திரைத் துறையில் வித்தியாசமான முறையில் தடம் பதித்துப் பல சிறந்த திரைப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் நமக்குத் தந்துகொண்டிருந்த இயக்குநர் சிகரம் திரு கே. பாலசந்தர் அவர்கள் 23.12.2014 இல் காலமானார். அவரோடு பழக்கம் இல்லாவிட்டாலும், அந்த நாளில் அவர் அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரிந்தவாறு மேடை நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த நாளிலேயே எனக்கு இவரது அறிமுகம் கிடைத்தது. கலாகேந்திரா திரு கோவிந்த ராஜன் எங்கள் அலுவலகத்தில் பணி புரிந்து வந்த சமயத்தில் அவரைச் சந்திக்க பாலசந்தர் அவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து போவதுண்டு. அப்போது நான் வெறும் குழந்தை எழுத்தாளர் மட்டுமே. எங்கள் அலுவலகக் காண்டீனில் தம்முடன் காப்பி குடித்துக் கொண்டிருந்த அவரைக் கோவிந்தராஜன் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். மற்றப்படி பெரிதாக அவருடன் பேசிப் பழகியதே இல்லை.
தொடர் நாடகம் வெளியிடும் வழக்கம் உள்ள நான்கு வார இதழ்கள் புறக்கணித்த ஒரு குடும்பக் கதை என்னிடம் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த அந்தக் கதையின் சில நகைச் சுவைப் பகுதிகளை மட்டும் அமரர் சாவி அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அத் தொடரைத் திரு சாவி அவர்கள் தமது “சாவி” இதழில் வெளியிடத் தயாராக இருந்தார். ஆனால், அதை நாவலாக மாற்றி எழுதித் தரப் பணித்தார். அப்போது நான் மைய அரசு அலுவலகப் பணியில் இருந்தேன். ஏற்கெனவே நாடகமாக எழுதி முடித்திருந்ததை மீண்டும் நாவலாக மாற்றும் அளவுக்கு எனக்கு நேரமில்லாததால், அதை நான் புத்தகமாக நர்மதா பதிப்பகம் வாயிலாக வெளியிட்டேன்.
திரு பாலசந்தர் அவர்கள் இதற்கிடையே தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கத் தொடங்கியிருந்தார். அந்தக் கதை அவருக்குப் பிடிக்கும் என்று தோன்றியதால் அந்தப் புத்தகத்தை அவருக்கு அனுப்பினேன்.
சில நாள்கள் கழித்து அவர் மருமகள் திருமதி கீதா கைலாசம் எனக்குத் தொலை பேசிமூலம், “உங்க கதையைப் படிச்சு முடிச்சுட்டுச் சிரிச்சுண்டே அவர் எழுந்தார். அப்பவே எனக்குத் தெரிஞ்சுடுத்து அவர் அதை எடுத்துப்பார்னு…” என்று தகவல் தெரிவித்தார்.
அதன் பின் திரு பாலசந்தர் பேசினார்: “அதை நான் டிவி சீரயலாப் போடலாம்னு இருக்கேன். …” என்றார்.
நன்றி கூறிய பின், “நான் எப்பவும் எழுதற கதைகள்ளேருந்து அது வித்தியாசமானது, சார். எப்பவும் பெண்களுக்குப் பரிஞ்சே அடிக்கடி எழுதறது வழக்கம். இந்தக் கதையிலே ரெண்டு பெண்களுக்கு இடையிலே மாட்டிண்டு தவிக்கிற ஒரு ஆணுக்கு ஆதரவா இதை எழுதி யிருக்கேன்,” என்று நான் சொன்னதும் அவர் சிரித்தார்.
”எனக்கும் இது வித்தியாசமானதுதான். இது வரைக்கும் நானும் பெண்களுக்குப் பரிஞ்சுதான் சினிமா எடுத்திருக்கேன். இந்தக் கதை எனக்கும் முதல் அனுபவம்தான்!” என்றார்
இதன் ஆங்கில ஆக்கம் விரைவில் வெளிவர உள்ளது. எல்லா உரிமைகளையும் திரு பாலசந்தர் எழுதிப் பெற்றுக்கொண்டிருந்ததால் அதை ஆங்கிலத்தில் வெளியிடும் உரிமை என்னிடம் இருக்கவில்லை. எழுதிக் கேட்டதும் பெருந்தன்மையுடன் அனுமதி வழங்கிக் கடிதம் எழுதினார். அந்நூலை நான் திரு பாலசந்தர் அவர்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். நூல் வெளிவந்ததும் அவருக்கு ஒரு பிரதியை அளிக்க எண்ணியிருந்தேன். ஆனால் Dedecated to late Mr. K. Balachander என்று போடும்படி ஆகிவிட்டது.
”என்ன, கே.பி, சார் இப்படிச் செய்துவிட்டீர்கள்?’ என்று வருந்துவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?
……
- கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்
- மிஷ்கினின் பிசாசு – விமர்சனம்
- என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?
- திரையுலகின் அபூர்வராகம்
- ஒரு காமிரா லென்ஸின் வழியே…..
- மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலைமதில் அடிப்புகள்!
- கட்டிலேறுவதற்கு வரி-கல்வெட்டுக்கள் கூறும் சாட்சியம்
- புத்தாண்டு வரவு
- நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்
- ஷா பானு வழக்கும் ஜசோதா பென் RTI கேள்வியும்
- பாலச்சந்தர் ஒரு சகாப்தம் – Adayar Kalai Ilakkiya Sangam
- தொடுவானம் 48 . புதிய பயணம்
- ஆத்ம கீதங்கள் – 11 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)
- ஆனந்த பவன் நாடகம் காட்சி -19
- தொல்காப்பியம்-நன்னூலில் சார்பெழுத்துகள்
- தொல்காப்பியம்-அஷ்டாத்தியாயியில் வேற்றுமை உருபுகள்
- சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல்
- 19-12-2014 அன்று மறைந்த ஆனந்த விகடன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் பற்றி
- இயக்குனர் மிஷ்கினுடன் இரண்டு நாள் – பேருரை..
- இலக்கிய வட்ட உரைகள்: 7 – மதிப்புரைகளும் கு.ப.ரா குறித்த மதிப்புரைகளும்
- சாவடி 19-20-21 காட்சிகள்