வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

12.

ஓட்டமும் நடையுமாக ராமரத்தினம் கோவிலின் நுழை வாயிலை யடைந்த போது அவன் உடம்பு முழுவதும் வேர்வையில் சில்லிட்டிருந்தது. புழுக்கமான அந்நிலையிலும் கோவிலின் அரசமரத்துக் காற்றின் குளுமையால் வேர்வையின் பிசுபிசுப்புச் சற்றே தணிந்த உணர்வை அனுபவித்தவாறு அவன் விரைவாய்க் கோவிலுள் நுழைந்தான். கோவில் பூட்டப்படும் நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்ததை ஆளரவம் குறைந்திருந்ததி லிருந்து அவன் புரிந்துகொண்டான். மின் தடை ஏற்பட்டிருந்தது. முதலில் அவன் எண்ணெய் விளக்குகளின் மங்கிய வெளிச்சத்தில் இருந்த பிராகாரத்துக்குப் போனான். அங்கே தட்சிணமூர்த்தியின் சன்னதிக்குப் பின்புறத்திலிருந்து ஈனக்குரலில் ஒரு முனகல் கேட்டது. அது கோமதியினுடையதுதான் என்று அவனுக்குப் புரிந்துவிட்டது. அவன் பதற்றத்துடன் பின்புறத்துக்குப் போனான்.
கோமதிதான். அரை மயக்கமாய்க் கிடந்தாள். இன்னது நடந்து விட்டிருந்திருக்க வேண்டும் என்பது புரிந்து போனதில் அவன் கண்களில் நீர் மல்கியது.
‘கோமதி! கோமதி!”
“அண்ணா!” என்று குழறிவிட்டு அவள் அழத் தொடங்கினாள்.
“ …ஸ்ஸ்ஸ்! சத்தம் போட்டு அழாதே. ..” என்று அவன் அவள் வாயைப் பொத்தினான்.
“நடக்க முடியும்தானே? முகத்தைத் துடைச்சிண்டு கெளம்பும்மா. யாரும் நம்மைக் கவனிக்கிறதுக்கு முந்தி கெளம்பிப் போயிடணும்…”
கோமதி மெதுவாக எழுந்தாள்.
“அண்ணா”
“வேண்டாம். இங்கே எதுவும் பேசாதே. அப்புறமாப் பேசு. திடீர்னு கரண்ட் வந்தாலும் வந்துடும்….அழாம வா..யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரக்கூடாது. ”
இருவரும் சேர்ந்து வெளியே வந்தபின் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
வழியில், “அம்மாவுக்கு இப்போதைக்கு எதுவும் தெரிய வேண்டாம். அம்மாவுக்கு இருக்கிற கவலைகள் போதும்…” என்றான்.
அவள் ஒன்றும் சொல்லாமல் நடந்தாள்.
அடுத்த தெருவை இருவரும் அடைந்ததும் தெரு விளக்குகள் எரியத் தொடங்கின. வெளிச்சத்தில் கோமதியைப் பார்த்த அவன் திடுக்குற்றான். முகத்தில் இரண்டு இடங்களில் கீறல்கள் இருந்தன.
“கோமதி! முகத்தில கீறல் இருக்கு. கோவில்ல தடுக்கி விழுத்துட்டதாயும் முள்ளுக் குத்திட்டதாவும் நீ சொல்லணும். தெரிஞ்சுதா?”
“அம்மா ‘ஏன் இத்தனை நாழி’ ன்னு கேட்டா என்ன சொல்றது?”
“முள் புதர்ல விழுந்துட்டதாச் சொல்லு. திடீர்னு அப்ப பவர்-கட் வந்துடுத்துன்னும், அதனால பயந்துண்டு அப்படியே கிடந்ததாயும் சொல்லு…நான் வந்துதான் உன்னை அங்கேர்ந்து மீட்டதாயும் சொல்லணும். தெரிஞ்சுதா?”
“சரி.”
“…. ஆள் யாருன்னு சொல்ல முடியுமா?”
“இல்லேண்ணா. அவன் திடீர்னு விளக்கு அணைஞ்சதும் என் வாயை இறுக்கமாப் பொத்திட்டான். ஆனா, அண்ணா, எனக்கு எங்கேர்ந்துதான் அவ்வளவு பலம் வந்ததோ, நான் அவனை எதிர்த்துப் போராடினேன். அப்ப அவனோட கழுத்துல இருந்த மைனர் செய்ன்ல பாதி என் கையில் அகப்பட்டுது. இதோ!”
“அதை இப்படி எங்கிட்ட கொடு… நான் வெச்சுண்டிருக்கேன் பத்திரமா. அவனைக் கண்டுபிடிக்க இது உதவியா யிருக்கும்.”
“கண்டுபிடிச்சு?”
“நாலு சாத்தாவது சாத்தணுமில்லையா? எனக்கு வர்ற் கோவத்துக்கு அவன் கையையும் காலையும் அப்படியே முறிச்சுப் போடணும் போல இருக்கு…”
“அதெல்லாம் வேண்டாண்ணா. வீணா உனக்கு ஆபத்தைத் தேடிக்காதே. விட்டுடு.”
“அதைப்பத்தி அப்புறமா யோசிக்கலாம்,.” என்ற ராமரத்தினம் அவள் கொடுத்த ஒரு சாண் நீளமுள்ள சங்கிலித் துணுக்கைத் தன் சட்டைப் பையில் இருந்த பணப்பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டான்.
“அந்த ஆளைப் பத்தின அடையாளம் ஏதாவது சொல்ல முடியுமா?”
“நல்ல உயரம், அண்ணா. தலை பரட்டையா யிருந்தது. எப்பவோ தோடு போட்டுண்டு இருந்திருப்பான் போல இருக்கு. காதுல துளை இருந்தது. வேற எதுவும் அந்த இருட்டில எனக்குத் தெரியல்லே…”
“சரி. வீடு நெருங்கிண்டிருக்கு. முகத்தைச் சாதாரணமா வெச்சுக்க.”

…. “என்னடி இத்தனை நாழி? கோவிலை ரெண்டு பண்ணிட்டு வர்றியா?” என்றவாறு மகளை எதிர்கொண்ட பருவதம் அவள் முகம் கன்றிக் கிடந்ததையும் அதில் தென்பட்ட அழுத்தமான கீறல்களையும் பார்த்துத் திடுக்கிட்டுப் போனாள்.
“என்னடி, முகமெல்லாம் கீறல்?”
கோமதி ராமரத்தினம் சொல்லிக் கொடுத்திருந்தபடியே பொய் சொல்லிச் சமாளித்தாள். பிறகு அவள் சிரிப்பற்ற முகத்துடன் பின்கட்டுக்குப் போனாள்.
பருவதம், “ஏண்டா, ராஜா, ஒரு மாதிரி இருக்கே?” என்று ராமரத்தினத்தை நோக்கிக் கேட்டாள்.
“தினமும் இதே கேள்வியைக் கேட்டுண்டிரு. ஒரு மாதிரியும் இல்லே. ஆபீஸ்ல எக்கச்சக்க வேலை. ரொம்ப டயர்டா இருக்கு. வேற ஒண்ணும் இல்லே.”
“உன் சிநேகிதன் அந்த ரமணியை நேர்ல போய்ப் பார்த்துப் பேசேண்டா. அவனோட அப்பா மூலமா ஒரு நல்ல வேலையாத் தேடித்தரச் சொல்லேன்…”
“ஆட்டும், ஆட்டும். … எனக்குப் பசியே இல்லே. ராத்திரி சாப்பாடு வேண்டாம்…” என்ற அவனது பார்வை அவனையும் மீறி மாலாவின் பக்கம் சென்றது. மாலாவின் பார்வையும் அவன் பார்வையைச் சந்தித்த பின் கணத்துக்கு மேல் நீடிக்காமல் அகன்றது. அண்ணன் தன்னை உற்றுப் பார்த்தது போல் அவளுக்குத் தோன்றியது. ‘ஒருவேளை ரமணி ராஜாவோடு பேசியிருந்திருப்பானோ?’ என்று நினைத்தாள். அந்நினைப்பால் அவளுள் ஒரு படபடப்புத் தோன்றியது.
“ரொம்ப நல்லாருக்குடா. டயர்டா யிருக்குன்னு சொல்றே? அத்தோட பட்டினியோட படுத்தா காலையிலே எழுந்திருக்கும் போது இன்னும் சோர்வா ஆயிடுவே. வா, வா. ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போய்ப் படு….” என்று பருவதம் அவனக் கட்டாயப் படுத்த, அவன் வேண்டா வெறுப்புடன், “கொஞ்ச நேரம் கழிச்சுச் சாப்பிடறேம்மா…” என்றபடி அகன்றான்.
அன்றிரவு அந்த வீட்டில் சின்னவன் ஜெயமணியைத் தவிர மற்றவர்கள் யாருமே சரியாக உறங்கவில்லை.
பருவதம் வழக்கம் போல் உறக்கமும் விழிப்புமாய்ப் புரண்டுகொண்டிருக்க, ராமரத்தினம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக நிம்மதிக் குறைவுடன் முழுக்க முழுக்கத் தூங்காமலே புரண்டுகொண்டிருந்தான். ராமரத்தினத்தின் பார்வையில் தான் உணர்ந்த வேறுபாட்டால் மாலாவுக்கும் உறக்கம் வரவில்லை. கோவிலில் நடந்துவிட்ட துர்நிகழ்வால் கோமதியும் அன்றிரவு தூக்கம் தொலைத்தாள்.
ரமணியின் அப்பா தன்னை வரச்சொன்னதையும், அவருடன் நடந்த கசப்பான உரையாடலையும் மறு நாள் ஒரு தோதான நேரத்தில் மாலாவுக்குச் சொல்லிவிடவேண்டும் என்று ராமரத்தினம் தீர்மானித்தான். ’அது அவளை வருத்தும்தான். ஆனாலும் சொல்லாமல் மறைப்பதும் சரியில்லை. அவரது மனப்பான்மை அவளுக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்…ரமணியைப் பார்த்தும் அது பற்றி நான் பேசிவிட வேண்டும்… அவனுக்குத் தெரியக் கூடாது என்று அவர் கட்டளை யிட்டிருந்தாலும் நான் அதைக் கீழ்ப்படிய வேண்டியதில்லை… வருவது வரட்டும்….’
… யார் வீட்டுக் கெடியாரத்திலோ பன்னிரண்டு மணி அடித்தது. சற்றுத் தொலைவில் படுத்துக்கொண்டிருந்த தாயையும் தங்கைகளையும் பார்த்துப் பெருமூச்சு விட்டு விட்டு ராமரத்தினம் கண்களை மூடிக்கொண்டான்.
அப்போது மாலா எழுந்து நின்றாள். கண்ணாடி வளைகளின் ஓசையிலிருந்து அது அவனுக்குப் புரிந்தது. ‘ஒருவேளை பாத்ரூமுக்குப் போகிறாளோ என்னவோ’ என்று எண்ணிக்கொண்டான். ஆனால் மெல்ல எழுந்து நின்ற அவள் சுற்று முற்றும் பார்த்துவிட்டு மேசைப்பக்கம் சென்றதைக் கவனித்து அவன் அரைக்கண் மூடிய நிலையில் அவளைக் கவனித்தான்.

Series Navigation
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *