கிராமத்தில் வானொலி இல்லாத காலம் அது. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் ஒரேயொரு கிராமபோன் இருந்தது. எங்கள் வீ ட்டின் பின்புறம் உள்ள சாலை எதிரில் ஒரு செட்டியார் மளிகைக் கடை வைத்திருந்தார். அவரிடம் கிராமபோன் இருந்தது. அதிகாலையிலேயே அதிலிருந்து உரக்க பாடல்கள் ஒலிக்கும்.
அதில் அடிக்கடி அவர் திரும்பத் திரும்ப போடும் பாடல் ஒன்று எனக்கு இன்னும் மனதில் உள்ளது. அப்போது அதைப் பாடியவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாது. ( இப்போது அதைக் கேட்கும் போதுதான் அந்த மனதை உருக்கும் இரு குரலிசைப் பாடலைப் பாடியவர்கள் கண்டசாலாவும் பானுமதியும் என்பது தெரிந்தது.) ” இக வாழ்வினில் காதல் மகா ஜோதியே மாறுமா? ஆசை தீருமா? ” என்பதே காலத்தால் அழியாத அந்த மதுர கானம்! ( தற்போது என்னிடம் உள்ள அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அந்த கிராமபோன் நினைவுதான் வரும். )
அந்த கிராமபோன் என்னை மிகவும் கவர்ந்தது. எப்படி அந்த பெரிய புனலிலிருந்து பாடல் ஒலிக்கிறது என்று என்னுடைய நண்பர்களிடம் கேட்பேன். மண்ணாங்கட்டியைத் தவிர ( கலியபெருமாள் ) வேறு யாருக்கும் அது பற்றி தெரியவில்லை. மண்ணாங்கட்டி எதையும் தெரியாது என்று சொல்ல மாட்டான். அந்த பெரிய நீண்ட புனலுக்குள் பாடுபவர்கள் உட்கார்ந்திருப்பதாகக் கூறினான்.அனால் அதனுள் எப்படி அவர்கள் போக முடியும் என்று கேட்டால் முடியும் என்று வாதிடுவான். இரவில் போய் உள்ளே உட்கார்ந்து ள்ளனர் என்பான். உள்ளே ஆள் இல்லாமல் எப்படி பாடமுடியும் என்று நம்மிடமே திருப்பி கேட்பான்.
நான் மண்ணாங்கட்டி சொன்னதை நம்பவில்லை . அவன் எப்போதுமே அப்படிதான்.பொய் சொல்லி மாட்டிக்கொண்டு அவனுடைய அம்மா கண்ணம்மாவிடம் அடிக்கடி அடி வாங்குவான்.
ஒரு பிளேட் அதில் சுற்றி சுற்றி வரும்பொது ஒரு சிறு ஊசி அதில் உரசுகிறது. அப்போதுதான் பாடல் வருகிறது. செட்டியார் அந்த பிளேட்டை மாற்றும் போது பாடல் நின்று விடும். வேறு பிளேட் போட்டு சாவி கொடுத்து ஓட விட்டால் ஊசி உரசும்போது வேறு பாடல் ஒலிக்கிறது. ஆகவே அந்த
பிளேட்டிலிருந்துதான் பாடல் ஒலிக்கிறது என்பதை முடிவு செய்தேன். அங்கு தவறி உடைந்துபோகும் பிளேட்டுகளை தோட்டத்தில் வீசிவிடுவார் செட்டியார். அவற்றில் ஒன்றை நான் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஓடுவேன். அங்கு அம்மா வைத்திருக்கம் ஊக்கின் கூரிய முனையால் அந்த பிளேட்டில் கீறி கீறி பார்ப்பேன். கீறும் சத்தம் கேட்குமே தவிர பாடல் வராது.
அந்த பிளேட்டின் நடுவில் ஒரு படம் இருக்கும். ஒரு நாய் கிராமபோன் எதிரே அமர்ந்து பாடல் கேட்டுக்கொண்டிருக்கும். ( ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் என்று அதில் பொறிக்கப்பட்டிருக்கும் ) அது பற்றியும் மண்ணாங்கட்டி விளக்கம் சொல்வான். அந்த நாய் அதன் எஜமானின் குரலை அந்த புனலில் கேட்டு விட்டதால் வீடு திரும்பாமல், எஜமான் புனலிலிருந்து வெளியே வருவார் என்று அங்கேயே உட்கார்ந்துள்ளதாம். அப்படி சொல்லிவிட்டு, ” கதை கேட்ட நாயை செருப்பால் அடி .” என்று சொல்லி அடிப்பான். பின்பு கண்ணம்மாவிடம் செம்மையாக அடி வாங்குவான்.
அந்த கிராமபோன் செட்டியார் செக்கு வைத்திருந்தார். அவருடைய மனையைச் சுற்றிலும் வரிசையாக தென்னை மரங்கள் எப்போதும் நன்றாக காய்த்திருக்கும். அவற்றிலிருந்து தேங்காய் பறித்து காயவைத்து செக்கில் இட்டு எண்ணெய் எடுப்பார். எனக்கு செக்கு ஓட்டுவதிலும் அலாதிப் பிரியம். செக்கு மாடுகள் சுற்றி சுற்றி வரும். நான் அதில் உட்கார்ந்து கொண்டு மாட்டை ஓட்டுவேன். செக்கில் உட்கார்ந்துகொண்டு அப்படி சுற்றி வருவது சந்தோஷமாக இருக்கும். செட்டியார் அவ்வப்போது மிட்டாய் தருவார்.( அந்த கிராமபோன், செக்கு கடை வைத்திருந்த செட்டியார் அவருடைய மனையையும் அதோடு சேர்ந் திருந்த முக்கால் காணி நன்செய் நிலத்தையும் பின்னாளில் அம்மாவிடம் விற்றுவிட்டார் .தற்போது அங்குதான் நான் வீடு கட்டியுள்ளேன்.வீட்டின் பெயர் ” தரணி இல்லம் ” அம்மா பெயர் தரணியம்மாள். )
எப்போதாவது ஊரில் திருமணம் நடந்தால் பந்தலில் பெரிய புனல்கள் கட்டி ஊரே கேட்கும் வகையல் உரக்கமாக பாடல்கள் ஒலிக்கச் செய்வார்கள். அந்த கிராமபோன் சிதம்பரத்திலிருந்து மாட்டு வண்டியில் கொண்டு வருவார்கள். அந்த புனல்களை பந்தலின் மேல் அல்லது மரத்தின் மேல் ஏறி கட்டுவார்கள்.அதிலிருந்து ஓயர் கிராமபோன் வரை கொண்டு வந்து சொருகுவார்கள். அந்த ஒயரைத் தொடக்கூடாது என்பார்கள். தொட்டால் ஷாக் அடித்துவிடும் என்பார்கள்.
திருமணம் என்றாலே ஊர் சிறுவர்களுக்கு கொண்டாட்டம்தான். நாங்கள் பந்தலில்தான் ஆட்டம் போடுவோம். பந்தல் போடப்பட்டிருக்கும் மூங்கில் கழிகளின் மேல் ஏறி இறங்குவோம். அவை வழவழப்பாக இருப்பதால் அவ் வளவு சுலபமாக ஏற முடியாது. தரை யில் விரிக்கப்பட்டுள்ள நீண்ட பாய்களில் படுத்து உருளுவோம். சத்தம்போட்டு குதித்து கும்மாளம் போடுவோம். இரவில் தூக்கம் வரும் வரை அந்த மணப் பந்தலில்தான் விளையடிக்கொண்டிருப்போம்.
பந்தலின் நுழைவாயிலில் தென்னை ஓலை தோரணமும் மா இலைகளும் கட்டி அலங்கரித்திருப்பார்கள். அதோடு தென்னங் குலைகளும், பனங்காய்க் குலைகளும் கட்டி தொங்க விடுவார்கள். தென்னங் கீற்றுகளால் போடப்பட்ட பந்தலின் கீழ்ப் பகுதியில் வண்ண வண்ண சேலைகளை விரித்து கீற்று தெரியாமல் இணைத்திருப்பார்கள். இவைதான் அன்றைய திருமணப் பந்தலின் அலங்காரமாக இருந்தது. இரவில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள்தான் ஒளி தரும்.
நான் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு கல்யாணம் என் நினைவில் இன்றும் உள்ளது. அது ஏன் எனில் அதன் மாப்பிள்ளை அப்போது மலாயாவிலிருந்து வந்திருந்தார். அவர் வேறு யாருமில்லை. என்னுடைய பாட்டியின் கடைசித் தம்பி சாமுவேல் என்பவர். அவர் எப்போதும் நீண்ட கால் சட்டையும் ஷூவும் அணிந்துகொண்டு மலாயா மாப்பிளையாகத் திகழ்ந்தார். கிரேஸ் கமலா என்ற அந்த மணப் பெண்ணை காட்டுமன்னார்கோவில் வீராநல்லூர் கிராமத்திலிருந்து காரில் அழைத்து வந்தனர். தவர்த்தாம்பட்டிலிருந்து இரவில் மேளம் நாதஸ்வர முழக்கத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.. பெரிய பெரிய பெட்ரோமாக்ஸ் விளக்குகளை பலர் தலையில் சுமந்து வந்தனர். சிறுவர்களான நாங்கள் அந்த காரைத் தொட்டுக்கொண்டே பின்னால் ஓடினோம்.
மறுநாள் காலையில் அற்புதநாதர் ஆலயத்தில் தடபுடலாக திருமணம் நடந்தது. வெளியூர்களிலிருந்தெல்லாம் உறவினர்கள் வந்திருந்தனர்.ஆலயத்தில் இடம் இல்லை. வெளியில் பந்தல் போட்டிருந்தனர். கார் ஆலயத்தின் எதிரில் வீதியில் நின்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் காரில் அமர்ந்துகொண்டு ஊருக்குள் ஊர்வலம் சென்றனர். அப்போது காருக்கு முன்பாக நாதஸ்வரம் ஊதிக்கொண்டு மேளம் அடித்துக்கொண்டு சென்றனர்.( அந்த புதுமணப் பெண் வயிற்றில் பிறக்கப்போகும் பெண்ணைத்தான் நான் பின்னாளில் அதே ஆலயத்தில் திருமணம் செய்து அதே வீதியில் அதேபோன்று காரில் ஊர்வலம் போவேன் என்று எனக்கு அப்போது தெரியாது! )
மாப்பிள்ளை அப்பாவின் தாய் மாமன்தான் . அப்பாவிடம் சொல்லிவிட்டுதான் வந்துள்ளார்.அப்பா அவரிடம் எனக்கு புது சட்டைகள் சிலுவார்கள் கொடுத்தனுப்பியிருந்தார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் அப்பா பற்றி நினைப்பேன். அப்பா எப்படி இருப்பார்? ஒரு வேளை அவரைப்போல இருப்பாரா? அப்பாவும் மலாயாவில்தானே இருக்கிறார்? அப்படியென்றால் அவரும் எப்போதும் முழுக்கால் சிலுவாரும் ஷூவும் அணிந்து கொண்டுதானிருப்பார். அவர் ஏன் என்னை பார்க்கவே வரவில்லை? பார்க்கணும் என்ற ஆசையே இல்லையா? ஆதனால் அவர் மீது நான் கோபப்படவில்லை. மற்ற நாட்களில் நான் அவரைப் பற்றி எண்ணியதில்லை.இத்தனை வருடங்களில் அவருடைய நினைவு இல்லாமலேயே வாழ்ந்து விட்டேன். அன்று மண்ணாங்கட்டி அந்த குதிரை வண்டிக்காரரைக் காட்டி அப்பா என்று ஏமாற்றியபோது நினைத்துக்கொண்டேன். அதன் பிறகு அப்பாவைப் பற்றி மறந்தே விட்டேன்.
அவர்கள் திருமணம் செய்து கொண்ட பின்பு சில மாதங்களில் அவர் மலாயா திரும்பிவிட்டார். அந்த புதுப்பெண் அவருடைய சொந்த ஊரில் ஆசிரியையாக பணியைத் தொடர்ந்தார்.( அவர் தரங்கம்பாடியில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியை. ) சில மாதங்களில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்பு அவரும் அந்த குழந்தையும் மலாயா சென்று விட்டனர். அப்பா மாதிரி இல்லை அவருடைய மாமா. மனைவியையும் பிள்ளையையும் உடன் கூட்டிக்கொண்டார்.( அந்த கமலா டீச்சருக்கு ஜோகூர் லாபீஸ் எஸ்டேட்டில் தமிழ்ப் பள்ளி ஆசிரியை வேலை கிடைத்துவிட்டது )
சில வருடங்கள் கழித்து மீண்டும் அப்பாவை நினைக்க வேண்டி வந்தது. அப்போது அவருடைய அண்ணன் ( பெரியப்பா ) குடும்பத்துடன் ஊருக்கு மலாயாவிலிருந்து வந்திருந்தார். அவர்தான் தாத்தா பாட்டிக்கு மூத்த மகன். பெயர் எசேக்கியேல். அவரும் பெரியம்மாவும் தமிழ் ஆசிரியர்கள்.அவரும் ஊரில்தான் திருமணம் செய்து கொண்டவர். உடன் பெரியம்மாவை மலாயாவுக்கு அழைத்துக்கொண்டார். அப்பா மட்டும்தான் அம்மாவை மலாயாவுக்கு அழைத்துக் கொள்ளவில்லை. அவருடைய அப்பா அம்மாவைப் பார்த்துக்கொள்ள ஊரிலேயே விட்டுவிட்டார் போலிருக்கிறது. தாத்தா பாட்டிக்கு சமைப்பது, வயல்கள் ஆடுமாடுகள் அனைத்தையும் பராமரிக்கும் பொறுப்பு அம்மாவுடையதுதான். தாத்தா பாட்டிக்கு வயதான காலத்திலும் அவர்களுக்கு வேண்டிய எல்லா பணிவிடையும் செய்ததும் அம்மாதான்.
பெரியப்பா, பெரியம்மா நான்கு பிள்ளைகள் ( ஜான் அண்ணன், லில்லி அக்காள், தம்பிகள் டேவிட் , நெல்சன் ) வீட்டில் தங்கியதும் அங்கு புது ஆடைகளின் மணமும், பவுடர், சென்ட் வாசனையும் வீசியது . மாட்டுச் சாண மணத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட எனக்கு அது புதுமையாக இருந்தது. பெரியப்பா பிள்ளைகள் ( அண்ணன், அக்காள், தம்பிகள் ) வெளியில் செல்லும்போது ” சாக்ஸ் ஷூ ” அணிந்துதான் செல்வார்கள். நான் வெறுங்காலுடன் நடந்து பழக்கப்பட்டவன்.
அப்பா எனக்கு புது சட்டைகள் சிலுவார்கள் அனுப்பியிருந்தார் அதுபோன்று ” சாக்ஸ், ஷூ ” அனுப்பவில்லை. பெரியப்பா ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு கொண்டு வந்திருந்தார். அன்றிலிருந்து வீடு, வாசல், வீதி கூட இரவில் பிரகாசமானது.
சுமார் ஒரு மாதம் தங்கிவிட்டு மலாயா திரும்பினர். அந்த ஒரு மாத காலத்திலும் தாத்தாவும் நானும் வழக்கம்போல் அதிகாலையில் தேநீர்க் கடைக்குச் சென்றுதான் வந்தோம்.
அவர்கள் சென்றதும் எனக்கு அப்பா நினைவு அதிகம் வந்தது. நானும் மலாயா போகவேண்டும் என்று ஆசை கொள்ளவில்லை. என்னைப் பார்க்க அப்பா ஏன் வரவில்லை என்றுதான் ஏங்கினேன். அதை நான் யாரிடம் போய்க் கேட்கமுடியும்? மன்னாங்கட்டியிடமா? அந்த எண்ணமும் நாட்கள் செல்ல செல்ல மறைந்துபோய் பழைய நிலைக்கு வந்துவிட்டேன்.
ஒரு நாள் நான் பள்ளியில் இருந்தபோது அம்மா அங்கு .வந்தார். அவர் கையில் ஒரு ” ஏர் மெயில் கவர் ” இருந்தது. அதை ஆசிரியரிடம் நீட்டினார். அவர் அதைப் பிரித்து உரக்க படித்தார். ( அம்மாவுக்கு அப்பாவிடமிருந்து வரும் கடிதங்களை அவர்தான் படித்துக்காட்டி பதிலும் எழுதித்தருவார்.)
அதில் வந்திருந்த செய்தி அன்று ஊர் முழுதும் பரவிவிட்டது!
ஆமாம்! அம்மாவும் நானும் சிங்கப்பூர் செல்லப்போகிறோம்!
( தொடுவானம் தொடரும் )
- நாம்
- காதல் கண்மணிக்குக் கல்யாணம்
- தாம்பத்யம்
- பிஞ்சு உலகம்
- தந்தையானவள் – அத்தியாயம் 4
- ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—
- கு.அழகர்சாமி கவிதைகள்
- வாழ்க்கை ஒரு வானவில் – 24
- முகப்புகழ்ச்சியா நம் முகவரி?
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 96
- தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3
- தொடுவானம் -37. அப்பா ஏக்கம்
- அவனும் அவளும் இடைவெளிகளும்
- தலைதூக்கும் தமிழ்ச்செல்வி
- ஆசை துறந்த செயல் ஒன்று
- மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்
- 2015 ஆண்டில் இந்தியா அமைக்கப் போகும் இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை கருவி ஏற்பாடு
- உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி
- அண்ணன் வாங்கிய வீடு
- தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் முருகன் – பன்னாட்டு கருத்தரங்கம்
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி -8
- மரபுக்குப் புது வரவு
- கம்பன் விழா 18-10-2014, 19-10-2014