மிஷ்கினின் பிசாசு – விமர்சனம்

This entry is part 2 of 22 in the series 28 டிசம்பர் 2014

pisasu

படம் பார்த்தேன். கொலையாளி யார் என்கிற பார்வையாளனின் கேள்விக்கு படம் முழுவதும் வெவ்வேறு மனிதர்களை காட்சிகள் வாயிலாகவும் , வசனங்கள் வாயிலாகவும் சூசகமாக கைகாட்டிவிட்டு, இறுதியில் கொலையாளியை அடையாளம் காட்டுகிறது கதை.

திரைப்படம் மூலம் இயக்குனர் சொல்ல வரும் மனப்பிணி குறித்து சொல்வதானால், ஒரு நாவலே எழுதலாம். இந்த உலகில் போனால் திரும்பி வராத, இழந்தால் திரும்பவும் பெறமுடியாதவைகளுள் ஒன்றே கதையின் மையம்.

மரணம் நிகழ்கையில், அதைப் பார்த்தவர்கள் தவறுதலாக பச்சை நிற கார் தான் விபத்துக்கு காரணம் என்கிறார்கள். அங்கே தான் மிகப்பெறும் தவறு நிகழ்ந்துவிடுகிறது. அந்த ஒரு தவறை, க்ளைமாக்ஸ் வரை , ஆட்டோக்காரன், கதா நாயகன் நந்தா, அவனது நண்பர்கள் என அத்தனை பேரும் கூட்டாக திருத்திக்கொள்ளும் முயற்சிதான் மிஷ்கினின் பிசாசு என நான் பார்க்கிறேன்.

பின் நவீனத்துவம் ‘எல்லாவற்றையும் சந்தேகி’ என்கிறது. அதன்படி, இனி நடக்க இருக்கும், இதுவரை நடந்து முடிந்த எல்லா குற்றங்கள், மற்றும் விபத்துக்களின் முதல் தகவல் அறிக்கையையே (FIR) நாம் சந்தேகிக்கத்துவங்கினோமானால், எல்லாக் குற்றங்களும் ஒன்றுமில்லாமல் போக வாய்ப்பிருக்கிறது. அல்லது குற்றவாளிகள் மாறிப்போக வாய்ப்பிருக்கிறது. பல சமயங்களில், குற்றத்தின் மையக் காரணம், அல்லது மூலம், நிரபராதிகள் என்று சொல்லப்படுபவர்களின் மேல் விழத்தான் அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனை மிஷ்கினின் பிசாசு ஒரு குறியீடாகக் காட்டுவதாகவே எண்ணுகிறேன்.

ஏனெனில், குற்றம் செய்யும் அத்தனை பேருக்கும், அந்தக் குற்றத்தைச் செய்ய ஏதோ ஒரு காரணம், சூழல், இருக்கத்தான் செய்கிறது. இருத்தலியத்தை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். அப்படியானால், யாரை குறை சொல்வது? எதை குறை சொல்வது?  குற்றம், குறை, தவறு இதற்கெல்லாம் என்ன மதிப்பீடு? என்ன அளவுகோல்? அதை யார் நிர்ணயம் செய்வது ? இப்படியெல்லாம் கேள்விகள் எழுகின்றன. மிஷ்கினின் பிசாசு இக்கேள்விகளைத்தான் எனக்குள் எழுப்பியது. அந்த வகையில், ‘எல்லாவற்றையும் சந்தேகி’ என்கிற மட்டும், மொழியின் வெளிப்பாடு என்கிற அளவுகோலில் ஒரு பின் நவீனத்துவக்கூறு எனக்கு நினைவுக்கு வருகிறது. அதற்காக இதை பின் நவீனத்துவ கதை என்றெல்லாம் சொன்னால் அது அபத்தம்

புலன்களின் உதவியுடன் நாம் உணர்ந்ததை வெளிப்படுத்த உதவுவது மொழி.  அந்த மொழியைக் கொண்டு நாம் எல்லோரும் எல்லா நேரங்களிலும் நம் மனதுக்கு தோன்றியதை 100% துல்லியமாக‌ சொல்லிவிடுகிறோமா என்றால் 100% இல்லை தான். சூரிய வணக்கம் செய்யச்சொல்லி நாம் எல்லோருமே கற்றுக்கொடுக்கப்படுகிறோம். ஆனால், நாம் கற்றுக்கொடுக்கப்படுகையில் , எத்தனை பேருக்கு, ‘ நாம் வணங்கும் சூரியன் எட்டு நொடிகளுக்கு முந்தைய சூரியன்’ என்று சொல்லித்தரப்பட்டது? இப்படித்தான் நாம் பேசும் , கேட்கும் அத்தனையிலும் உண்மை திரிந்துவிடுகிறது. நாம் எல்லோருமே எப்போதுமே, மனதில் தோன்றியதை துல்லியமாக‌ வெளிப்படுத்துவதில் தினம் தினம் தோல்வியே அடைகிறோம். அது எப்பேற்பட்ட ஆளுமை கொண்ட மனிதராக இருந்தாலும், அவருக்கும் அதில் 100% வெற்றி என்பது சர்வ நிச்சயமாக இல்லை என்பதை எவரும் உறுதியாகக் கூறிவிட முடியும். இதன் காரணமாகத்தான் இலக்கியமும் எல்லையற்றதாக இருக்கிறது, இலக்கிய சண்டைகளும் எல்லையற்றதாக இருக்கிறது.

ஏனெனில், உணர்ச்சிகள் காலம் தாழ்த்தினால், இலக்கற்று போகும். ஏதுமற்று போகும். உணர்ச்சிகள், கார சாரத்துடன் வெளிப்படுவது விலங்கின இயல்பு. மன உணர்வுகள் மொழியால் முழுமையாக வெளிப்படும் காலம் வரை காத்திருக்க யாருக்கும் பொறுமை இல்லை என்கிற ஒரு காரணத்தில் தான், சரியென ஆக வேண்டியவைகள், தவறாக குறைப்பிரசவமாகிவிடுகின்றன என்பது ஒரு மிகப்பெரிய முரண். Irony.

கலகங்களும், சண்டைகளும், உலகப்போர்களும் இதன் காரணமாகவே நிகழ்கின்றன.

அறிவுக்களஞ்சியத்தினுள் வசிக்க நேரும் எழுத்தாளர்கள் ஏன் அடித்துக்கொள்கிறார்கள்?

அவர்கள் அனைவரையும் அமைதியாக உட்காரசொல்லி, தங்கள் உளக்கருத்தை கொட்டச்சொல்லி, அதனை சரிபார்த்தால், ஏறக்குறைய எல்லா எழுத்தாளர்களுக்குமே இருப்பது ஒரே கருத்தின் வெவ்வேறு வெர்ஷன்கள் தான் என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒருவர் தன் கருத்தை முழுமையாக மொழி மூலம் வெளிப்படுத்துவதில் தோல்வி காண்பதே , மற்றவர்களை தவறாக புரிந்துகொள்ள வைத்துவிடுகிறது. தவறான புரிதலை சரிப்படுத்த காலம் தேவைப்படுகிறது. உணர்ச்சிகள் காலந்தாழ்த்துவதில்லை. அது விலங்கியல் இயல்பு.  ஆகவே புரிதல் என்பது, காலத்தின் அளவுகோலில்  சுருங்குகையில் , தவறான புரிதல் கூட சரியனெ கொள்ளப்பட்டு, அதற்கான எதிர் வினை என்கிற பெயரில் உணர்ச்சிகள் கொட்டப்பட்டு கலகம் துவங்குகிறது. (கவனிக்கவும்: தவறான புரிதல் கூட சரியனெ கொள்ளப்பட்டு)

ஹிட்லர் போன்ற கொடுங்கோலர்களை உருவாக்கியது ஃபாசிசம் என்கிற மிக எளிமையான புரிதல் தான் என்று நான் சொன்னால் நம்புவீர்களா, மாட்டீர்களா? ஹிட்லரை கொடுங்கோலன் என்று சொல்லி சரித்திர ஏடுகளில் ஒரு கரும்புள்ளியாக்கி ஒதுக்கிவிட்டோம். ரேசிசம், ஃபாசிசத்திற்கென ஒரு காலகட்டம் இருந்தது. அந்த கால கட்டத்திற்கு பின்னர் , அது நீர்த்துப் போய்விட்டபின்னர் இப்போது வேறு கோட்பாடுகள் வந்துவிட்டன. ஃபாசிசத்திற்கு சற்றும் குறைந்ததில்லை இப்போதிருக்கும் கோட்பாடுகள். ஆக, இது எதை காட்டுகிறது, ஃபாசிசம் என்கிற புரிதலுக்கு, மாற்று அல்லது எதிர்புரிதல் உருவாகும் காலம் வரையிலான , காலத்தை நாஜிக்கள் பொறுமையுடன் கடந்திருப்பாரேயானால், லட்சோபலட்சம் கொலைகளை தடுத்திருக்கலாம் அல்லவா?

ஆக, காலத்தை வெல்லும் பொறுமையற்ற தன்மை இதற்கு மூலகாரணமாகிறது. அப்படிப்பட்ட தன்மைகளை நாம் எல்லோரும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளித்துவைத்தபடிதானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மில் ஒருவருக்கேனும் அந்த பொறுமை இருக்கிறதா? அப்படியானால், கிட்டத்தட்ட நாம் எல்லோருமே அடையாளப்படுத்தப்படாத குற்றவாளிகள் தானே? தினம் தினம் பற்பல குற்றங்களுக்கும் நாமும் ஒரு மூலகாரணமாகிக்கொண்டு தான் இருக்கிறோம். ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், நாம் காரணாமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதையே உணராமல் இருக்கிறோம் அல்லது அது நம் புலன்களின் எல்லைக்கு அப்பால் uncertainity யின் எல்லைக்குள் போய்விடுகிறது. இதனால் தான் நமக்கு குற்ற உணர்வு ஏதும் இருப்பதில்லை. இரவுகளில் நிம்மதியாகக் கூட உறங்குகிறோம். What a Irony!! என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா?

அந்த ஒரு தவறை, க்ளைமாக்ஸ் வரை , ஆட்டோக்காரன், கதா நாயகன் நந்தா, அவனது நண்பர்கள் என அத்தனை பேரும் கூட்டாக தெரிந்துகொள்ளும் முயற்சிதான் மிஷ்கினின் பிசாசு என எளிதாக சொல்லிவிடலாம் என்று சொன்னேன் அல்லவா?

தவற்றை கண்டுபிடித்தாகிவிட்டது. யார் செய்த தவறு என்பது தெரிந்துவிட்டது. தண்டனை என்ன?

கதா நாயகன் நந்தா தன் தவறை தானே ஒப்புக்கொள்கிறான். தன்னை கொலை செய்துவிடுமாறு மரணித்த பெண்ணின் தந்தையிடம் மன்றாடுகிறான்.

உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்படும் முடிவுகள். ‘தவறிழைத்தவனுக்கும் நல்லதே செய்’ என்கிற கோணத்தில், மரணித்து பிசாசாகிவிட்ட ‘அது’ மரணித்த உடலை தீக்கிரையாக்கி தானும் முடிவுறுகிறது.

ஒரு மரணம் நிகழ்ந்து விடுகிறது.  மரணித்த பெண்ணின் மன உணர்வுகளுக்கு நெருக்கமான ஒருவனே அவளது மரணத்துக்கு காரணமாகிவிடுகிறான். தனது மரணத்துக்கு காரணமானவனை ஒரு பெண்ணுக்கு பிடித்தும் இருந்தால் என்ன நடக்குமோ அது நடக்கிறது.

அத்தனை காதல் அவன் மேல் அந்த பெண்ணுக்குள்  வர ஒரு விபத்து நடக்கும் மைக்ரோ நொடிகள் போதும் என்கிற லாஜிக் அபத்தமாக படுகிறது. ‘7ஜி ரெயின்போ காலனி’யில் க்ளைமாக்ஸில் இது அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். பெண்மை அத்தனை எளிதல்ல. உயிர் போன பின்னும், பேயாகவாவது காதலனை சுற்ற விரும்பும் அளவினதான காதலுக்கு கதையில் இடமே இல்லை.

திரைப்படத்தின் நாயகனை விடவும் ‘ நல்ல’ ஆண்கள் ஏகத்தும் இருக்கிறார்கள். படத்தில் வருவது போல் அறியாமல் செய்யும் பிழைகளைவிடவும் , அறிந்தே பல நல்ல விஷயங்களை போகிற போக்கில் செய்யும் ஆண்கள் அனேகம். என்ன ஒன்று. நம் குருட்டு சமூகத்தில் ஆண்கள் எல்லாம் ‘பெண் எப்போது ஏமாறுவாள்?’ என்று ‘முயற்சிப்பவர்கள்’. பெண்கள் எல்லோரும் கடைந்தெடுத்த அப்பாவிகள். இது தான் ஃபார்முலா. ஆண் பெண் குறித்த பொதுப்பார்வை இவ்வளவுதான். இதைத் தாண்டி யோசிக்க இந்த சமூகம் இன்னும் பழகவில்லை. பழகுவதற்கு எது தேவையோ அதற்கு இந்த சமூகத்திடம் ஏகப்பட்ட எதிர்ப்புசக்தி வேறு. ‘சின்னத்தம்பி’ படத்தை நூறு நாள் ஓட்டிய சமூகம் அல்லவா?

“ஊடலின் ஊபரி மயிர் களையப்படுதலை சீர் செய்யப்படும் வீடு போல்” என்று எழுதினால் பத்திரிக்கைகள் ஆகா ஓகோ என்று பாராட்டும்.

“ஊடலின் ஊபரி மயிரை
யாருக்காகவோ களைந்தது போல”

என்று எழுதினால் ஒரு பத்திரிக்கையும் வெளியிடாது. சிற்றிதழ்கள் உள்பட‌. இது தான் நம் தமிழ்ச் சமூகம்.

சுரங்க நடைபாதையில், கண் தெரியாத பிச்சைக்காரர்களிடம் கொள்ளையடிக்கும் கேடிகளை கதா நாயகன் தட்டிக் கேட்கிறான். பிச்சை கேட்டும், சில்லரை இல்லாததால் போட இயலாமல் போனதற்கு வருத்தப்பட்டபடி கடந்து போகும் பொது ஜனத்தை வசவு பாடும் ஊனமுற்ற பிச்சைக்காரர்களாக அவர்கள் இல்லை என்பதற்கு காட்சிகள் இல்லை என்கிற பாயின்ட்டில் இருத்தலியத்திற்கு ஸ்கோப் இல்லாமல் போய்விட்டது. ஆனால், பார்வையாளர்களில் யாரேனும் நிச்சயம் யோசித்திருக்கலாம்.

பல காட்சிகள் she is out there!! என்கிற ஸ்திதியில்.

மரணித்த பெண் கொள்ளை அழகாக இருக்கிறார். அதுதான் பார்வையாளனின் பரிதாபத்தை ஸ்கோர் செய்கிறதா என்று கேட்டால் உடனே ஆள் ஆளுக்கு ஏற இறங்க பார்ப்பார்கள் என்பதால் அந்த பாயின்டை விட்டுவிடலாம். (எல்லாம் தமிழ் சமூகத்தின் தலையெழுத்து!)

போனால் வராத விஷயங்கள், போய்விட்ட பின்பு, இழப்பு குறித்த மனப்பிணிகளை மட்டுப்படுத்தும் வழிமுறைகளை இயல்பாக ஆக்கிக்கொள்ளும் கால கட்டத்தில் இப்படி ஒரு கதை படமாக்கப்பட்டிருப்பது குறித்து ஆச்சர்யமே!! இன்றை தேதியில் இழப்பு என்ற ஒன்றே இல்லை எனலாம். மிதமிஞ்சிய கோட்பாடுகளும், தகவல்களும், அறிவுரைகளும், தந்திரங்களும் இன்றைய மனிதனைச் சுற்றி ஒரு பின் நவீனத்துவ நாவல் போல் செயல்பட்டு, இழப்பு என்ற ஒன்றை, அது இருந்தும், நம்மை உணர விடாமலே ஆக்கிவிட்டன. இதுவே, இந்த கதையை உருவாக்கியவர் கொஞ்சம் அவுட்டேட்டடோ (Outdated) என்று யோசிக்கத் தோன்றுகிறது.

ஒரு கேள்வி:

பெண்கள் செத்தால் பேயாகி, கொலை செய்தவனையோ, காதலனையோ, கெடுத்த பண்ணையாரையோ, நாட்டாமையையோ சுற்றுவது குறித்து கண்டும் (‘7ஜி ரெயின்போ காலனி, பிசாசு’ ), சொந்த ஊரில் கிழம்கட்டைகளிடம் கேட்டும் இருக்கிறோம். அது ஓகே. ஆண்கள் உயிரோடிருந்தால் ஆயிரக்கணக்கான மனிதர்களை பாடாய்படுத்தி தாஜ்மஹால் கட்டுகிறார்கள். அந்த இளிச்சவாய்த்தனம் தெரிந்த கதை. அதுவும் ஓகே. செத்தால் பேயாகி காதலிக்கு வாங்கிக்கொடுத்த செல்போனில் அகால வேளையில் அவள் வேறு யாரிடம் மொக்கை போடுகிறாள் என்று தமிழில் எந்த படத்திலும் காட்டியதாக நினைவில் இல்லை. உங்களில் யாருக்கேனும் நினைவிருந்தால் சொல்லவும். தெரிந்து கொள்ளாமல் நாள் ஓடமாட்டேன் என்கிறது. இதென்னய்யா நியாயம்?. பெண்ணுக்கு ஆண் சமம் என்று சொல்லிவிட்டு (வார்த்தை பிரயோகங்களை கவனிக்கவும்:  பெண்ணுக்கு ஆண் சமம்..) ஆண்பிள்ளை செத்தால் மட்டும் பிசாசாகி ஏன் காதலியை பழிவாங்கவோ, பலிவாங்கவோ கூடாது? இந்த ஓரவஞ்சனையை வன்மையாக கண்டிக்கிறேன்.

இறுதியாக:

1.     சிவப்பாக மிக மிக அழகான பெண்கள் கூட செத்துப்போய் பிசாசாகிவிட்டால், அசிங்கமாக, பயமூட்டும் விதத்தில் தான் இருக்கிறார்கள்.  இதை எதற்கு இப்போது சொல்கிறேனென்றால், ……………………………………………..  சரி, விடுங்கள்..என்ன சொல்லி என்ன? தமிழ் நாட்டை திருத்தவே முடியாது..
2.    உயிரோடிருக்கும் காதலர்கள் செத்த பின்னாலும், பிசாசாகி காதலிப்பார்கள் என்று அனேகம் படங்களில் காட்டியாகிவிட்டது. இனி இந்த லாஜிக் பழசாகிவிட்டது. இது க்ளிஷே ஆவதற்குள், அடுத்ததாக, பிசாசான பிற்பாடு பிசாசுகளுக்குள் காதல் உடைந்து, ஒரு தலை காதல் செய்த பிசாசோடு சேர்வது போலவோ, அல்லது பிசாசுகளுக்குள் சண்டை வந்து, ஒரு பிசாசு இன்னொரு பிசாசை கொலை செய்து, பிசாசு நிலைக்கு அடுத்த படியாக வேறு ஏதாவது நிலைப்பாடு (ஆமாம், உயிரோடிருப்பவன் செத்தால் பிசாசு..ஓகே. பிசாசு செத்தால் அடுத்தபடியாக என்ன?) எடுத்து, முந்தைய பிசாசை பழிவாங்குவது போல இனி படங்கள் வரலாம்.

Series Navigationகவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழ்என்ன, கே.பி. சார், இப்படிச் செய்து விட்டீர்கள்?
author

ராம்ப்ரசாத்

Similar Posts

2 Comments

  1. Avatar
    paandiyan says:

    Cinema is the most beautiful fraud in the world. –
    Cinema can fill in the empty spaces of your life and your loneliness.
    so don’t go so much extra mile and explaining like;
    பின் நவீனத்துவம் ‘எல்லாவற்றையும் சந்தேகி’ என்கிறது.
    இருத்தலியத்தை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

  2. Avatar
    ராம்ப்ரசாத் says:

    பார்ப்பவர் பார்வைக்கேற்ப, கோணங்கள் மாறும் தோழரே…நீங்கள் சொல்வது ஒரு கோணம் மட்டுமே… ‘எல்லாவற்றையும் சந்தேகி’ என்று சொன்னது, எல்லா வார்த்தைகளையும், அதன் நோக்கங்களையும் சேர்த்துத்தான்.. அதில் உங்களுடையது, என்னுடையது என எல்லாமும் அடங்கும்… கருத்துக்களுக்கு நன்றிகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *