உலகில் சைவ உணவு வழக்கம் நிறுவனப்படுத்தபட்ட ஒரே சமூகம் இந்தியாதான். இந்தியாவில் தோன்றிய ஜைன சமயம் மாமிசத்தை முற்றிலும் தவிர்த்தது. பவுத்தத்திலும், இந்து மதத்திலும் மாமிசம் அனுமதிக்கபட்டதா, தடுக்கபட்டதா என பெருத்த விவாதமும், குழப்பமும் உண்டு. சீக்கிய மதத்தில் மாமிசம் தடுக்கபடவில்லை எனினும் குருத்வாராக்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படுவது வழக்கம்.
ஆக இந்தியாவில் தோன்றிய மதங்கள் அனைத்திலும் மாமிசம் ஒன்று தடுக்கபட்டதாக அல்லது கட்டுபடுத்தபட்டதாக மட்டுமே இருப்பதை காணலாம். இது ஏன் என்பதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் இத்தகைய சைவ உணவு வழக்கம் மற்ற நாடுகளில் இல்லாத அளவு ஒரு பண்பாட்டு சிக்கலை இந்திய சமூகத்தில் உருவாக்கி உள்ளது. அதை ஆராய்வதே கட்டுரையின் நோக்கம்.
மாமிசம் உண்ணும் இந்துக்களும் விசேஷ நாட்கள், பண்டிகைகள், திருவிழா சமயத்தில் மாமிசம் தவிர்ப்பார்கள். எல்லாம் நாளும் மாமிசம் உண்ணும் இந்துக்களும் கூட கடவுளுக்கு மாமிசம் படைப்பது இல்லை. வால்மிகி இராமாயணத்தில் சீதையும், இராமனும், இலக்குவனும் மாமிசம் உண்பதாக எழுதப்பட்டு இருப்பினும் இராமர் கோயில்களில் சைவ உணவே பிரசாதமாக படைக்கபடுகிறது. இராமபக்தர்கள் என்றால் உணவுரீதியாக சைவர்கள் எனவும் ஆகிவிட்டிருக்கிறது. இதன் விளைவு என்னவெனில் புரட்டாசி, மார்கழி மாத ஐயப்பன் விரதம் மாதிரி சில காலகட்டங்களில் மாமிச விற்பனை படுத்துவிடும் சூழல் உருவாகி உள்ளது.
மதரீதியாக சைவம் ஆகாது என ஆகிவிட்டதால் உணவகங்கள், பணியிடங்கள், விருந்துகளில் வெஜ், நான்வெஜ் என பிரிந்து முட்டை பரிமாறும் இடங்களையும் கூட தவிர்ப்பது/ ஒதுக்கி வைப்பது என ஆகியுள்ளது. ஆக இந்திய சைவர்களை பின்வரும் வகைகளில் பிரிக்கலாம்
நனி சைவம் எனும் வீகன் உணவுமுறை: மேலைநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆகியுள்ள இம்முறைப்படி பால், முட்டை, தேன், மாமிசம், மீன் அனைத்தும் தவிர்த்து தாவர உணவு மட்டுமே உண்ணும் முறை
வெஜிட்டேரியன்: தாவர உணவுடன் பாலை மட்டும் சேர்த்து கொள்ளுதல்.
எஜ்ஜிடேரியன்: பால், முட்டை, தாவ்ர உணவுகளை சேர்த்துகொள்ளுதல்
பெஸ்கட்டேரியன்: மீன், பால், தாவ்ர உணவு சேர்த்து கொள்ளுதல். வங்காளம் முழுக்க இவ்வகை வெஜிட்டேரியன்களை காணலாம்
பிளெக்சிடேரியன்: வாரம் ஆறு நாள் சைவமாக இருப்பார்கள். ஞாயிறு மற்றும் விசேட நாட்களில் மட்டும் மாமிசம் உண்பார்கள்.
இது தவிர்த்து சில வகை மாமிசங்களை ஒட்டுமொத்த நாடும் தவிர்க்கும். உதாரணம் பன்றிக்கறி, மாட்டுக்கறி முதலானவை. மாமிசம் உண்ணும் இந்துக்களும் பெரும்பாலும் ஆட்டுடன் நிறுத்திவிடுவார்கள். அதை தாண்டி பெரிய உயிரினங்களான மாடு, பன்றி முதலானவை ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலானோரால் புசிக்கபடுவது இல்லை.
இத்தகைய குழப்பமான உணவுமுறையால் உணவை அடிப்படையாக வைத்து ஒரு படிம நிலை சமூகத்தில் உருவானது. சைவர்களில் ஒவ்வொரு பிரிவும் தன்னை விட தீவிர சைவர்களை சற்று அச்சத்துடனும், தன்னை விட சற்று லிபரலாக இருப்பவர்களை கொள்கையற்றவர்கள் என எண்ணுவதும் வழக்கம். உதாரணமாக முட்டை உண்ணும் வெஜிட்டேரியன்களை பால் மட்டும் அருந்தும் வெஜிட்டேரியன்கள் சைவர்களாக ஒத்துகொள்வது இல்லை. மீனும் உணவில் சேர்ந்தால் அவர்கள் தொலைந்தார்கள். மாடு, பன்றி என போனால் சமூக பிரஷ்டமும் நிகழலாம். பால் கூட அருந்தாத நம்மாழ்வார், ரஜனீஷ் முதலானவர்கள் மிக மதிப்புடன் பார்க்கபட்டார்கள். மறுபக்கம் மாட்டுக்கறி உண்பதே செக்யூலரிசத்தை நிருபிக்கும் வழிமுறையாக கருதப்பட்டு சில இயக்கங்கள் மாட்டுக்கறி உண்ணும் திருவிழாவை நடத்தின.
பசுவதை/பன்றி மாமிசம் என்பது இத்தகைய பண்பாட்டு அடையாள சிக்கல்களில் ஒன்று. மத கலவரத்தை உண்டாக்க பன்றிக்கறி/ மாட்டுக்கறியை மசூதி/கோயில்கள் இருக்குமிடத்துக்கு அருகே போட்டால் போதும், உடனே பெரும் கலவரம் வெடிக்கும் என்பது இங்கே நிலவும் துரதிர்ஷ்டவசமான நிலை. இந்திய மாநிலம் ஒன்றின் முதல்வரை மாட்டுக்கறி உண்பவராக ஒரு சஞ்சிகை சித்தரிக்க அதன்பின் ரணகளமே வெடித்தது. அந்த சஞ்சிகையின் மின் இணைப்பு துண்டிக்கபட்டு, அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானது.
இவை அனைத்தும் உணவுமுறையால் நம் சமூகத்தில் உருவான படிமநிலையின் துரதிர்ஷ்டவசமான உதாரணங்கள். இந்தியா என இல்லை, மற்ற சமூகங்களிலும் இதுபோன்ற சைவ/ அசைவ சிக்கல்கள் நிலவி வருவதை நாம் காணலாம். ஆனால் அந்த சமூகங்களில் இந்த சிக்கல் அசைவர்களிடையே காணப்படுகிறது. உதாரணமாக யூத, இஸ்லாமிய சமூகங்களில் சைவர் எதிர் அசைவர் என்ற ரீதியில் பிரச்சனைகள் இல்லை. கோஷர் அல்லாத மாமிசத்தை உண்ணும் யூதரை பிற கன்சர்வேடிவ் யூதர்கள் குறைகூறூவது என்ற அளவில் அது நின்றுவிடும். ஆனால் பல மதங்கள், கலாச்சாரங்களின் சங்கமமான இந்தியாவில் அவை அனைத்தின் உணவு பழக்க வழக்கமும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தின. ஜைனத்தின் தாக்கத்தாலேயே வைணவபிரிவுகளில் சைவ உணவு கோட்பாடு பரவியது என்ற ஒர் கருத்தாக்கம் உண்டு. இந்துக்களும் பன்றிக்கறியை தவிர்க்க காரணம் இஸ்லாமின் தாக்கமே எனவும் கருத இடமுண்டு. வால்மிகி இராமாயனத்தில் இராமன் பன்றிக்கறியை உண்டதும், கண்ணப்ப நாயனார் சிவனுக்கு பன்றி மாமிசம் படைத்ததும் வரலாறு என்பது நோக்கத்தக்கது. வீகனிசம் இங்கே பெருக பெடா மாதிரி அமைப்புகளும், உலகமயமாக்கலும் ஒரு காரணம். யாகங்களில் உயிர்ப்பலி நிகழ்வதை தடுத்ததில் பவுத்தத்தின் பங்கு அதிகம்.
இப்படி பிறமதங்கள், கலாசாரங்களால் பரவிய உணவு டாபுக்களை இந்துக்கள் கைவிட்டால் உணவினால் உருவான படிமமுறை இந்து சமுதாயத்தில் பெருமளவில் குறைந்துவிடும். உதாரணமாக யாகங்களில் மிருகங்கள் பலியிடப்பட்டால் கடவுளுக்கு மாமிசம் உகந்தது அல்ல எனும் நம்பிக்கை தகரும். மாமிசம் உண்பவர்கள் பூசாரி ஆகலாம் எனும் சூழலும் வரும். வீகனிசம் நம் மண்ணில் உருவான கோட்பாடு அல்ல என்பதை உணர்ந்தால் அது இங்கே பரவுவது தடுக்கபடும். வீகனிசம் திருப்பதிக்கு லட்டு விற்ற கதையாய் நம் மண்ணின் சைவ உணவு வழக்கத்தை சற்று தீவிரப்படுத்தி நமக்கே திரும்ப விற்கும் முறை. வெண்ணெய் திருடி தின்ற கண்ணனின் தேசத்தில் வீகனிசத்துக்கு ஏது இடம்? பன்றிக்கறியை முஸ்லிம்கள் தவிர்க்கலாம். இந்துக்கள் ஏன் தவிர்க்கவேண்டும்? அதேபோல் மாட்டுக்கறியை இந்துக்கள் தவிர்க்கலாம். முஸ்லிம்கள் ஏன் தவிர்க்கவேண்டும்?
விவேகானந்தர் கூறியது போல்
“புலால் உணவு உண்ணும் தேசங்கள் அனைத்தும் உயர்குணம் நிரம்பியவையாக, சிந்தனையாளர்களாலும், ஹீரோக்களாலும், வீரர்களாலும் நிரம்பி உள்ளன. யாகப்புகை இந்தியாவின் விண்ணை நிரப்பி இந்திய மக்கள் மாமிச உணவுகளை உன்ட நாட்களில் மிகபெரும் ஞானிகளும், வீரர்களும் இந்தியாவில் தோன்றினார்கள்…”
அத்தகைய சூழல் இந்தியாவில் மீண்டும் வளர சைவ உணவு முறை அசைவ உணவுமுறையை விட எவ்விதத்திலும் உயர்ந்தது அல்ல, அசைவம் எவ்விதத்திலும் மக்களை தாழ்த்துவதில்லை எனும் சூழல் சமூகத்தில் நிலவவேண்டும்.
- இஸ்ரேலின் நியாயம்
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை
- ’ரிஷி’யின் கவிதைகள்
- வில்லும் சொல்லும்
- கைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை
- தினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் !
- தளவாடங்கள்
- சைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்
- முரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.
- சென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது
- பாவண்ணன் கவிதைகள்
- வாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’
- டாப் டக்கர்
- சிநேகிதம்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 13
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 ஆதாமின் பிள்ளைகள் – 3
- திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்
- ரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்
- வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12
- தொடுவானம் 25. அரங்கேற்றம்