உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள பொதுவான உணர்வு பசியாகும். பசியில்லாத, பசிக்காத உயிரினங்கள் உலகில் இல்லை எனலாம். அனைவரும் பாடுபட்டு உழைப்பது வயிற்றுப்பசியைப் போக்குவதற்கே. இதனை,
‘‘பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?’’
என்ற பாவேந்தரின் பாடல்வரிகள் எடுத்துரைப்பதும் நோக்கத்தக்கது. வயிறு என்ற ஒன்று இல்லையெனில் உலகில் பெரும்பாலான பிரச்சனைகள் தோன்றாது. பசியினால் பல உயிர்கள் நாள்தோறும் இவ்வுலகில் துன்புற்று உயிரிழந்த வண்ணம் இருக்கின்றன. உணவில்லாததால் பசியேற்பட்டு பல்வேறு பிரச்சனைகள் உலகில் தோன்றிய வண்ணம் உள்ளன.
பசியைப் பற்றி பல்வேறு தகவல்கள் பழமொழிகளில் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. பசியினால் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை நமது முன்னோர்கள் அனுபவித்து அவற்றை பழமொழிகளாக நமக்கு வழங்கிச் சென்றுள்ளனர்.
பசியின் கொடுமை
கொடுமையிலும் கொடுமையானது பசிக்கொடுமையாகும். பசி பல்வேறு குற்றங்கள் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது. நற்குடியில் பிறந்தவர்களின் பண்புகளையும் அழித்துவிடும் தன்மை வாய்ந்தது பசி. எத்தகைய அறிவுடையோரும் பசி வந்திடில் தன்னிலையில் இருந்து இறங்கி இழிவாக நடந்து கொள்வர். இதனை,
“பசி வந்திடில் பத்தும் பறக்கும்“
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. அன்பு, அருள், இரக்கம், கருணை, மானம், உண்மை பேசுதல், அறிவு, குடிப்பிறப்பு, நன்மதிப்பு, நேர்மையாக நடத்தல் ஆகிய பத்துவிதமான நற்குணங்களும் பசி வந்தால் ஒருவனை விட்டு நீங்கிவிடும் என்பது இப்பழமொழி தரும் கருத்தாக அமைகின்றது.
பசியின் தன்மை
பசி எடுத்தால் பலரும் ‘சிறு குடலைப் பெருங்குடல் தின்கின்றது’ என்று கூறி விரைவாக உண்ண வேண்டும் என்று கூறுவர். சிலர் ‘பசியால் உயிரே போய்விடும் போல் இருக்கின்றது’ என்றும் ’பசி கண்ணைக் கட்டுகின்றது’ என்றும் வழக்கில் கூறுவர். இவை பசியின் தன்மையை விளக்குகின்றது. உணவு அடுப்பில் வெந்து கொண்டு உள்ளது சற்று பொறுத்திருங்கள் என்று கூறினால் பொறுத்திருப்பர். ஆனால் அடுப்பில் இருந்து உணவை இறக்கியவுடன் உடனே உணவைப் பரிமாறும்படி அவசரப்படுத்துவர். அவர்களை,
“ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலையாக்கும்“
என்ற பழமொழி சுட்டுவதைக் காணலாம்.
உணவு பரிமாறப்பட்டவுடன் அதனை மெதுவாக உண்ணாது அவசர அவசரமாக உண்பர். அதனால் விக்கல் ஏற்படுவதுண்டு. அவர்களைப் பார்த்து,
“காஞ்ச மாடு கம்புல விழுந்தது மாதிரி முழுங்குகின்றான்“
(காஞ்சமாடு-பசியால் வாடிய மாடு,முழுங்குதல்- உண்பது, இங்கு மாடு என்பது குறியீடு)
என்று வழக்கில் கூறுவர். மேலும் அவர்கள் உப்போ, காரமோ எதனையும் பாராது உண்பர். சுவையை உணர மாட்டார்கள். இத்தகைய பசியின் தன்மையை,
“பசி ருசி அறியாது“
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. சுவைக்காக உண்போர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை உண்பர். ஆனால் பசிக்காக உண்போர் உடலுக்கு நன்மை செய்யக் கூடியவற்றை உண்பர். எதனையும் பார்க்க மாட்டார்கள். வயிறு நிறைய உண்பர். பசிக்காக உண்ண வேண்டுமே தவிர சுவைக்கா உண்ணல் கூடாது என்ற சிந்தனையை இப்பழமொழி நமக்கு நல்குகின்றது.
அதிகமான பசியும் உணவு உண்ணுதலும்
அதிகமான உணவை உண்டால் மட்டுமே சிலருக்கு பசி அடங்கும். இல்லையெனில் அவரால் பசியைக் கட்டுப்படுத்த இயலாமல் வருந்துவர். சிலர் எதையாவது தின்று கொண்டே இருப்பர். அதிகமான பசியை நம் முன்னோர்கள் ‘யானைப் பசி’ என்பர். அப்பசியை உடையவர்கள் சிறிதளவு உணவை உண்டாலும் அவர்களது பசி அடங்காது. சிறிதளவு உணவைக் கொடுத்தால் அவர்கள்,
‘‘யானைப் பசிக்கு சோளப் பொறியா?“
என்று கேட்பர். மகாபாரதத்தில் வரும் பீமன் அதிகமாக உணவு உண்பவன். அப்பீமனை ஓநாய் வயிறு படைத்தவன் என்று மகாபாரதம் குறிப்பிடுகின்றது. பஞ்ச பாண்டவர்களில் தருமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் குறைவான உணவை உண்டுவிட்டு அதிகமான உணவைப் பீமனுக்குக் கொடுப்பர். ஏனெனில் அவனால் பசியை அடக்க இயலாது என்பதனை மகாபாரதம் எடுத்துரைக்கின்றது. சிலருக்கு எவ்வளவுதான் பசித்தாலும் அவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது, பிறர் கொடுத்தாலும் வாங்கி உண்ணாது பசியினை அடக்கிக் கொண்டு இருந்துவிடுவர். இத்தகைய தன்மானம் மிக்கவர்களின் பண்பினை,
‘‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது“
என்ற பழமொழி விளக்குகின்றது. மேலும் சுவையான இறைச்சி உணவினைச் சமைத்து வைத்து அவர்களைச் சாப்பிட அழைத்தாலும் அவர்கள் வர மறுத்துவிடுவார்கள். அவர்களை வற்புறுத்தி உணவு உண்பதற்கு அழைத்தால்,
‘‘கையக் கடிச்சா கறி நெல்லக் கொறிச்சா சோறு“
என்று கூறி மறுத்துவிடுவர். தன்மானம் மிகுந்தவர்களின் மன உணர்வினை இப்பழமொழி விளக்குவதாக அமைந்துள்ளது.
உணவு உண்ணுதல்
பசித்தால் மட்டுமே உணவினை உண்ணல் வேண்டும். இல்லையெனில் உண்ணல் கூடாது. அவ்வாறு உண்டால் உடலில் நோய் உண்டாகும். மருத்துவர்களும் இதனையே தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு எடுத்துக் கூறுவர். பசியின்றி தமக்குப் பிடித்தமான உணவைப் பார்த்தவுடன் உண்பது தீமையை நாமே வலிய வரவழைத்துக் கொள்வதைப் போன்றது. பசி ஏற்பட்டால் அவ்வுடம்பில் நோயில்லை என்று பொருள். இதனாலேயே நமது முன்னோர்கள்,
‘‘பசித்துப் புசி“
என்று வலியுறுத்தினார்கள் எனலாம். இப்பழமொழியின்படி நாம் உண்டு வாழ்ந்தால் நமக்கு எந்தவிதமான நோயும் ஏற்படாது.
சிலருக்கு உணவு கிடைத்தால் தங்களது வேலைகள் அனைத்தையும் மறந்து அவ்விடத்திலேயே தங்கிவிடுவர். அவர்களுக்கு உணவு கிடைத்தால் போதும். மற்றவற்றை அவர்கள் கருத்தில் கொள்ளாது நடந்து கொள்வர். அவர்களது இப்பண்பினை,
‘‘கஞ்சி கண்ட இடம் கைலாசம்
சோறு கண்ட இடம் சொர்க்கலோகம்”
(கஞ்சி-எஞசிய சமைத்த சோற்றில் நீர் ஊற்றி வைத்தது)
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. கைலாயம் என்பதையே கைலாசம் என்று இப்பழமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. உணவு உண்பதற்காகவே வாழ்வோரை இப்பழமொழி குறிப்பிடுவது தெற்றென விளங்கும்.
சிலர் உண்ணவுடன் கண்ணயர்ந்து தூங்கிவிடுவர். அவர்களுக்கு அதில் ஒரு இன்பம். பகலில் உண்டு சிறிது கண்ணயர்ந்தால் தான் அவர்களால் மற்ற வேலைகளைப் பார்க்க இயலும் என்று அத்தகைய பண்புடையவர்கள் அதற்கு என்று ஒரு விளக்கத்தைக் கூறுவர். இயல்பாகவே நன்கு முழுமையான மகிழ்வுடன் உணவை உண்டவர்களுக்கு சிறு தூக்கம் வருவது இயல்பாகும். இதனை,
‘‘உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு“
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. மயக்கம் என்பது சிறு தூக்கம் ஆகும்.
சிலர் தமக்கு விருப்பமான உணவு கிடைக்கப் பெற்றால் அது தீர்வது வரையில் மீண்டும் உண்டு கொண்டே இருப்பர். அவர்களால் அதனைத் தடுத்து நிறுத்த இயலாது. ஏனெனில் அவர்கள் நாவிற்கு அடிமையானவர்கள் எனலாம். அவர்களால் எளிதில் தங்களது நாவைக் கட்டுப்படுத்த முடியாது. இத்தகைய பண்புடையோர் சமுதாயத்தில் அதிகமானோர் உள்ளனர். அவர்களின் இத்தகைய பண்பினை,
‘‘காங்காதவன் கஞ்சியைக் கண்டானாம்
அதை ஓயாமல் ஓயாமல் ஊத்திக் குடிச்சானாம்“
(ஓயாது-ஓயாமல்-மீண்டும், ஊத்தி-ஊற்றி, குடிச்ச-குடித்தல், காணாதவன்-காங்காதவன்,)
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இவ்வாறு நடந்து கொள்வது தவறானதாகும். இப்பழக்கம் உடையவர்கள் அதனைக் கைவிட வேண்டும் என்பதனையும் இப்பழமொழி உள்ளீடாகக் கொண்டு விளக்குவது நோக்கத்தக்கது.
அதிகமாக உண்பது
தேவைக்கேற்றவாறு ஒவ்வொருவரும் உண்ணுதல் வேண்டும். அது அனைவருக்கும் இன்பத்தைத் தரும். அவ்வாறின்றி அதிகமாக உணவினை உண்டால் அவ்வாறு உண்பவருடைய உடலியே நோயானது நிரந்தரமாகத் தங்கிவிடும். அதிகமாக உண்பவரை, ‘ஒட்டன் சுவரு வைப்பதைப் போன்று உண்கின்றான்’ என்ற வழக்குத் தொடர் சுட்டுகின்றது. மண்குழைத்து மண்ணால் வீடு கட்டுவோர்களை ஒட்டர்கள் என்பர். மண்ணை ஒன்றுடன் ஒன்று ஒட்டுபவர்கள் என்று இதற்கு பொருள் கூறலாம். அதிகமாக மண்ணைக் குழைத்து வைத்தால் மட்டுமே வீட்டுச்சுவர் அமைக்கலாம். இல்லையெனில் சுவர் நிற்காது விழுந்துவிடும். அதனால் மண்ணால் சுவர் வைப்போர் அளவுக்கதிமாக மண்ணைக் குழைத்து வைப்பர். இதனைப் போன்று உணவினை சிலர் உண்பர். இவ்வாறு உண்போர் உடல் பெருத்து அதனால் பெருந்துன்பத்திற்கு ஆளாவர் என்பதனை,
‘‘கண்டதைத் தின்றவன் குண்டனாவான்“
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
பகிர்ந்து உண்ணுதல்
பலர் உண்ணாது இருக்கும்போது தான் மட்டும் தனியே உண்ணுதல் கூடாது. அவ்வாறு உண்பது சரியானதாகவும் இருக்காது. அது இழிவானதாகும். சிலர் தனித்து உணவை மூடி வைத்துக் கொண்டு உண்பர். இது இழிவிலும் இழிவு. தமக்குக் கிடைத்ததை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ண வேண்டும். தான் மட்டும் தனித்து உண்ணக் கூடாது என்பதை,
‘‘தானாத் தின்னு வீணாப் போகாதே“
(தானாய்-தான் மட்டும்)
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
மேலும் பகிர்ந்து உண்பதால் மகிழ்ச்சியும், மன நிறைவும் ஏற்படும். பசியும் ஆறும். இதனை உணர்ந்து அனைவரும் தமக்குக் கிடைத்த உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து தாமும் உண்ண வேண்டும். இது மிகச் சிறந்த பண்பாடாகும். இத்தகைய பண்பாட்டினை,
‘‘பங்கித் தின்னா பசியாறும்“
(பங்கி-பகிர்ந்து, தின்னல்-உண்ணுதல் பசியாறும்-பசிமறையும்)
என்ற பழமொழி விளக்குகின்றது. மனிதனுக்குத் தன்னலம் கூடாது. பொதுநலம் வேண்டும் என்ற அரிய பண்பாட்டினை உணர்த்துவதாகவும் இப்பழமொழி அமைந்துள்ளது.
உண்ணாமல் இருத்தல்
பிறர் மீது ஏற்படும் மனக்கசப்பினாலோ அல்லது தமக்கேற்ற உணவு இல்லாத போதோ உணவினை உண்ணாமல் பட்டினியாகக் இருப்பர். பிறர் அவரிடம் எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் உண்ண மறுத்துவிடுவார். அத்தகைய பிடிவாத குணம் உடையவர்களைப் பார்த்து,
‘‘குண்டி வத்தினாக் குதிரையும் புல்லுத் திங்குமாம்“
(குண்டி-கும்பி(குடல்) வத்தினால்-சுருங்குதல்)
என்று கூறுவர். வேண்டுமென்றே உணவு உண்ணாது இருத்தல் கூடாது. அவ்வாறு இருந்தால் உடல் நலத்திற்குத் தீங்கு ஏற்படும். வீண் பிடிவாதத்தால் உடல் நலத்தை நாமே கெடுத்துக் கொள்ளக் கூடாது என்ற உடல்நலம் பேணும் முறையையும் இப்பழமொழி எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிலர் வெளியூர் சென்றால் அங்குள்ள உணவுப் பழக்கம் அவர்களுக்குப் பிடிக்காததால் எதையும் உண்ண முடியாமல் துன்பப்படுவர். இத்தகைய குணத்த கைவிட்டு அவ்வூரில் கிடைக்கக்கூடிய உணவினை உண்டு பசியாறல் வேண்டும். அவ்வூரில் கிடைக்கும் உணவினை தமக்கேற்ற உணவாக ஏற்றுக் கொள்பவரே வெளியிடங்களில் சென்று வாழ முடியும் இல்லையெனில் அவர்களால் வாழ இயலாமற்போய்விடும் என்பதனை,
‘‘பாம்பு திங்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டம் நமக்குத்தான்“
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. அவ்வூரின் உணவையும் விரும்பி உண்ண பக்குவப்பட வேண்டும் என்பதை இப்பழமொழி தெளிவுறுத்துவது நோக்கத்தக்கது.
பசித்தால் மட்டுமே உண்ணுதல் வேண்டும். உணவு கிடைக்கின்றபோது மெதுவாக அவசரமின்றி அமைதியுடன் பிறருடன் பகிர்ந்து உண்ண வேண்டும். மேலும் பிறர் மீதுள்ள கோபத்தை உணவின் மீது காட்டாமல், வீண் பிடிவாதம் பிடிக்காது உண்ணல் வேண்டும் என்பன போன்ற வாழ்வியல் நெறிகளை பசியும் பசியாறுதலும் பற்றிய பழமொழிகள் எடுத்துரைக்கின்றன. பழமொழிகளைப் பயின்று அதன் வழி பண்பட்ட வாழ்க்கையினை வாழ்வோம்.
முனைவர்சி.சேதுராமன்,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, பு
துக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
- பயணத்தின் மஞ்சள் நிறம்..
- விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனை
- இரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி
- ஏமாற்றம்
- ஆர்வமழை
- ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.நீங்களும் எழுதலாம்.
- குற்றங்கள்
- வாய்ப்பு:-
- அவரைக்கொடிகள் இலவமாய்
- விசித்திர சேர்க்கை
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 10
- தியாகங்கள் புரிவதில்லை
- ஒன்றின்மேல் பற்று
- முடிவை நோக்கி…
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -4)
- ஜென் – ஒரு புரிதல் பகுதி 3
- காதல் பரிசு
- எனது இலக்கிய அனுபவங்கள் – 8 கம்பாசிட்டர் கவிதை
- செல்வராஜ் ஜெகதீசனின் ‘ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’- ஒரு பார்வை
- பழமொழிகளில்….பசியும், பசியாறுதலும்
- தையல் கனவு
- மீளா நிழல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அன்புமயமும் சமத்துவமும் (Love & Equality) (கவிதை -47 பாகமும் -1)
- அரசாணை – ஐந்தாண்டுகளுக்கு!
- குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’
- பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம். -3
- உபாதை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 42
- பஞ்சதந்திரம் – தொடர் முகவுரை
- புறக்கோள் அறிமுகம்: திரவ நிலையில் தண்ணீருடன் இருக்கக்கூடிய புறக்கோள் (exoplanet) கண்டுபிடிப்பு
- திமுக அவலத்தின் உச்சம்