Posted in

மரச்சுத்தியல்கள்

This entry is part 6 of 23 in the series 7 டிசம்பர் 2014
 KRISHNA_IYER_1276e
(நீதி அரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு
ஓர் அஞ்சலி)
ஒரு நூற்றாண்டு
பயணம் செய்த களைப்பில்
கண் அயர்ந்த பெருந்தகையே!
அன்று ஒரு நாள் வீசிய‌
அரசியல் புயலில்
உன் நீதித்தராசுகள் ஆட்டம் கண்டபோது
ஒரு புதிய மைல் கல்
நட்டுச்சென்றாய்.
அரசியல் சட்டத்தை எல்லாம்
அந்த “இருபது அம்ச” வெள்ளம்
அடித்துக்கொண்டு போனதன்
மௌன சாட்சியாய் நீ இருந்தபோது
உனக்குள் ஒரு வேள்வி
கொளுந்து விட்டு எரிந்தது!
ஆம்!
மனித நேயமே பசையற்றுப்போய்
அச்சிடப்பட்டுவிட்டதோ
இந்த “ஷரத்துக்கள்” என்று!
இந்த நாட்டில்
நீதியரசராய் பிடித்திருக்கும் செங்கோலை
சூட்சுமமாய்
இன்னொரு கை
திசை மாற்றும்
மாயத்திசை எங்கிருக்கிறது என‌
புருவம் உயர்த்தினாய்!
உன் தேடல் இன்னும்
அந்த தராசு முள்ளில்
வெட்டிவைத்த வேதாளம் போல்
தொங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த நாட்டில்
இதிகாசங்கள் மட்டும் அல்ல‌
பிரகாசம் காட்டும்
நீதியின் சில சுவடுகளை பார்ப்பதற்கும்
பக்கங்கள்
லட்சக்கணக்கில் தான்
தேவைப்படுகின்றன.
அதற்குள்
விழுந்து கிடக்கும் ஊசியைத் தேடும்
இந்த பயணம்
இன்னும் நீண்டுகொண்டு தான் இருக்கிறது.
கறுப்பாகி அழுக்காகிப்
போன பொருளாதாரத்தை
வாக்குச்சீட்டுகளாலேயே
வெளுக்க முடியாத போது
வெறும் அட்டை கனத்த‌
அரசியல் சாசனம்
என்ன செய்து விடமுடியும்?
நீதி தேவதையே!
உன் சாட்சிக்கூண்டில்
அந்த மராமரங்களும் அம்புகளும்
வந்து நிற்கப்போவதில்லை.
ஆனாலும் தேர்தல் தோறும்
அந்த ஓலம் உனக்கு கேட்கிறதா?
அது
உன் மேஜை மீது வந்து
கட்டைவிரல் ரேகை உருட்டும் வரை
நீ காத்திருப்பாய்.
“சம்பவாமி யுகே யுகே”
எந்த யுகம் அது என்று
தெரியாதபோதும்
நீ காத்திருப்பாய்.
இருப்பினும்
இந்த அடர்ந்த காட்டின்
நம்பிக்கை கீற்றுகள்
நீதியின் கூரிய முள்ளில்
கோடி சூரியன்களாய்
கருப்பிடித்து வைத்திருக்கிறது
துருப்பிடித்த வாதங்களை
தூக்கி எறியும் ஒரு உத்வேகத்தோடு.
ஓ!நீதியின் காவலனே!
நீதி என்றால்
அது பேனாவின் கீறல் அல்ல!
அது துளியாய் இருப்பினும்
தீப்பொறி தான்
என்று காட்டிய பேரொளி நீ.
சுதந்திரமும் ஜனநாயகமும்
காற்றைப்போல கண்ணுக்குத்தெரியாது.
அதன் அடையாளங்கள் எனும்
அரசு எந்திரங்களில்
ஏன் இந்த அசுரத்தனமான
கட கடத்த ஒலி?
நீதி என்பது
ரத்தமும் சதையும் கேட்கும்
ஷைலக் அல்ல.
நீதிகளுக்குள்
அடியில் நசுங்கிக்கிடக்கும்
மனித நீதியும் சமூக நீதியும்
காலத்தால் உறைந்துபோன‌
சம்ப்ரதாயங்களால்
மிதி பட்டுக்கிடக்கின்றன.
நீதிக்கும் தேவைப்படுகிறது
வர்ணங்களைக் களைந்த ஒரு நிர்வாணம்.
மாண்புமிகு மேதையே
“மகாவீரராய்”
அந்த தரிசனத்திற்கு
கொஞ்சம்
திரை விலக்கியிருக்கிறாய்.
அந்த மரச்சுத்தியல்களில்
கனமாக கேட்கிறது

உன் மனத்தின் ஓசை.

==========================

Series Navigation“சாலிடரி ரீப்பர்”…வில்லியம் வோர்ட்ஸ்வர்த்இளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான்

2 thoughts on “மரச்சுத்தியல்கள்

  1. அன்பு நண்பர்களே

    “மரச்சுத்தியல்கள்” எனும் என் கவிதையில் இறுதி வரி விடு பட்டு போய் இருக்கிறது.அதன் நிறைவு வடிவம் இதோ:

    அந்த மரச்சுத்தியல்களில்
    கனமாக கேட்கிறது
    உன் மனித்தின் ஓசை.

    =====================================ருத்ரா

    அன்புடன் ருத்ரா

  2. மறுபடியும் “பிழைத்தட்டச்சுக்கு” வருந்துகிறேன்

    அன்பு நண்பர்களே

    “மரச்சுத்தியல்கள்” எனும் என் கவிதையில் இறுதி வரி விடு பட்டு போய் இருக்கிறது.அதன் நிறைவு வடிவம் இதோ:

    அந்த மரச்சுத்தியல்களில்
    கனமாக கேட்கிறது
    உன் மனத்தின் ஓசை!

    =====================================ருத்ரா

    அன்புடன் ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *