அந்த இரவின் தென்றல் இனிமை. நிலவில்லாத வான் இனிமை. என்னைப் போலைந்த இருட்டும் தனிமை. ஏன் என்று கேட்க ஆளில்லாத அமுதத் தனிமை. கையில் ப்ளாஸ்க் இல்லாவிட்டால் ஜோராய்த்தான் இருந்திருக்கும்.
அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் நின்று எத்தனையோ வேண்டுதல்கள். வியாபாரப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவள் ப்ரேயர் செய்யப் போவதே சாப்பிட்டதும் சிறிது தூரம் சுதந்திரக் காற்றில் நடக்க வேண்டுமென்றுதான். ஜீரணமாக வேண்டுமல்லவா.
அந்த விளக்குக் கம்பத்தின் அருகில் வந்தாயிற்று. அதுவரையில் அவளைக் காணாமல் புருபுருத்துக் கொண்டிருந்த அவளுடைய சின்னப் புளியமரம் வா வா என்று இரைச்சலிட்டது.
காற்று கனவேகமாய் வீசித் தழுவியது. புளியம்பிஞ்சின் மணம், வயலில் நடந்த கதிர் அறுப்புக்குப் பின் உள்ள ஒரு மண் மணம், மழை எங்கோ தூறியதால் காற்றில் பரவிக் கிடக்கும் ஈரமண் வாசம் எல்லாம் நெஞ்சை வயிற்றை மூளையை கழுத்தை மூக்கை கண்ணை வாயை நிறைத்துக் கொண்டது. மூச்சை நன்றாக இழுத்தேன். என்ன ! மணம் என்ன மணம். ! அப்பப்பா.. இதுதான் சொர்க்கம், மெல்லிசுச் சட்டையிலும் தாவணியிலும் லேசாகப் பொறித்திருந்த வியர்வைப் பொடிகளை காற்று புகுந்து சுத்தமாகத் துடைத்துவிட்டுப் போயிற்று.
நினைவு வந்தது. என்ன ஒரு தெய்வீகமான பார்வை அது. எங்கோ எப்போதோ எந்தச் சந்தர்ப்பத்திலோ பார்த்த கண் ஒன்று கிட்ட வந்து புன்னகை பூத்தது. கரங்கள் கூப்பி சில்வண்டுகளின் “ஓம், ஓம்” ரீங்கரிப்பில் ஒன்றிப்போய் ஒரு குழந்தையை உருவகித்து அதனை முத்தமிடுகின்றாற்போல் நினைத்துக் கொண்டாள். இதுதான் பக்தி என்று தோன்றியது. இந்தக் குழந்தையைக் கொஞ்சலாம், கோபித்துக் கொள்ளலாம், அலங்காரம் பண்ணலாம், கற்பனையில். அது கோபித்துக் கொள்ளாது. நான் எதைச் செய்தாலும் ஒரு புன்னகை விரியும் பரவசமாய் அதன் முகத்தில், அதுவும் என் பிரம்மைதான். இதழ்க்கடையில் எந்நேரமும் உறைந்து கிளிப் மாட்டி வைத்திருப்பது போலப் புன்னகை. இது முருகக் குழந்தையா ..? ஹூம்.
அந்த இருளில் தூரத்தே கேட்டுக்கு அப்பால் தெரிந்த அந்த வெள்ளை விளக்கு பிரகாசித்தது. ரொம்ப தூரத்தில் தெரிந்த அந்த திருப்பரங்குன்றின் சிவப்பு விளக்கு அணைந்து அணைந்து எரிந்தது. முருகன் சிவப்புக் கொழுந்தா. ரொம்பவும் கண்ணை உறுத்தாத கொஞ்சம் தக்காளி நிறம் கலந்து சிவப்பு அது. அது எதை உணர்த்துகின்றது. முருகனின் வேலின் மத்தியில் ஒளிவீசும் குங்குமத்தையா ? இல்லை அது முருகனின் பதக்கட்தில் ஒளிவிடும் சிவப்பு இரத்தினமா. ? தவறு செய்தோர் தண்டிக்கப்படுவர் என்பதை உணர்த்தும் அபாய அறிவிப்பா ? ஒன்றும் சரியாய் சொல்லத் தெரிவதில்லை.
இப்போது கண் இறுக்க மூடிக்கொண்டுவிட்டது. கை கூப்பி இருந்த கை சோம்பற்பட்டு படுத்துக் கொண்டு ஒரு முழங்கையை மற்றொரு உள்ளங்கை பிடித்துக் கொண்டது. நான் அவனுக்குத்தான் அடிமைப்படுவேன் என்கிறாற்போல். பாதநுனிகளில் மண்ணின் ஜில்லிப்பு. எதிரே கரு கும் இருட்டில் இரு விளக்குகள் சிவப்பும் வெண்மையும். இன்றைக்கு குழந்தையில் இரண்டு கண்களும் சிவப்பும் வெளுப்புமாகத் தெரிந்தன. ஆனால் உதட்டில் மட்டும் அதே புன்னகை. என்னால்தான் சிரிக்கமுடியும் என்கிறாற்போல.
இன்று முகம் மட்டுமல்ல கை கால் நாபி பட்டுக்கயிறு அரசிலை கால் பாதம் தண்டை கொலுசு பட்டுக்கயிற்றில் கட்டிய பலவகை வெள்ளித் துண்டு உருவங்கள், வயிறு தோள்பட்டை குளுக் முளுக்கென்று ஆடும் சதையுடைய தொந்தி நெஞ்சு கழுத்து வெள்ளை மணிமாலை, கையில் காப்பு, காதில் வெள்ளையில் பவளமாட்டம் சின்னத் தோடு, கருகருவென்று சுருள் சுருளாக முடி, முன் நெற்றியில் முடி, காதோரம் முடி, சிமிழ் மூக்கு, அப்பாவியாய் அதே சமயம் துறுதுறுப்பாய் உள்ளத்தை நோண்டிப் பார்க்கிறாற்போல் மேலுக்கு அலட்சியமாய், கர்வமாய் புன்சிரிப்பாய் கண்கள். கன்னங்கள் பம்மென்று தூக்கிக் கொள்ள ரோசாப்பூப்போலச் சிவந்த மெல்லிய இதழ்கள், லேசாக இந்தக் கோடிக்கும் அந்தக்கோடிக்கும் இழுபட ஒரு புன்னகை. என்னவொரு மயக்கும் புன்னகை.
நான் அந்தக் குழந்தையைத் தொடுகின்றேன். இது மாயை அல்ல. உண்மைத் தோற்றம் என்கிற மாதிரி பஞ்சாய், மெல்லிசாய், லேசாய்க் கீரைத் தண்டின் தளதளப்பில் இது என்ன தோல். ? இது என்ன உடம்பு ? அந்தப் புஷ்பக்குவியலைக் குண்டுக் கட்டாகத் தூக்கிக் கொள்ளப் பரபரக்கும் மனத்.
கன்னத்தில் கழுத்தில் காதில் மூக்கில், நெற்றியில் கையில் காலில் பிருஷ்டத்தில் தொடையில் அந்தக் குழந்தையை முத்தமிடுகின்றேன். என்ன ஒரு மிருதுத்தனம். பார்க்கப் பார்க்கச் சலிக்காத தெய்வீகமாயையோ இது. ? மனசு புல்லரிக்கிறது கண்களில் நீர் கோர்த்துத் துளிர்க்கின்றது. இப்போது புன்னகை மட்டும் தெரிய பார்வை மட்டும் விரிய அந்த உடல் காணாமல் போயிற்று.
மனசில் மூலையில் எங்கோ இத்தனை நேரமும் திறந்துகொண்டு காற்று வாங்கிக் கொண்டிருந்த கதவு பட்டென மூடிக் கொண்டது. போலிருந்தது. அங்கு இருந்த ஒற்றைச் சாளரம் வழியே பனிப்பூவாய் உதிர்ந்துகொண்டிருந்தது. அந்த இன்பத்தை, அந்தக் கண்ணை மனசில் வர்ஷித்து ஒட்டிக்கொண்ட அந்தப் புன்னகையைப் பிரியமனசில்லை.
பத்துநிமிடம் ஆயிற்று. அரைமணிநேரம் ஆயிற்று. அவள் வெளியில் சமாதியாகிவிட்டாளோ.. உள்ளுக்கும் அலை அடித்துக்கொண்டிருந்தது. புன்னகையலையாய்ப் பார்வை அலையாய்ச் சுழித்துக்கொண்டு பொங்கிக்கொண்டு நுரைத்துக் கொண்டு அழுக்கை வெளித்தள்ளிக் கொண்டு பரவஸ மேகமாய்த் தளும்பிக் கொண்டே இருந்தது.
மீளமுடியவில்லை. லேசாகச் சில்லுவண்டுகளின் ‘ஓம், ஓம்’ ரீங்காரம் காதில் படுகின்றது. ஆற்றில் கல்லைப் போட்டதும் ஏற்படும் சலன அலைகளைப் போல இப்போது மனசுள் மெல்லிய அலைகள் தந்திக் கம்பிகளாய் அதிர்கின்றன. மூக்கில் புளியம்பிஞ்சின் வாசம், மண் வாசம், மரமல்லி வாசம் கூட அடிக்கின்றது.
குப்பென்று மல்லிகை வாசம் மூக்கில் பட்டுத் தெறித்தது. கடைசியாக வந்தபெண் வணங்கிவிட்டுச் சென்று கொண்டிருந்தாள். நான் எப்போது ப்ரேயர் செய்ய வந்தேன். ஏழேகால் இருக்குமா. ? நிச்சயம் இருக்கும். டைனிங்ஹால் பெல்லடிச்சதுமே மில்க்கையும் ஃப்ளாஸ்கையும் எடுத்து வந்தேன். ஒற்றையாய்த் தனியாளாய் அதன் இனிமையைத் தான்மட்டும் அனுபவித்துக் கொண்டு.
கால் கடமையைச் செய்வதாக எண்ணி நடந்தது. கண் அந்த விளக்குகளை மற்றுமொருமுறை நோக்கியது. மனசுள் பயம் எங்கே கால் மறுபடியும் அந்த இடத்துள் வேரோடிப் போய்விடுமோவென்று . கைபாட்டுக்கு கன்னத்தில் போட்டுக் கொண்டது. வாய் கந்தர்சஷ்டியை முணுமுணுக்க ஆரம்பித்தது
கெபியின் எதிர்த்தாற்போலிருந்த பெஞ்சில் மில்க்கையும் ஃப்ளாஸ்கையும் விட்டு வந்திருந்தேன். ரெண்டும் உனக்கு நான் துணை எனக்கு நீ துணை என்று பாடிக்கொண்டிருந்தன.
பால் டம்ளர் சூடாறி அடியில் ஜில்லிட்டிருந்தது. மிதந்து கொண்டிருந்த ஆடை உள்ளே மூழ்கிவிட்டது காற்றில் அடியினால். பசி வயிற்றைப் பிராண்டியது. பசி.. பசி.. பசி.. அப்பவே பசிக்கவேயில்லையே. டைனிங்ஹால் மூடியாச்சே. அசுரப்பசி. கால்கள் நடையை எட்டிப் போட்டன. கூல்டாப்பில் டாங்கையே குடிக்கின்றாற்போலத் தண்ணீரை சுவீகரித்தேன்.
எனக்கு என்ன வந்தது ? ஏன் இவ்வளவு நேரம் ப்ரேயர் பண்ணேன். ! சரி என்ன ப்ரேயர் பண்ணேன்.! சொப்பனம் கண்டாப்பல இருக்கு. அரைகுறையா. எதுக்கு இவ்ளோ நேரம் பண்ணேன். என்ன வேண்டிக்கிட்டேன். மனசு முழுக்க எவ்வளவு அமைதியா இருந்தது. எவ்வளவு குதிச்சுது. எவ்வளவு பரவசப்பட்டுது. எதுக்குப் பட்டுது ? ஒண்ணும் புரியல. தலையும் புரியல. வாலும் புரியல. என்னிக்கும் இல்லாத் திருநாளா இன்னிக்கு என்ன ஆச்சு ? பைத்தியமாயிண்டு வரேனோ. ? எங்கானும் ஒரு நட்டுக் கழண்டுடுத்தா. ? யாராவது கேட்டா சிரிக்கப்போறா, என்னவோ குழந்தை சிரிச்சுதுன்னு ஒளர்றியே என்ன ஆச்சுன்னு ? கீழ்ப்பாக்கமா. ? எனக்கு என்ன ஆச்சு. ஹூம் சாமியாராயிண்டு வரேனா. நீங்கதான் சொல்லுங்களேன். ப்ளீஸ். !
டிஸ்கி :- 84 ஆம் வருட டைரியிலிருந்து.
- வாழ்க்கை ஒரு வானவில் – 6
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 7
- கவிதைகள் – ஸ்வரூப் மணிகண்டன்
- ஜோதிஜியின் “ டாலர் நகரம் “
- திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 78 இக்கண ஆர்வத்தில் என் சிந்திப்பு
- கவிஞர் ஆதிராஜின் ‘தேவி’ – சிறு காவியம் – ஒரு அறிமுகம்
- இயக்கி
- தொடுவானம் 19. காதலும் வேண்டாம்! நட்பும் வேண்டாம்!
- கவிக்கு மரியாதை
- பாதுகாப்பு
- தந்தை சொல்
- காயா? பழமா?
- திண்ணையின் இலக்கியத் தடம்-38 நவம்பர் 4 2005 இதழ்
- பத்மா என்னும் பண்பின் சிகரம்
- என் பால்யநண்பன் சுந்தரராமன்
- தினம் என் பயணங்கள் -20 மூன்றாம் நாள் தேர்வு
- உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம்
- கனவில் கிழிசலாகி….
- டைரியிலிருந்து
- நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு — புத்தகம் ஒரு பார்வை.
- காஃப்காவின் பிராஹா -4
- Malaysian and Tamil Poets Meet and Interact!
- நீங்காத நினைவுகள் – 49