டாக்டர் ஜி. ஜான்சன்
பால்ய நண்பன் பால்பிள்ளை என் அளவுக்கு வளர்ந்திருந்தான். அவன் என் பக்கத்துக்கு வீடுதான். எதிர்வீட்டு மண்ணாங்கட்டி என்ற கலியபெருமாள் திரும்பி வரவேயில்லையாம். நான் சிறு வயதில் சிங்கப்பூர் சென்றபோது வீட்டை விட்டு ஓடிப்போனவன். அவனுடைய அப்பாவைப்போலேவே அவனும் காணாமல் போய் விட்டான். அவனுடைய தாயார் கண்ணமாவும் இறந்து விட்டார்.
பால்பிள்ளை என்னுடன்தான் மூன்றாம் வகுப்ப வரைப் படித்தான்.அதன்பின்பு ஆறாம் வகுப்புக்குமேல் அவனால் படிக்க முடியவில்லை.வசதிக் குறைவால் சிதம்பரம் சென்று கல்வியைத் தொடர முடியவில்லை. அதனால் அவன் முழு நேர விவசாயத்தில் ஈடுபட்டுவிட்டான். ஏர் உழுவது, விதை விதைத்தல், களை எடுத்தல், உரம் இடுதல், அறுவடை செய்தல், கதிர் அடித்தல், மூட்டை தூக்குவது போன்ற அனைத்து வேலைகளும் செய்து வந்தான்.அதோடு அம்மாவுக்கும் எடுபிடி வேலைகளும் செய்து உதவுவான். என்னைப் பார்த்ததில் அவனுக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அவனுடைய அப்பாவின் பெயர் நல்லான். அவர் தூண்டில் போடுவதில் வல்லவர். வீட்டில் நிறைய தூண்டில்கள் வைத்திருப்பார்.அவரைப் பார்த்துதான் நானும் தூண்டில் போடுவதில் ஆர்வம் கொண்டிருந்தேன். பால்பிள்ளையும் தூண்டில் போடுவதில் ஆர்வம் கொண்டவன்தான். பால்பிள்ளையின் அம்மாவின் பெயர் முனியம்மாள்.அவரும் அம்மாவுக்கு உறுதுணையாக உதவுவார்.
வயல் வெளிக்குச் சென்ற பால்பிளையும் நானும் அங்கேயே காலைக் கடனை முடித்துக்கொண்டு இராஜன் வாய்க்காலில் குளித்துவிட்டு வீடு திரும்பினோம். பசியாற சுடச்சுட தோசையும் சுவையான சாம்பார் சட்டினியும் இருந்தது. பசும்பாலில் தேநீர் பருகினோம்.
அப்போது பெரிய தெருவிலிருந்து செல்லக்கண்ணு மாமா ,” அப்பா…. நல்லா இருக்கீங்களா? ” என்று கேட்டவண்ணம் திணையில் வந்து அமர்ந்தார்.
” வாங்க மாமா. பசியாறுங்கள் .” என்று அழைத்தேன். அவரும் எங்களுடன் சேர்ந்து கொண்டார். பேசிக்கொண்டே பசியாறினோம். அம்மா நாங்கள் போதும் என்று சொல்லும் வரை தோசைகளைப் பரிமாறிக்கொண்டிருந்தார். மாமா வீட்டுக்கு வரும்படி அழைத்தார். நான் மாலையில் வருவதாகக் கூறினேன்.
உறவினர்கள் வந்து போய்க்கொண்டுதான் இருந்தனர்.அவர்களை திண்ணையில் அமர்ந்தவண்ணம் கண்டுகொண்டேன். பலரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. புதிதாகப் பலர் அறிமுகம் ஆனார்கள். எனக்கு இவ்வளவு உறவுகளா என்று அசந்து போனேன். மொத்தத்தில் அந்த ஊரே எனக்கு சொந்தம் போல் தோன்றியது.
மதியம் அம்மா சமைத்த வீட்டு கோழிக் கறியைப் பரிமாறினார். பால்பிள்ளையும் நானும் உண்டு மகிழ்ந்தோம்.பத்து ஆண்டுகளுக்கு முன் நான் சாப்பிட்ட ருசி நினைவுக்கு வந்தது. தோட்டத்தில் கோழிக் கூடு மாட்டுக் கொட்டகையின் அருகில் இருந்தது. ஏராளமான கோழிகள் இருந்தன. அதிகாலையிலேயே அவற்றில் ஒன்றைப் பிடித்து கூடைக்குள் போட்டு அடைத்து விடுவார். பின்பு அதைப் பிடித்து அறுத்து சமைப்பார்..எங்கள் வீட்டுக் கோழிக் குழம்பு கொதிக்கும்போது தெருவில் அதன் மணம் கமகமக்கும். மதிய உணவுக்குப் பின் திண்ணையில் கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கினேன்.
மாலையில் பால்பிள்ளையை அழைத்துக்கொண்டு ஊரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன். தெருவின் எல்லா வீடுகளையும் பார்த்து அங்குள்ளோரின் நலன் விசாரித்தேன். பலர் பத்து வருடங்களுக்கு முன் இருந்த அதே ஏழ்மை நிலையிலேயே இருப்பது தெரிந்தது. ஏழைகளாக இருந்தாலும் அதே வகையில் அன்பைப் பொழிவதில் அவர்கள் குறைந்து போகவில்லை. சூது வாது தெரியாத அப்பாவி மக்களாகக் காணப்பட்டனர்.பலருக்கு குடியிருக்கும் பரம்பரைக் குடிசைகளும் தோட்டமும்தான் சொத்தாக இருந்தன. சொந்த நிலம் இல்லாத குடும்பங்கள் பல இருந்தன. வயலில் விவசாய வேலை செய்துதான் பிழைப்பு நடத்தினர். வசதிக் குறைவால் பலர் வீட்டுப் பிள்ளைகள் தொடர்ந்து படிக்காமல் விவசாய வேலையிலேயே சிறு வயதில் ஈடுபட்டிருந்தனர். என்னுடன் கிராமப் பள்ளியில் படித்தவர்களின் நிலையும் அப்படித்தான் இருந்தது. அவர்களில் சிவலிங்கம் மட்டும் தொடர்ந்து உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்தான். அரசன் சிறு வயதிலேயே விவசாய வேலையில் ஈடுபட்டுள்ளான்.
எங்கள் வீட்டின் எதிரேதான் தெருவின் ஒரே கல் வீடு இருந்தது. அது நல்ல உயரத்தில் கட்டப்பட்டு சீமை ஓடுகள் போடப்பட்டிருந்தது. படிகளில் ஏறிதான் வீட்டுக்குள் சென்றோம். அங்கு ராஜகிளியைக் கண்டோம். குப்புசாமி சித்தப்பா ச்தம்பரம் சென்றிருந்தார். சின்னமாவைக் கட்டியதால் அவர் சித்தப்பா. அவர்தான் ஊர் பஞ்சாயத்துத் தலைவர். அவரை ஊரார் ” கல் ” என்று அழைப்பதுதான் வழக்கம். அந்த பட்டப் பெயருக்கு ஒரு காரணம் சொல்வார்கள். பஞ்சாயத்து நடக்கும்போது வாயைத் திறக்காமல் கல் போல் அமர்ந்திருப்பாராம். கூட்ட முடிவில்தான் தீர்ப்பு சொல்வாராம். ராஜகிளிக்கு அப்போது இரண்டு குழந்தைகள் இருந்தனர்.மூத்தவனை ” மணியாரு ” என்று செல்லமாக அழைத்தனர்.
கல் வீட்டின் எதிரே தெரு முனையில் வேலாயுதம் வீடு இருந்தது. அவர் குடும்பத்துடன் அப்போது மலாயா பத்து பகாட்டில் இருந்தது.
கல் வீட்டின் பின்புறத்தில் பெரிய குளம் இருந்தது. அதில் அல்லிக் கொடிகளும் பூக்களும் நிறைந்திருக்கும். மீன்களும் ஏராளமாக இருக்கும். குளத்தின் மறு கரையில் கடைசி வீடும் நடு வீடும் முனை வீடும் இருந்தன. அவற்றில் நடு வீடு என்பது எங்களுக்கு முக்கியமானது. அதுதான் பாட்டியின் பிறந்த வீடு.
எங்கள் குடும்பம் பெரியது.அதன் வரலாறும் பெரியது.( அது பற்றி பின்னர் சந்தர்ப்பம் வரும்போது கூறுவேன் ) தற்போது அந்த நடு வீட்டு சரித்திரம் மட்டும் கூறிவிடுகிறேன்.
அந்த நடு வீட்டில் வாழ்ந்த ஜேசுதாஸ் ஜெயராணி தம்பதியர்தான் ஊரில் முதன்முதலாக கிறிஸ்துவர் ஆனவர்கள். அதற்குமுன் அவர்கள் கிருஷ்ணன், அன்பாயி என்ற பெயர் கொண்ட இந்துக்கள்தான். அன்பாயி எனற ஜெயராணிதான் என்னுடைய கொள்ளுப்பாட்டி – என் பாட்டியின் தாயார். அவர்களுக்கு ஏசடியாள் ( என்னுடைய பாட்டி ),, ஞானசெல்வம், இன்னொரு பெண்,, தாவீது, தேவகிருபை, ஞானாபரணம், நட்சத்திரம், சாமிப்பிள்ளை.சாமுவேல் என்று ஒன்பது பிள்ளைகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது ஞானஸ்நானம் தரப்பட்டு ஜெர்மன் மிஷனரிகளால் கிறிஸ்துவர்களாக மாற்றப்பட்டனர். இவர்களின் வழிவந்த குடும்பத்தினர்தான் இன்று தெம்மூரிலும், சென்னையிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும், சிங்கபூரிலும், மலேசியாவிலும் பரம்பரை பரம்பரையாக சீர்திருத்த கிறிஸ்துவர்களாக வாழ்ந்து வருகிறோம். இவர்களில் ஏசடியாள் என்பவர் என் அப்பாவைப் பெற்றவர்.இவர் இந்துவாக இருந்தபோது ஆதிலெட்சுமி என்ற பெயர் கொண்டவர். இவர் தன்னுடைய தாய் மாமனான நாராயணன் என்ற என் தாத்தாவை மணமுடித்தார். பனிரெண்டு வயதில் நாராயணன் நத்தானியேல் என்று கிறிஸ்துவ பெயர் பெற்றார். இந்தப் பூர்வீகக் குடும்பத்தில் நத்தானியேல் ,தாவீது, சாமிப்பிள்ளை, சாமுவேல், ஆகியோர் மலாயா வந்துள்ளனர். நத்தானியேல் தாத்தா ஜோகூரில் இருந்தபோது அவருடைய மகன்களான அப்பாவையும் பெரியப்பாவையும் மலாயாவுக்கு அழைத்துக்கொண்டார். அப்பா என்னை சிங்கப்பூருக்கு அழைத்துக்கொண்டார். பெரியப்பா எசேக்கியேல் குடும்பத்தினர் லாபீசில் குடியேறினர். சாமுவேல் குடும்பத்தினரும் லாபீசில் நிரந்தரமாகத் தங்கி மலாயா பிரஜைகள் ஆகிவிட்டனர். சாமுவேல் தாத்தாவின் மகள்தான் ஜெயராணி தேவகிருபை.அவள்தான் என் மனைவி. இது என் குடும்பத்தின் அறிமுக வரலாறு. இந்த குடும்பம் தேம்மூருக்கு எப்படி எங்கிருந்து வந்து குடியேறினர் என்பதை பின்பு கூறுவேன்.
கடைசி வீடு தேவகிருபை பாட்டியின் வீடு.அவருடைய கணவர் ஞானாச்சரியம் என்பவர். அவர்களுடைய பிள்ளைகள் மோசஸ் வில்லியம்,மேரி, எஸ்தர்,கருணாகரம் ஆகியோர். இவர்களில் மோசஸ் வில்லியம் சித்தப்பா சிங்கப்பூரில் பல ஆண்டுகள் இருந்துவிட்டு வேலையில் ஓய்வு பெற்றபின் குடும்பத்துடன் ஊர் திரும்பிவிட்டார். அவருடைய மூத்தமகன் ஹென்றி சிங்கப்பூரில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இளைய மகன் அண்ணாதுரையும் சிங்கப்பூரில்தான் பணிபுரிகிறார். மலர் என்ற ஒரு மகள் குளுவாங்கில் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டு தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.
முனை வீட்டில் நட்சத்திரம் பாட்டியும் இஸ்ரவேல் தாத்தாவும் குடியிருந்தனர். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. நான்தான் அவர்களின் செல்லப் பிள்ளை!
கடைசி வீட்டின் வழியாக ஆற்றைக் கடந்து பெரிய தெரு அடைந்தோம். அங்கு முதல் வீட்டில் தேவசித்தம் சித்தப்பா குடியிருந்தார். அவரும் சிங்கப்பூரிலிருந்து குடும்பத்துடன் திரும்பியவர்.
தெரு வழியாக நடந்து மாமன் வீடு சென்றோம். அங்கு அம்மாவின் தாயார் ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்து முத்தங்கள் பரிமாறினார். செல்லக்கண்ணு மாமா அன்புடன் வரவேற்று தட்டு நிறைய சீவிய மல்கோவா மாம்பரங்கள் தந்தார்.அதன் சுவையே தனிதான்! அவருடன் வேலுப்பிள்ளை மாமாவும் பாலமுத்து மாமாவும் இருந்தனர். இவர்கள் மூவரும் என் தாய் மாமன்கள். செல்லகண்ணு மாமா கிராமத்திலேயே தங்கி நிலங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். மற்ற இருவரும் சிதம்பரத்தில் படித்துக்கொண்டிருந்தனர். இதுதான் அம்மா பிறந்த வீடு.
அம்மாவின் குடும்பமும் பெரியது. அம்மாவின் அப்பா குப்பன் சிங்கப்பூரில் வேலை செய்தவர். அவருக்கு இரண்டு தம்பிகள். அவர்களும் சிங்கப்பூரில் இருந்தவர்கள். அவர்களுக்கு ஒரே தங்கை. ஒரே நேரத்தில் அந்த மூவரும் கல் வீடு கட்டியதோடு, தங்கைக்கும் ஒரு கல் வீடு கட்டித் தந்தனர்.பெரிய தெருவில் சிறப்பாக வாழும் குடும்பம் அம்மாவின் குடும்பம்தான்..அம்மாவுக்கு கோசலாம்பாள், கனகு, மேகவர்ணம், அஞ்சலை ஆகிய நான்கு தங்கைகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் இந்துக்கள்.
மாமா வீட் டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளி செல்லப்பெருமாள் மாமவின் வீடு இருந்தது. அவர் சிங்கப்பூரில் இருந்தார். அவருடைய தம்பி ஜெகநாதன் என்னை வரவேற்றார். இன்னும் சற்று தொலைவில் குப்பன் தாத்தாவின் இரண்டு தம்பிகளின் கல் வீடுகள் இருந்தன. அவர்களில் சோமு தாத்தாவின் வீட்டில் அவருடைய மகன் சாமிதுரை மாமா குடியிருந்தார். அதையடுத்த கடைசி வீடுதான் குப்பன் தாத்தாவின் கடைசித் தம்பியின் வீடு. அந்த ஆறுமுகம் தாத்தாவை நான் சிறு வயதிலிருந்தே வாழை மர தாத்தா என்றுதான் அழைப்பேன். காரணம் வீட்டின் எதிரே ஆற்று ஓரத்தில் பெரிய வாழைத் தோட்டம் வைத்திருந்தார். நிறைய தென்னை மரங்களும் இருந்தன. சிறு வயதில் நான் அங்கு செல்லும்போதெல்லாம் இளநீர் தருவார்கள். அதுதான் இராஜகிளியின் வீடு.
தெரு வழியாகத் திரும்பும்போது அஞ்சலை, கொசலாம்பாள் சித்திகளைப் பார்த்துவிட்டு வாய்கால் வழியாகத் அற்புதநாதர் ஆலயம் சென்றோம். அங்கு இஸ்ரவேல் உபதேசியார் விளக்கு ஏற்றிக்கொண்டிருந்தார். எங்களை ஆலயத்துக்குள் வரச் சொல்லி ஜெபம் செய்தார். அதன் பின்பு கல்லறைத் தோட்டம் சென்று விட்டு வீடு திரும்பும்போது நன்கு இருட்டிவிட்டது.
( தொடுவானம் தொடரும் )
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-திண்டுக்கல் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு
- Interstellar திரைப்படம் – விமர்சனம்
- சாவடி – காட்சிகள் 4-6
- பன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்
- ஆனந்த பவன் நாடகம் காட்சி-14
- ராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.
- கொங்கு வாழ்க்கையின் வார்ப்பு :“ மொய் “ : சுப்ரபாரதிமணியன் சிறுகதை
- சிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது
- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு – மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு
- ஆத்ம கீதங்கள் – 6 ஓயட்டும் சக்கரங்கள் .. !
- அழிவின் விளிம்பில் மண்பாண்டத்தொழில்
- ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்
- பூமிக்கு போர்வையென
- காந்தி கிருஷ்ணா
- 2014 நவம்பரில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திரத்தில் புதிய இரண்டு பரமாணுக்கள் கண்டுபிடிப்பு
- பாண்டித்துரை கவிதைகள்
- “அவர் அப்படித்தான்”……….( ருத்ரய்யா!)
- யாமினி கிரிஷ்ணமூர்த்தி
- கடவுளும் கம்பியூட்டர்ஜியும்
- ஒரு சொட்டு கண்ணீர்
- தொடுவானம் 43. ஊர் வலம்