு அந்த கனவுகளை நீங்கள் ஏற்படுத்த கூடும் !!
வறுமையால் பண்பட்டு மேலே வந்தவனே உண்மையில் வாழ்கையை உண்மையாக வாழ்ந்தவனாகிப் போகின்றான்! அவனுக்கு வாழ்கையின் வலியும், உழைப்பின் அர்த்தமும் தெரியும்! வளரும் பருவத்தில் வறுமை கொடியது எனினும் அது பல வரலாற்றுச் சாதனையாளர்களை உருவாக்கிக் கொடுத்துச் சென்றுள்ளது.
“உழைப்பு…!
ஒழுக்கம்..!
தன்னம்பிக்கை..!
சோதனையிலும் மனம் தளராத நிதானம் (பொறுமை) ..!
விடாமுயற்சி….!”
இவை எல்லாம் வறுமை எனும் நோய்க்கு மருந்தாகும்.
இந்த 52 வாரமா நான் ஒங்களோட பயணிச்சிருக்கேன்… பல மேதைகளின் வாழ்க்கைய தெரிஞ்சிக்கிட்டோம்.. இவை நம் வாழ்க்கைப் பயணத்துல ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும்….. இவங்க மட்டுமில்ல இன்னும் எத்தனை எத்தனையோ அறிஞர்கள் சமுதாயப் புரட்சியாளர்கள் இந்த மாதிரி நெறையப் பேரு இருக்காங்க…. அவங்களோட வரலாற்றையெல்லாம் நீங்களாத் தேடிப் படிச்சுப்பாருங்க… எல்லாருடைய வரலாறும் சொல்ற அருமையான அறிவுரை இதுதான்…ஆமாங்க.. அறிவால எல்லாம் சாதிக்கலாங்கற கருத்துத்தான்… அது…
இத்தகைய மேதைகள் எல்லோரையும் நினைவு கூர்வதின் மூலம் இன்றைய சமுகத்தில் தன்னொளி பரவும். வறுமையை வென்று சாதித்து வரலாற்றின் பக்கங்களில் தங்களையும் தங்களின் தாய்த் திருநாட்டையும் உயர்த்தி பிடித்த… பிடிக்க இருக்கின்ற அனைவருக்கும் இந்தத் தொடரைக் காணிக்கையாக்குகின்றேன்… “ஓர் எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்…. வாசகன் அதனை முடித்து வைக்கிறான்” என்பார் சாமுவேல் ஜான்சன்.
இந்தக் கட்டுரைகளை எல்லாம் படிச்சுப் பாத்துட்டு நேரிலும், கைப்பேசி வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தங்களின் கருத்துரைகளை வழங்கிய வாசகர்களுக்கும், இத்தொடரை வெளியிட்டு இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கும் ஆசிரியர் குழுவுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்… இளைஞர்கள் இதைப் படிச்சிட்டு உயர்ந்த நிலையை அடையணுங்குறதுதான் இத்தொடரை எழுதியதன் நோக்கம். அப்படி யாராவது முன்னேறுவதற்கு இத்தொடர் உந்து சக்தியா இருந்துச்சுன்னா என்னோட நோக்கம் நிறைவேறிடுச்சுன்னு மிகுந்த மகிழ்ச்சியடைவேன்… இந்தத் தொடர் இத்துடன் நிறைவுறுகிறது. அனைவருக்கும் வணக்கம்… மீண்டும் சுவையான ஒரு தொடரை வாசகர்களுக்காக எழுத இருக்கின்றேன். அந்தத் தொடரில் அனைவரையும் சந்திக்கின்றேன்… நன்றிகள் பலப்பல…
“மண்ணில் நல்ல வண்ணம்
வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு
யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும்
கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும்
பெருந்தகை இருந்ததே”
வணக்கம்.
- கருகத் திருவுளமோ?
- ஒரு டிக்கெட்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 69 ஆதாமின் பிள்ளைகள் – 3
- சில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – 1
- தினமும் என் பயணங்கள் – 11 எந்திரத்தனம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 52
- பிரான்ஸ் வள்ளுவர் கலைகூடம்.
- மருத்துவக் கட்டுரை – காச நோய்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 27
- நரகம் பக்கத்தில் – 1
- வாழ்ந்து காட்டிய வழிகாட்டி
- திரை விமர்சனம் விரட்டு
- நிகழ்வு பதிவு அன்னம் விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன்
- சில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி !
- பார்த்ததில்லை படித்ததுண்டு
- சத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ் (அறிவியல் கட்டுரை)
- பச்சைக்கிளிகள்
- தொடுவானம் 10. தினம் ஒரு குறள்
- ”செல்வப் பெண்டாட்டி”
- திண்ணையின் இலக்கியத் தடம் -29
- நெய்வேலி பாரதிக்குமார் கவிதைகள்
- நீங்காத நினைவுகள் 41
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-28 யாதவர்களின் முடிவு