மொழிபெயர்ப்புக் கட்டுரை
– சுனந்த தேஸப்ரிய
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
உங்களது வீட்டில் நீங்கள் செல்லப் பிராணியாகவும் பாதுகாப்புக்கெனவும் வளர்க்கும் நாயின் கழுத்தை வெட்டிக் கொன்று உடலை நடுத்தெருவிலும் தலையை உங்கள் வீட்டு முன்னாலும் வைத்து விட்டுப் போனால் உங்களுக்குள் எவ்வாறான உணர்வு எழும்?
அவ்வாறே உங்கள் வீட்டு நாயைப் படுகொலை செய்து சடலத்தைப் பார்சல் செய்து நீங்கள் தண்ணீரந்தும் கிணற்றில் போட்டுவிட்டுச் சென்றால் உங்களுக்குள் எவ்வாறான உணர்வு எழும்?
ஒரு இனத்தின் பாதுகாப்பு என்பது இராணுவ ஆட்சியின் கீழே எனும்போது, அரசியல் காரணங்களுக்காக அப் பழிவாங்கல் நடைபெறும்போது நீங்கள் எவ்வாறான நிலைமைக்குத் தள்ளப்படுகிறீர்கள்?
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாங்கிக் கொள்ள முடியாத பழிவாங்கலினதும், அழிப்பின் அரசியலதும் இன்னுமொரு பக்கம் இவ்வாறுதான். அதாவது, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த இலங்கை அரசாங்கமானது, தமிழ் மக்களது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கேந்திர ஸ்தானமான யாழ்ப்பாணத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் நாய்ச் சடல அரசியல்.
இதனால் வீசுவது பயங்கரமான அரசியல் துர்நாற்றமே தவிர, சமாதானத்தினதும் சமூக ஒற்றுமையினதும் தென்றலல்ல என்பதை புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. இம் மாத இறுதியில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் இந் நாய்ச் சடல அரசியலானது புதிதாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
யுத்த முடிவின் பின்னர் தமிழ் மக்களுக்கு சுதந்திரமும் விடுதலையும் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படும் வீண் ஜம்பக் கதைகள், இன்று யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும், அச்சுருத்தும் இந் நாய்ச் சடல அரசியலால் ஆவியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போதும் இதன் வளர்ச்சியால் தமிழ்ச் சமூகமானது, இலங்கை அரசாங்கத்தை விட்டும் தூரத்துக்கு பயணித்துக் கொண்டிருப்பதோடு, இடைப்பட்ட அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட தமிழ் பொதுமக்கள் மிகவும் ஏமாற்றத்துக்குள்ளாகியிருக்கிறார்கள்.
இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கம் தமிழ் மக்களிடம் நீதமான முறையில் நடந்துகொள்வதில்லை என சர்வதேச ரீதியில் பரப்பப்பட்டிருக்கும் கருத்துக்களை இந்த அழிவு நடவடிக்கைகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன. இதுவரையில் யுத்தக் குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்குமாக இலங்கை முகம்கொடுத்திருக்கும் குற்றச் சாட்டுக்கள் குறித்து வளர்ந்து வரும் சர்வதேச அழுத்தங்களை மேலும் உசுப்பிவிட இது ஏதுவாகிறது.
அவ்வாறிருக்கையிலும் அதாவது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் மிகவும் மோசமான நிலை உருவாகிக் கொண்டிருக்கையிலும் தற்போதுள்ள ராஜபக்ஷ அரசாங்கமானது இந்த அழிவு நடவடிக்கைகளை தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருப்பது ஏனென்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் இக் கேள்விக்கான பதிலை அளிப்பதால் மட்டுமே அதற்கான தீர்வை வழங்க முடியுமாக இருக்கும்.
அதற்கு முன்பதாக நாம் இந் நாய்ச் சடல அரசியலின் அண்மைய சம்பவங்களைப் பார்ப்போம்.
கடந்த பெப்ரவரி மாதத்தில் ஓர் நாள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது தாயாரது சுடலைச் சாம்பல் மீது அச் சாம்பலை சேகரித்தெடுக்க முடியாத வண்ணம், துப்பாக்கிச் சூட்டின் மூலம் கொல்லப்பட்ட மூன்று நாய்களின் உடல்கள் போடப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பழி வாங்குவதற்காகவே மனிதத் தன்மையற்ற அந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடுமென அனேகர் எண்ணியிருந்தனர்.
எனினும் அது ஒரு தனித்த சம்பவமாக அல்லாது, தமிழ் மக்களின் மானிட உரிமைகளை கட்டுப்படுத்தும் ஒன்றுபட்ட திட்டங்களின் ஒரு பகுதியாகும். எவ்வாறாயினும் அச் செய்தியானது, தெற்கு ஊடகங்களுக்கான சட்டமாக உருவாகியிருக்கும் சுய தணிக்கையினால் எந்தவொரு கலந்துரையாடலுக்கும் இடமளிக்காது, புதைக்கப்பட்டது. இப்பொழுது நாய்ச் சடல அரசியலானது, குட்டி போடத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே கடந்த ஜுன் மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரபல அங்கத்தவர்களுள் ஒருவரான பேராசிரியர் எஸ்.கே. சிற்றம்பலத்தின் வீட்டுக் கிணற்றினுள் கொல்லப்பட்ட நாயொன்றின் உடல் போடப்பட்டிருந்தது. முள்ளிவாய்க்கால் யுத்தமானது தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒன்றாகும் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தே அதற்கான நெருங்கிய காரணமாகத் தெரிகிறது.
அதே சந்தர்ப்பத்தில் கத்தோலிக்க சபையின் மனித அபிவிருத்தி கேந்திர நிலையத்தின் முன்னாள் இயக்குனராக இருந்த சி.ஜி. ஜெயக்குமாரது தேவஸ்தானத்தின் மீது மலசலப் பொதியொன்று எறியப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சர்வதேச தூதுவர் குழுவைச் சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து அவர் கருத்துத் தெரிவித்திருந்தமையே அதற்கான காரணம் எனத் தெரிகிறது.
கடந்த வாரங்களிலோர் நாள், யாழ்ப்பாண உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் சீ.சிவகுமாரது வீட்டில் வளர்த்து வந்த நாயினது கழுத்தை வெட்டிக் கொன்று அதன் தலையை வீட்டு நுழைவாயிலில் பொருத்திச் சென்றிருந்தனர். அத்தோடு தமிழ்க் கூட்டமைப்பின் இன்னுமொரு வேட்பாளரது வீட்டின் மீது மலசலப் பொதியொன்று எறியப்பட்டிருந்தது.
அதற்கு முன்பு முன்னாள் பாராளுமன்ற அமைச்சரும் தமிழ்க் கூட்டமைப்பின் வல்வெட்டித்துறை வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டின் மீது குப்பைப் பொதிகள் எறியப்பட்டிருந்தன. கொடிகாமம் தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளரொருவரது வீட்டின் முன்பாக மயானத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மலர் வளையம் போடப்பட்டிருந்ததுடன் மனிதப் பிணச் சாம்பலும் போடப்பட்டிருந்தது. சண்டிலிப்பாய் தமிழ்க் கூட்டமைப்பின் பெண் வேட்பாளரொருவரது வீட்டின் மீது தீப்பற்றக் கூடிய எண்ணெய் எறியப்பட்டிருந்ததோடு, இன்னும் அனேக வேட்பாளர்களது வீட்டின் முன்னால் மரணம் என வரையப்பட்டிருந்தது.
கிளிநொச்சியில் தமது தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவம் நேரடியாகக் குறிக்கீடுகள் செய்வதாகவும் தமது போஸ்டர்களைக் கழற்றி விட்டு அரசின் போஸ்டர்களை ஒட்டுவதாகவும் ஜே.வி.பி பகிரங்க அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கிறது. இது போன்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களென முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை சிறைக்கு அனுப்பியதுவும் இதே அரசாங்கம்தான்.
இந்த எல்லா அச்சுருத்தல்களும், நாய்ச் சடல அரசியலின் பல்வேறு விதமான வளர்ச்சிகள்தான். அதே போல இத் திட்டங்களில் தெளிவாகப் புலப்படக்கூடிய ஒன்றுதான் இது சம்பந்தமான எந்தவொரு குற்றவாளியையும் கைது செய்வதற்கு யாழ்ப்பாணத்திலிருக்கும் ஐம்பதினாயிரம் இராணுவத்தினராலோ, ஆயிரக் கணக்கான காவல்துறையினராலோ முடியாமல் போயுள்ளமை. அதற்கு சிறந்த உதாரணமாக தமிழ்க் கூட்டமைப்பின் அளவெட்டி கூட்டத்தில் இடம்பெற்ற இராணுவத் தாக்குதலைக் குறிப்பிடலாம்.
சீருடை அணிந்த இராணுவத்தினர் கிட்டத்தட்ட முப்பது பேர் இத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதோடு அதற்கு மேஜர் ஒருவர் தலைமை தாங்கியதாகவும் தமிழ்க் கூட்டமைப்பு சொல்கிறது. அவ்வாறானதொரு தாக்குதல் நிகழ்ந்ததை நேரில் கண்டு தெரிவித்த சாட்சிகள் பலர் உள்ளனர். இத் தாக்குதல் குறித்து விசாரணையொன்றை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதமளித்தார். தாக்கியவர்களை அடையாளம் காண்பிக்க தம்மால் முடியுமென தமிழ்க் கூட்டமைப்பு சொல்லியிருந்தது.
எனினும் இப்பொழுது எந்தவொரு இராணுவத்தினருக்கும் இத் தாக்குதலுடன் சம்பந்தமில்லையெனவும், இராணுவத்தினரின் சீருடையை ஒத்த உடையை அணிந்த ஒரு குழுவினர் இத் தாக்குதலை நடத்தியிருக்கும் எனவும் அரசாங்கம் சொல்கிறது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரைப் போல ஆடையணிந்த, அடையாளம் காணப்படாத முப்பது பேரைக் கொண்ட குழுவொன்று தமிழ்க் கூட்டமைப்பைத் தாக்கியிருக்கிறதெனச் சொல்லப்படும் இக் கதையானது ஒரு நகைச்சுவைக்காகச் சொல்லப்படவில்லையெனில், கசப்பானதொரு விடயம்தானே?
அது மாத்திரமல்ல. சிறுபான்மையினத்தவராக இருப்பதால் மக்கள் முகம் கொடுக்க நேரும் அநீதங்கள் சம்பந்தமாக கொழும்பு அரசியல்வாதிகளின் சலனமற்ற தன்மையைக் காட்டும் விதத்தில் பாராளுமன்ற அமைச்சர் ரஜீவ் விஜேசிங்ஹ BBC Hard Talk நிகழ்ச்சியில் இத் தாக்குதலினால் தமிழ்க் கூட்டமைப்பு இலாபமீட்டிக் கொண்டதென்றும் அதற்காக அது மகிழ்ந்ததென்றும் சொல்லியிருந்தார். தமிழ் மக்களின் பாராளுமன்ற அமைச்சர்கள் ஐவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான சிங்கள அரசின் எதிர்வினை அவ்வாறிருந்தது. அமைதியையும் விடுதலையையும் குறித்து இன்னும் நாம் வேறு என்ன கதைக்க இருக்கிறது?
இந் நிலைமையின் கீழ் விடுதலைப் புலிகளுடன் ஒருபோதும் ஒன்றுபடாத அனேக தமிழ் மக்கள் இப்பொழுது யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவ ஆட்சி குறித்து மிகவும் வெறுப்போடு கதைக்கின்றனர். ஒரு நிறுவனத்தின் அதிபரான பேராசிரியர் முத்துகிருஷ்ணா சர்வானந்தன் அண்மையில் இவ்வாறு கூறியிருந்தார். “ராஜபக்ஷேக்கள் ஆட்சியிலிருக்கும் வரை ஒருபோதும் இராணுவ ஆட்சியற்றுப் போகுமென நான் எண்ணவில்லை. ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை நிலைநிறுத்த இராணுவ ஆட்சியானது அத்தியாவசியம்.”
இக் கட்டுரையில் முதலில் எழுப்பிய கேள்விக்கு அதாவது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நிகழும் நஷ்டங்களைக் கருத்தில் கொள்ளாது, ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாக பொதுவாக அழிவின் ஆட்சியையும், விஷேடமாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவ ஆட்சியையும் நிகழ்த்துவது ஏன்? என்ற கேள்விக்கான ஒரு பதில் இவரது கருத்தில் இருக்கிறது. அதாவது ராஜபக்ஷ ஆட்சியானது உள்நாட்டிலோ சர்வதேச ரீதியிலோ எழும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் கண்டுகொள்ளாது தனது ஆட்சியை தொடர்ந்து நிலைநிறுத்தவே அனைத்தையும் செய்கிறது. அதனால் தமிழ் மக்களை இராணுவ ஆட்சியின் கீழ் கட்டுப்படுத்துவதும் சிங்கள மக்களை யுத்த வெற்றி எனும் மயக்கநிலையிலேயே வைத்திருப்பதுவும்தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆகவே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக இராணுவ ஆட்சியை அகற்றி உண்மையான சிவில் ஆட்சியை வழங்குவதுவும், தெற்கில் ஜனநாயக மோதலை முன்னிலைப் படுத்துவதற்காக ஏற்படுத்தியிருக்கும் யுத்த மயக்கத்துக்குப் பதிலாக யுத்தத்தின் நிஜ யதார்த்தத்தை காட்டிக் கொடுப்பதுவும் இன்றைய இலங்கையின் ஜனநாயக ஆட்சியானது முகம் கொடுத்திருக்கும் முக்கிய சவால்களில் ஒன்று.
- நிலாச் சோறு
- முரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி
- கனா தேசத்துக்காரி
- குங்குமச்சிமிழ்
- ஆட்கொல்லும் பேய்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)
- இனிக்கும் நினைவுகள்..
- யாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்
- அட்ஜஸ்ட்
- சுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு
- தீராதவை…!
- பஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்
- காண்டிப தேடல்
- விதி மீறல்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 4
- தேர் நோம்பி
- சிறை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கீதம் (கவிதை -41)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகமும் -2)
- கோவி நேசனின் ‘சிறுவர் அரங்க கோலங்கள்’
- என் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது!
- குதிரே குதிரே ஜானானா
- ”முந்தானை முடிச்சு.”
- 361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்
- ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி
- பிணம் தற்கொலை செய்தது
- மலைகூட மண்சுவர் ஆகும்
- செதில்களின் பெருமூச்சு..
- வாசல்
- கரைகிறேன்
- மழையைச் சுகித்தல்!
- அறிதுயில்..
- சிறகின்றி பற
- புன்னகையை விற்பவளின் கதை
- புதிய பழமை
- அந்தப் பாடம்
- நீரிலிருந்து உப்புத்திரவமான பயணத்தில்..:-
- வெட்டுப்புலி’ நாவலுக்கு ரங்கம்மாள் விருது
- சுவீகாரம்
- கூறியிருக்கவில்லை
- நினைவுகளின் சுவட்டில் – (73)
- பாகிஸ்தான் சிறுகதைகள்
- “நடிகர் சிகரம் விக்ரம்”
- வாரக் கடைசி.
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 1
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)
- காம்பிங் vs இயேசு கிறிஸ்து