கவிஞர் ஆதிராஜின் ‘தேவி’ – சிறு காவியம் – ஒரு அறிமுகம்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

– வே.சபாநாயகம்.

சோலை அருகாவூர் கவிஞர் ஆதிராஜ் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையை நினைவூட்டும் அற்புதமான மரபுக் கவிஞர். எளிய இனிய தமிழ்நடையில், சந்த அழகுடன் ஆற்றல்மிகு சொல் நயம்மிக்க கவிதை பாடுவதில் வல்லவர். ‘தேவி’ அவரது இரண்டாவது சிறு காவியம். சமண மத போதனையை அடிப்படையாகக் கொண்ட கதையை தன் கவித்திறத்தால் தெவிட்டாத இனிய காவியமாக்கி இருக்கிறார்.

‘அகிம்சையைப் பேணும் சீலம்
அன்புடன் கருணை உள்ளம்
சகிப்புடன் சமம் புரத்தல்
சத்தியம் காக்கும் தீரம்
பகிர்ந்திடும் பரந்த பண்பு
பகையிலா வாழ்வு! தங்கள்
அகமெலாம் அறத்தின் நோக்கம்
அடைந்தவர்க்கேது துனபம்’

– என்று மிக எளிமையாய் சமண தத்துவத்தை கதையின் ஊடே பதிவு செய்கிறார்.
இனம்புரியாத உணர்வுப் போராட்டதில் சிக்கினாலும், காதல் எனும் மாயைக்கு அடி பணியாமல் அறத்தின் வழி நிற்கும் நாயகன், நாயகியின் புனிதமான – சோகமானது என்றாலும் – வாழ்வை வெகு இயல்பாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.
அவரது எல்லாக் கவிதைகளிலும் இயற்கை வருணனை மனம் கவர்வதாக இருக்கும். இப்படைப்பிலும் அத்தகு காட்சிகள் நம்மை மகிழ்விப்பதைக் காணலாம் உதாரணத்துக்கு, நாட்டுவளம் பற்றி பாட வந்த கவிஞர் இபபடிப் பாடுகிறார்:
‘வாழையும் தென்னையும் விளைவதுண்டு – அங்கு வற்றாத பாலாற்றில் தண்ணீர் ஒடும் – போகும் மோழையைத் தேடி அடைப்பதில்லை – அவை மொத்தமாய் அடுத்த ஊருக்கேகும்!’
– என்று பாலாற்றின் வளம் பற்றிச் சொல்ல வருபவர் இன்றைய பாலாற்றின் பரிதாப நிலையையும் கவலையோடு பதிவு செய்கிறார்:
‘காலத்தின் மேவிய கோளாறு – இன்று காய்ந்து கிடக்குது பாலாறு – ஐயா ஏலத்தில் போகுது ஆற்றுமணல் – மிக ஆழத்தில் எங்கோ ஊற்றுப் புனல்!’
– சமகாலப் பிரக்ஞையுடன் கவிஞர் பேசுவது மனதை நெகிழ்விப்பதாகும். இவ்வாறே சமணக் கருத்துக்களையும் அழகு நடையில் பதிவு செய்திருக்கிறார்.
சமணமத அன்பர்கள் அதன் பெருமையை அறிய இக்காவியத்தை ரசிப்பது போல, கவிதைக் காதலர்களும் – கவிஞரின் ‘துள்ளும் மறியைப் போல துள்ளும்’ கவி இன்பத்துக்காக நெஞ்சைப் பறி கொடுப்பர்கள். 0

நூல்: ‘தேவி’
ஆசிரியர்: கவிஞர் அருகாவூர் ஆதிராஜ்.
வெளியீடு: ஸ்ரீ ஜினகாஞ்சி பதிப்பகம், காஞ்சிபுரம்.
விலை: அறுபது ரூபாய்.

Series Navigation
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *