தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 மே 2019

ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்

ஜோதிர்லதா கிரிஜா

Spread the love

jayakantha

 

ஜெயகாந்தன்!

தமிழ் இலக்கிய உலகில் பளீரென்று தோன்றிய விடிவெள்ளி! இவரின் அனைத்துப் படைப்புகளையும் படித்ததில்லை. இவ்வாறு சொல்ல நேர்ந்ததில் வெட்கம்தான். ஆனாலும் உண்மை. கவிதா பதிப்பகம் இவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளது. அதைச் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கியது உண்மையானாலும், முழுவதுமாய்ப் படிக்க முடியவில்லை. படைப்பு வேலைகள் குறுக்கிட்டன. எனினும் படித்தவரையில் இவருக்கு ஈடானவர் மிகச் சிலரே என்று தோன்றியது.

நல்ல வேளை! சூடாமணி அவர்களைப் புறக்கணித்தது போல் சாகித்திய அகாதெமி இவரைப் புறக்கணிக்கவில்லை. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலுக்கு விருது அளித்தது. அதனை அவருடைய நெருங்கிய நண்பர் திரு கே. எஸ். சுப்பிரமணியன் “Men and moments” என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தினமணி கதிரில் தொடராக வந்தபோது அதைப் படிக்க வாய்க்கவில்லை. சில மாதங்களுக்கு முன்னால்தான் திரு கே.எஸ்.எஸ். அனுப்பி வைத்த அருமையான இந்த மொழிபெயர்ப்பைப் படித்து ரசித்தேன். (எனினும் இது திரைப்படமாக வந்த போது பார்த்து ரசித்துள்ளேன்.)

ஜெயகாந்தனின் சில கருத்துகளோடு நமக்கு ஒப்புதல் இல்லாதிருக்கலாம். ஆனால் அவர் உண்மையானவர். அவரது எழுத்தின் விரைவும் அதில் ஒலித்த சத்தியமும் அதனை உணர்த்தும். பிறரின் பாராட்டுகளைப் பெரும் பொருட்டு அவர் தமக்கு உடன்பாடில்லாத எதையும் பொய்யாக எழுதியதில்லை என்பதே அவரது சிறப்பாகும். தமது கருத்துகளில் மாற்றம் விளைந்த போது மற்றவர் அந்த முரணுக்காகத் தம்மைக் கேலி செய்வார்களே என்கிற தயக்கம் இன்றி அதனை வெளிப்படுத்திக்கொண்டவர். திறமை மட்டுமின்றி, வாய்ப்புகளும், சூழலும் பெரிதும் சாதகமாக இருந்த பெரும் பேறால் புகழின் உச்சியில் இருந்தவர்.

ஜெயகாந்தனை முதன் முதலில் 1969 இல் அவரது இல்லத்துக்கு என் தங்கையுடன் சென்று சந்தித்தேன். 1968 இல் ஆனந்த விகடனில் அறிமுகமான என்னைப் பற்றி அதன் தலைமை உதவி ஆசிரியர் அமரர் மணியன் அவரிடம் பேசியிருக்கிறார். ‘அந்தப் பெண்ணை நான் சந்திக்க வேண்டுமே!’ என்று அவர் சொல்லியுள்ளார். இந்தத் தகவல் என் அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அமரர் குயிலி ராஜேஸ்வரி மூலம் எனக்குத் தெரியவந்தது. அவர் அப்படிச் சொன்னதன் பிறகு நானே சென்று அவரைப் பார்த்துப் பேசுவதுதான் முறை என்று தோன்றியது. மணியன் அவர்களிடமிருந்து ஜெயகாந்தனின் இல்லத்து முகவரியைப் பெற்றுக்கொண்டு ஒரு நாள் மாலையில் என் தங்கையுடன் சேத்துப்பட்டில் இருந்த அவரது வீட்டுக்குப் போனேன்.

பேச்சு வாக்கில் தாம் சமுதாயத்துக்கு நீதி போதனை எதுவும் தம் கதைகளில் சொல்லுவதில்லை என்று குறிப்பிட்டார். அப்போது பெரிதும் பேசப்பட்ட தமது “அக்கினிப் பிரவேசம்” கதைக்கு விளைந்த முரண்பட்ட கருத்துகள் பற்றிப் பேசினார். அதற்கு எதிர்ப்புகளே அதிகம் வந்ததைக் குறிப்பிட்டார். அப்போதுதான் தாம் தம் எழுத்தின் வாயிலாக நீதி போதனை எதையும் செய்வதில்லை என்று தெரிவித்தார்.

“அதில் நீதி போதனை இல்லை என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்? பெண்களுக்கு அதில் மிகப் பெரிய எச்சரிக்கையும் படிப்பினையும் உள்ளனவே!” என்று நான் அவரை இடைமறித்தேன்.

“அதில் நான் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. போதனையும் செய்யவில்லை!” என்று ஜெயகாந்தன் வலுவாக மறுத்தார்.

“நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ‘முன் பின் அறிமுகம் இல்லாத ஆண்பிள்ளை எவனேனும் மழையில் சிக்கிய ஒருத்தியைக் காரில் ஏறுமாறு அழைத்தால் அவள் அதில் ஏறிக்கொள்ளுவது முட்டாள்தனம். எனவே, பெண்கள் அப்படி நம்பிச் செல்லக்கூடாது’ எனும் எச்சரிக்கை அதில் அடங்கியுள்ளது! அதன் விளைவு என்னவாகும் என்கிற படிப்பினையும் அதில் உள்ளது!” என்ற எனது கூற்றை அவர் ஏற்க மறுத்தார்.

நான் சொன்ன கருத்தை விவாதிக்காமல், “அப்படியானல் எந்த ஆண்மகனும் நம்பிக்கைக்கு உரியவன் அல்லன் என்றா சொல்லுகிறீர்கள்? இந்த உங்கள் கருத்து மிகவும் தவறானது!” என்றார்.

“எல்லா ஆண்களும் கெட்ட நோக்கம் கொண்டவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஒன்று எறும்புப் புற்றா, அல்லது பாம்புப் புற்றா என்று புற்றினுள் கையை விட்டுப் பார்ப்பது புத்திசாலித்தனமா? அதைத் தவிர்ப்பதுதானே புத்திசாலித்தனம்? நம்பி ஏமாறுவதை விடவும் நம்பாமல் தற்காத்துக்கொள்ளுவதுதானே ஒரு பெண்ணுக்கு நல்லது? நீங்கள் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அந்தக் கதை பெண்களுக்கான எச்சரிக்கைதான்! படிப்பினைதான்!” என்றேன்.

ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். “ஆண்கள் பற்றிய உங்கள் கண்ணோட்டம் தவறானது!’ என்றே மறுபடியும் கூறினார்.

‘இது ஆண்கள் பற்றிய கண்ணோட்டம் இல்லை!’ என்று பிடிவாதமாக வாதிட நான் விரும்பவில்லை. அவரது வீட்டுக்குச் சென்று அவரை எதிர்த்து வாதாடுவதில் ஒரு சங்கடம் தோன்றியது. எனவே வாயை மூடிக்கொண்டேன்.

அதன் பின் பொதுவாகப் பேசியபின், எனக்குச் சில அறிவுரைகள் கூறினார். என்னை நிறையப் படிக்கச் சொன்னார். நான் விடைபெற்றுப் புறப்பட்டதும் தெரு முனை வரை எங்களோடு நடந்து வந்து விடை கொடுத்தார். பின் வேறு வழியில் சென்று நடந்தார். விடைபெறும் முன், “நிறைய எழுதுங்கள்!” என்றார். அவரது கம்பீரமான அந்தக் குரல் இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

………

Series Navigationஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !சிறுகதை உழவன்

5 Comments for “ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்”

 • ஜெயஸ்ரீ ஷங்கர். says:

  இலக்கிய உலகைக் கலக்கிய சிந்தனைச்சிற்பி ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய தங்களது நினைவுக் கோர்வை கச்சிதமாக அமைந்திருந்தது.அவரைப் பற்றி இலக்கிய உலகம் பேசப்படும் போதெல்லாம் ‘கம்பீரமான நினைவுகளாக’ அவர் என்றென்றும் வளைய வருவார் என்றே சொல்லவேண்டும்.
  அன்றைய உரையாடலை நன்கு நினைவிருத்தி அதை அப்படியே வழங்கிய உங்களுக்கு எனது நன்றிகள்.
  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 • BS says:

  //அதில் நான் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. போதனையும் செய்யவில்லை!” என்று ஜெயகாந்தன் வலுவாக மறுத்தார்.//

  ஜெயகாந்தன் சொன்னதுதான் சரி.

  இலக்கியத்தில் நீதி போதனையோ எச்சரிக்கையோ எழுத்தாளர் செய்ய மாட்டார்; செய்யவும் கூடாது. ஆனால் அவை இருக்கும். அதை எடுத்துக்கொள்வார் வாசகர். அஃது ஒரு திணிப்பன்று. தன்னிச்சை செயல்.

  எழுத்தாளரே நேரடியாக செய்தால் என்னவாகும்? அது திணிப்பு. அஃது அவரின் படைப்பைச் சிறுமைப்படுத்தி குழந்தை இலக்கியாக்கிவிடும். இலை மறை காயாக, சொல்லியும் சொல்லாமலும், வாசகர் கருத்துக்கு விடுவதுதான் இலக்கியம். வாசகனைச் சிந்திக்க வைப்பதும் சுயபரிசோதனை செய்ய வைப்பதும் எழுத்தாளன் மெனக்கெடாமல் தானாகவே நடைபெறும் செயல்கள்.

  இந்த இலக்கிய தியரியை அவர் சொல்லி உங்களுக்கு விளக்கியிருக்கலாம். ஆனால் அவர் ஒரு எழுத்தாளர் மட்டுமே. நானில்லை அவர். விளக்கத்தெரியாமல் திரும்பித்திரும்பி அவர் சொல்கிறார். நீங்கள் புரியவில்லை..

  நாவலில் கதாமாந்தர்கள் பேசுவார்கள்; செய்வார்கள். அவற்றிலிருந்து நாம் சிந்திக்கிறோம். கவிதைகளில் கவிஞர் நேரடியாகப்பேசுவான். அவனின் அனுபவங்களை. ஆனால் அதை உங்களுக்குத்தான் சொல்கிறான் என்று நினைப்பது பேதமை. ஆயினும் நான் ஒரு படிப்பினையாகக்கருதி அனுபவிக்கிறோம். ராபர்ட் ஃப்ரோஸ்டின் இரு பாதைகள் பிரிந்தன என்ற கவிதை அவனின் அனுபவம். ஆனால் நாம், ரிஸ்க் எடுக்காமல் வாழ்க்கையில் பல நன்மைகள நாமாகவே இழந்துவிடுகிறோம் என்ற பாடத்தைப் படிக்கிறோமல்லவா?

  வாசகனுக்கும் எழுத்தாளனுக்கு என்ன தொடர்பு? எவ்வளவு தூரம்? எழுத்தை மட்டுமே அவன் படைக்க, அதன் மேல் கட்டப்படும் கற்பனைகளுக்கும் பாடங்களுக்கும் அவன் பொறுப்பா? இப்படிப்பட்ட கேள்விகளை ஆராய்ந்து வெளிவரும் உண்மைகளே இலக்கியத் தியரிகள்.

  • paandiyan says:

   படைப்பை பார், படைப்பாளியை இல்லை என்று சுருக்கமா சொல்லுங்க sir!

 • Dr.G.Johnson says:

  ஜெயகாந்தன் பற்றிய நல்ல நினைவலைகள் இவை. அவருடைய ” அக்கினிப் பிரவேசம் ” கதை குறித்து தைரியமாக வாதிட்ட உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். அவர் எவ்வாறு கதையில் எந்த நீதியும் சொல்லவில்லை என்று சொன்னாரோ, அதே பாணியில் நீங்களும் அதில் நீதி உள்ளது என்று இறுதி வரை வாதிட்ட விதம் சிறப்பானது. வாழ்த்துகள் ஜோதிர்லதா கிரிஜா.

 • jyothairllata Girija says:

  அனைவர்க்கும் நன்றி.
  “ஆகையால், பிள்ளைகளே! இதிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்…” என்னும் பாணியில் இலக்கியவாதிகள் எழுதக்கூடாது என்பதே எனது நிலைப்பாடும் ஆகும். இது இலக்கியவாதிகளுக்கான அரிச்சுவடி என்பதை யாவரும் அறிவர். மறைமுகமான செய்தியோ, படிப்பினையோ இல்லாவிடில் அது இலக்கியமே அன்று. ஜெயகாந்தன் அவர்கள் இயல்பான எழுத்தின் வாயிலாக மக்களுக்கு நிறையவே எடுத்துச் சொன்னவர் என்பதே இன்றளவும் எனது துணிபு. அவர் உபதேசம் செய்தார் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். நானும் அப்படி நினைக்கவே இல்லை. எனினும் என்னை மறுக்கும் உரிமை எவர்க்கும் உண்டு.
  அன்புடன்
  ஜோதிர்லதா கிரிஜா


Leave a Comment

Archives