“மெர்ஸல்”ஆகிப்போனார்கள்…

This entry is part 28 of 32 in the series 29 மார்ச் 2015

=ருத்ரா

கையாலாகாதவன்
கவிதை எழுதினான்.

மின்னல் கீரைக் குழம்பு வைத்து
சாப்பிட்டேன் என்று.
நிலவை நறுக்கி
உப்புக்கண்டம் போட்டேன் என்று.

கடலிடமே கடலை போட்டேன்
அது
காலடியில் குழைந்து நெகிழ்ந்தது என்று.

என் எழுத்தாணிக்குள்
கோடி கோடி எழுத்துக்கள்..
கம்பன் இரவல் கேட்டான்
கொடுத்து விட்டேன் என்று.

இன்னும் அடுக்கினான்.
அது அடுக்குமா?
தெரியவில்லை.

“25 மாடி அப்பார்ட்மென்ட் கட்ட‌
நத்தைக் கூட்டுக்குள்
லே அவுட் போட்டேன்.

உங்களுக்குத் தெரியுமா?
என் காதலி
காலி செய்து தூக்கிப்போட்ட‌
அந்த மெகந்திக்குழாயை
இன்னும் பிதுக்கி பிதுக்கிப்பார்த்து
போட்டுக்கொண்டிருக்கிறது
அந்த பிரபஞ்சம்
இந்த “கேலக்ஸிகளை”!

நான் சுண்டி ஒரு “தூஸ்ரா”போட்டால் போதும்
ஆயிரம் ஆஸ்திரேலியாக்கள்
சுருண்டு விழும்.
ஒரு கோப்பையில் தான் என் குடியிருப்பு.
உலகக்கோப்பை
கேப்பையில் நெய்தான் இன்னமும் வடிகிறது.”

என்னவெல்லாமோ எழுதினான்.
எப்படியெல்லாமோ எழுதினான்.

கறுப்பு பணம் என்ன கறுப்பு பணம்?
அதற்கு வெள்ளையடிக்கும்
வினோத “ப்ரஷ்”கூட‌
அதனிடமே இருக்கிறது.
“தாராளமயத்தில்”
அதுவும் விற்பனைக்கு உண்டு.
அதன் எம் ஆர் பி விலை…
அச்சிடப்பட்டிருப்பது தெரிகிறதா?
அழிந்து அழிந்து தெரிகிறது.
பில்லியன் பில்லியன்
கோடி கோடி என்று…
எண் கணிதம் எண்ண முடியாமல்
இறந்தே போனது!

கறுப்பு பணத்தில் மட்டும் இல்லை.
காதல் கத்தரிக்காய் என்று
டன் டன்னாய் குவிக்கும்
எழுத்துக்களின் அடியில் எல்லாம் கூட‌
சமுதாய அசிங்கங்கள்
காக்காய் முள்ளாக‌
குத்திக்கிழிப்பதும் கூட‌
கறுப்புக்கவிதைகளே.

சரி…
சினிமா எனும்
ஜிகினா நதியோரம் நடந்தேன்.
“சப்னோங்கி சௌதாகர்” களாய்
நுரைக்கோபுரங்கள்
கட்டிக்கொன்டிருக்கிறார்கள் அங்கு!

“சஹர் அவுர் சப்னா” என்று
க்வாஜா அஹமத் அப்பாஸ்
அன்று ஒரு நாள்
இந்த செல்லுலோஸ் சுருள் வழியே
நம் மீது நிழல் பாய்ச்சிய‌
அந்த அந்துப்பூச்சிகளையும் கரையான்களையும்
அற்புதமாய் காட்டினாரே!
அதை அசைபோட்டு நடந்தேன்.

கோலிவுட் பக்கம் போனேன்.
தாகம் வரட்டியது.
பெட்டிக்கடையில்
“கோலி சோடா”கேட்டேன்.
அது பக்கத்து தியேட்டரில் என்றான்.
ஜிகர் தண்டா கேட்டேன்
ஜனாதிபதி விருதுக்கு போயிருக்கிறது என்றான்.
என்னப்பா “தெகிடி”யாப்போச்சு என்றேன்.
அது அடுத்த தியேட்டரில் என்றான்.

அன்று யதார்த்தத்தை கறுப்பு வெள்ளையில்
காட்டினார்கள்
அது இதயம் வரை தைத்தது.
இன்று “செம யதார்த்தம்”!
தில்லு முல்லுவில் மட்டுமே
இந்தியாவின் இதயம் அடகு வைக்கப்பட்டுவிட்டது.
கதையில்
செய்தி சொல்ல தேவையில்லை.
அதனால் அந்த பேருந்துக்குள்
கற்பழித்தவர்களே எங்கள் பாரத புத்திரர்கள்.

“பார்” படத்தில்
நஸ்ருத்தின் ஷாவும் ஸ்மிதா படீலும்
ஆற்றின் குறுக்கே ஓட்டி ஓட்டி
பண்ணி மேய்த்தார்களே!
அதில் அந்த பண்ணிகள் உறுமும் குரலில்
கேட்காத யதார்த்த சங்கீதமா?
இந்திய மக்கள் சாக்கடைப்புழுக்கள்
என்று சொல்லாமல் சொல்லிக்காட்டினார்களே!

இன்று கோரமான குரூரமான வில்லத்தனங்கள்.
அதைவிட அருவறுத்த காதல் கொட்டங்கள்.
லுங்கியை அவிழ்த்து குத்தாட்டங்கள்.
ரசனையில் பச்சைரத்தமும் கவிச்சியுமே அதிகம்.
இசையமைப்பு வரை இதன் நாற்றமே சகிக்கவில்லை.

இப்போதெல்லாம்
அஞ்சு நிமிட குறும்படங்களையெல்லாம்
முழு நீளப்படமாக்கி
அதிரடி கலாய்ப்பு கானாப்பாட்டு சகிதம்
கலக்கியடித்ததில்
சத்யஜித் ரேக்களும்
அடூர் கோபாலகிருஷ்ணன்களும்
“மெர்ஸல்”ஆகிப்போனார்கள்.

“மெர்ஸல்”ஆகிப்போனார்கள்….

ஆஹா!…
இது நல்ல தலைப்பு!
இன்றே பூஜை போட்டு
மாலையே இசை விழா நடத்தி
நாளையே வெளிவந்து
நாலு நாளில்
“வெள்ளி விழா”கண்டு விடும் வேகம்
இவர்கள் காமிரா வேகம்!
விருதுகள் அங்கே
அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
கச்சா பிலிம் சுருளுக்கு
கொஞ்சம் “பெப்” ஏத்தி
காது சவ்வுகளுக்கும் கொஞ்சம்
கலர் ஊத்திக்கொடுத்தால் போதும்
விருது தயார்.

ஒரு நவீனக்கழிப்பிட வசதி பற்றிய‌
சிந்தனைக்கும் கூட‌
நமக்கு
ஒரு உலக தினம்
கொண்டாட வேண்டியிருக்கிறது!

உலக கவிதை தினம் பற்றி
ஒரு படம் எடுத்தார்கள்
அதன் ஒரு வரிக்கதையின்
கார்ப்பரேட் தீம் இது தான்.
“மானிடமாவது மண்ணாங்கட்டியாவது.”

=====================================ருத்ரா

Series Navigation“தனக்குத்தானே…..”நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *