தொடுவானம் 18. அப்பாவின் ஆவேசம்!

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

தொடுவானம்
டாக்டர் ஜி. ஜான்சன்

18. அப்பாவின் ஆவேசம்!

ஜூன் மாதம் அப்பா திரும்பிவிடுவார். அதன்பின்பு நான் எங்கள் வீடு திரும்பி விடுவேன். அதே மலையடிவாரத்தில் பழக்கமானவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். பேருந்து நிலையத்தில் தினமும் லதாவை ஒருமுறையாவது பார்க்கலாம்.
நான் மீண்டும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று உறுதி பூண்டேன். தேர்வுகள் நெருங்கி விட்டன . காலம் செல்லும் வேகத்தைக் கவனியாமல் போனதால் நடக்கப்போகும் விபரீதத்தை எண்ணினேன்.நான் தேர்வில் தோற்பதா? இல்லை! உடன் பாடங்களில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்று செயல்பட்டேன்.
அருமைநாதன் என்னுடைய பால்ய நண்பன். அவன் மலையில் லதா வீட்டின் பின்புறம் வசிப்பவன். அவனும் என்னைப்போல் சிறு வயதில் தமிழகத்திலிருந்து வந்தவன்தான்.என்னுடன்தான் துவக்கப் பள்ளியில் சேர்ந்தான்.. ஆனால் அவனால் சரிவரப் படிக்க முடியவில்ல. தொடர்ந்து தேர்வுகளில் தோல்வி அடைந்ததால் ஆறாம் வுகுப்புடன் படிப்பு நின்று போனது. அதன்பின்பு அவனுடைய நடவடிக்கைகள் வேறுமாதிரியானது.
அதன் உச்ச கட்டமாக ஒரு நாள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றான்.அதிலிருந்து தப்பித்த பின்பு தன்னுடைய தந்தையையே கத்தியால் தாக்க முயன்றான்.அந்தப் பருவத்திலேயே புகைக்கும் பழக்கம் கொண்டிருந்தான்.நான் எவ்வளவோ அறிவுரைகள் கூறியும் பயன் இல்லை.
ஒரு நாள் என்னிடம் கூட சொல்லாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டான்.காரணம் தெரிய வில்லை.இருப்பினும் அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் என்னுடன் வளர்ந்த நண்பன்தானே! அவனை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் அவனைத் திருத்தும் முயற்சியைத் தொடர்வது என்று முடிவு செய்தேன். அவன் எங்கு சென்றான் என்பதை காவல் துறையினராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
அண்ணனின் திருமணம் நடந்தேறியபின் புதுமணத் தம்பதியர் எனக்கு கடிதம் எழுதி அப்பாவின் கடித உறையில் அனுப்பியிருந்தனர். அண்ணனைப் பார்த்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. இனி அண்ணன் தம்பியாய் அன்யோன்யமாகப் பழகும் வாய்ப்பு குறைவுதான். அவர் அப்பாவைப் பார்த்த கதை போல்தான் ஆகும் போலும். அண்ணியை நேரில் பார்த்துப் பேசிப் பழக கொள்ளை ஆசைதான். அது நடக்குமா?
நான் அவர்களுக்கு பதில் எழுதி அனுப்பினேன்.

” அன்புள்ள அண்ணன் அவர்களுக்கும் அண்ணி அவர்களுக்கும் நான் வணக்கத்துடன் எழுதிக்கொள்வது. நீங்கள் அனுப்பிய கடிதம் கண்டேன். உங்கள் இருவரின் நலன் அறிந்து மகிழ்ச்சி
நிற்க, இக்கடிதத்தை குதூகலத்துடன் எழுதுகிறேன். காரணம், எங்கள் பள்ளியில் பரிசளிப்பு விழா. சென்ற வருடம் தேர்வில் நன்றாக எழுதியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் நாள் இது. எனக்குத் தமிழில் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றதால் ஒரு பரிசு கிடைத்தது. சென்ற ஆண்டும் ஒன்று கிடைத்தது. இனி வரப்போகும் இரண்டு ஆண்டுகளுக்கும் எனக்கு பரிசு நிச்யிக்கப்பட்டுள்ளதும் உறுதி. இந்த ஆண்டில் நான் நிறைய பரிசுகள் வென்றுள்ளேன். ஓட்டப் பந்தயத்தில் எனக்கு இரண்டு கிண்ணங்கள், ஒரு பதக்கம், இரண்டு நற்சான்று பத்திரங்கள், கிடைத்தன.வரும் ஆண்டுகளிலும் இது தொடரும். உங்கள் இருவரையும் நேரில் காண ஆவல். என் அன்பு கூறி விடை பெறுகிறேன் பதில் போடவும். இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி. ”

24. 6. 1962 அன்று சிங்கப்பூர் தமிழர்களுக்கு ஒரு விழா நாள். தமிழ்த் திரையுலகின் பிரபலமான நடிகர் சிவாஜி கணேசன் முதன் முதலாக சிங்கப்பூர் வந்திருந்தார். அவருக்கு வரலாறு காணாத வரவேற்பு ஏற்பாடாகியது. அது ஜாலான் புசார் ஸ்டேடியத்தில் நடந்தது. திரையில் கண்டு மகிழ்ந்த சிவாஜியை நேரில் பார்க்க தமிழர்கள் ஆர்வத்துடன் புறப்பட்டனர். எங்கள் பகுதித் தமிழர்களுடன் நானும் சென்றேன். சுமார் 40,000 தமிழர்கள் அந்த திறந்த வெளி அரங்கில் குழுமியிருந்தனர்.
அப்போது சிவாஜியை வரவேற்றுப் பேசிய தமிழவேள் கோ.சாரங்கபாணி,ஐம்பது பவுண்டு எடையுடைய ஆளுயர மாலையை அணிவித்தார்!
அதுவரை பராசக்தி, மனோகரா, தூக்குத்தூக்கி படங்களில் கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களைக் கணீரென பேசி நம்மையெல்லாம் பரவசத்தில் ஆழ்த்திய சிவாஜியின் சிம்மக் குரலை அன்று நேரில் கேட்டு மகிழ்ந்தோம்!

ஜூலை மாதம் முதல் தேதியன்று எனக்கு இன்னொரு வெற்றி கிட்டியது. சிங்கப்பூரில் தமிழ், மலாய் இரு மொழிப் பேச்சுப் போட்டி ஏற்பாடாகி இருந்தது. அப்போதுதான் மலாய் மொழி அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு பாடமாக அறிமுகமானது.அப் போட்டியில் நான் கலந்து கொண்டு இரு மொழிகளிலும் நன்றாகப் பேசி மூன்றாம் பரிசு வென்றேன்.
தமிழவேள் ஐம்பது வெள்ளிக்கான காசோலையை பரிசாகத் தந்தார். என்னுடைய பேச்சு தமிழ் முரசில் படத்துடன் செய்தியாக வெளிவந்தது.
அதோடு அடுத்த நாள் மாலையில் சிங்கப்பூர் வானொலியிலும் ஒளிபரப்பானது.
பழைய தேநீர்க் கடையில் நின்று அங்குள்ள வானொலியில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, பள்ளி முடிந்து லதா பேருந்திலிருந்து இறங்கி வந்தாள்.. என்னைப் பார்த்து புன்னகை பூத்துச் சென்றது இரட்டிப்பு மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. இதுபோல் வெற்றி மேல் வெற்றிகள்
என்னை நாடி வந்தன!

தமிழ் நாட்டிலிருந்து அப்பா திரும்பிவிட்டார். நான் மீண்டும் மலையடிவார வீடு சென்றேன். இனி லதாவை அன்றாடம் எப்படியும் ஒரு தரம் பாத்துவிடலாம். காசோலையை அவரிடம் தந்தேன். அவர் பெருமிதம் கொண்டார். அந்தப் பணத்தில் எனக்கு ஒரு ” ரோஸ்கோப் ” கைக்கடிகாரம் வாங்கித் தந்தார். அதை பெரும் பொக்கிஷமாக பல வருடங்கள் அணிந்திருந்தேன்.
அண்ணனின் திருமணப் படம் கொண்டு வந்திருந்தார். அழகாக இருந்தது. அண்ணி உதட்டைக் கடித்தவாறு மெல்லிய புன்னைகையுடன் காட்சி தந்தது என்னைப் பெரிதும் கவர்ந்தது. அந்தப் படத்தை வண்ணத்தில் வரைய புகைப்படக் கடையில் தந்திருந்தார்
தமிழ் நாடு சென்று திரும்பிய அப்பாவின் மனநிலை மாறியிருக்கும், இனி என்னிடம் அன்பாகவே இருப்பார் என்று எதிர்பார்த்திருந்த நான் ஏமாற்றமடைந்தேன். அங்கு எல்லா உறவினர்களுடன் சில காலம் தங்கியிருந்ததால் பாசம் என்பது என்ன என்று தெரிந்திருக்கும் என்று நம்பினேன். ஆனால் நடந்ததோ நேர் விரோதமானது
அவரின் கண்டிப்பும் கண்காணிப்பும் அதிகமானது. அவர் இல்லாத சமயத்தில் நான் லதாவை நிச்சயம் பலமுறை சந்தித்திருப்பேன் என்பது அவருக்கு தெரிந்திருக்கும். அவருடைய கண்டிப்பு எனக்கு பெரும் கவலையை உண்டு பண்ணியது. எப்போது அவருடைய கொடிய பிடியிலிருந்து விடுபடுவது? நான் பெரியவனாக வேண்டாமா? எனக்கென்று தனிப்பட்ட உரிமைகளும் சுதந்திரமும் கிடையாதா என்றும் வருந்தினேன்.
ஆகஸ்ட் மாதம் தேர்வுகள் நடைபெறும். இனிமேல் தேர்வுகள் முடியும் வரை பார்க்கவேண்டாம் என்று லதாவிடம் கூறிவிட்டேன். அவளும் சம்மதித்தாள். இனி முழு மூச்சுடன் பாடங்களில் கவனம் செலுத்த முடிவு செய்து செயல் பட்டேன்
பள்ளியில் மாலை நேரத்தில் ஓடுவதையும் நிறுத்திக்கொண்டேன். கதை கட்டுரை எழுதுவதையும் குறைத்துக்கொண்டேன்.
பாடங்களில் கவனம் செலுத்தினேன்.ஆனால் ஓடுவதை நிறுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் தினம் விடியற்காலையில் நான்கு மணிக்கு எழுந்து வெறிச்சோடி கிடக்கும் சிங்கப்பூர் வீதிகளில் சுமார் ஐந்து மைல்கள் ஓடிவிட்டு வருவேன். இதை அறிந்த அப்பா இரவில் கொண்டைக் கடலையை நீரில் ஊறவைத்து காலையில் பச்சையாக சாப்பிடச் சொன்னார். அதில் சத்து அதிகம் என்றார். அதோடு எங்கோ சென்று விழுதம் இலைகள் கொண்டு வந்து அதை மென்று தின்னச் சொன்னார். அதை சாப்பிட்டால் நீண்ட தூரம் களைப்பு இல்லாமல் ஓடலாம் என்றார்.
தேர்வுகள் நடந்து முடிந்தன. நன்றாக எழுதியதால் மகிழ்ந்தேன். கொஞ்ச நாட்கள் பாட புத்தகங்களிலிருந்து விடுபட எண்ணினேன். கதைகள் எழுதுவதில் கவனம் செலுத்தினேன்.
பள்ளியில் நடந்த காற்பந்து விளையாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது மீண்டும் பழைய பல்லவியைத் தொடங்கிவிட்டார். லதாவைக் காதலிப்பதாகவும் அவளுடன் சென்று வந்துள்ளதாகக் கூறினார். நான் அணிந்திருந்த சட்டையைப் பிடித்து இழுத்து கிழித்தார். அடிக்கவும் வந்தார்,
நல்ல வேளையாக சிலர் வந்து காப்பாற்றினர். பொய் சொன்னாலும் அடி, உண்மை சொன்னாலும் அடியா என்று அப்போது எண்ணிக்கொண்டேன்.
அப்போது சிங்கப்பூர் பிரபல பத்திரிகையான ” ப்ரீ ப்ரெஸ் ” ( Free Press ) ஒரு பெரு நடைப் போட்டிக்கு ஏற்பாடு செய்து விளம்பரம் செய்தது.
எங்கள் பள்ளியின் சார்பில் அறுவர் கொண்ட குழு அதில் பங்குகொள்ள தேர்வு செய்யப்பட்டோம்.அது மறக்க முடியாத குழு. காரணம் அதில் இரண்டு சீனர்கள், இரண்டு மலாய்க்காரர்கள், இரண்டு இந்தியர்கள் இருந்தோம். நாங்கள் அனைவருமே பள்ளியில் தொலை தூர ஓட்டக்காரர்கள். அதற்காக நான் காலையில் தினமும் தீவிரமாக பத்து மைல்கள் கூட ஓடி பயிற்சி செய்தேன்.
பந்தய தினத்தன்று காலை எட்டு மணிக்கு சுமார் நானூறு போட்டியாளர்கள் கூடிவிட்டனர். ” ஷெண்டன் வே “யிலிருந்து பாசீர் பாஞ்சாங் வரை பதினைந்து கிலோமீட்டர் தொலைவு நடக்கவேண்டும். ஓடக் கூடாது. ஓடினால் பந்தயத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்பது விதிமுறை.
துப்பாக்கி வேட்டு வெடித்ததும் அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஓடினர். அது விதி முறைக்கு விரோதமாக இருந்தாலும் எல்லாரையும் எப்படி நீக்குவார்கள் என்பது புலப்பட்டது. அதிலும் ஒடுவதற்கு எனக்கு சொல்லித் தரணுமா என்ன? தட்டி விட்ட பந்தயக் குதிரையானேன்! ஒரு கிலோமீட்டர் வரை வேகமாக ஓடி முதல் நிலையை அடைந்துவிட்டேன்! விட்டால் நான் அந்த பதினைந்து கிலோமீட்டர் தொலைவையும் அவ்வாறே ஓடி இருப்பேன்!
ஆனால் எங்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ஏற்பாட்டாளார்கள் என்னை முந்திக்கொண்டு வந்து, ஓடியது போதும், இனி நடக்கலாம் என்றனர். நான் அப்போது ஓடிப் பிடித்த முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டு வேக வேகமாக நடந்தேன். என்னை முந்திக்கொள்ள யாரையும் விடவில்லை.என் அருகிலேயே மோட்டார் சைக்கிளில் ஒரு ஏற்பாட்டாளர் வந்து கொண்டிருந்தார். கொஞ்சமும் தடையின்றி அந்த பதினைந்து கிலோமீட்டர் முழுவதும் நானே முன்னிலையில் நடந்து முதல் பரிசையும் வென்றேன்! எங்கள் குழுவுக்கும் முதல் பரிசு கிடைத்தது.முதல் பரிசு பெற்ற எனக்கு ஒரு பெரிய வெள்ளிக் கிண்ணம் கிடைத்தது! குழுவில் வென்றதற்கு இன்னொரு கிண்ணமும் கிட்டியது!
அன்று நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை! ஓட்டப்பந்தயத்தில் எனக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது! என் புகைப்படங்கள் எல்லா பத்திரிக்கைகளிலும் வெளிவந்தன! அதிகாலையில் வீதிகளில் ஓடியது விருதாகாமல் இந்த வெற்றியைப் பெற்றுத் தந்து விட்டது! இதோடு தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் அதிலும் வெற்றி கண்டு அப்பாவிடம் நான் திறமையானவன்தான் என்று காட்டுவதோடு, லதாவால் என்னுடைய படிப்போ ஓட்டமோ தடைபடவில்லை என்பதையும் நிரூபித்து விடலாம்!
நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.( அதில் ஒன்றை இணைத்துள்ளேன் ) அதன்பின் அணிந்திருந்த பள்ளியின் பெயர் பதிக்கப்பட்டிருந்த பனியன், அரைக்கால் சட்டையுடன் கையில் அந்த பெரிய வெற்றிக் கிண்ணத்துடன் பெருமிதத்தோடு வீடு .திரும்பி னேன். அந்த
பெரிய வெள்ளிக் கிண்ணத்தை அப்பாவிடம் தந்தேன். அதை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். இனிமேல் என்னிடம் அன்பாகவே இருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். அவரும் கொஞ்ச நாட்கள் அமைதியாகத்தான் இருந்தார்.
தேர்வு முடிவுகள் வெளிவந்தன. எதிர்பார்த்தபடியே எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன்! எனக்கு எல்லையில்லா பூரிப்பு! வகுப்பு
ஆசிரியர் , ” Good! Keep it up! ” என்றும் பாராட்டியிருந்தார்!
மதிப்பெண்கள் எழுதப்பட்டிருந்த அந்த ” ரிப்போர்ட் ” புத்தகத்தை மேசைமீது வைத்துவிட்டு வெளியில் சென்றிருந்தேன். அப்பா அதைப் பார்த்து
மெச்சிக் கொள்வ என்ற அற்ப ஆசை எனக்கு. காதலில் ஈடுபட்டுள்ளேன், பாடங்களில் கவனம் செலுத்தவில்லை என்று அன்றாடம் பல்லவி பாடும் அவருக்கு இது ஒரு வகையில் பாடம் புகட்டாதா என்றும் எண்ணிக்கொண்டேன். இப்போதாவது அவரின் மனம் இளகாதாஎன்றும் ஏங்கினேன்.

ஆனால் வீடு சென்றதும் நான் கண்ட காட்சி என்னை நிலைதடுமாறச் செய்தது! ” ரிப்போர்ட் ” புத்தகம் கசக்கப்பட்டு மேசை மீது கிடந்தது! என்னைக் கண்டதும் அதை பக்கம் பக்கமாகக் கிழித்து வீசினார்!
” இனி நீ பள்ளிக்கு போக வேண்டாம்! ” ஆவேசமாகக் கத்திவிட்டு வெளியேறினார்.
நான் கண் கலங்கினேன். கிழிந்து கிடந்த பக்கங்களையெல்லாம் பொறுக்கிக் கொண்டு நேராக கோவிந்தசாமி வீடு சென்றேன். நடந்தவற்றை
அவனிடம் கூறினேன்.அவனால் அதை நம்ப முடியவில்லை. பின்பு லதா வீடு சென்றேன். அவளிடமும் கூறினேன்.
” நான் வேண்டுமானால் உங்கள் அப்பாவிடம்சென்று மன்னிப்பு கேட்கிறேன் . ” அழுதபடி கூறினாள்.
” நீ சென்றால் அவ்வளவுதான்.சந்தேகமாக இருப்பது உண்மையாகிவிடும். ” நான் தடுத்தேன்.
அன்று இரவு உணவை அவள் வீட்டில் உண்டேன். அதன் பிறகு அவளுடைய அறையில் இரவு பதினொன்று வரை பேசிக்கொண்டிருந்தேன்.
நான் புறப்பட்டபோது என் கையில் ஒரு கடிதம் தந்தாள். அதைப் பெற்றுக்கொண்டு மீண்டும் கோவிந்தசாமி வீடு சென்றேன். கடிதத்தைப் படித்துவிட்டு இரவு பன்னிரெண்டு மணியளவில் அங்கேயே படுத்து விட்டேன்.
அன்றைய இரவு நான் தூங்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
தற்கொலை செய்துகொள்வதைத் தவிர இந்த நரக வாழ்க்கையிலிருந்து விடுபட அப்போது எனக்கு வேறு வழி தெரியவில்லை!

( தொடுவானம் தொடரும் )

Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *