ஜோதிஜியின் “ டாலர் நகரம் “

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

– சுப்ரபாரதிமணியன்
————–
படைப்பிலக்கியவாதிகளுக்கு இணையப் பதிவர்கள் மீது ஒரு வகைத் தீண்டாமை குணம் உண்டு. பெரிய தடுப்புச் சுவர் நின்றிருக்கும். பதிவர்கள் தமிழைப்பயன்படுத்தும் விதம், ஹைபிரிட் மொழி , அலட்சியத்தன்மை, குறைந்த வாசிப்பு, தன்னை வெகுவாக முன்னிறுத்தல் இவையெல்லாம் நெடும்கால தவமாய் இருந்து படைப்பிலக்கியம் செய்பவனை புறந்தள்ளும். பதிவர்களிடம் பேச விரும்பாத இலக்கியவாதிகளும் உள்ளனர்.வெகு சிலரே விதிவிலக்கு நான் அவ்வகைத் தீண்டாமையை வெகுவாக அனுஷ்டிக்கக்கூடியவனல்ல.
நண்பர் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி ( ஆனந்த விகடன் குழுமம்) என்னிடம் தொலைபேசியில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முறை தேவியர் இல்லம் பற்றிக் குறிப்பிட்டார். நானும் மேய்ந்ததில் திருப்பூர் வாசி என்பது தெரிந்தது.பின்னலாடை சார்ந்து பல கட்டுரைகள் இருந்தன.தொழில் சார்ந்த விபரங்களும், அணுகுமுறைகளும், ஏற்றுமதி கொள்கைகள் என்று நிறைய தகவல்கள்.
திருப்பூரைப் பற்றி அதன் நகரம்,தொழில், சுரண்டல், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை என்று இதுவரை சுமார் 100 சிறு கதைகளாவது வெளிவந்திருக்கும் சில நாவல்கள் கூட.பின்னலாடை சார்ந்த சிலர்-தொழிலாளர்கள், படித்தவர்கள்- அவற்றை எழுதியிருக்கின்றனர். ஆராய்ச்சிமுகமாக இங்கு வரும் வெளிநாட்டினர் அங்கு போய் அவிழ்த்து விடும் சமாச்சாரங்கள் டண்டன்னாக இருக்கின்றன. திருப்பூரைப் பற்றி வணிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் அவை தரும் செய்திகள் அதிர்ச்சி தரத்தக்கவை. சில பெருமைப்பட வைப்பவை. கடின உழைப்பு, விருந்தோம்பல் என்றெல்லாம். அமைந்திருக்கும். உலகமயமாக்கலில் அதன் விளைவுகளை சுட்ட திருப்பூர் போதும்.. வகை வகையாய் பிரச்சினைகள். தீர்வுகள், டாலர்கள் பவுண்ட்கள், அந்நிய செலவாணி என்று.
தேவியர் இல்லம் என்பதை முன்பு ஏதோ டுடோரியல் காலேஜ் என்றுதான் நினைத்திருந்தேன். அந்த பெயரில் பள்ளி, டுடோரியல் காலேஜ் நடத்தினவர்கள் இருக்கிறார்கள். இந்த இல்லமும் ஒரு கல்லூரிதான். ஒரு வகையில் நிப்ட்கல்லூரி . பின்னலாடை பற்றி தகவல் குவியலகள். இதை எழுதுகிற ஜோதிஜி அந்த துறை சார்ந்து தொடர்ந்து தொழில் நிமித்தமாய் இயங்குகிறவர் என்பதால் அந்த துறை சார்ந்த கசமுசாக்கள், கிசுசிசுக்கள், நுட்பமான தகவல்கள் நிறைய கிடைக்கும்.பத்திரிக்கையாளர் பாணியில் . தினத்தந்தி வாசகனுக்கும், படிக்கிற கடைசி தரப்பு வாசகனுக்கும் சென்றடைய அளவில் எளிமையான மொழி, அஜல் குஜல் சமாச்சாரங்கள் என பதிவர்களின் மொழியில் சுலபமாக இயங்குபவர்.பின்னலாடைத் தொழிலில் இருக்கும் சிறுசிறு விசயங்கள் முதல் உற்பத்தி தந்திரம் வரை அலசல். ஒரு வகையில் விளிம்பு நிலைப் பார்வை. சுரண்டல், வில்லன் ஆசாமிகள் என்று அடையாளம் காட்டுகிறார். ஊர் இப்படியாகிப்போச்சே என்று அங்கலாய்ப்பும் இருக்கிறது.சில இடங்களில் நுணுக்கமான பார்வைகள், விவரிப்புகள் இலக்கிய நுட்பத்தை எட்டுவது நல்ல விசயம்.திருப்பூரைச் சார்ந்த வாசகனுக்கு இவை நுணுக்கமாய் தெரியலாம். வெளி அந்நியனுக்கு, சாதாரணஇந்தியனானவனுக்கு சிரமம்தான்.இதெல்லம் இவ்வளவு விரிவாய் எதற்கு என்று அலுப்பு ஏற்படலாம். ஜோதிஜி அலுப்பை உதறி விட்டுத் தொடர்கிறார். சொலவடைகள் , மச்சி மாமா சம்பாஷனைகள் போல் நறுக்கு தெறிக்கின்றன. 2015ல் 25,000 கோடி எட்டி விட வேண்டும் என்ற கனவும், சிரம் திசையும் காட்டுகிறார்.. பல இடங்களில் குதிரைப் பாய்ச்சல். சில இடங்களில் பந்தயக் குதிரை போல் வட்டத்துள் வந்து திரும்பக்கூறல்.வெளி ஆட்கள் வந்து பத்திரிக்கைப் பாணியில் எழுதுவது போய் அந்தந்த துறை சார்ந்தவர்களே நுட்பங்களுடன் எழுதும் பின்நவீனத்துவ காலகட்டம் இது. அந்த மாதிரி ஜோதிஜியும் இருக்கிறார். அதேசமயம் ஜோதிஜியின் உழைப்பும் சிரத்தையும் நல்ல சகுனங்கள். “ வாழ்க்கை விசனகரமானது என்பது உண்மையல்ல. அழுகையும் துயரமும் தவிர அதில் வேறொன்றும் இல்லை என்பதும் உண்மையல்ல. மனிதன் அதில் எதையல்லாம் தேடி கண்டு பிடிக்க விரும்புகிறானோ அவையெல்லாம் வாழ்க்கையில் உள்ளன. வாழ்க்கையில் எது இல்லையோ எது குறைவாக உள்ளதோ அதனைத் திருத்திக் கொள்ளும் சக்தி, உருவாக்கிக் கொள்ளும் சக்தி மனிதனிடம் உண்டு” என்கிறார் மார்க்சிம் கார்க்கி. அந்த வகை மனிதர்களில் ஒருவர் ஜோதிஜி. தொடர்ந்து போராடுதலை சாதாரணமாக்கிக் கொண்டும் எழுதியும் வருபவர். இந்தக் கட்டுரைகளில் நல்ல காரைகுடி சமையல் போல் , புளிப்பும், காரமும் உண்டு. பத்தியமும் உண்டு. வயிறு கெடாமல் இருக்க எல்லாம் தேவை. எது வயிறைக் கெடுக்காது என்பது திருப்பூர் வாசகனுக்கும், பின்னலாடை துறை பற்றி தெரிய ஆசைப்படுபவனுக்கும் புரியும். வெளிநாட்டு இணையதளமொன்றில் தொடராக வந்தது இது . ஜோதியின் தொடர்ந்த உழைப்பு இப்புத்தக வடிவத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

– சுப்ரபாரதிமணியன், திருப்பூர்

Series Navigation
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *