வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்

This entry is part 4 of 17 in the series 1 பெப்ருவரி 2015

 

 

[வையவன்]

 

கதவின் உள்பூட்டில் ஒரு ரிப்பேர். பூட்டினால் பூட்டிக் கொள்கிறது.

 

திறப்பதற்கு முயற்சி செய்தால் சாவியைச் சுழற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

 

சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யு மாதிரி சாவி வெளிவரத் தவிக்கிறது.

 

என்னடா, உபமானத்தில் அபிமன்யு என்கிறான். ஆசாமி கிழவனோ என்று தோன்றுகிறதோ?

 

உண்மைதான், சென்ற வருஷம் ரிட்டயர் ஆய் விட்டேன்.

 

நான் என்ன வேலை செய்தேன், எந்த மலையை வெட்டி எந்தச் சமுத்திரங்களில் நிரப்பி வெற்றிக் கொடி நாட்டினேன்? இந்த சுயப் பிரதாபங்களை ஒரு சுருள் கூட அளக்கப் போவதில்லை.

 

தைரியமாய் இருங்கள்.

 

ஆனால் ஓய்வு பெற்ற பிறகு கதவின் உள் பூட்டுகள்.

 

அதைக் கழற்றி எடுத்து ரிப்பேருக்குக் கொண்டு போக வேண்டிய அவசியங்கள் – இப்படிக் குடும்ப நிர்வாகத்தின் பல டிபார்ட்மெண்டுகள் நமக்கு வந்து வாய்க்கும்.

 

பிள்ளைகளுக்கு அலுவலகம் போக வேண்டும். பேரப் பிள்ளைகளுக்கு அப்ளிகேஷன் போட, இண்டர்வ்யூவுக்கு ஓட, ‘வாண்டட்’ காலம் தேடவே போது சரியாக இருக்கும்.

 

உள் பூட்டைக் கழற்றுவதானால் ஒரு தச்சனைத்தான் அழைக்க வேண்டும்.

 

நாமே கழற்றி விடலாமே!

 

இந்த அபாயகரமான புத்திசாலிக் கேள்வியை நீங்கள் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

 

அதெல்லாம் தெரிந்தால் நாம் ஏன் ரிடயர் ஆகிறோம்? நம்ம பேரப் பிள்ளைகள் மாதிரி ஆபீஸ் ஆபீஸாக இண்டர்வியூக் கேள்விகளுக்கு ஏன் பதில் சொல்லிக் கொண்டு நிற்கிறோம்?

 

என்னடா வளவளப்பு என்று இந்நேரம் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அப்புறம் எதற்காகத்தான் கிழவனாவது?

 

நான் தச்சனைத் தேடிக் கொண்டு போனேன்.

 

ஐயா டிம்பர் டெப்போவுக்கு மரம் வாங்கப் போயிருக்கிறாராம்.

 

அடுப்பு எரிப்பதற்காகப் பட்டறையில் இழைத்த மரச் செதில்களை வாரிக் கொண்டிருந்த அவனுடைய சகதர்மிணி சொன்னாள்.

 

சைக்கிள் இருந்ததால் மர டெப்போவுக்கு ஒரு மிதி மிதித்தேன். டெப்போவில் ஒரு பொடியன் நின்று கொண்டிருந்தான்.

 

உயர அளவில் எட்டு வயசு, முகத்தில் இரண்டு மூன்று கூடத் தெரிந்தது.

 

அவனைப் பார்த்ததும் ஏனோ எனக்குச் சுண்டெலி ஞாபகம் வந்தது.

 

கண்ணில் ஒரு சுறுசுறுப்பு, ஒரு சாதுர்யம், அதுமட்டுமா?

 

ஓ! பையனுக்குப் பெரிய பெரிய காதுகள்.

 

சிட்டிகை போட்டுக் கூப்பிட்டேன்.

 

என்னைப் பார்த்து விட்டு ஒரு புன்னகை செய்தான் ஆரோக்கியமான பெரிய பற்கள்.

 

பையன் வரவில்லை. அங்கேயே நின்றான்.

 

“தம்பீ!”

 

மறுபடியும் ஒரு புன்னகை, பயல் அசையவில்லை.

 

நான் கிட்டே போனேன்.

 

“ஏண்டா தம்பி, பெரியவங்க கூப்பிட்டா வரப்படாதோ?”

 

“தராய் வாங்கியிருக்கோம். மொதலாளி பாத்துக்கடாண்ணு சொல்லிட்டு நாஷ்டாவுக்குப் போயிருக்காரு.

 

எப்படித் தாத்தா வர்றது?”

 

தாத்தாவா? ரிடயர்மெண்ட் விஷயம் முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கிறதோ?

 

“கார்ப்பெண்டர் மணி வந்தானா?”

 

“அவுருதான் எங்க மொதலாளி.”

 

“எப்ப வருவாரு?”

 

“தோ இப்ப வந்துடுவாரு, இன்னா தாத்தா சங்கதி?”

 

“வீட்டுலே ஒரு ரிப்பேரு!”

 

“என்ன ரிப்பேரு?”

 

அவசியம் இவனிடம் சொல்ல வேண்டுமோ?

 

“எந்த ரிப்பேர்னு சொன்னா தெரியுமா ஒனக்கு?”

 

“ஏதோ கம்மி ஜாஸ்தியா?” சட்டென்று ஒரு பெரிய மனுஷ தோரணை,

 

“உள் பூட்டுப் பூட்டுது. தொறக்கறதுக்குச் சும்மா சுத்திக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு.”

 

“அப்பறமா டபக்னு விய்ந்துக்கும். அதுல லீவர் ஸ்ப்ரிங் வீக் ஆயிருக்கும் தாத்தா”

 

அவன் அலட்சியமாகச் சொன்னான்.

 

நான் மறுபடியும் அவன் உயரத்தை ஒரு தடவை கண்ணால் அளந்தேன்.“தம்பீ, ஒனக்குப் பூட்டு ரிப்பேர் கூடத் தெரியுமா?”

 

“ப்சோ… ஏதோ கொஞ்சம். பக்கத்திலே டெய்லி ஒரு பூட்டு ரிப்பேர்காரு வந்து கடை போடுவாரு, கெவுனிப்பேன்.

ஒங்க பூட்டை கதவுலேருந்து கய்ட்டணும், தாத்தா.”

 

பையனுடைய தாத்தாப் பிரயோகம் நான் எவ்வளவு பெருந்தன்மையாக இருக்க முயற்சி செய்தாலும் உறுத்திற்று.

 

“பையா. ஒனக்கு தாத்தா இருக்காரா?”

 

பையன் முகம், பளிச்சென்று ‘ஸிங்கிள் பேஸி’லிருந்து ‘டபிள் பேஸி’ற்கு மாறிய மின்சார பல்பு மாதிரி ஒளி வீசிற்று.

 

“ஓ. கீறாரே… பட்டாளத்திலேருந்து ரிடயர் ஆய்ட்ட ஜம்தார். ஊர்லே தச்ச வேலதான் செஞ்சுணுருப்பாரு. இப்ப இல்லே.”

 

அந்தப் பிரகாசத்தினூடே முகத்தில் ஒரு வருத்தம்.

 

“ஏன்?” என்னமோ அந்த முகக்குறி என்னைக் கேட்கத் தூண்டிற்று.

 

“ஒண்ணுமில்லே.” அவன் முகம் மாறி விட்டது.

 

பல் தெரிகிற மாதிரி சிரித்தான்.

 

அந்தச் சிரிப்பின் திரையில் ஒரு வேதனை ஒளிர்ந்தது.

 

“என் வேலை கெடைக்கறதில்லையோ?”

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லே சாரு.”

 

பையன் எனக்குச் சார் ப்ரமோஷன் கொடுத்து விட்டான்.

 

எனக்கு என் உள்பூட்டுத்தான் முக்கியமாயிருந்தது. திறக்க முடியாத அநேக உள்பூட்டுகள் உலகில் இருக்கின்றன.

யார் என்ன செய்வது?

 

அதற்குள் டெப்போக்காரர் என்னைப் பார்த்து விட்டார். தெரிந்தவர்.

 

“அடடே வாங்க சார். எங்கே ரொம்ப தூரம்?”

 

“கார்ப்பெண்டரைப் பார்க்க வந்தேன். பையன் கெடைச்சான்.”

 

“இப்பதான் ஹோட்டலுக்குப் போயிருக்கான், பார்ட்டியோட. என்ன விஷயம்?”

 

விஷயத்தைச் சொன்னேன்.

 

“அதுக்குப் பையனே போதுமே!”

 

“அவனா?”

 

“சரியாப் போச்சு. இவனெ என்னாண்ணு நெனச்சீங்க? எமகாதகன். டெலிபோன் மணி அடிச்சுது. எடுத்துப் பேசிட்டு வச்சேன். பக்கத்திலே வந்து நிண்ணு இது எப்படி மொய்லாளி மணி அடிக்குதுங்கறான். ரெண்டு மூணு மாசம் போனா டெலிபோன் ரிப்பேர் பண்றேன்னு கூட வந்துடுவான்.”

 

பையன் அந்த முகஸ்துதியில் பல்லைக் காட்டிக் கொண்டு நெளிந்தான்.

 

நான் கார்ப்பெண்டர் வருகைக்காக டெப்போக்காரர் காட்டிய நாற்காலியில் உட்கார்ந்தேன்.

 

அதற்குள் ஸா மில்லில் தகடு அறுத்து விட்டதாக உள்ளேயிருந்து ஆள் வரவே அவர் எழுந்து போனார்.

 

நான் பையனை நோட்டம் விட்டேன்.

 

“எவ்வளவு நாளா மரவேலை கத்துக்கறே?”

 

“ஒரு வர்சமாச்சு?”

 

“படிச்சிருக்கியா?”

 

“என்னமோ கொஞ்சம்” பையனின் அடக்கம் ஒரு பிகுவுடன் வெளிப்பட்டது.

 

“பிடிக்கலியா?”

 

“நாலாவது பாஸ் பண்ணேன்.” அவன் நிறுத்திக் கொண்டான்.

 

“மேல படிக்கறது?”

 

அவன் என்னை ஒருமுறை தன் எலிக் கண்களால் நன்கு ஆராய்ந்தான்.

 

ஆசாமி நம்பகமானவரா என்று உரசிப் பார்க்கிற மாதிரி தோன்றியது.

 

“ஏண்டா பையா, சவுகரியமில்லியா?”

 

அவன் சின்னதாகச் சிரித்தான். உள் பூட்டுக்கு ‘டபிள் லாக்கர்’ வைத்த மாதிரி ஒரு மௌனம்.

 

தச்சன் உடனே வந்திருந்தால் என் ஆர்வம் திசை மாறியிருக்கும்.

 

வரவில்லை.

 

தொடர்ந்தேன்.

 

சொல்லேண்டா.”

 

“படிச்சவங்க இன்னாத்த வாரிக்கிணாங்க சாரு?”

 

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. மேலே பேசுமுன் அடுத்த அதிர்ச்சியை வழங்கினான்.

 

“படிச்சிட்டுச் சட்பிகட்டைத் தூக்கிணு இண்ட்ரீவ் இண்ட்ரீவா அலயறாங்க. வேல ஒண்ணும் கெடைக்காமக் கும்பலாச் சேந்துகிணு கொள்ள அடிக்கலாமா முடிச்சு அவுக்கலாமாண்ணு தான் திட்டம் பண்றாங்க.”

 

அவன் சொன்னது முந்தா நாள் செய்தி.

 

“தம்பீ, பேப்பர் படிக்கிறியா?”

 

“டீக்கடைலே தினத்தந்தி மாலை முரசு எல்லாம் படிக்கிறேன் சாரு.”

 

“ஆமா நீ படிக்காததுக்கு அதான் காரணமா?”

 

“ஆ! ஆங். அப்படித்தான் வச்சுக்குங்க.”

 

பையன் முன்னாடி நான் குறுகி வருவது போன்று ஒரு பிரமை.

 

“சரி. இந்தத் தச்சு வேல மட்டும் என்னா நெரந்தரம்?”

 

“இது தொயில் சாரு. கத்துக்கிணா நான் யாரயும் தேடிப் போவாணாம். யார்னா தான் என்னத் தேடி வர்ணம். தா நீ வர்லே?”

 

“சரி. மரவேலைதான் நாளுக்கு நாள் கொறஞ்சினு போவுதே – எல்லாரும் ஸ்டீல் டேபிள் சேர், காட்ணு போறாங்களே.”

 

“அதுக்காவதான் நாலு வேலய கத்து வச்சிக்கறேன். இன்னம் ஒரு ரெண்டு வர்சம். சார்பண மோட்டுல எலக்ட்ரீஷின் சலாவுதீன் தெரியுமா?”

 

மெய்யாகவே எனக்குத் தெரியாது. என் அறியாமையை ஒப்புக் கொண்டேன்.

 

“அவுரு கரண்ட் வய்ரிங்கல்லாம் கத்துக் குடுக்கறன்னு சொல்லி கீறாரு.” அவன் முகத்தில் ஒரு லட்சியம் ஒளி வீசியது.

 

“இங்க என்னா கெடைக்குது?”

 

“அப்பப்ப எதுவாச்சியும் கெடைக்கும். ஆனாக்க மொய்லாளி ஊட்லதான் சாப்பாடு.”

 

“ஏண்டா பையா, உங்க முதலாளியை இன்னும் காணோம்?”

 

“அவரு மில்ட்ரி ஓட்டலுக்கு போயிருப்பாரு.”

 

“அப்படியா? அப்ப ஒங்க தாத்தா விஷயத்தைச் சொல்ல மாட்டே?”

 

பையன் சுற்றுமுற்றும் பார்த்தான்.

 

“ஒங்ககிட்ட சொல்லி இன்னா சார் புரோஜனம்?” என்றான். கூடவே அந்தச் சிரிப்பு.

 

நான் பேப்பரை விரித்து அலட்சியமாகப் படிப்பது போல் பாவனை செய்யத் தொடங்கினேன்.

 

சின்னப் பையன் என்ன நாசூக்காக ‘மைண்ட் யுவர் பிஸினஸ்’ என்று சொல்கிறான்.

 

“இன்னா சாரு கோச்சுக்கினியா?”

 

அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தேன்.

 

“ஊர்ல உலகத்திலே ஆயிரம் கஸ்டம் கீது. அதுல போய் நம்ம கஸ்டத்தை இன்னாத்துக்குச் சாரு கொட்ணம்?”

 

நான் பேப்பரைக் கீழே வைத்து விட்டேன். காக்கி அரை நிஜார். இரண்டு கைகளின் மீதும் பேட்ஜ் மாட்டிய மாதிரி ஒரு கிழிசல் சட்டை.

 

மை யங் பிலாசபர்.

 

அவனைப் பார்த்துப் புன்னகை செய்தேன்.

“தாத்தாவுக்குப் போன வர்சம் ரெண்டு கண்ணும் அவுட். வூட்ல அவருதான் சம்பாரிக்கிறவரு. அம்மாவுக்கு நைனா” அவன் சாதாரணமாகச் சொன்னான்.

 

“ஒங்கப்பா என்ன செய்றாரு?”

 

“அவுரு போயி அஞ்சு வர்சம் ஆவுது. கவருமெண்ட் ஆஸ்பத்திரில ஆப்ரேசன்ல பூட்டாரு.”

 

“ஏன்?”

 

“தண்ணி அடி. வவுத்து நோவு. அம்மா தாலியர்த்ததும் தாத்தா ஊட்டோட இட்டாந்துட்டாரு.”

 

எனக்கு அவன் மீது ஏற்பட்ட ஆர்வம் அதிகரித்தது.

 

“உனக்கு அக்கா தங்கச்சி இருக்கா?”

 

“அதுல ஒண்ணும் கொறச்சலு இல்லே. ரெண்டு தங்கச்சி, ஒரு தம்பி…”

 

“அதனாலே தான் நீ படிக்கலியா?”

 

“ஆமா சார். உள் பூட்டுணு சொன்னியே. அது இன்னா டபிள்லாக்கரா? இல்ல சாதாவா?’

 

பையன் பேச்சைத் திசை மாற்றுகிறான். சபாஷ் பையா!

 

“நான் அதக் கேக்கலியே?” நான் விடவில்லை.

 

“சொன்னா ஒரு புரோஜனமும் இல்லே. நீ வுட மாட்டே. நீ படா தாத்தா சார். என்ன இம்மாந்தூரம் ஆரும் ப்ரஸ் பண்ணதே கெடயாது.”

 

அவனது ‘ஷொட்டை’ என்ன செய்வது என்று தெரியாமல் வாங்கிக் கொண்டேன்.

 

“சபரிமல தெரியுமா?”

 

“தெரியும்.”

 

“நீங்க அங்க போய்க் கீறியா சார்?”

 

“இல்ல.”

 

“என்னுமோ மகரஜோதியாமே. அந்தச் சமயத்திலே ஜோதி தெரியுதாம். ஜனங்க ஆயிராயிரம் ரூவாய்க்குக் கற்பூரமா வாங்கி அப்ப கொளுத்தறாங்களாமே.”

 

“அப்படித்தான் கேள்வி.”

 

“எங்க தாத்தாவுக்கு அங்க போவணும்ணு ரொம்ப நாளா ஆச, கண்ணு போறதுக்கு முன்னாடி இர்ந்தே. எண்ணூத்தம்பது ரூவா இருந்தா போகலாம் இல்லே சார்… ரெண்டு டிக்கெட்டு.”

 

“ஆவும்.”“குடும்பக் கஸ்டத்திலே தாத்தாவுக்குப் போவ முடியல சார். இன்னும் ஒன் இயர் டூ இயர்தான் இர்ப்பாரு. அதுக்குள்ளார இட்டுணு போயி காட்டிடணும்.”

 

“இப்பதான் அவருக்குக் கண்ணு தெரியாதே”

 

“கல்ப்பூர வாசனை அடிக்குமே சாரு. இதான் சபரிமல. இந்த காட்லதான் கல்ப்பூரம் ஒரே குமானியா எரியுது. மோந்துக்கோண்ணு சொன்னா போவுது. கூட நாந்தான் போறனே சாரு.”

 

எனக்குச் சிலிர்த்தது. என்ன சாமான்யமாகச் சொல்கிறான்.

 

“ஒனக்கே போவணும்ணு தோணலியா?”

 

“சாமி மேல எனுக்கு நம்பிக்கை இல்ல சார். சாமி எல்லாம் கெட்யாது.”

 

ஏதோ பெரிதாய் ஆண்டு அனுபவித்து முடிவு கட்டியவன் மாதிரி பையன் கொள்கைப் பிரகடனம் செய்தான்.

 

“ஏன்?”

 

“தெர்யாது. நம்பிக்கை இல்ல. வுடேன் கதய.”

 

“அப்ப ஏன் அவர கூட்டிணு போகணுங்கறே?”

 

“அவுரு நம்பறாரு. அதான அவுருக்குக் கீற ஒரே ஆசை.”

 

பையன் இப்போது என்னருகில் வந்தான்.

 

ரகசியம் பேசுவது போல் மெல்லிய குரலில் சொன்னான்.

 

“நான் படிக்கிறேன்னுதான் வூட்ல அல்லாரும் நெனைச்சுக்னு கீறாங்க. ராணிபேட்டைலே அனாத ஆஸ்டல் தெரியுமா?”

 

“தெரியும்.”

 

“அங்கதான் படிக்கறதுக்கு உட்டாங்க. நாலாவது பாஸ் பண்ணேன். ஜனங்க படிச்சிட்டு லாட்டரி அடிக்கிறதைப் பாத்தேன்.

 

“அங்க ஐயருகிட்டே சிபாரிசுக்கு நெதம் வருவாங்க. பாத்தேன். இப்பவே தாத்தாவுக்குக் கண்ணு பூடுச்சி. அப்பறமாப் படிக்கிறது இன்னாத்துக்கு? பட்சாலும் வேல இல்ல. நைஸா ஒருநா நவுந்துட்டேன். இப்ப கைல வேல கீது சாரு. எண்ணூத்தி ஏயி ரூவா சேத்து வச்சிக்கறேன்.

 

“தாத்தாவை எப்பிடியாவது சபரி மலைக்குக் கூட்டிணு போவணும்.”

 

“பொண்ணு குடும்பத்துக்கு ஒய்ச்சே அவுரு கண்ணு பூட்டுது சாரு. அவுர இட்ணு சபரிமலை காட்டறத்துக்காவ போவலேண்ணா இது இன்னா லைஃபு?”

 

இது என்ன சினிமாவா?

 

இல்லை கதை விடுகிறானா? நான் பேச்சின்றி அவனைக் கவனித்தேன்.

 

சிறுவன் மேலும் சுயதரிசனம் தந்தான்.

 

“இப்பக் கூட மொய்லாளிக்கிட்ட சொல்லிட்டு லீவ் வாங்கிணு ஊருக்குப் போவேன். இன்னாடா நல்லா படிக்கிறியான்னு கேப்பாங்க. ரொம்ப நல்லாப் படிக்கறேன்னு ரீலுவுட்டு வந்துருவேன்.”

 

“அங்கே போய் உன்னைத் தேடினா?.”

 

“என்ன ஆகும்? தேடிணு வர மாட்டாங்க சாரு. கடுதாசி கூட போடாதீங்கண்ணுட்டேன். அதான் மாசத்துக்கு ஒரிக்கா  நான் போயி வந்துடறனே.”

 

அவன் முதலாளி தூரத்தில் வந்து கொண்டிருந்தான்.

 

“சாரு, மொய்லாளிகிட்ட ஒண்ணுத்தயும் சொல்டாதீங்க.”

 

“இல்லை” என்று நான் தலையாட்டினேன்.

 

என் மனசில் ஒரு கண் தெரியாத கிழவனும் அவன் கைக்கோலைப் பிடித்துக் கொண்டு ஒரு பையனும் லட்சக்கணக்கானவர் நெறிபடும் மகரஜோதிக்கு மலையேறிக் கொண்டிருந்தனர்.

 

எனினும் எரிகிற கற்பூரத்தில் மனசெல்லாம் மணத்தது.

 

+++++++++++++++++++

வைரமணிக் கதைகள்

[வையவன் ]

முதற் பதிப்பு : 2012

 

பக்கங்கள்:500

விலை:ரூ. 500

 

 

கிடைக்குமிடம்: தாரிணி பதிப்பகம்

4 A, ரம்யா ப்ளாட்ஸ்

32/79, காந்தி நகர் 4வது பிரதான சாலை

அடையார், சென்னை-20

மொபைல்:  9940120341

Series Navigationகாணாமல் போகும் கிணறுகள்ஆத்ம கீதங்கள் –14 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. !
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *