தினம் என் பயணங்கள் -24 என் சைக்கிள் பஞ்சர் !

This entry is part 14 of 19 in the series 6 ஜூலை 2014

 

அவசரம்! அலுவலகத்தில் வேலை பத்து விரல்களுக்கு மேல் சுமையாய் கிடக்கிறது. நான் சைக்கிளில் ஏறி அமர்ந்து, அம்மா கொடுத்த தோள் பையை வாங்கித் தோளில் மாட்டியபோது தான் பிரசில்லா [தமிழ்ச்செல்வியின் பெயர்] இந்த மூட்டையை பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் கொண்டு வந்து தரியா என்றாள் ஜெயலட்சுமி டீச்சர். அம்மா தலைமை ஆசிரியையாக பணியாற்றிய போது, அவளுக்குகீழ் பணியாற்றியவள்.

எப்பொழுதும் ஆட்டோவுக்குத்தான் போன் செய்யச் சொல்வாள், இதென்ன திடீர் என்று என்ற எண்ணம் தோன்றிய போதும் சரிக்கா என்று ஒப்புதலாக தலை அசைத்தேன். மாணவர்களுக்கான இலவசப் புத்தக பை. இப்பொழுது அரசாங்கமே மாணவர்களுக்கான சீரூடை, காலணி புத்தகப் பை, புத்தகம் நோட்டு அனைத்தும் கொடுத்து விடுகிறது.

சைக்கிளில் நான் கால் வைக்கும் இடத்தில் மூட்டை உட்கார்ந்து புன்னகைத்தது. அட இப்ப பார் என்று மனதிற்குள் சொல்லியவளாக என் கால்களைத் தூக்கி மூட்டை மேல் வைத்து மூட்டை கீழ் விழாதவாறு ஒரு கையில் பிடித்தபடி ஒரு கையால் சுழற்றினேன். சைக்கிள் முன் புறம் நகரத் துவங்கியது.

பிரசில்லா இருப்பா நானும் வரேன் என்றாள், டீச்சர்.

இந்த சைக்கிள் கொடுத்த டேவிட் சாருக்கு நிச்சயம் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். சைக்கிள் கொடுத்த போதே நன்றி சொன்னாலும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் அவருக்கு அநேக நன்றிகள் பகிர்ந்தாயிற்று.

அந்த அறக்கட்டளையின் சட்டப்படி உதவி செய்பவரோடு நேரடித் தொடர்பு எதுவும் இருக்க கூடாது என்பது எழுதப்படாத விதி. எனவே அவருக்கா நான் வாங்கி வைத்த இயற்கைக் காட்சி படம் அலுவலக பீரோவிலேயே இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறது.

நான் அலுவலகம் போகும் வழியில் ஒரு மேடு இருக்கும், அதைக்கடக்க இயலாமல் எப்போதும் தடுமாறத்தான் செய்வேன். எப்போதும் நான் கேட்காமலேயே தள்ளி மேட்டைக் கடக்க உதவவென யாரேனும் இருப்பார்கள். இன்றும் அவன் தயங்கி நின்றான். அதற்கு காரணம் என் பின்னால் வந்து கொண்டிருந்த ஜெயலட்சுமி டீச்சராக இருக்கலாம்.

என் புன்னகைக்கு ஒரு குட்மார்னிங்கை பதிலாக்கிச் சிரித்து கடந்தான். ஜெயலட்சுமி டீச்சரே மேட்டில் தள்ளி விட்டாள். மேடு கடந்ததும் பிரதான சாலை, சாலையை குறுக்காகக் கடந்தால் பேருந்து நிலையம்.

இங்கயே இறக்கிக்கறேன் பிரசில்லா என்றவளை பஸ் ஸ்டேண்ட் தான போறீங்க வாங்க அங்கயே கொடுத்துட்டு போறேன் என்றபடி சாலையை கடந்தேன்.

இவ்ளோ தூரம் சுத்திட்டு போவியா, நான் தூக்கிட்டு போயிடறேன் இங்க இருந்து என்றாள்.

அது சரி நான் என்ன மூட்டையை தலை மேலா தூக்கிட்டு போறேன். சைக்கிள்ல மூட்டை ஜம்முன்னு உட்கார்ந்துட்டு இருக்கு எனும் போதே அந்த நினைவு வந்தது.

எப்போதேனும் யாரேனும் சிறு வகுப்பு பிள்ளைகள் அக்கா அக்கா பை வச்சுக்கறேன்கா என்று பின் இருக்கும் கூடையில் வைத்துக்கொள்வது உண்டு. அதுவுமில்லாமல், கால் வலிக்கிறது என்று ஏறி மடியில் சாய்ந்தபடி நின்று கொண்டு வருவார்கள். இந்த சைக்கிளில் என்னோடு நடந்து வரும் மகள் அருள் மொழிக்கும் இந்த சைக்கிள் மிகவும் பிடித்தம். யார் மம்மி அவர் ? முன்பே இந்த சைக்கிளை கொடுத்திருந்தால், உன் அருகாமையை இழந்திருக்க மாட்டேன் என்பாள்.

அம்மாவின் கையைப் பற்றியபடி நடக்கும், குழந்தைகளையும், அப்பாவின் பைக்கிலோ, தோளிலோ தொற்றியபடி வரும் குழந்தைகளைப் பார்க்கும் போது அவளுக்குள் ஒளிந்திருக்கும் ஏக்கம் கண்களில் தெரியும்.

பஸ் புரோக்கர், குட்டி எங்க போகனும் என்றார்.

மணிக்கல் !

அங்க நிக்கும் பஸ் என்று இடது சாரியை காண்பித்தார்.

இல்லப்பா இங்க வச்சுடு என்று டீச்சர் வலது சாரியை காண்பித்தாள். அங்கே அம்மா பாட்டில் தண்ணீரின் ஸ்டால் அருகே எடுத்து வைத்துக் கொண்டாள் டீச்சர்.
சரிக்கா நான் புறப்படறேன்

தேங்க்ஸ் என்றவளின் தேங்க்ஸ்சைப் புன்னகையோடு ஏற்றுக்கொண்டு கடந்து போனேன்.

முன்பு பார்த்த பேருந்து நிலையம் அல்ல அது. நாகரீக வளர்ச்சிப் பேருந்து நிலையத்தில் இடது பக்கம் (நான் உள் நுழைந்த போது நான் பார்த்த பார்வை கோணம் இது) வரிசையாய் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் தெரிந்தது. அப்படி ஒரு “ப” படிவப் பாதையை வலம் வந்து, சி.டி கடை, குளிர்ப்பானக் கடை, மளிகைக் கடை கடந்து மீண்டும் பிரதான சாலையில் இணைந்தேன்.

கூடையில் மல்லிகைப் பூக்கள் என்னை ஏந்திக்கொள் என்பது போல் தோன்ற பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன். ஒரு முறை வேலூர் பேருந்து நிலையத்தில் விரும்பி வைத்துக்கொண்ட மல்லிகை, அதன் பிறகு எப்போதேனும் என் விருப்பம் இன்றியே சில நிர்பந்தங் களினால் கூந்தல் ஏறுவதுண்டு, அப்போதும் படுத்தால் பூவிற்கு நோகுமோ என்று எடுத்து விடுவேன் தலையில் இருந்து. இந்த விசித்திர உணர்வு வெளிப்படும் போதெல்லாம் மற்றவர் முகங்கள் குறிப்பால் உணர்த்தும் “பைத்தியகாரி பட்டத்தை” உணராதவள் அல்ல.

அக்கா என்றாள் அந்த சிறுமி.

இவளை எங்கோ பார்த்தேன் எங்கு என்று மூளை கசங்கும் முன் நினைவு கோப்பையில் இருந்து நினைவைத் துளி பருகியது. ஒரு முறை சைக்கிளின் பின் சக்கரம் பள்ளத்தில் சிக்கிவிட மேல் ஏற முடியாமல் தடுமாறியவளை தள்ளி அந்த சிக்கலில் இருந்து விடுவித்த பிஞ்சுக் கரங்களுக்கு சொந்தக்காரி.

வா என்று அழைத்து மடியில் அமர வைத்துக் கொண்டேன்.

அவள் பை எப்போதும் போல் என் பின் கூடையில் தஞ்சம் .

இந்த இரட்டையர் சவாரியை வேடிக்கைப் பார்ப்பவர்களும் இப்போது அதிகரித்து வருகிறார்கள். சில நேரம் இது நால்வரின் பயணமாக அமைந்துவிடுவது உண்டு. பின்புறக் கூடையில் இருவர், என் மடியில் ஒருவன், நான் என்று எண்ணிக்கையில்.

வட்டாட்சியர் அலுவலக வாயிலில் நிறுத்தி அவளிடம் விடைப்பெற்று இருக்கையில் அமர்ந்த போது,

ரொம்ப நேரமா காத்துட்டு இருக்காங்க, இவங்கள பாத்து அனுப்ப சொன்னார் தாசில்தார் அய்யா என்று கூறினாள் அலுவலகம் பெருக்கும் தெய்வாணை.

நேரம் 9 தான். இதற்குள் எங்கிருந்து வந்தாள் என்று எண்ணிக்கொண்டேன்.
எண்ணைய் காணாத தலை, அழுக்கேறிய புடவை. குளித்தே பல நாட்கள் ஆகியிருக்கலாம். அழுது சிவப்பேறிய கண்கள். இடுப்பில் ஒரு குழந்தை வெள்ளை தோல், கண்கள் சுருக்கி பார்த்தது. தலை முழுவதும் வெள்ளை முடிகள். நாலு வயதொத்த சிறுவன் அருகில், பாவம், உடையில்லா நிர்வாணன். தாயின் வாயிறு மேடு தட்டியிருந்தது. மூன்றாவதின் உருவாக்கம்.

என்ன என்றேன்.

அவள் முனுக்கென்று கண்ணீர் விட்டு முந்தானையால் மூக்கை சிந்தினாள்.

சாப்பிடேன் மா என்று இடை புகுந்தாள் வேலைக்காரி, தெய்வாணை.

எப்போதேனும் தெய்வாணையோடு என் காலை உணவு இருக்கும். இன்றும் பசிதான் (04.07.2014) ஆனால் அந்தக் குழந்தைகள் முன்பு அந்த தாயை விட்டு சாப்பிட என்னவோ போல் இருந்தது.

“எனக்கு வேண்டாம் தெய்வாணை, அம்மா நீங்க சாப்பிடுங்க,” என்று சொல்லி, நீ சாப்பிட்டியா என்று அந்த பெண்ணிடம் கேட்டேன்.

என் கேள்வியை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், “என் புருஷன் கரண்டு கம்பத்துல பக்கத்து வீட்டுக்கு உதவ போயிச் செத்துட்டாரும்மா, பேங்க்ல கொஞ்சம் நகை வச்சிருக்கேன் ஓட்டு ஐடி கேக்குறாங்க,” என்று அழுதாள்.

ரேஷன் கார்ட்டு செராக்ஸ் வச்சிருக்கியா? என்ற கேள்விக்கு ஆம் என்று தலையசைத்தவளிடம், ரேஷன் கார்ட் நகலை வாங்கி விண்ணப்பத்தோடு இணைத்து ஒரு கையெழுத்தை வாங்கிக்கொண்டு, கதவு எண் கேட்டு வாக்காளர் பட்டியலில் அவள் பெயரைத் தேடி அந்த அடையாள அட்டை எண்ணை விண்ணப்பத்தில் குறித்துக்கொண்டு அவள் கட்ட வேண்டிய 25 ரூ பணத்தை கட்டி, ரசீதை அவளிடம் கொடுத்தேன்.

அவள் முந்தானையில் முடிந்திருந்த ஒரு 50 ரூபாய் தாளை நீட்டினாள். “வேண்டாம் போ நான் சிப்பந்திக் கிட்ட அடுத்த வாரத்துல கொடுத்து
விடறேன் வாங்கிக்க,” என்றேன்.

“இப்பவே கிடைக்காதா ?” என்று தயங்கினாள்

திருவண்ணாமலை போய் தான் கார்ட் பிரின்ட் போடனும் அடுத்த வாரம் ஆகிடும்.

சரி என்று புறப்பட்டவளிடம் கொடுக்க ஆறுதல் இல்லை என்னிடத்தில்.

வறுமையை மனதில் உணர்ந்தேன். இது போன்ற எந்த அனுபவமும் எனக்கு இல்லை என்றது எண்ண ஓட்டம். மூன்று குழந்தைகளை தாங்கும் எந்த நிர்பந்தமும் இல்லை. ஆனால் இதே போன்று அழுக்கேறிய கந்தையோடு வயத்து பிள்ளைத்தாயிச்சியாய் நின்ற அனுபவம் உண்டுதான். அந்த வலி ஒரு கணம் வந்து போனது.

அமைதியாய் இரு என்று மனதை அதட்டினேன். எண்ணம் ஒரு கணம் நின்று பின் மீண்டும் அன்னைக்கு அந்த பாட்டி சொன்னாளே, “அழவழவா இருக்க உனக்கு கால் மட்டும் இருந்தா இந்த உலகத்தையே விலைக்கு வாங்கியிருப்பேன்னு.”
வாயை மூடு என்றேன் (பின் எனக்குள்ளாக சொல்லிக்கொண்டேன் எண்ணத்திற்கு ஏது வாய்)

இப்போது மட்டும் என்ன வாழ்க்கை இலகுவாகத்தான் போகிறது. இதே அழகழகு போதும் என்றேன்.

இந்த எண்ண ஒட்டத்தைப் படித்துக்கொண்டிருக்கும் நீ்ங்கள் ஒரு வேளை நகைக்கக் கூடும்.

நிறைவாய் நிம்மதியாய் இருக்கிறேன். வலிகளை அனுபவித்து அனுபவித்து இந்த வாழ்க்கையே வழி நடத்துக்கிறது. எப்படி வாழ வேண்டும் என்பதையும் எப்படி வாழக் கூடாது என்பதையும் காட்டி.

விலையற்ற அனுபவ உண்மையின் வழி என் வாழ்க்கைப் பயணம். அதை எதிர் நோக்கும் விதம் தான் வாழ்தலுக்கான உத்தரவாதம்.

சைக்கிளில் அமர்ந்து வீடு திரும்ப திசை திரும்பிய போது தான் வலது சக்கரத்தில் காற்று சுத்தமாக இல்லாததை உணர்ந்தேன். இது போல் காற்றற்ற டயராய் இந்த உடலும் இருக்கும். அது வரையில் தான் இன்பம் துன்பம் அத்தனையும்.

இந்த தத்தவ ஞானமெல்லாம் இப்போழுது எதற்காக வருகிறது இந்த தமிழ்ச்செல்விக்கு ?

இரண்டு நாட்களுக்கு முன்பு (02.07.2014) தான் பஞ்சர் ஒட்டினேன். அன்று இதாயத் இருந்தான். ஒரு யு டேர்ன் அடித்து திரும்ப உதவினான். அதன்பிறகு காதருக்கு போன் செய்து சைக்கிள் காற்றடிக்கும் பம்பிற்குகாக போன் செய்து அவன் வராததால் சிறிது தூரம் சிரமத்துடனான பயணம் பிறகு மைக்கேல் அண்ணாவைப் பார்த்தேன். அவர் சைக்கிள் ஷாப்பில் விட வருவதாக சொல்லி வந்த போதும் பஞ்சர் ஒட்டி முடியும் வரை என்னுடனே இருந்து உதவிசெய்த பிறகு தான் கடந்து போனார்.

சைக்கிள் ஷாப்பில் அறிமுகமானவன் தான் என்ற போதிலும், நோன்பு முடிக்கனும் என்று பஞ்சர் ஒட்ட மறுத்து விட்டான்.

சரி காற்றாவது அடித்துத்தா என்று மைக்கேல் அண்ணா கேட்டுக்கொண்டிருக்க!
ட்ர்ர்ர்ர்ர்ரட்டர்ரர்ர் ட்ர்ரர்ர்ர் டட்டட்ர்ர்ரர்ர்ர் என்ற சப்தம் என்னை திசை திருப்பியது. திரும்பிய போது பேருந்து ஒன்று அந்த சப்தத்தை மறைத்த படி

அந்த பையன் காற்றடிக்க காற்று கூட்டிற்குள் அடைபடாமல் ஸ்ஸ்ஸ்ஸ் என்று சுதந்திர மூச்சுவிட, என்ன நினைத்தானோ பக்கெட்டு நிறைய தண்ணீரும் பஞ்சர் ஒட்ட தேவையான கருவிகளுடன் சக்கரத்தை அணுகினான்.
சைக்கிளில் இருந்து இறங்கவா என்ற வினவியளை வேண்டாம் என்று மறுத்துவிட்டான்.

இப்போது ட்ட்ட்ட்டர்ர்ர்ர்ர்ர் என்று ஒரு மோட்டாரின் ஒலி செவிகளுக்கு துல்லியமாக, ஒரு இருசக்கர சைக்கிளில் கயிற்றில் சிக்கியிருந்த தகரடப்பா எழுப்பிய ஒலி.

அம்மா பாருங்க அய்யா பாருங்க! இது போல எத்தனையோ சைக்கிளில் செய்யற வித்த இருக்கு, இதெல்லாம் நீங்க போடுற 5 ரூவா காசுக்காகத்தான். இது உங்களுக்கு டீ செலவு, எனக்கு……………….அவன் சொல்லி முடிக்கும் முன் மற்றொரு பேருந்து……………….பேருந்து கடந்த உடன் திரும்பவும் சைக்கிளில் ஏறி படு வேகமாய் வலம் வந்தான். சைக்கிள் வேகமாக சென்று கொண்டிருக்க சைக்கிள் சீட் மேல் ஏறி நின்றான். தொப்பென்று சீட்டில் அமர்ந்து சைக்கிளில் திரும்பி கூட்டம் குழுமியிருந்த இடத்திற்கு வந்து அய்யா பாருங்க! அம்மா பாருங்க என்று துவங்கினான். திரும்பவும் தடையாய் பேருந்து.

அதற்குள் பஞ்சர் ஒட்டி முடித்திருக்க,

சாகசம் பண்றது எதாவது வெட்டவெளியில பண்ணனும் இங்க வந்து இந்த நெருக்கடியில பண்ணா? என்று தலையில் அடித்துக்கொண்டார் மைக்கேல் அண்ணா!

பஞ்சர் ஒட்டியவனுக்கு பணம் கொடுத்த போது பஞ்சர் கடைக்கு எதிர் கடையான பழக்கடை காதர் என்னைப் பார்த்துவிட்டு போன் செய்தான்.

அய்யோ சாரிங்க இந்த வேடிக்கையில நீங்க போன் செய்தத மறந்தே போய்ட்டேன். கோவிச்சுக்கிட்டிங்களா? என்ற வினாவிற்கு என்ன பதில் கூறுவது.
அதெல்லாம் ஒன்றுமில்லை என்று போனில் சொல்லியபடி எதிர்சாரியில் நின்றவனுக்கு புன்னகையோடு கையசைத்து விடைப்பெற்றேன்.

தேங்க்ஸ் என்றேன் பஞ்சர் ஒட்டியவனுக்கு.

ஒவ்வொருவரும் தங்களை ஏதோ ஒரு செயல் மூலம் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரம் படுத்தாதவர்கள் யாரும் இல்லை. அவரவர் விளம்பர நேர்த்தியின்படி அவரவருக்கு அளிக்கப்படும் விளம்பரமும் இருக்கும்.

இந்த 5 ரூபா, டீ வாங்கித் தந்தது, வடை வாங்கி தந்தது என்று ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என்னுள் எழுந்த வினாவிற்கு பதிலும் இருந்தது. 5 ரூபாயும், டீயும் வடையும் கூட ஒரு மனிதனின் தேவையை நிறைவேற்றுகிறது. அதில் திருப்தி அடைந்து வாழ்க்கையை கடத்திக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சேவை என்பது அவன் தேவை உணர்ந்து செய்வது.
அவன் சாகசம் எப்போது முடிந்திருக்கும். இன்று அந்த இடம் வெறிச்சோடி போயிருந்தது.

பஞ்சர் டா திரும்ப காத்து போயிடுச்சு நீ ட்யுபே மாத்திடு டா சைக்கிள் மிதிக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு, மனதின் சோர்வு வார்த்தைகளில் வெளிப்பட, இது ஒரு விளையாட்டு இதை விளையாடு என்றேன் எனக்குள்ளாக!

விளையாடினால் என்ன கிடைக்கும்?

அனுபவம். அனுபவம் போல் விலையேறப் பெற்றது எதுவுமில்லை.

இங்க ட்யுப் இல்லை. உங்க வீட்டாண்ட இருக்குற கடையில மாத்திக்கங்க காத்து வேணா அடிச்சுத்தரேன்.

சரி என்ற ஒப்புதலுக்கு பிறகு காற்றடித்துக்கொண்டு அந்த கடையை நோக்கிய என் பயணம் ஏமாற்றத்தில் முடிந்தது.

சைக்கிள் ட்யுப் இருந்தும் அதை மாற்றும் வழி தெரிய வில்லை அவர்களுக்கு. ட்யுப்போடு சுவற்றில் எறியப்பட்ட பந்து போல் புறப்பட்ட இடத்திற்கே வந்து நிற்க எனக்கும் தெரியாது என்று கையை விரித்தான்.

மீண்டும் மனம் சோர்ந்தது.

என்ன பொழப்பு இது. ஒத்தாசைக்கு ஒருத்தரும் இல்லாம, இதுக்கும் இதுக்கும் அலைஞ்சு முனுக்கென்று முன்விழி வந்துவிட தவித்தது கண்ணீர்.

ஏய் உன் முட்டாள் தனத்தை நிறுத்து என்றேன். மூச்சை ஆழ எடுத்து விட்டேன். ஒன்று இரண்டு மூன்று……………………. பத்து. காதராவது உதவி இருக்கலாம் என்றது மனம்.

காதர் நண்பன் போல ஆனால் நட்பின் வட்டத்திற்குள் வராதவன். ஒரு புன்னகையும் எப்போதேனும் முடிந்த வரை சிறு உதவிகளும் செய்திருக்கிறானே! இப்போது செய்யாதது மட்டும் ஏன் பூதகரமாகத் தெரிகிறது என்றேன்.

ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்து போ இது ஒரு விளையாட்டு! இதற்கான தீர்வு இன்னும் கொஞ்ச நேரத்தில் என்றேன்.

என் தம்பியின் பழச்சாறகம் வந்த போது பஞ்சர் ஆயிடுச்சுடா என்றேன் சோர்வாய்!
அய்யப்பனுக்கு போன் பண்ணேன் என்றான் அவன். யாரும் டியூபை எடுக்க முடிய வில்லை. அது வெளிநாட்டிலிருந்து வந்தது !

அட ஆமாமில்ல! சைக்கிள் கொடுத்த நிறுவனமே சர்வீசும் செய்யும் அதை எப்படி மறந்தேன்.

போன் செய்ய செவ்வாய்க் கிழமை வருவதாக கூறினான் அய்யப்பன். இதிலும் ஒரு சிக்கல் அதுவரை நான் எப்படி அலுவலகம் செல்வது! எழுந்த அடுத்த கேள்விக்கு ஆனந்த் பதில் தந்தான் நான் ஸ்கூட்டியில அழைச்சுட்டு வந்து விடறேன் பிரிசில்லா ஆன்டி (பிரஸ்கில்லாள் என்னும் என்குடும்பத்தார் வைத்த கிறித்துவ பெயர் அவரவர் வாய் உருவாக்கப்படி பிரசில்லா, பிரஸ்கில்லா, பிரசல்யா என்று மருவி ஒலிப்பது வாடிக்கைதான்)

வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு, அழுது கொண்டும் விளையாடலாம் சிரித்துக் கொண்டும் விளையாடலாம். அது அவரவர் தேர்ந்தெடுக்கும் முறையைப் பொருத்தது. என்னுடைய 04.07.2014 நாளுக்கான வாழ்க்கை விளையாட்டை நேர்மறையாய் விளையாட முயற்சித்து வெற்றியும் பெற்றேன். என் வாழ்க்கையில் நான் வாழ்ந்த நிறைவான வாழ்நாள் அதுவாக இருக்கும்.

சைக்கிள் பஞ்சர் போல் என் மனமும் அன்று பஞ்சர்தான் !

[தொடரும்]

Series Navigationசெவ்வாய்க் கோள் செல்லும் நாசாவின் எதிர்கால மனிதப் பயண தட்டுத் தளவூர்தி மெதுவாய் இறங்குவது நிரூபிக்கப் பட்டது.க‌ப்பல் கவிதை
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *