பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.

This entry is part 1 of 14 in the series 9 நவம்பர் 2014

girl-students

பெண்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட்டாலும் பெண்களுக்கான சலுகைகளும் சட்டங்களும் இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.. வாரிசு உரிமைச் சட்டம், வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம், குடும்ப வன்கொடுமை தடுப்புச்சட்டம்னு ஒரு சில சட்டங்கள் பத்தி ஓரளவு விலாவாரியா தெரிஞ்சிருக்கும். ஆனா பெண் குழந்தை கருவில் இருப்பதிலிருந்தே அரசாங்கம் கொடுக்கும் பலவிதமான சலுகைகளையும் பெண்களுக்கான சட்டங்களையும் பற்றித் தெரிந்து கொள்வோம்.

முதலில் கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையா ஆண் குழந்தையா அப்பிடின்னு ஸ்கேன் செய்து சொல்வதால் அந்தக் குழந்தை கருவிலேயே கொல்லப்பட வாய்ப்பு உண்டுன்னு அரசாங்கம் தடைச் சட்டம் விதிச்சிருக்கு. 1994 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தின் படி கருவில் இருக்கும் குழந்தைக்கு வேறு ஏதும் நோய்க்கூறுகள் தாக்கக்கூடிய அபாயத்தைத் தெரிந்து கொள்ளவோ அல்லது குழந்தையின் இயக்கம் தொடர்பான வளர்ச்சி தொடர்பான முறையிலோ ஸ்கேன் செய்யலாமே ஒழிய குழந்தையின் பாலினம் தொடர்பாகக் கண்டறிந்து அதை பெற்றோர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ தெரிவிப்பது குற்றமாகும். இதனால் மருத்துவமனை மீதும் மருத்துவர் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாமாம்.

அடுத்து அப்படிப் பிறந்த பெண்குழந்தைகள் சில சமயம் அழிக்கப்பட்டுவிடுவதாலும் அநாதையாக குப்பைத் தொட்டியில் போடப்படுவதாலும் அரசு தொட்டில் குழந்தைகள் திட்டத்தை 1992 ஆம் ஆண்டு தமிழகத்திலேயே முதன் முறையாக சேலத்தில் கொண்டு வந்தது. அப்புறம் மதுரை, தேனி போல  நிறைய மாவட்டங்களுக்கு இது விரிவடைஞ்சுகிட்டு வருது. இதன் மூலம் பல பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்காங்க.

கருக்கொலை சிசுக்கொலை ஆகியவற்றில் இருந்து தப்பித்தாலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படுவதுண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் உரிய பராமரிப்பையும் சமத்துவத்தையும் கல்வியையும் வசதி வாய்ப்புகளையும் பெறும் உரிமையை குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் கொடுக்குது.

ஆண்குழந்தைகள் இல்லாமல் இரு பெண்குழந்தைகள் மட்டுமே கொண்ட குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட பெற்றோரின் ஆண்டு வருமானம் 24,000 க்கு மிகாமல் இருந்தால் அவர்கள் தக்க சான்றிதழ்களோடு அரசிடம் விண்ணப்பிக்கலாம். அவர்கள் குழந்தைகள் பத்தாம் வகுப்புவரை பயில அரசாங்கமே உதவித் தொகை அளிக்குது.

பெண்களுக்கான வாழ்வுரிமைப் பாதுகாப்புச் சட்டம் கருத்து உரிமை, பேச்சுரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை சுதந்திரமாக வாழும் உரிமை, திருமணம் செய்துகொள்ளும் உரிமை ஆகியவற்றைக் கொடுக்குது. பதின்பருவத்தைத் தாண்டாத குழந்தைகளின் பால்ய விவாகங்களும் தண்டனைக்குரிய குற்றங்களே.

கல்லூரி சென்று படிக்கும் பெண்கள் அனுபவிக்கும் ஈவ் டீஸிங்க், ராகிங் ஆகியவற்றையும் களைய கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. அதேபோல் பெண்ணைக் காதலித்தோ அல்லது காதல் கைகூடாமலோ ஆசிட் வீசும் ஆணுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைச் சட்டம் ஏப்ரல் 2013 லேயெ ப்ரணாப் முகர்ஜியின் ஒப்புதலோடு கொண்டு வரப்பட்டிருக்கு. கற்பழிப்பு போன்ற பாலியல் குற்றங்களுக்கு இபிகோவின் 375, 376 சட்டப்பிரிவு செயல்படுகிறது. இது குற்றத்தைப் பொறுத்து குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கவும் வழி செய்யுது.

இன்னும் பெண்களை ஊடகங்களில் கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதைத் தடை செய்யும் சட்டமும் 1999 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டிருக்கு.

பெண்களுக்கான சமூக நலச் சட்டங்களில் திருமணம் செய்ய பெண்ணுக்கு 21 வயது ஆகி இருக்கணும்னு சட்டம் சொல்லுது.. மேலும் அதை முறைப்படி ரெஜிஸ்டர் செய்யணும். 21 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுக்குத் திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

திருமணத்துக்கான உதவித் திட்டமாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம் செயல்படுது. பத்தாம் வகுப்புப் படித்த பெண்களுக்கு ரூபார் 25000 ஆயிரம் ரூபாய் பணமும் 4 கிராம் தங்கமும் , பட்டப்படிப்புப் படித்திருந்தால் 50000 ரூபாய் பணமும் 4 கிராம் தங்கமும் வழங்கப்படுது. உரிய சான்றிதழ்கள் கொடுக்கணும். பெற்றோரின் மாத வருமானம் 2000 க்குமேல் இருக்கக்கூடாது.

1961 இல் மகப்பேறு நலச் சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் சேர்மன் அருந்ததி பட்டார்ச்சார்யா வங்கியில் பணிபுரியும் பெண்கள் கர்ப்ப காலத்திலிருந்து பிள்ளைப்பேறு முடிந்து அவர்கள் பள்ளி செல்லும்  காலம் வரை 6 ஆண்டுகள் இடைக்காக ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று சலுகை அறிவிச்சிருக்காங்க. அதற்குப் பின் இன்னும் சில வங்கிகளும் இதைப் பின்பற்றுகின்றன. எல்லா நிறுவனங்களும் இதைக் கொண்டுவந்தால் நல்லது.

பெண்களின் பணிப்பாதுகாப்புச் சட்டங்களும் முக்கியமானவை. பணியிடப் பாலியல் பலாத்காரம் ஏற்பட்டால் அதைப் புகாரளிக்கலாம். இன்னும் தலித் பெண்களுக்கான சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டமும் உள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்தால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். தங்களது சலுகைகள் உரிமைகள் பற்றி இவர்களுக்கு இன்னும் தெரிவதில்லை என்று சாஸ்த்ரிபவன் பெண்கள்/ தலித் பெண்கள் ஊழியர் தலைவி மணிமேகலை ஒரு முறை சொன்னார்.

வேலைக்குச் செல்லாத இல்லத்தரசி ஒரு விபத்தில் இறந்துவிட்டால் அந்தக் இறப்புக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது.

திருமணம் ஆகி வரதட்சணைப் ப்ரச்சனையால் கொடுமை செய்யப்பட்டால் அதற்குத் துணைபுரிவதுதான் வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம். வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் கிரிமினல் குற்றமாகும். இது நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை கணவருக்கு மட்டுமல்ல. அவருடைய உறவினர்களுக்கும் கிடைக்கும். இந்தக் குற்றத்தை தான் செய்யவில்லை என கணவர் தரப்பினர் நிரூபிக்க வேண்டும். ஸ்டவ் வெடித்துச் சாவு, தற்கொலை எனப் பல பெண்களை வரதட்சணைப் பிரச்சனைகள் காவு வாங்கியதால் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் சில சமயம் பிடிக்காத கணவர் குடும்பத்தாரைப் பழிவாங்கவும் பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு முகநூல் நண்பர் குறிப்பிட்டு இருந்தார்.

திருமண வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட்டால் குடும்ப நலக் கோர்ட்டுகள் இருக்கின்றன.அவற்றில் முறையீடு செய்யலாம். குடும்ப வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி உடல்ரீதியாக மனரீதியாக பாலியல் ரீதியாக பொருளாதார ரீதியாகத் துன்புறுத்தப்பட்டால் அவர்கள் அருகிலிருக்கும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடியும். 2005 இல் வந்த இந்தச் சட்டத்தின் படி கணவரைக் கைது செய்யவும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை பெறவைக்கவும் முடியும்.

இந்திய விவாகரத்துச் சட்டத்தின் படி பெண்கள் தக்க காரணங்களுக்காக விவாகரத்துப் பெறவும் முடியும். கணவனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தால், மனைவியை விட்டு 3 வருடம் பிரிந்திருந்தால், வேறு ஒரு பெண்ணோடு தொடர்புகொண்டிருந்தால்,  மனநிலை சரியில்லாதவராக இருந்தால், ஆண்மைக்குறைபாடு உள்ளவராக இருந்தால் கொடுமைப்படுத்தினால் விவாகரத்துக் கோர முடியும். கணவரின் வசதி வாய்ப்பு வருமானத்துக்கு ஏற்ப ஜீவனாம்சம் கோரவும் முடியும்.

விவாகரத்துப் பெற்ற பெண்களும் விதவைப் பெண்களும் மறுமணம் செய்து கொள்ளும் உரிமையையும் சட்டம் அளிக்கிறது.பெற்றோரை இழந்த பெண்களுக்கும் அரசுத் திட்டங்கள் திருமண உதவி செய்கின்றன.  ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டமும், அன்னை தெரசா நினைவு ஆதரவு அற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டமும் கை கொடுக்குது. சுய மரியாதைத் திருமணங்களுக்கும் சட்டரீதியான அங்கீகாரம் உண்டு.

விதவைப் பெண்களுக்கும் அநாதைப் பெண்களுக்கும் ஆதரவு அற்ற முதிய பெண்களுக்கும்  அரசாங்கம் உதவிப் பணம் அளிக்குது . ஆனால் அவங்க மாத வருமானம் ரூ 5000 க்குள் இருக்கணும். விதவைப் பென்ஷன் என்று பல ஏழைப் பெண்கள் இதன் மூலம் மாதா மாதாம் ஒரு சிறு தொகையைப் பெற்று வருகிறார்கள்.

இந்திய வாரிசுரிமைச் சட்டம். 1956 இல் ஏற்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்படி பெண்களுக்கும் தந்தையின் சொத்தில் சமபங்கு உண்டு. 1989 இல் கொண்டுவந்த சட்டத்தின் படி பரம்பரைச் சொத்திலும் பங்குண்டு. ஆண்குழந்தை இல்லாவிட்டால் பெண் தான் வாரிசுதாரர். தாய் தந்தை இருவர் மூலமும் கிடைத்த சொத்தும் அவரையே சாரும். ஆனால் குழந்தையில்லாமல் இறந்த விதவைப் பெண்ணின் தாய் தந்தை தந்த சொத்துக்களைத் தன் சகோதரன் சகோதரிக்கு உயில் எழுதி வைக்காவிட்டால் அது கணவன் குடும்பத்தினருக்கே செல்லும்.

கணவன் மனைவிக்கு என்று ஒரு பொதுவான வங்கி அக்கவுண்ட் இருக்கவேண்டும் அதில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றால் அதன் வாரிசுதாரர் யார் என்று குறிப்பிட்டால் மட்டுமே அது கணவன் அல்லது மனைவிக்குப் பின் கணவன்/மனைவிக்கு வந்து சேரும். அதன்படிதான் வீடு இன்னபிற அசையும் அசையாச் சொத்துக்களும், இன்சூரன்ஸ் முதலியனவும் கிடைக்கும்.
அரசாங்கமும் எத்தனை உதவித் திட்டங்களும் எத்தனை சட்டங்களும் கொண்டு வந்தால்தான் என்ன. பெற்றோர் பெண்களைத் தம் சொத்தாக வாரிசாகக் கருத வேண்டும். பெண்களை சமூகம் அரவணைக்கணும். பெண்களுக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். மேலும் திருமணமான தம்பதியருக்குள் புரிந்துணர்வு இருக்க வேண்டும். அதுவரை பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்தான் கைகொடுக்கும்.

Series Navigationகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015வாழ்க்கை ஒரு வானவில் – 28எல்லா நதியிலும் பூக்கள்தூய்மையான பாரதம்ஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. ! [கவிதை -2]” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *