“தனக்குத்தானே…..”

This entry is part 27 of 32 in the series 29 மார்ச் 2015

==ருத்ரா

யார் அங்கே நடப்பது?
முதுகுப்புறம் மட்டுமே தெரிகிறது.
நானும் பின்னால் நடக்கிறேன்.
அவர் யாரென்று தெரியவில்லை.
அந்த முகத்தைப் பார்த்து
ஹலோ என்று சொல்லிவிடவேண்டுமே.
அறிமுகம் ஆனவர் என்றால்
“அடடே” என்பார்.
“நீங்களா” என்பார்.
அப்புறம் என்ன?
சங்கிலி கோர்த்துக்கொண்டே
போகவேண்டியது தான்?
இன்று அதி காலை நான்கு மணிக்குத்தான் படித்தேன்.
ராண்டல் சுந்தரம் தியரி பற்றி..
அது பற்றி அவரிடம் பேச வேண்டும்.
எலக்ட்ரான்
புள்ளியும் இல்லாமல் கோடாயும் இல்லாமல்
சவ்வு மாதிரியான‌
ஒரு துடிப்பின் சுவர் அடுக்குகளால்
ஆனது இந்த “ப்ரேன்” காஸ்மாலஜி
என்கிறார்களே
அந்த ஸ்ட்ரிங்கை வைத்து
அவரிடம் “பிடில் வாசித்துக்கேட்கவேண்டும்”
அப்புறம் நம் ஊர்
வெங்கடராமன் ராமகிருஷ்ணன் பற்றி
ரொம்பவே சிலாகிக்க வேண்டும்.
வேதியலில் நோபல் பரிசு பெற்றவர்.
அது மட்டுமா?
உலக அறிவின் சக்கரவர்த்தி நாற்காலியில்
அவரை அமர வைத்து விட்டார்கள்
இங்கிலாந்துக்காரர்கள்!
வெள்ளைக்கும்பினி ஆட்சியை
நம் தலையில் கவிழ்த்த போதும்
அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கும்
சுதந்திரம் எனும் சுவாசத்தை
நமக்கு பாய்ச்சியதும்
அந்த அறிவு வர்க்கம் தானே.
உங்களுக்கு உங்களை ஆளத்தெரியாது
என்று
நம்மைத்தோலுரித்துக்காட்டியதும்
அவர்கள் தானே.
இந்த “நெல்லிக்காய் மூட்டையின்”
சுறுக்காங்கண்ணி முடிச்சை அவிழ்த்துவிட்டதும்
நம் அசோக சக்கரக்கொடியை முடிச்சை
அவிழ்த்து விட்டதும் ஒன்று தானே!
நமக்கு காலுக்கு கீழே ஓடும் நதிகளும்
நமக்கு தலைக்கு மேலே பந்தல் போட்ட
ஆகாயத்தையும் காற்றையும்
கோடரி போட்டு வெட்டிக்கூறு போடுகிறோமே
இதையும் பற்றி
அவரிடம் கேட்க வேண்டும்.
அவரோ சர சரவென்று முன்னே போகிறார்.
அவரை எப்படியாது பிடித்து விடவேண்டும்.
கவிதைன்னா அது கவிஜ களுதன்னும்
சிந்தனையை மழுங்கடிக்கும்
மொக்கைன்னும் கலாய்க்கிறாகளே
இந்த அநியாயத்தையும் அவரிடம்
ஷேர் பண்ணியே ஆகவேண்டும்.
ஆனாலும் அந்த வரியில் எல்லாம்
காதல் நெய் பூசி
அதில் கேட்கும் இச்சு இச்சு களை
அவர்கள் இருதயத்துக்குள்
எண்டோஸ்கோபியில் ஒலிக்க வைத்தால்
அவர்கள் அடையும்
கிளுகிளுப்பு கிலுகிலுப்பைகளையும் பற்றி
ரொம்பவே அவரிடம்
மணிக்கணக்காய் பேசலாம்.
இன்னும் அவர் முகம்
நமக்கு எட்டவில்லையே.
டி எஸ் எலியட் என்று ஒருவர்
கவிதை எனும் வாழைப்பழத்துக்குள்
தத்துவம் எனும் ஊசியை ஏற்றும்
அந்த “வித்தகத்தனத்தை”ப் பற்றி
விண்டு உரைக்கவேண்டும்.
பேப்லோ நெருதா எனும்
மானிடனின் உள்ளத்துள்
காதல் குமிழிகளின்
பலூன்கள் மிதந்து கிடந்த‌போதும்
உள்நாட்டுப்போரில்
ஒரு உலக மானிட வீச்சுக்கு
துப்பாக்கிக்குண்டுகளையும்
கட்டி மிதக்க விட்டவர் அல்லவா அவர்.
“சிலி”யில் சிலிர்த்து நின்ற
அவரது அவதாரத்தின் முன்
மற்ற பத்து அவதாரங்கள் எல்லாம்
வெத்து அவதாரம் தானே!
அவரிடம் இதைச்சொன்னால்
எள்ளும் கொள்ளும் எப்படி வெடிக்கும்
என்றும் வேடிக்கை பார்க்கலாம்!
நேற்று விருது வாங்கிய
இளமை பொங்கும் கவிஞனின்
அந்த “அழகே அழகே” பாட்டில்
நரம்புகளும் தோல்களும்
எலக்ட்ரானிக் ஒலியில்
தேன் ஊற்றி
நம் “காப்பி ஆற்றும்”
காப்பியத்தைப்பற்றி
கலந்துரையாடல் செய்ய வேண்டாமா?
நானும் கால்களை எட்டி போட்டு
இதோ
அவர் தோள்பட்டையில்
கை வைத்து விட்டேன்.
அவரும்
முகம் காட்டினார்.
அது
என் மூஞ்சியா?
இல்லை அவர் முகமா?
சிரிக்கிறாரா? சிரிக்கிறேனா?
……………….

“போதும் இடம் விடுங்கள்.
கண்ணாடியில்
எவ்வளவு நேரம் தான்
அந்த ஒற்றை முடியையே
சீப்பை வைத்து
ஓரம் கட்டிக்கொண்டிருப்பீர்கள்?
நானும் தலை வாரவேண்டும்.
தள்ளுங்கள்”

விரட்டியது என் “சகதர்மிணி”

=============================

Series Navigation“எதிர்சினிமா” நூல் வெளியீடு“மெர்ஸல்”ஆகிப்போனார்கள்…
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *