வாசலில் செம்மண் இட்டு கோலம் போடப்பட்டிருந்தது. வாசலில் மாவிலை தோரணம் கட்டப்பட்டிருந்தது. கூடத்தில் மாக்கோலம் போடப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. ஆண்கள் பட்டு வேட்டியிலும் பெண்கள் பட்டு சேலையிலும் தோன்றினர். மெல்லியதாக சிஸ்டம் நாகஸ்வர இசையை ஒலித்துக் கொண்டிருந்தது. ஷேக் சின்ன மௌலானாவின் நாகஸ்வரம். தோடி ராக கீர்த்தனை.
“ வாங்க வாங்க “ வாய் கொள்ளாமல் வரவேற்றார்கள் சத்தியசீலனின் குடும்பத்தினர்.
கனகாவும் அவள் கணவன் விஜயராகவனும் எதிலும் பட்டுக் கொள்ளாமல் தனித்தே இருந்தனர். கனகா அம்மா வீட்டிற்குள் நுழைந்த உடனேயே “ நாங்க கடனை உடனை வாங்கி இப்போ வீடு கட்டிகிட்டிருக்கோம் அக்கா. அதனால் இந்த கலியாணத்திற்கு எதையும் எதிர் பார்க்காதீங்க “ என்றாள். ராஜேஸ்வரியும் ரமாதேவியும் மட்டும்தான் பட்டு சேலை அணிந்துவந்தனர். சித்ரா சீலையை மறுத்து சுடிதாரில்தான் வந்திருந்தாள்.
கூடத்தின் ஒருபாதியில் பட்டுபாய் விரிக்கபட்டிருந்தது. சுவரை ஒட்டி பிளாஸ்டிக் நாற்காலிகள் போட்டிருந்தனர்.
சத்தியசீலன் தங்கைகள் அவர்கள் வீட்டு மனிதர்களை தனியாக ஒரு அறையில் தங்க வைத்தனர்.
“ இந்த சேலை ரொம்ப நல்லா இருக்கே “ என்று தொட்டு பார்த்தனர்.
“ நெக்லஸ் நல்லா இருக்கே எங்க எடுத்தீங்க ? “ என்றனர்.
“ நல்ல பட்டு புடைவை கட்டிக்கிட்டு கொஞ்சம் அலங்காரம் பண்ணி ராஜியை கூட்டிட்டு வர்றதுக்குள்ள நாங்க பட்ட பாடு “ என்று சொர்ணம்மாள் பெருமையாக அலுத்துக் கொண்டார்.
“ இப்படி ஒரு அண்ணி கிடைக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும். இவங்க ஆயிரம் வருஷத்துக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ “ என்றாள் ஒரு தங்கை.
“ அண்ணின்னு கூப்பிடறதெல்லாம் கலியாணத்துக்கு அப்புறம் “ என்றாள் ராஜேஸ்வரி கண்டிப்புடன்.
“ பாருடா “ என்று பொய்யாக நொடித்தார் சத்தியசீலனின் தாயார்.
ராஜேஸ்வரி வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த பழங்கள், பூச்செண்டு முதலியவற்றை சத்தியசீலன் வீட்டிலிருந்து ஒரு பித்தளை தாம்பாளத்தை வாங்கி அடுக்கி வைத்தனர். கையேடு கொண்டுவந்திருந்த அப்பா சுந்தரமூர்த்தியின் கண்ணாடி பிரேம் போட்ட படத்தை கூடத்தில் வைக்கச் சொன்னாள்.
சத்தியசீலனின் பெரியப்பாவும் பெரியம்மாவும் அம்மபேட்டையிலிருந்து வந்ததும் நிச்சயதார்த்தம் துவங்கியது.
அம்மாவின் அருகில் ராஜேஸ்வரியும் ரமாதேவியும் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். ராஜேஸ்வரியின் பெரியப்பாவும் பெரியம்மாவும் ரமாதேவி அருகில் அமர்ந்திருந்தனர். நடுவில் குத்துவிளக்கு பழத்தட்டுகள். எதிர்வரிசையில் சத்தியசீலன் பட்டுவேட்டி பட்டுசட்டை அணிந்து அமர்ந்திருந்தாள். கூடுதல் பொலிவுடன் இரண்டுவயது குறைந்தவன் போல காணப்பட்டான். அவனருகில் அவன் பெற்றோரும் தம்பியும் அமர்ந்திருந்தனர். பின்வரிசை முழுவதும் அவன்வீட்டு பெண்கள்.
“ ராஜேஸ்வரி நல்லா பாடுவாளாமே. ஒரு நல்ல சாமிபாட்டோட நிச்சயதார்த்தத்தை ஆரம்பிக்கலாமே ? “ என்றார் சத்தியசீலனின் பெரியம்மா.
ராஜேஸ்வரி இதை எதிர்பார்க்கவில்லை.
“ சத்தியசீலனோட இரண்டாவது தங்கை மீரா கூட நல்லா பாடுவாங்களே அவங்களும் உடன் பாடுவாங்களா ? “ என்றாள் ராஜேஸ்வரி.
“ ஒன்னால பாட முடியும்னா நீ பாடு. எதுக்கு மாப்பிளையோட தங்கையை இதில் இழுக்கற? “ என்று சொர்ணம்மாள் கடிந்து கொண்டார்.
“ நீங்க பாடினா நானும் பாடறேன் “ என்றாள் மீரா.
“ தமிழ்ப் பாட்டா இருந்தா நல்லா இருக்கும் “ என்றார் சத்தியசீலனின் பெரியப்பா.
“ ஏன் ? “ என்றாள் ராஜேஸ்வரி.
“ தமிழ்ல பாடினா எல்லாருக்கும் புரியும் “
“ திருப்பாவை திருப்புகழ் இதெல்லாம் கூட தமிழ்தான். இவ்வளவு ஏன் தினம் தினம் பாடும் விநாயகர் அகவல் தமிழ்ப்பாட்டுதான். ஆனா விளக்க உரை இல்லாம அதிலுள்ள தமிழ்ப்பதங்களுக்கு அர்த்தம் புரியாது. இசை வேறு. மொழி வேறு. “ என்றாள் ராஜேஸ்வரி.
“ சரிம்மா திருப்பாவையிலிருந்து ஒரு பாட்டு பாடேன் “ என்றார் சத்தியசீலனின் தகப்பனார்.
மாலே மணிவண்ணா . திருப்பாவை. எம்.எல்.வசந்தகுமாரி பாடிய குந்தலவராளி ராகப் பாசுரம். ராஜேஸ்வரியின் கணீர் குரலில் சபை நிறைந்தது.
பாடிமுடித்ததும் சத்தியசீலனின் பெரியப்பா “ முகூர்த்தபத்திரிகை வாசிச்சுடலாமா? “ என்றார்.
சத்தியசீலன் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிய ஒரு காகிதத்தை தன் பெரியப்பாவிடம் கொடுத்தான். பெரியப்பா வாசிக்க ஆர்மபித்தார்.
‘ சேலம் பரமத்திவேலூர் முனுசாமி அவர்களின் பவுத்திரனும் சேலம் சின்னத்திருப்பதி இராமசாமி அவர்களின் புத்திரனுமாகிய சிரஞ்சீவி. ஆர். சத்தியசீலன் என்ற வரனுக்கும் ஆத்தூர் அப்பாவு அவர்களின் பவுத்திரியும் தெய்வத்திரு சத்தியமூர்த்தியின் புத்ரியுமான எஸ். ரமாதேவி என்கிற வதுவை….. “
சபையில் ஒரு அதிர்ச்சி அலை எழுந்தது.
“ என்னய்யா நிச்சயதார்த்த பத்திரிகையில் பெண்ணின் பேரு தப்பா போட்டிருக்கு “ என்று ராஜேஸ்வரியின் பெரியப்பா சத்தம் போட்டார்.
“ இல்லை சார் பத்திரிக்கை சரியாத்தான் எழுதியிருக்கு “ என்ற சத்தியசீலனின் மனதில் ராஜேஸ்வரியின் ஈமெயில் நிழலாடியது. அது ஸ்கேன் செய்து அனுப்பட்ட ஒரு PDF பைல்.
அந்தக் கடிதத்தின் வரிகள் மனதில் ஓடியது.
மதிப்பிற்குரிய திரு.சத்தியசீலன் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் கடிதம் கிடைத்தது. உங்கள் அளவிற்கு எனக்குக் கோர்வையாக எழுதவராது. சந்தேகபுத்தி என்பதைத்தான் தற்காப்பு உணர்வு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். என்மூத்த சகோதரிக்கு பார்த்து பார்த்துதான் திருமணம் செய்து வைத்தோம். அவளும் நம்காலத்தை சேர்ந்தவள்தான். அவள் புகுந்தவீட்டினரும் நம் காலத்தை சேர்ந்தவர்கள்தான். கலியாணம் ஆன மறுநாளே பெண்ணுக்கு பிறந்தவீட்டில் எந்த உரிமையும் இல்லை என்பதை என் சகோதரயின் புகுந்தவீட்டினர் நிலைநாட்டி விட்டனர். என்றுமே இருபிறப்பாளர் ஆண்கள் கிடையாது. பெண்கள்தாம். இதை மாற்றவே முடியாது. முற்போக்கு என்றுபேசுவோர் வீட்டில் கூட பெண்களுக்கு இதே நிலைதான். திருமணத்திற்குப் பின் ஒரு பெண்ணிற்குப் பிறந்த வீட்டின்மேல் இருக்கும் ஆளுமை பெண்ணிற்கு இருக்குமா ? இதுதான் தற்காப்பு உணர்ச்சியின் காரணம். உங்களைப் போன்ற மாற்று சிந்தனையாளர்கள் பல்கிப் பெருகவேண்டும்.
இனிநான் சொல்லப்போவது தற்காப்பு உணர்ச்சியினால் அன்று. தகப்பனின் இழப்பீடான வேலை என்பதால் நான் தந்தையானவள் என்ற நினைப்பு விழுந்து விட்டது.ஒரு ஆண் தாயுமானவனாய் மாறுவதற்கும் ஒரு பெண் தந்தையானவளாய் மாறுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நான் சொல்லப்போவதை கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடையக்கூடாது. இவள் யாருடா என்னை சட்டாம்பிள்ளை மாதிரி நெகோஷியேட் பண்ணுவதற்கு என்று நீங்கள் நினைக்கக் கூடாது.
பெண்கள் குறித்த நற்சிந்தனை உங்கள் வீட்டில் அனைவருக்கும் இருய்ப்பதால் – இதை என் சுயநலம் என்று கருதினாலும் பரவாயில்லை – என் இளைய சகோதரி ரமாதேவியை உங்கள் வாழ்க்கை துனைவியா ஏற்றுக் கொள்ள முடியுமா ? ரமாதேவியும் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி உங்கள் வீட்டில் வாழ்க்கைப் படுவாள். என் தங்கையை நல்ல இடத்தில கலியாணம் செய்து கொடுத்தேன் என்று என் தந்தை மனநிலையும் சமாதானம் ஆகும்.
—–புரிந்துகொள்ளுதல் என்பது ஒரு நொடியில் நிகழ்ந்துவிடுகிறது. சத்தியசீலனுக்கு மேற்சொன்ன வரியைப் படித்ததும் அந்தப் புரிதல் நிகழ்ந்தது. எவ்வித நிபந்தனையின்றி ரமாதேவியையும் ராஜேஸ்வரியையும் தனியிடத்தில் கூப்பிட்டு பேசினான். ரமாதான் அழுதுவிட்டாள். ராஜேஸ்வரி அவளை தேற்றி இதற்கு சம்மதிக்க வைத்தாள். கடிதத்தின் கடைசி வரிதான் சத்தியசீலனுக்கு ஒரு தென்பை கொடுத்தது.——
புரிந்துகொள்பவர்கள் பெருகிவருவதால் திருமணம் வேண்டாம் என்ற என் நிலைப்பாட்டினை தளர்த்திக் கொள்ள முடிவு செய்கிறேன்.
இப்படிக்கு,
எஸ். ராஜேஸ்வரி.
புரிந்துகொள்ளுதல் சத்தியசீலனுக்கு மட்டும் நிகழவில்லை. அவர்கள் வீட்டில் அனைவருக்கும் நிகழ்ந்தது. சத்தியசீலனின் தாயார் மடமடவென்று எழுந்து வந்து “ கண்ணு இவ்வளவு நல்ல பொண்ணா நீ ? ஒன்னைய மருமகளா அடைய கொடுத்து வைக்காம போயிட்டேனா ? “ என ராஜேஸ்வரிக்கு கண்ணேறு கழித்தார்..
ராஜியின் அம்மாவிற்கு மட்டும் சமாதானம் ஆகவில்லை.
“ இவ கலியாணத்தை எப்பதான் பார்க்கப் போறேனா ? “ என கலவரத்தில் புலம்பினார்.
“ கவலையே படாதீங்கம்மா.இவனையும் விட நல்லவங்க இந்த உலகத்தில் நிறைய பேர் இருப்பாங்க. அதுல ஒருத்தன் ஒங்க பொண்ணுக்கு மாப்பிள்ளையா வராமலா போயிடுவான்? இனிமேல் உங்கபொண்ணு கலியாணம் எங்க கவலையும் கூட “ என்றார் சத்தியசீலனின் அப்பா.
“ சரி சரி ! எல்லாம் உட்காருங்கப்பா. நம்மைவிட நல்லா சிந்திக்கிற ஒரு தலைமுறை உருவாகிட்டு வருது. நெறஞ்ச மனசோட ஒரு முகூர்த்தபத்திரிகை ஒரு சின்ன திருத்தம் பண்ணிப்பிட்டு வாசிச்சுபுடுவோம். “ என்றார் சத்தியசீலனின் பெரியப்பா.
“ இன்னொரு திருத்தமா ? “ சபை வினா எழுப்பியது. தன்னிடம் இருந்த பேனாவினால் ஒரு சிறிய மாற்றம் செய்தார். பின்பு “ நானே வாசிச்சுபுடுறேன் “ என வாசிக்க தொடங்கினார்.
“சேலம் பரமத்திவேலூர் முனுசாமி அவர்களின் பவுத்திரனும் சேலம் சின்னத்திருப்பதி இராமசாமி அவர்களின் புத்திரனுமாகிய சிரஞ்சீவி. ஆர். சத்தியசீலன் என்ற வரனுக்கும் ஆத்தூர் அப்பாவு அவர்களின் பவுத்திரியும் தெய்வத்திரு சத்தியமூர்த்தியின் புத்ரி எஸ். ராஜேஸ்வரியின் இளைய சகோதரியுமான சௌபாக்கியவதி. எஸ். ரமாதேவி என்கிற வதுவை கடவுளின் கிருபையாலும் பெரியவர்களின் ஆசீர்வாதங்களுடனும் இருவீட்டாரின் பூரண சம்மதத்துடன் எழுதிக் கொண்ட நிச்சயதார்த்த பத்திரிக்கை. “ என்று வாசித்து முடித்தார்.
“ என்னம்மா திருத்தம் சரிதானே ? “ என்றார் ராஜேஸ்வரியைப் பார்த்து.
அவரை கைகூப்பி வணங்கினாள் அந்த தந்தையானவள்.
( முற்றும் )
- பெண்களும் கைபேசிகளும்
- தரி-சினம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள நியூட்ரான் விண்மீன் வெடிப்பில் தீப்புயல் எழுச்சி.
- குண்டலகேசியில் யாக்கை நிலையாமை
- பாரம்பரிய வீடு
- அரசற்ற நிலை (Anarchism)
- அடுத்தடுத்து எமது இலக்கியக்குடும்பத்தில் பேரிழப்பு
- எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மறைந்தார்
- ஆனந்தபவன். நாடகம் காட்சி-10
- குழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்
- தொடுவானம் 39. கடல் பிரயாணம்
- சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல் -2
- தவறாத தண்டனை
- தந்தையானவள் அத்தியாயம்-6
- ஆத்ம கீதங்கள் -2 மங்கையர் “சரி” என்றால் .. !
- வாழ்க்கை ஒரு வானவில் -26