கோர்ட்..மராத்தியத் திரைப்படம்: சிறந்த படத்திற்கான இவ்வாண்டின் தேசிய விருதுபெற்றது

This entry is part 7 of 32 in the series 29 மார்ச் 2015

சுப்ரபாரதிமணியன்

அமைதி .. அமைதி .. கோர்ட் நடக்கிறது
சுப்ரபாரதிமணியன்

நாராயணன் காம்ளே என்ற மராத்திய கவிஞர் மீது சாட்டப்பட்ட குற்றத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார்.
குற்றம்: சாக்கடைசுத்தம் செய்யும்தொழிலாளியைத் தற்கொலைக்கு தூண்டியதாக.
எப்படித்தூண்டினார் : அவர் மேடையில் பாடல்கள் பாடியது மூலமாக.உணர்ச்சிப் பாடல்கள்மூலமாக. இவ்வுலகம் வாழ வழியில்லாதது . சாகத்தான் லாயக்கு என்றக் கருத்தைச் சொன்னதால்.
அவருக்கு வருமானம்; குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பது.
அவர் கைது செய்யப்பட்ட நாளில் சொல்லிக்கொடுத்து: வண்ணத்துப்பூச்சிகள் பற்றி.
வழக்கமான வழக்கறிஞர்கள் எப்படி இருப்பார்கள்:
1. அரசாங்க வழக்கறிஞர் என்றால் மக்களுக்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்காது. மாலை நேர பார், சூதாட்டம், பொழுதுபோக்கு என்று அலைபவர் . பணம் சம்பாதிப்பவர்.
2. கவிஞருக்காக வாதாடுபவர்: ஏழையாக இருப்பார். தேங்காய் மூடி வக்கீல் என்ற பட்டப் பெயர் இருக்கும். பட்டினி இருக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது. மக்கள் வழக்கறிஞராக இருப்பார்.
ஆனால் இந்த படத்தில் தென்படும் வழக்கறிஞர்கள் இப்படி இருக்கிறார்கள்.
1. அரசாங்க வழக்கறிஞர்: கொஞ்சம் ஏழைதான்.சாதாரண வீடு. பையனை பள்ளியில் இருந்து கூட்டிக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. பேருந்து, தொடர்வண்டி நெரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. . தேங்காய் மூடி வக்கீல் என்ற பட்டப் பெயர் உண்டு. . பட்டினி இருக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது. மக்கள் கூட அதிக பழக்கம் கொண்டவராக இருக்கிறார். அதுவும் பெண்.
2. கவிஞருக்காக வாதாடுபவர்: . கொஞ்சம் வசதியான வழக்கறிஞர் மக்களுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்பது மாதிரி நடந்து கொல்கிறார். . மாலை நேர பார், ஆங்கில பல்கேரியன் நடன நிகழ்ச்சிகளுக்குப் போவார். உயர்ந்த ரக மது பானம் வாங்குபவர்., ஜாஸ் கேட்பவர் பொழுதுபோக்கு என்று அலைபவர் . பணம் சம்பாதிப்பவர்.சற்றே உயர் சாதிக்காரர். பெயர் வோரா.
இந்த வழக்கு வரும் நீதிமன்றத்தின் நீதிபதி: ஆங்கிலம் பிடிக்கும், கவிதை , கவிஞர் இதெல்லாம் என்ன என்று எரிச்சல் படுபவர். சாட்சியாக வந்தபெண் சிலிவ்லெஸ் ஜாகெட் உடை போட்டுக் கொண்டு வந்த காரணத்தால், நீதிமன்றத்திற்கு இந்த டிரஸ் கோடு ஒத்துவராது என்று வழக்கை விசாரிக்க மறுத்து ஒத்தி வைப்பவர். மாலை நேரத்தில் நாடகங்களுக்குப் போய் கிச்சு முச்சு காட்டுவதை ரசிப்பவர். அவ்வப்போது பிக்னிக் என்று போகிறவர். கவிஞர் மராத்தியில் உரையாடுவதுதான் எனக்கு லகுவானது என்று இந்தியில் உரையாட மறுப்பவரை ஆச்சர்யமாகப் பார்ப்பவர்,309 செக்சன் பற்றி அதிகம் பேசுபவர். 40 புத்தகங்கள் ( தடை செய்யப்பட்டவை ) கவிஞரிடம் பறிமுதல் செய்யப்பட்டதை ஆச்சர்யம் பொங்க்க் கேட்பவர்.
கவிஞர் மீதான விசாரணை நடக்கிறது அவருக்கு வயது 65 . ஆனால் வயது உடல் நிலை கருதி தரப்பு வழக்கறிஞர் ஜாமீன் கேட்டாலும்பெண் அரசாங்க வழக்கறிஞர் மறுக்கிறார். இவர் பல முறை விதிகளை மீறியவர். தரக்கூடாது.இவர் புரட்சிகர கருத்துக்களை பாடி மக்களை தொடர்ந்து தற்கொலைக்குத் தூண்டுவார்.
செத்துப் போன துப்புரவு தொழிலாளி மனைவியிடம் நீதிபதி விசாரிக்கிறார்.கணவனின் வயது அவளுக்குத் தெரியவில்லை. கவிஞரின் பாடல் தற்கொலைக்குத் தூண்டித்தான் செத்தாரா.தெரியாது, பாதுகாப்பு முகமூடி , கவசம்,உறைகள் அணிய மாட்டார்.அது காரணமாக இருக்கலாம்.
கவிஞருக்கு தற்காலிகமாக ஜாமீன் கிடைத்தாலும் அவர் சிறை, வழக்கு அனுபவங்களை புத்தகமாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அச்சகத்தில் மீண்டும் கைது செய்யப்படுகிறார். விசாரணை தொடர்கிறது.
நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள், அழுக்கு நீதிமன்றம், நெரிசலான இருக்கைகள் எல்லாம் இயல்பாகக் காட்டப்பட்டுள்ளன. கவிஞர் ஒருவரை முன் வைத்து ஒரு படம் நீளுவது விசேசமானது, அவர் தலித் கவிஞர். பம்பாய் புற நகரில் வாழ்கிறவர். மேடையில் பாடும் தோற்றத்தில் கத்தர் போன்ற கவிஞர், பாடகர்கள் ஞாபகம் வருகிறார்கள்.
கடைசிக் காட்சியில் நீதிபதி நண்பர்கள், பக்கத்திலிருப்பவர்களுடன் பிக்னிக் போகிறார். அய்.டி. படித்து விட்டு பெரிய தொகையை சம்பாதிக்கும் இளைஞர்கள் பற்றி கவலைப் பட்டுக்கொள்கிறார்.எவ்வளவு சம்பளம் என. தூங்கிப் போகிறார். பையன்கள் கலாட்டா செய்து எழுப்பி விட்டு விடுகிறார்கள். பொறுப்பற்ற குழந்தைகள் என்று ஒருவனை அறைகிறார். மீண்டும் தூங்க ஆரம்பிக்கிறார். கிண்டல் செய்து விமர்சிக்கும் இளைய தலைமுறை,தூங்கிக் கொண்டிருக்கும் நீதித்துறை என்று அர்ர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
இது வெனிஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றிருக்கிறது. பம்பாய் திரைப்பட விழாவிலும் மூன்று பரிசுகள்.. இதன் இயக்குனர் சைத்தன்ய தம்ஹனா 27 வயது இளைஞர். இதில் நடித்த துப்புரவு தொழிலாளியின் மனைவி அசலானவர்.உண்மையில் சாக்கடை குழியில் செத்துப் போன தொழிலாளி ஒருவரின் மனைவி. மற்ற நடிகர்கள் தொழில் முறை நடிகர்கள் அல்லர், பயிற்சி தரப்பட்டு நடித்தவர்கள். சாதி, அரசியல் அதிகாரம் பற்றிய பல விவாதங்களைக் கொண்டிருக்கும் மராத்தி படம் ” கோர்ட் “

Series Navigationசிரித்த முகம்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *