தொடுவானம் 39. கடல் பிரயாணம்

This entry is part 11 of 16 in the series 26 அக்டோபர் 2014
 RAJULA_614
                                                                                               
         நள்ளிரவு நேரத்திலும் தூங்காமல் புகைவண்டி பார்க்கும் ஆவலில் விழித்திருந்தேன். அந்த நேரத்திலும் நிறைய பிரயாணிகள் காத்திருந்தனர். தொலைவில் பிரகாசமான ஒளியுடன் பெரும் இரைச்சலுடன் புகைவண்டி வருவது தெரிந்தது. அது வந்து நின்றபோது அந்த பிளாட்பாரம் நீளம் இருந்தது. ஒவ்வொரு பெட்டியிலும் ஆட்கள் உட்கார்ந்திருந்தனர் சிலர் இறங்கினர். நாங்கள் ஏறிக்கொண்டோம்.நல்ல வேளையாக எங்களுக்கு உட்கார இடம் கிடைத்தது. கொஞ்ச நேரம் நின்றுவிட்டு புறப்பட்டது.  முதலில் மெதுவாக நகர்ந்து பின்பு வேகமாக ஓடியது. அப்போது ” கடக் கடக் கடக் கடக் ” என்று ஓசையும் எழுந்தது. இடையிடையே ” கூ ” என்ற சத்தமும் கேட்டது. அந்த இதமான அசைவில் தூக்கமும் சொக்கியது.அப்படியே அம்மாவின் மடியில் சாய்ந்து படுத்து உறங்கிவிட்டேன்.
          தாம்பரம் இரயில் நிலையம் வந்தபோது நன்றாக விடிந்துவிட்டது. அம்மா என்னை எழுப்பிவிட்டார். நாங்கள் வெளியேறியபோது அங்கு அண்ணனும் மாமாவும் காத்திருந்தனர்.அங்கிருந்து ரிக்க்ஷா மூலம் அத்தை வீடு சென்றோம் .
          நான் குழந்தைப் பருவத்தில் தாம்பரம் வந்திருக்கலாம்.அது என் நினைவில் இல்லை. ஆனால் இந்த பயணம் நன்றாக நினைவில் உள்ளது. அங்கு விதவிதமான வாகனங்களைக் கண்டு வியந்து போனேன். புகைவண்டி நிலையத்தில் பல இரயில்கள் நிற்பதையும் போவதையும் கண்டேன். விமானத்தையே பார்த்திராத நான் ஆசைதீர அன்றாடம் தொடர்ந்து விமானங்களைப் பார்த்தேன். காரணம் அத்தை வீடு தாண்டி கொஞ்ச தூரத்தில்தான் இந்திய விமானப் படையின் பயிற்சி நிலையம் இருந்தது. அதிலிருந்து காலையிலேயே விமானங்கள் பறந்து செல்வதும்  இறந்குவதுமாகவும் இருந்தன. அவை இறங்கும்போது மிகவும் தாழ பறந்து செல்லும்போதும் பேரிரைச்சலாக இருக்கும். விமான ஒட்டியைக்கூட நன்றாக பார்க்கலாம்.
          அத்தை அப்பாவின் உடன் பிறந்த ஒரே தங்கை. தாம்பரத்தில் ஒரு கத்தோலிக்க துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்தார். பெயர் ரூத் குணமணி  பால் மாமா அருகிலிருந்த சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பரிசோதனைக்கூட உதவியாளராகப் பணி புரிந்தார். அவர்கள் வசித்தது கல்லூரி பணியாளர்களின் குடியிருப்புதான்.அங்குதான் அண்ணன் தங்கி பக்கத்திலேயே இருந்த கார்லி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அவருடைய செலவுக்காக அப்பா மாதந்தோறும் அத்தைக்கு பணம் அனுப்பி வைப்பார்.
          அம்மாவும் நானும் அப்பாவிடம் போகிறோம் என்பதை அண்ணனுக்கு தெரிவித்தபோது அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவருக்கு மனதுக்குள் கவலை உண்டானதோ என்பதும் தெரியவில்லை. அவர் சிறுவயதிலிருந்தே அத்தை வீட்டில் ஒருவராகவே வாழ்ந்து பழகிவிட்டார்
         அத்தை வீட்டில் ஒரு  வாரம் தங்கினோம். காலையில் நான் அத்தையுடன் அவருடைய பள்ளிக்கு சென்றுவிடுவேன்.மதியம் அண்ணன் அங்கு வந்து என்கையைப் பிடித்துக்கொண்டு .வீடு திரும்புவார்.
          கப்பல் ஏறும் நாள் வந்தது. தாம்பரத்திலிருந்து மின்சார இரயில் மூலம் சென்னை கடற்கரை ஸ்டேஷன் சென்றோம். அங்கிருந்து வாடகைக் கார் மூலம் சென்னை மெட்ராஸ் துறைமுகம் சென்றடைந்தோம்.
          அப்போதுதான்  நான் கடலை முதன்முதலாகப் பார்த்து மலைத்துப்போனேன்! அதைப் பார்க்க எனக்கு பயமாக இருந்தது. அந்தக் கடலில்தான் ஒரு வாரம் பிரயாணம் செய்து சிங்கப்பூர் போகணுமாம். அதை நினைத்து மேலும் பயந்தேன்.
          கப்பலைப் பார்த்து வியந்து நின்றேன்! அவ்வளவு பெரிதாக இரும்பால் ஆன அதன் பெயர் ”  ரஜூலா  ” கப்பல். அது  சுமார் ஐநூறு பிரயாணிகளையும் அவர்களது கனமான பெட்டிகளையும் சுமந்துகொண்டு கடலில் மிதந்து செல்லவேண்டும். அவ்வளவு கனத்தையும் தூக்கிக்கொண்டு எப்படி கடலில் மூழ்காமல் மிதக்கிறது என்று தெரியவில்லை.   ஊரில் மண்ணாங்கட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. அதன்  அடியில் பெரிய தக்கைகள் உள்ளதா என்பதைப் பார்க்க முடியவில்லை. அதை பெரிய வடகயிற்றால் கரையில் இருந்த குட்டையான இரும்புத் தூணில் கட்டியிருந்தார்கள். அது அறுந்துவிட்டால் கப்பல் தானாக கடலில் மிதந்து போய்விடுமாம். அதனால்தான் அதை அப்படி கட்டியிருந்தார்களாம்.
          அந்த நீண்ட கப்பல் பக்க வாட்டில் நின்றது.பல அடுக்குகளில் வட்ட வட்டமான சன்னல்கள் தெரிந்தன. கப்பலினுள் செல்ல ஏணிப் பாலம் வைத்திருந்தனர்.
அதில் பிரயாணிகள் வரிசையாக ஏறி நடந்து கப்பலினுள் சென்று கொண்டிருந்தனர். போர்ட்டர்கள் பெட்டிகளை தலையில் சுமந்தவண்ணம் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
         கப்பலின் மேல்தளத்தில் வெள்ளை நிறச் சீருடையில் மாலுமிகள் கம்பீரமாகக் காட்சி தந்தனர்.
          கப்பலின் இன்னொரு பகுதியில் உயரமான ஓங்கிகள் மூலம் பெரிய பெரிய வலைப் பைகளில் மூட்டை மூட்டையாக வெங்காயம் ஏற்றப்பட்டது. அது மலாயா சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதாம்.
          நாங்கள் கப்பலுக்குள் செல்லும் நேரம் வந்தது. அண்ணனின் கையைப் பிடித்துகொண்டு அம்மா அழுது விடை பெற்றார். அண்ணன் அழவில்லை. ஆனால் முகம் வாடியிருந்தது. நான் அழவில்லை. எனக்கு கப்பலுக்குள் சென்று உள்ளே எப்படி இருக்கும் என்று பார்க்கவேண்டும் என்ற ஆவல். அதோடு இன்னும் கொஞ்ச நாளில் அப்பாவைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி.
          போர்ட்டர் எங்கள் பெட்டி படுக்கைகளை தூக்கிக் கொண்டு ஏணிப் பாலத்தில் ஏறி நடந்தார். நான் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு பின்தொடர்ந்தேன். உள்ளுக்குள் எனக்கு பயம்தான். கடலில் செல்லும்போது மழை பெய்தால், புயல் அடித்தால் கப்பலுக்குள் தண்ணீர நிறைத்து கடலில் மூழ்கிவிடாதா என்று பயந்தேன்.  இரவில் இருட்டில் எப்படி அதற்கு வழி தெரியும் என்பதும் தெரியவில்லை. எல்லாவற்றையும்விட கப்பலில் ஒருவேளை ஓட்டை விழுந்துவிட்டால் என்ன ஆகும் என்பதே! கடலில் மூழ்கினால் பெரிய பெரிய மீன்கள் என்னை விழுங்கிவிடும் என்றுகூட மண்ணாங்கட்டி பயமூடடியிருந்தான்.அதற்காகவும் கண்ணம்மாவிடம்  உதை வாங்கியுள்ளான்
        கப்பலுக்குள் நுழைந்ததும் அதன் தரைகூட இரும்பால் செய்யப்பட்டிருந்தது. உள்ளே பெரிய காற்றாடிகள் சத்தத்துடன் சுழன்று காற்று வீசின. உள்ளே சூடாகத்தான் இருந்தது.
          கப்பலில் பல வகுப்புகள் உள்ளன. பெரிய பணக்காரர்கள் முதல் வகுப்பில் பிரயாணம் செய்வார்கள்.நடுத்தர வகுப்பினர் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்வார்கள்.எங்களைப்போன்ற சாதாரண மக்கள் மூன்றாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்தார்கள்.அதற்கு ” டெக் ” என்று பெயர்.இது தரை என்று பொருள்படும். இங்கே நாங்கள் இடம் பிடித்துக்கொண்டு சாமான்களை அடுக்கிக்கொண்டு படுக்கையையும் விரித்துக்கொள்ளலாம்.நாங்கள் கோரைப் பாய் கொண்டுவந்திருந்தோம். அங்கே  அருகருகே வரிசையாக  பிரயாணிகள் இடம் பிடித்து படுத்துக்கொள்வார்கள். எனக்கு கப்பல் முழுதும் சென்று பார்க்க ஆசை. ஆனால் அம்மா காணாமல் போய்விடுவேன் என்று அப்போது தடுத்துவிட்டார். ஒரு வாரம் கப்பலில்தானே இருப்பேன். பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் கொண்டேன்.
         வெங்காய மூட்டைகள் அனைத்தும் ஏற்றியபின் அந்த நீண்ட ஒங்கிகள் அப்புறப்படுத்தப்பட்டன.அப்போது உரக்கமாக சங்கு ஊதியது. அது கேட்டு நான் பயந்து போனேன். கப்பல் புறப்படபோகிறது என்ற அறிவிப்பாம் அது.
          கப்பலைக் கட்டியிருந்த அந்த பெரிய வடகயிறு அவிழ்க்கப்பட்டது. நங்கூரம் ஏற்றப்பட்டது.அப்போது கப்பல் லேசாக ஆடியது. பின்பு நகர்வது தெரிந்து. கப்பலுக்கும் கரைக்குமுள்ள இடைவெளியும் அதிகமானது.
          கரையில்  நின்றவர்கள் கையசைத்து விடை தந்தனர்..சிறிது நேரத்தில் சிறிய உருவமாக தூரத்தில் காணப்பட்டனர். அண்ணன் உருவமும் சிறிது சிறிதாகி மறைந்தது. அம்மாவோ அழுகையை நிறுத்தவில்லை!
          கப்பல் புறப்பட்டபோது மாலையாகிவிட்டது . சற்று நேரத்தில் கப்பல் வேகமாகச் சென்றது. மெட்ராஸ் துறைமுகமும் கடற்கரையும் தூரத்தில் தெரிந்தன.பொழுது சாய்ந்து இருட்டியபோது சென்னை நகர விளக்குகள் மங்கலாக எரிவது தெரிந்தது.
          கப்பலில் விளக்குகள் போடப்பட்டன. இரவு உணவு தரப்படும் என்று ஒலிப்பெருக்கியில் ஒலித்தது.
          சமையல் கூடம்  மிகவும் பெரியது. அதனுள் நுழைந்ததும் பெரும் இரைச்சலுடன் இயந்திரங்கள் இயங்குவது கேட்பதற்கு பயமாக இருந்தது.கருவாட்டு வாடைபோல் வீசியது. நாங்கள் நீண்ட வரிசையில் நின்று உணவு வாங்க வேண்டும். அதை  எங்கள் சாமான்கள் இருந்த இடத்தில அமர்ந்து உண்ணலாம்.. உணவு சுவையாகவே இருந்தது. அண்ணன் கவலையில் அம்மா சாப்பிடவில்லை.நான் அவருக்குக் கொண்டு வந்ததையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டேன்.
       கப்பலில் பெரும்பாலும் கருவாட்டுக் கறிதான் போடுவார்களாம். கருவாடுதான் பயணத்தின்போது கெடாமல் இருக்குமாம்.ஆட்டுக்கறியும் கிடைக்குமாம். அதற்கென்று கப்பலின் அடித்தளத்தில் ஆடுகளைக் கொண்டு வருவார்களாம்.
          இரவில் கப்பல் வேகமாகச் சென்றபோது ஆட்டம் தந்தது. பலர் வாந்தி எடுத்தனர். அம்மா வாந்தி எடுத்தபோது நான் அதை ஒரு குவளையில் பிடித்துச் சென்று கொட்டிவிடுவேன். கப்பல் ஆட்டத்தில் அப்படி வாந்தி வருமாம். எனக்கு வரவில்லை.
          நான் அம்மாவுக்குத் தெரியாமல் மேல் தளம் சென்று பார்த்தேன். அங்கு பலர் நின்று கடலைப் பார்த்துக்கொண்டிருந்தனர். வெளியில் ஒரே இருட்டு. கருங்கடலில் கப்பல் வேகமாக சென்றுகொண்டிருந்தது. குளு குளுவென்று குளிர் காற்று பலமாக வீசியது. சுற்றிலும் கடலைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. வானத்தில் நிலவுகூட பிரகாசமாக ஒளி வீசவில்லை.அதை கரு மேகங்கள் மறைப்பதும் விலகுவதுமாக இருந்தன. அனால் அந்த நிலவு கப்பலைப் பின்தொடர்ந்து ஓடி வருவதுபோல் தோன்றியது!
          கொஞ்ச நேரம் அங்கு நின்றுவிட்டு அம்மாவிடம் சென்று பாயில் படுத்துக்கொண்டேன். கப்பலின் தாலாட்டில் நன்றாக தூங்கிவிட்டேன்.
          அதிகாலையிலேயே நின்று . அந்த வேளையில்கூட சிலர் பாயின் மேல் நிற்பதும் பின் உட்கார்ந்து குனிவதுமாக இருந்தனர். அவர்கள் இஸ்லாமியர் என்றும், சாமி கும்பிடுகிறார்கள் என்றும் அருகில் இருந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். கப்பல் நாகூர் தர்காவை தாண்டி செல்வதால் அப்படி செய்கிறார்கள் என்றார்கள்.எனக்கு தர்கா என்றால்  என்னவென்று புரியவில்லை.
          நேராக மேல்தளத்துக்கு ஓடினேன். அங்கு நிறைய பேர்கள் நின்றுகொண்டு எதையோ பார்த்துக்கொண்டிருந்தனர். நானும் அந்த திசையில் பார்த்தேன். வெகு தூரத்தில் கரை தெரிந்தது. அங்கே வெள்ளை நிறத்தில் உயரமான் ஒரு கட்டிடம் தெரிந்தது. அதன்மேல் சில கொடிகள் பரப்பதுகூட தெரிந்தது. அதுதான் இஸ்லாமியரின் புனித ஸ்தலமான நாகூர் தர்கா.
         இன்னும் சிறிது நேரத்தில் கப்பல் நாகப்பட்டணம் துறைமுகத்தில் நின்று பிரயாணிகளை ஏற்றிக்கொண்டபின்பு பயணத்தைத் தொடருமாம்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationகுழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *