தொடுவானம் 61. வேலூர் நோக்கி….

This entry is part 1 of 32 in the series 29 மார்ச் 2015

டாக்டர் ஜி. ஜான்சன்

61. வேலூர் நோக்கி….

நான் வேலூர் சென்றதில்லை. அண்ணனுக்கு கடிதம் எழுதினேன். அவர் என்னுடன் நேர்முகத் தேர்வுக்கு வருவதாக பதில் தந்தார்.இந்த நேர்முகத் தேர்வு ஒரு வகையில் வினோதமானது. மூன்று நாட்கள் நடைபெறும். அதன் முடிவு மூன்றாம் நாள் மாலை அங்கேயே அறிவிக்கப்படும்.
மொத்தம் நூற்று இருபது பேர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பாதிப் பேர்களான அறுபது பேர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். அவர்களில் முப்பத்தைந்து ஆண்களும் இருபத்தைந்து பெண்களும் இருப்பார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் அன்றே விடுதியில் தங்கி விடவேண்டும். மறுநாள் வகுப்புகள் தொடங்கிவிடும்! தேர்வு செய்யப்படாத அறுபது பேர்களும் வீடு திரும்ப வேண்டும்! ஆகவே நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போதே ஒரு வேளை தேர்வு ஆனால் தொடர்ந்து அங்கேயே தங்குவதற்கான அனைத்து பொருட்களையும் உடன் எடுத்துச் செல்லவேண்டும்.
CMC எனக்கு முன்பே விடுதியில் தங்கியுள்ள அனுபவம் இருந்ததால் என்னென்ன கொண்டு செல்வது என்பது தெரியும். மெத்தையும் தலையணையும் கைவசம் இருந்தன. துணிமணிகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டேன். இந்த முறை அம்மா எனக்கு அதிரசம், முறுக்கு, கெட்டி உருண்டை போன்ற பலகாரங்களை தயார் செய்தார். வழக்கம்போல் கோகிலமும் உதவி செய்தாள். நான் மீண்டும் கல்லூரி போவது அவளுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கலாம். அதை அவளுடைய முகம் காட்டித்தந்தது.
எப்போதும்போல் குளத்தங்கரையில் என்னைப் பார்க்கும்போதெல்லாம் இனிமேல் எப்போது பார்ப்பது என்று கேட்பாள். அவளை மறந்து விடுவேனா என்றும் கேட்பாள்.வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் அழுவாள். விடுமுறை நாட்களில் ஊருக்குதான் வருவேன் என்று ஆறுதல் சொல்வேன்.
நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்துவிட்டது என்று அப்பாவுக்கும், லதாவுக்கும், வெரோனிக்காவுக்கும் கடிதம் எழுதினேன். அப்பாவுக்கு பெருமையாக இருக்கும். இனி மாதந்தோறும் நான் கேட்காமலேயே பணம் அனுப்பி வைப்பார். லதா நிச்சயம் அகமகிழ்வாள். நான் டாக்டராகத் திரும்புவேன் என்று உவகை கொள்வாள். வெரோனிக்காவுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய அதிர்ச்சியும் உண்டாகலாம். காதல் கானல் நீர்தானோ என்று கவலை கொள்வாள். கோகிலம் பற்றி சொல்லத் தேவையில்லை. நிறையவே அழுவாள்!
CMC Hospital நான் அதுபற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. இதை கடவுளின் அழைப்பாக எண்ணி அவருக்கு நன்றி கூறியதோடு, நேர்முகத் தேர்விலும் அவருக்கு சித்தமானால் என்னைத் தேர்வு செய்யும்படி வேண்டிக்கொண்டேன். நேர்முகத் தேர்வுக்கு நான் செல்கிறேன் என்பது என்னுடைய சாமர்த்தியத்தால் அல்லவென்பதும் அதற்குப் பின்னணியில் வேறொரு சக்தி உள்ளதை நான் அறிவேன்..எனக்குக் கிடைத்துள்ளது ஒரு சாதாரண வாய்ப்பு அல்லவென்பதை நான் உணர்ந்திருந்தேன். மனதின் ஆழத்தில் எனக்கு மருத்துவம் கிடைக்கப்போவது தெரிந்தது.ஆகவே மிகுந்த உற்சாகத்துடன் பிரயாண ஏற்பாடுகளில் இறங்கினேன்.
பால்பிள்ளையுடன் சிதம்பரம் சென்று தேவையான சில முக்கிய பொருட்களை வாங்கினேன்.கையில் பணம் நிறைய இருந்ததால் மற்றவற்றை தேவைக்கேற்ப வேலூரில் வாங்கிக்கொள்ளலாம்.
அண்ணன் மிகுந்த ஆர்வத்துடன் வந்து சேர்ந்தார். எனக்கு நிச்சயமாக இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு. உறவினர் ஒருவர் வேலூரில் உள்ளதாகக் கூறினார். அவர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரிவதாகக் கூறினார். அவரை முதலில் சந்திக்கலாம் என்றார்.
நாங்கள் பேருந்து மூலம் புறப்பட்டோம்.அது கடலூர், பாண்டிச்சேரி, திருக்கோவிலூர், திருவண்ணாமலை வழியாக வேலூர் சென்றடைய இரவாகி விட்டது.
திருவண்ணாமலையில் வானுயர்த்த கோபுரங்களுடன் அண்ணாமலையார் கோவில் காட்சி தந்தது. அதை அருணாச்சலேஸ்வரர் கோவில் என்றும் அழைப்பார்கள். இது பஞ்ச பூதங்களின் ஸ்தலம் என்பார்கள். இங்கு அக்னிக்கு சிறப்பு செய்யப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலைப்போன்று உலகப் பிரசித்திப்பெற்ற சிவன் கோவில் இது. இங்குள்ள கிழக்கு கோபுரம்தான் இந்தியாவிலேயே மிகவும் உயரமான ஆலயக் கோபுரம். இந்த கோவிலை ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் கட்டினார்கள். புகழ்மிக்க சைவ ஸ்தலமான இங்குதான் மாணிக்கவாசகர் திருவெம்பாவை படைத்தார். வேலூரில் சேர்ந்தபின்பு அடிக்கடி இந்த வழியாக செல்ல நேரிடும் . அப்போது அங்கு நேரில் சென்று இந்த ஆலயம் பற்றிய சிறப்புகளை தெரிந்துகொள்ளலாம்.
வேலூர் பேருந்து நிலையம் எதிரே பிரம்மாண்டமான வேலூர் கோட்டை உள்ளது. கோட்டையைச் சுற்றிலும் அகன்ற ஆழாமான நீர் நிறைந்த அகழி இருந்தது. அதில் துவக்க காலங்களில் பத்தாயிரம் முதலைகள் இருந்துள்ளன. இந்தக் கோட்டை நீண்டதோர் வரலாற்று சிறப்பு கொண்டது எனில் அது மிகையன்று. இதைக் கற்பாறைகள் கொண்டு பலம் வாய்ந்த வகையில் கட்டியவர்கள் விஜநகர மன்னர்கள். ஆனால் அவர்களின் இறுதி காலத்தில் கோட்டைக்குள் அரசனாக வீற்றிருந்த ஸ்ரீரங்க ராயர் என்பவரும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் உள் குடும்ப சூழ்ச்சியினால் இங்குதான் படுகொலை செய்யப்பட்டனர். அதன் பின்பு இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தான்கள் கைப்பற்றினர். அவர்களை மராட்டியர்கள் வீர சிவாஜியின் தலைமையில் தோற்கடித்து கோட்டையைக் கைப்பற்றினார்கள்.. அதன்பின்பு கர்நாடக நாவாபுகள் கைவசமானது. இறுதியில் அவர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் கோட்டையைக் கைபற்றினார்கள். ஆங்கிலேயரின் ஆட்சியின்போது சிறைபிடிக்கப்பபட்ட திப்பு சுல்தானின் குடும்பத்தினர் இங்குதான் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அதோடு ஸ்ரீ லங்காவின் கடைசி மன்னனான ஸ்ரீ விக்ரமசின்ஹா இக் கோட்டையில்தான் ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
Vellore Fort வேலூர் கோட்டைக்கு இன்னொரு பெருமையும் உள்ளது. இங்குதான் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் சுதந்திரப் போராட்டம் நடந்தது. அதை நடத்தியவர்கள் அவர்களிடம் பணியாற்றிய இந்திய சிப்பாய்கள் என்ற போர்வீரர்கள். அதனால் அதற்கு சிப்பாய் கலகம் என்றும் பெயர் உள்ளது. அவர்கள் அப்போது கோட்டைக்குள்தான் போர் முகாம்களில் தங்கியிருந்தனர். 1806 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் பத்தாம் நாளன்று திடீர் என்று அதிகாலைஅதில் யில் இந்திய போவீரர்கள் வெகுண்டெழுந்து ஆங்கில இராணுவ அதிகாரிகளையும் போர் வீரர்களையும் தாக்கிக் கொன்றனர். அதில் பதினைந்து ஆங்கில உயர் இராணுவ அதிகாரிகளும் நூறு ஆங்கில போர்வீரர்களும் உயிர் இழந்தனர். அவர்களின் சமாதிகள் தென்னிந்திய திருச்சபை ஆலய வளாகத்தில் உள்ளன.( எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தபின் இந்தக் கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு இதுபற்றி மேலும் விளக்கமாக எழுதுவேன். )
இப்போது வேலூர் கோட்டைக்குள் போர்ப் படைகள் இல்லை. அதனால் படை இல்லாத கோட்டை என்று அதை அழைப்பார்கள். கோட்டைக்குள் ஒரு இந்து கோவில் உள்ளது. ஆனால் அதனுள் சாமி இல்லாமல் பல வருடங்கள் ஆயுதக் கிடங்காகப் பயன்பட்டது. அதனால் அதை சாமி இல்லாத கோவில் என்பார்கள். கோட்டையின் வெளியே பெரிய திறந்தவெளி உள்ளது. அதுவே முன்பு போர்க்களமாகத் திகழ்ந்திருக்கலாம். இப்போதெல்லாம் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் அங்குதான் நடைபெறுகின்றன.
பேருந்து நிலையத்திலிருந்து விருதம்பட்டு என்ற இடத்துக்கு டாக்சி மூலம் சென்றோம். அது பாலாறுக்கு மறு கரையில் உள்ளது. ஒரு காலத்தில் வெள்ளம் புரண்டோடிய பாலாற்றில் இப்போது வெறும் வெண் மணல்தான் காணப்பட்டது. (கர்நாடகத்தில் அணைகள் கட்டப்பட்டதால் இந்த பரிதாபம்.) இதனால் நீர் இல்லாத ஆறு என்பார்கள்.
உறவினர் பெயர் தேவபிரசாதம். அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்., தேம்மூர் உறவுக்காரர். அவர்கள் முன்பே குடிபெயர்ந்தவர்கள். அவருடைய மூத்த மகன் ரூபன். அவர்தான் மருத்துவமனையில் ரெக்கார்ட் பகுதியின் தலைவராகப் பணி புரிகிறார். அவர் ” மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் ” பயின்றவர். எங்களைக் கண்டதில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
அன்று இரவு உணவை அவர்கள் வீட்டில் உண்டு மகிழ்ந்தோம். மறு நாள் எனக்கு நேர்முகத் தேர்வு. அதனால் நான் கல்லூரி விடுதியில் தங்குவதுதான் நல்லது என்று ரூபன் கூறினார். எனக்கு அது அச்சத்தை உண்டுபண்ணியது.அதை புரிந்துகொண்ட ரூபன் எனக்கு தைரியமூட்டினார்.
விடுதியில் இரண்டாம் ஆண்டில் நம் உறவினர் பையன் ஒருவர் தங்கியுள்ளதாகவும் அவருடைய அறையில் நான் தங்கலாம் என்றார். அந்த பையன் மலேசியாவில் இருந்து வந்துள்ளதாகவும் கூறினார். அது எனக்கு தைரியத்தைத் தந்தது. இரவு உணவுக்குப் பின்பு டாக்சி மூலம் கல்லூரிக்குச் சென்றோம். அது சுமார் அரை மணி நேரப் பிரயாணம். அந்த ஊர் பாகாயம் என்பது. அங்குதான் கல்லூரியின் வளாகம் இருந்தது. ஏறக்குறைய சென்னை கிறிஸ்துவக் கல்லூரி போன்றே மரங்கள் கோடி செடிகள் நிறைய காடு போன்ற பகுதியில் வளாகம் இருந்தது. ஒரேயொரு வித்தியாசம் அங்கு கல் பாறை மலைகள் நிறைந்திருந்தன.
நாங்கள் ஆண்கள் விடுதிக்குச் சென்றோம். அந்த இரண்டாம் ஆண்டு மாணவரின் பெயர் ஆர்தர் செல்வராஜ். அவர் மிக அன்புடன் என்னை தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார். என்னை அவரிடம் ஒப்படைத்துவிட்டு ரூபனும் அண்ணனும் விடை பெற்றனர். அண்ணன் அவர் வீட்டில் தங்கிக்கொண்டார்.இனி மூன்று நாட்கள் அங்குதான் இருப்பார். ரூபனை அண்ணனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவரும் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் அண்ணனுடன் பி.ஏ . படித்தவராம்.
ஆர்தர் மலேசியா போர்ட் டிக்சன் அருகில் தானா மேரா ரப்பர் தோட்டத்திலிருந்து வந்துள்ளார். அவரும் நான் சார்ந்துள்ள லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்தவர்.பழகுவதற்கு இனிமையானவர். தமிழ் நன்றாகப் பேசுபவர். காலையில் நடக்கவிருக்கும் நேர்முகத் தேர்வில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை விவரித்தார். அவரும் அத்தகைய தேர்வில் அனுபவம் பெற்றவர்தான்.
முதலாவதாக பயமோ கூச்சமோ வேண்டாம் என்றார். அதற்காக அதிகப்பிரசங்கியாகவும் இருக்க வேண்டாம் என்றார். எப்போதும்போல் சாதாரணமாக இருந்தாலே போதும் என்றார்.
காலையிலேயே விடுதி உணவகத்தில் தேர்வு ஆரம்பித்துவிடுமாம். வந்துள்ள முப்பத்தைந்து மாணவர்களும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுவார்களாம். ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு ” பார்வையாளர்கள் ” இருப்பார்களாம். உண்மையில் அவர்கள்தான் தேர்வு செய்யும் விரிவுரையாளர்கள். அவர்கள் இருவரும் தனித்தனியே மதிப்பெண்கள் தருவார்களாம். அவர்கள் எதை வைத்து மதிப்பெண்கள் தறுவார்கள் என்பது தெரியாதாம். நம்முடைய தகுதியை பல கோணங்களில் அவர்கள் கண்காணிப்பார்களாம். அது காலை உணவு உண்பதிலிருந்து தொடங்கிவிடுமாம்.
குழுவில் உள்ள இதர மாணவர்களிடம் அறிமுகம் செய்துகொள்வது, உண்ணும்போது கையாளும் ” டேபில் மேனர்ஸ்’ என்று சொல்லப்படும் மேசைப் பண்பு, ஒருவருக்கு ஒருவர் உணவைப் பரிமாறிக்கொள்ளுதல் போன்றவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்குவார்களாம். ” ப்ளீஸ் ” , ” தேங்க் யூ ” போன்ற வார்த்தைகளை முறையாகப் பயன்படுத்த வேண்டுமாம். உணவு உண்டபின் எங்களை கல்லூரிக்கு அழைத்துச் செல்வார்களாம். அங்கு நேர்முகத் தேர்வுக்கு வந்துள்ள அனைத்து மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் சிறிது நேரம் சந்திப்பாராம். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட தேர்வு தொடருமாம். இது இவ்வாறு முற்றிலும் புதுமையான நேர்முகத் தேர்வாக இருக்குமாம். சுலபமானதுதானாம். ஆதலால் கவலை கொள்ளாமல், பரபரப்பு இன்றி நிதானமாகச் செயல் பட்டாலே போதுமானது என்று அவர் விளக்கி அறிவுரை கூறினார்.
அறையில் ஒரு கட்டில்தான் இருந்தது. நான் கொண்டுவந்திருந்த மெத்தையை தரையில் விரித்து படுத்துக்கொண்டேன். படுத்தபின்பும் வெகு நேரம் பேசிக்கொண்டே தூங்கிவிட்டோம்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஇந்தப் பிறவியில்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *