வாழ்க்கை ஒரு வானவில் – 28

This entry is part 2 of 14 in the series 9 நவம்பர் 2014

 

ரமணியின் முக மாற்றம் விளைவித்த திகைப்பு மாறாத பார்வையை நீக்கிக் கொள்ளாமல், வேலுமணி அவனைப் பார்த்தவர் பார்த்தபடியே நின்றார்.

”நீங்களாவே என்னை அழைச்சுட்டுப் போக வந்தீங்களா, இல்லாட்டி, அவர் சொல்லி வந்தீங்களா?” என்று அவன் கேட்டதும், வேலுமணி, “நானாத்தான் வந்தேன், ரமணி.. முதல்ல நீ தங்கியிருக்கிற சேதுரத்தினம் சார் வீட்டுக்குத்தான் போனேன். கதவு பூட்டி யிருந்தது. அதனால, இங்க வந்து பார்க்கலாம்னு வந்தேன்….” என்றார்.

இதற்குள் ராமரத்தினமும் சேதுரத்தினமும் அங்கு வந்து சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் இருந்தது நுழைவாயில் வராந்தாவாதலால் இருவரும் பேசியதெல்லாம் அவர்கள் செவிகளில் விழுந்திருந்தது.

“சரி. அப்ப உங்களோட நான் வர்றேன். ரெண்டு பேரும் நர்சிங் ஹோமுக்கு என்னோட பைக்லயே போயிடலாம். நீங்க பஸ்லதானே வந்தீங்க?”

”ஆமா, ரமணி. பஸ்லதான் வந்தேன். அப்பாவுக்கு ஏதோ தூக்க மருந்து குடுத்துத் தூங்க வெச்சிருக்கார் டாக்டர். அதனாலதான் கிளம்பி வந்தேன். இல்லாட்டி தடுத்திருப்பாரு….”

நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு ரமணி பின்னிருக்கையில் வேலுமணியை அமர்த்திக்கொண்டு தன் பைக்கைக் கிளப்பினான்.

பைக் தெரு முக்கைக் கடந்ததும், “என்ன, அண்ணா, அப்பாவுக்கு நிஜமாவே ஹார்ட் அட்டேக்கா?” என்று கேட்டான்.                                ”என்ன்,,ரமணி, இப்படிக் கேக்கறே?”

”எதுக்குக் கேக்கறேன்னா, ஹார்ட்டே இல்லாத ஒருத்தருக்கு ஹார்ட் அட்டேக் எப்படி வந்ததுங்கிற ஆச்சரியத்துலதான் கேக்கறேன்…”

“……………”

“என்ன, அண்ணா, ஒண்ணும் சொல்லாம இருக்கீங்க? அன்னைக்கே ஒரு தரம் மயக்கம் போட்டு விழுந்த மாதிரி பாவனை பண்ணினார்தானே? அதான் இப்பவும் எனக்கு சந்தேகம் வருது. நம்ம ஃபேமிலி டாக்டர் சந்தோஷம் அப்பாவோட நெருங்கின நண்பராச்சே! அவர் கிட்ட சொல்லி வெச்சு ஏதானும் வேஷம் போட்றாரோ என்னவோ!”

“ ………….”

”என்ன, இப்பவும் ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க?”

”நான் என்னத்தைச் சொல்லட்டும், ரமணி? எனக்கும் ஒண்ணும் புரியல்லே. இருந்தாலும் ஒரேயடியா இது மாதிரி சந்தேகப்படவும் கூடாது. அது நிஜமா இருந்ததுன்னு வச்சுக்க, நாளைக்கு வருத்தப்படுவோம்….”

ரமணி மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் பைக்கை ஓட்டினான்.

குடும்ப மருத்துவர் என்னும் முறையில் மட்டுமல்லாது, கணேசனின் மிக நெருங்கிய நண்பர் என்பதால், டாக்டர் சந்தோஷம் தமது மருத்துவ மனையில் கணேசனது அறையிலேயே இருந்தார். கதவு முவதுமாய்ச் சாத்தியிருக்கவில்லை. விரலளவு இடுக்கு இருந்தது. தானியங்கியில் ஏதோ கோளாறு. ரமணியும் வேலுமணியும் அவ்வறையை நெருங்கிய கணத்தில் உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. அது கணேசனின் குரல் என்பதைப் புரிந்துகொண்ட ரமணி அவசரமாய் வேலுமணியின் கையைப் பிடித்து அறையினுள் செல்ல விடாமல் தடுத்தான். உதடுகளின் குறுக்கே ஆள்காட்டி விரலை வைத்து, விழிகளை மலர்த்தி உள்ளே போக வேண்டாமென்று சைகை செய்தான்.

”வேலுமணி ரமணியை இட்டாரேன்னு சொல்லிட்டுப் போயிருக்காரு.”

”எதிர்பார்த்ததுதான். என்ன பிள்ளைங்களோ! … நீ என்னோட ஒத்துழைக்கணும், சந்தோஷம். இல்லேன்னா, என் சந்தோஷம் பறி போயிடும்….”

”அதுக்காக என்னைய வேஷமா போடச் சொல்றே? டாக்டர் தொழில் எதிக்ஸுக்கு எதிரானதுப்பா நீ சொல்றது.”

”எதிக்ஸ் மண்ணாங்கட்டி யெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீ என் சின்னவயசுலேர்ந்து சிநேகிதனாய் இருக்குறவன். இது கூடச் செய்ய மாட்டியா? அப்பவாவது அவன் அந்தச் சிறுக்கிப் பொண்ணை மறக்குறானான்னு பார்க்கறேன்….”                                                                கணேசனும் சந்தோஷமும் மெதுவாகத்தான் பேசிக்கொண்டார்க ளென்றாலும் கதவிடுக்கின் வழியே அவர்களது உரையாடல் தெளிவாக வெளியே கேட்டது.

ரமணி கதவைத் தட்டிவிட்டு, பதிலுக்கு நின்றான். டாக்டர் சந்தோஷமே கதவு திறந்தார்.

”வாப்பா தம்பி…”

கணேசன் கண்களை மூடிப் படுத்திருந்தார்.

ரமணி, புன்சிரிப்புடன், “என்ன டாக்டர்? எப்படி இருக்காரு எங்கப்பா?” என்றான்.

”பயப்படுறதுக்கு இப்போதைக்கு ஒண்ணுமில்லே, தம்பி.ஆனா எந்த அதிர்ச்சியும் அவருக்கு ஆகாது…”                                                   ”அப்பைன்னு சொல்லச் சொன்னாரா?” என்று அவன் சற்றும் தயங்காமல் வினவவும் டாக்டர் சந்தோஷத்தின் முகம் தொங்கிப் போனது.

பின்புறம் திரும்பிக் கதவுப் பக்கம் பார்த்த ரமணி, கதவிடுக்கைச் சுட்டிக் காட்டியபடி, “உங்க ஆட்டமேட்டிக் டோர் ஹின்ச் வேலை செய்யல்லே, ரகசியம் பேசுறதுக்கு முன்னாடி அதைச் சரி பண்ணுங்க, டாக்டர்… அப்ப நான் கிளம்பறேன். நான் சொல்றதெல்லாம் அவார் காதுல விழுந்துண்டுதான் இருக்கு. …” என்று கடுகடுப்புடன் இரைந்து கூறிவிட்டு, வேலுமணியை நோக்கி, “அண்ணா! அப்ப நான் வர்றேன். அவருக்கு நிஜமாவே உடம்பு சரியில்லாம போனா மட்டும் வந்து சொல்லுங்க… ஆனா, பாவம் நீங்க. அதை எப்படி உங்களால கண்டுபிடிக்க முடியும்?…. நீங்க இங்க இருந்துக்குங்க. நான் வர்றேன்… வர்றேன், டாக்டர்.”

ரமணி விடுவிடுவென்று வெளியேறினான்.

… அன்று பிற்பகலில் ரமணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கூப்பிட்டுப் பேசியவர் டாக்டர் சந்தோஷம்தான்: “தம்பி, ரமணி!. நான் டாக்டர் சந்தோஷம் பேசறேன்….”

”பேசுங்க, டாக்டர். சந்தோஷம்னு பேர் வெச்சுக்கிட்டு என்னோட சந்தோஷத்தைக் கெடுக்கப் பாக்கறீங்களெ, நியாயமா, டாக்டர்?….ஆனா, பாவம், நீங்க என்ன பண்ணுவீங்க? உங்க நண்பரோட சந்தோஷம் உங்களுக்குப் பெரிசாத் தெரிஞ்சிச்சு… இல்லையா? சரி, சொல்லுங்க. இப்ப வேற என்ன பொய்யைச் சொல்லச் சொன்னாரு எங்கப்பா?” ”

”படபடன்னு பொரிஞ்சு கொட்டாதே தம்பி. நான் ஒண்ணும் உங்கப்பாவோட ஒத்துழைக்கல்லையே! உண்மையை உங்கிட்ட அப்பால சொல்றதாத்தான் இருந்தேன்… அதுக்குள்ள உனக்கே அது தெரிய வந்த்டிச்சு…”

”ஏதோ சொல்லிச் சமாளியுங்க. அது சரி, இப்ப எதுக்கு ஃபோன் பண்றிங்க? அதைச் சொல்லுங்க.”

”உன்னாண்ட மன்னிப்புக் கேக்குறதுக்குத்தான், தம்பி. வேற என்னத்துக்கு?”

”இல்லே, என் சொந்த விஷயத்துல வேற ஏதாச்சும் புத்திமதி சொல்லச் சொன்னாரோன்னு தெரிஞ்சுக்கிறதுக்காகக் கேட்டேன்.”

”நான் மாட்டேன்னுட்டேன், தம்பி… மறுபடியும் சாரி. அப்ப வெச்சுடட்டுமா?”

”அதெல்லாம் வேணாம். ஆனா எங்கப்பாவுக்கு நிஜமாவே உடம்பு சரியில்லாம போச்சுன்னா மட்டும் எனக்குச் சொல்லுங்க. அப்ப வெச்சுடட்டுமா? தேங்க்யூ, டாக்டர்!” …..

………   சேத்ரத்தினம் கோமதியைத் தனியாகப் பார்த்துப் பேசித் தன் இணக்கத்தை அவளுக்கு ஒரு தோதான நாளில் தெரிவித்தான். அதன் பின் இரண்டு திருமணங்களின் எதிர்பார்ப்பில் எல்லாருமே மகிழ்ச்சசியுடன் நாள்களைக் கழித்தார்கள்.                                               குறிப்பிடத்தக்க நிகழ்வு ஏதுமின்றி நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. குழந்தை ஊர்மிளா சிரிப்பு, வேடிக்கை, விளையாட்டு என்று எல்லாரையும் மகிழ்வித்தவாறும், சிறு சிறு பிள்ளை நோய்கள் வசப்பட்டு அவ்வப்போது தன் அழுகையின் மூலாம் எல்லாரையும் அச்சுறுத்தியவாறும் கோமதியின் பராமரிப்பில் நன்றாக வளர்ந்துகொண்டிருந்தாள்.

ரங்கனின் மனைவி லலிதா உரிய நாளில் ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். சேதுரத்தினம் போய்ப் பார்த்துவிட்டு வந்தான்…

….. ரமணி வழக்கம் போல் வேலுமணியோடு அடிக்கடி தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான். கணேசனின் எண்ணப் போக்கில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாய்த் தெரியவில்லை என்பது வேலுமணி அவனுக்குச் சொன்ன சேதியாகும்.

மூத்தவள் மாலாவுக்கு முதலில் திருமணம் செய்விக்காமல் கோமதியின் திருமணத்தை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் ரமணி தன் அப்பாவின் சம்மதம் பெற்ற பிறகுதான் தன் திருமணம் நடக்க வேண்டும் என்கிற பிடிவாதத்தை விட வேண்டும் என்று எல்லாருமே அவனை வற்புறுத்தலானார்கள். ஆனால் ரமணி அப்படி ஓர் ஏற்பாட்டுக்கு ஒப்;புக்கொள்ள மறுத்துவிட்டான். எனவே, கோமதிக்கு முதலில் செய்துவிட வேண்டியதுதான் என்று பருவதம் கருதலானாள். அதன்படியே, ஒரு நல்ல நாளில் திருத்தணி முருகன் சந்நிதியில் ஓர் எளிமையான திருமணம் சேதுரத்தினத்துக்கும் கோமதிக்கும் நடந்தது. அதன் பின்னர் சேதுரத்தினத்துடன் தான் தங்குவது முறையன்று என்று கருதிய ரமணி பக்கத்திலேயே ஒரு சிறு வீட்டைத் தேடிப் பிடித்துக் குடியேறினான்.

ரமணியைப் பொறுத்த மட்டில், கணேசனின் மனம் ஒரு நாள் கண்டிப்பாக மாறும் என்கிற நம்பிக்கையுடன் நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறான்.

/ முற்றும் /

Series Navigationஅறுபது ஆண்டு நாயகன்ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12ஆதலினால் காதல் செய்வீர்எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருதுதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பாபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

  1. Avatar
    மணிகண்டன் says:

    நம்பிக்கைதான் வாழ்க்கை. சிறப்பான கதை. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *