பசலை பூத்தே…

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

 

கதழ்பரி கலிமா அலரிதூஉய்

ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும்

முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும்

இன்னிய பலவின் முள்பசுங்காய்

மூசும் தும்பி அதிர்வினம் யாழ்க்கும்.

நெடுந்தேர் மணிநா நடுங்கி இமிழும்

ஓதையுண்பினும் ஓவா உறுபசி

உழல்படு வண்டினம் வெள்வெளி ஆர்க்கும்.

நீள்மலைப்பாம்பின் அன்ன நெடுவேர்

தடுக்கும் மறிக்கும் எவன் கொல் செயினே.

பெரும்பணைத் தோளின் கடுப்ப விரையும்

துப்புநிலை அறியும் அதிர்கலிப் பொறிமா.

துவள்படும் நெஞ்சின் என் பொங்குதிரை ஈண்டு

அடு கிளர் அகலத்து அவன் உள் உள் தைக்கும்

அகவும் மஞ்ஞை என்னுள் அகவி

உருவும் என்னுயிர் மின்னல் மயிரிய‌

நார்ப்பூ தொடுக்கும் பசலை பூத்தே!

==================================

பொழிப்புரை
=====================================================ருத்ரா
குளம்புகள் பதிய குதித்துச்செல்லும் குதிரையை அதன் அலரிப்பூக்குஞ்சம் அசைய அதனால் அப்பூக்கள் எங்கும் உதிர குதிரை (பூட்டிய தேரில்) செல்லும் காதலன் வழியெல்லாம் வேங்கை மரங்கள் அடர்ந்திருக்கும் அந்த வெங்காட்டு வழியில் செல்கிறான்.நெருக்கமான வழி அது.இடையிடையே உள்ள இலஞ்சி எனும் சுனைகள் செறிந்த ஊரில் இனிய தன்மை கொண்ட பலாமரங்கள் தரை தொடும்படி பலாக்கனிகளை (வேர்ப்பலா)வீழ்த்திக்கிடக்கும்.பலாவின் மேல் புறம் முள் அடர்ந்தது போல் உள்ள தோற்றத்தைக்கண்டு அவையும் சிறு சிறு வண்டுகள் என நினைத்து  அந்த பசுங்காய்கள் மீது வண்டுகள் மொய்க்கும்.
அவை யாழ் போல சிறகுகளை அதிரச்செய்து இசைக்கும்.காதலனின் நெடிய தேரின் மணியின் நாக்கும் நடுங்கலுற்று அதிலிருந்து மெல்லொலி கேட்கும்.
அந்த இன்னொலியை உண்டபோதும் தன் தீராத பசியால் அலைவுற்று அவை அந்த வெட்டவெளியில் மொய்த்துப்பறக்கும்.வழியில் குறுக்கு நெடுக்காக கிடக்கும் மரத்தின் வேர்கள் நீண்ட மலைப்பாம்புகள் போல் காதலன் செல்லும் வேகத்தை தடுத்து மறிக்கும்.இதை என்ன செய்வது?என் பிரிவுத்துயரத்தை இது இன்னும் அதிகப்படுத்துகிறதே என்று காதலி துன்பம் கொள்கிறாள்.மனக்கண்ணில் காதலன் விரைந்து வரும் காட்சிகள் விரிகின்றன.
அவன் திரண்ட தோளின் வலிமைமிக்க செயலினால் விரையும்  குதிரைகள் அவன் வலிய தன்மையை அறியும்.உடம்பில் அழகிய புள்ளிகள் நிறைந்த அரிய அந்த அழகிய குதிரை அதிர்வோடு துள்ளி துள்ளி ஓடும்.இங்கு துவண்டு போன உள்ளத்தோடு வேதனை அடையும் என் நெஞ்சில் பொங்கும் அலைகள்
அவன் அகன்ற நெஞ்சத்தில் சூடேற்றி கிளரச்செய்து அவன் நெஞ்சக்கூட்டிலும் உள்ளே உள்ளே தைத்து வருத்தும்.எங்கோ கூவும் மயில் அதன் அகவல் ஒலியை என்னுள் பாய்ச்சும்.அது என்னுயிர் ஊடுருருவி மயிரிழை போன்ற மின்னல் உணர்வை நுழைத்து அதை நார் ஆக்கி பூ தொடுக்கும்.அந்த மலர் மாலை பசலை நோயாய் (பிரிவு துன்பத்தின் வலி)என் மீது மலர்ந்து படரும்.
இவை காதலியின் மனவெழுச்சி மிக்க காதலின் சொற்கள்.
==================================

 

Series Navigation
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *