பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)

This entry is part 6 of 24 in the series 7 ஜூன் 2015

seshadriகன்னட சினிமாவில் பி. சேஷாத்ரி என்று ஒரு இயக்குனர். அவரை அறிமுகம் செய்து வைத்துத் தான் ஆகவேண்டும். நம் தமிழரில் நல்ல சினிமாவை ரசிப்பவர்கள் ஒருசில ஆயிரமாவது இருப்பார்கள் என்று நம்ப விரும்புகிறேன். அது பற்றிப் பேசுபவர் தெரிந்ததாக சொல்லிக்கொள்பவர்கள் இதைவிட ஒன்றிரண்டு மடங்கு கூடவே இருக்கக் கூடும் தான். நான் ரசிப்பவர்களைப் பற்றி மாத்திரமே பேச விரும்பு கிறேன். நம்மூர் சிவாஜி கணேசன், சிம்பு வகையறா போன்று அங்கும் ராஜ்குமார் போன்றாரை விட்டு ஒதுங்கி தனிப்பாதையிட்டுச் செல்லத் தொடங்கியவர்கள், கிரீஷ் கர்நாட், காஸரவல்லி, பி.வி. காரந்த் போன்றாரைத் தெரிந்திருக்கலாம். எம்.எஸ் சத்யு, ஜி.வி. ஐயர் போன்றார், தெரிந்த பெயர்களாக இருக்குமா என்பது தெரியாது. அதிலும் கிரீஷ் கர்நாட் தெரிந்திருப்பது, அவர் நடித்த சம்ஸ்காரா ,எழுபதுகளில் பெரும் சச்சரவில் சிக்கியது காரணமாகவே இருக்கக் கூடும்.
கொஞ்சம் காட்டமாகவே நான் எழுதுவதாகத் தோன்றலாம். எனக்கான நியாயங்கள், சரியோ தவறோ இரண்டு மூன்று இருக்கத் தான் செய்கின்றன. நல்ல சினிமா பயிற்சி பட்டறைகள் ஒன்றிரண்டு, அதில் ஒன்றில் என் கன்னட நண்பர் ஒருவர், சினிமா ரசிகர் வகுப்பெடுக்கச் சென்றார். எடுத்த உடனேயே அந்த பயிற்சி மாணவர்கள் சொன்னது, “ஐயா நீங்கள் எல்லாம் உடனே இத்தாலி சினிமா, ப்ரெஞ்ச் சினிமா என்று பேச ஆரம்பித்து விடுகிறீர்கள். நீங்களும் உங்கள் நண்பர் சாமிநாதனும். நம்ம ஊரைப் பத்திப் பேசுங்க. இந்த மண்ணைப் பத்திப் பேசுங்க” என்பது அவர்களது ஏகோபித்த வேண்டுகோள். இவர்கள் ஏற்கனவே பயிற்சியில் இருப்பவர்கள். முதல் நாள் முதல் ஷோ பார்க்க சென்னை வெயிலில் டிக்கட் வாங்க நிற்பவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் பயிற்சியில் என்ன எதிர்பார்த்தார்களோ தெரியாது.
சினிமா, காட்சி பூர்வமாக பார்த்த அனுபவத்தோடு சர்ச்சிக்கப்படவேண்டிய ஒன்று. ஆகவே நான் சினிமாவைப் பற்றி எழுதுவது குறைவு. அதிலும் வேண்டுமென்றே நம்மவர் பார்க்காத அயல் நாட்டு சினிமா பற்றிப் பேசுவதே இல்லை. 1972 லோ என்னவோ காடியாக் என்னும் ஜெர்மன் படத்தை எழுதியதைத் தவிர. நான் எழுதுவதெல்லாம் நம்மவர் பார்த்திருக்கும், பார்க்க வாய்ப்பு உள்ள தமிழ் தெலுங்கு, போன்ற இந்திய மொழிப் படங்களைப் பற்றித் தான். அவர்களுக்கு என்னிடம் காய்ப்பு நான் கமல்சார் ரஜனி சார் புகழ் பாடாதது, பெரும்பாலும் தமிழ்ப் படங்களைப் பற்றி நல்லதாகச் சொல்ல எதுவும் என்னிடம் இல்லாது போனது, இரண்டாவதாக என்னோடு சாடப்பட்ட என் நண்பரும் என் பார்வையினர் தான். கொஞ்சம் மிதமானவர். ஆக, நல்ல சினிமா பயில வந்தவர்கள் தம் வீட்டுச் சுற்றுச் சுவரைத் தாண்டி அப்பால் எதுவும் காண விரும்பாதவர்கள்.
நம்மில் நல்ல சினிமாபற்றிப் பேசுபவர்களோ, எழுதுபவர்களோ மேற்சொன்ன ஒரு சிலரைத் தவிர பி.சேஷாத்ரி பற்றிப் பேசியவர் யாரையும் நான் காணவில்லை. என் நண்பர், எழுதிய கன்னட சினிமா பற்றிய புத்தகத்திலும் அவர் பற்றிய பேச்சு இல்லை. பயிற்சிப் பட்டறை நடத்தும் இன்னொரு அன்பர், அவர் நல்ல சினிமா பற்றிய தேடலிலேயே வாழ்பவர், அவரிடமும் நான் பி.சேஷாத்திரி பற்றியும் அப்போது அண்மையில் பி.சேஷாத்ரியின் படமொன்று நம் தொலைக் காட்சியில் ஃபில்ம் க்ளாஸிக்ஸ் தொடரில் காட்டப்பட்டது பற்றியும் சொன்னேன். அதன் பலன் ஏதும் இருக்கவில்லை. ஃபில்ம் க்ளாஸிக்ஸ் என்று விளம்பரப்படுத்தி நம் தொலைக்காட்சிகள் காட்டுவதெல்லாம் இப்போது பெரும்பாலும் க்ளாஸிக்ஸ்-ம் இல்லை. சினிமாவும் இல்லை என்பது வேறு விஷயம். கொஞ்சம் பழசானால் எல்லாம் க்ளாஸிக்ஸ் என்று நினைக்கிறார்களோ என்னவோ. ரசனையை விட, மதிப்பீடுகளை விட, வருடக் கணக்கு சுலபமாக எல்லோருக்கும் குறிப்பாக அரசு அதிகாரிகளுக்கு வரக்கூடியது. தன் வருடக் கணக்கு சரியென்று வாதாட வகை தருவது. தாய் மகளுக்குக் கட்டிய தாலி, வந்து 40 வருடங்களுக்கு மேல் ஆயிற்று இல்லியா?. அப்போ அதுவும் க்ளாஸிக்ஸ் தானேய்யா? அது போல ஏக் துசே கே லியே, வும் தான்.
ஆக, நம்மவரிடையே பி. சேஷாத்ரி பற்றி அல்லது அவரது ஒரு படம் பற்றியாவது பேசுவதில் அர்த்தமுண்டு என்று நினைக்கிறேன். எனக்கு அவரது இரண்டு படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எல்லாம் வீட்டில் உட்கார்ந்து கொண்டே தான். நம் அரசு நடத்தும் தொலைக்காட்சி ஒன்றில் தான். நேற்று (19.4.2005) பார்த்த பி. சேஷாத்ரியின் படம் தான் பெட்டாடே ஜீவா, மலைகளுக்கிடையே ஒரு கிராமத்தில் வாழும் ஒரு வயதான தம்பதியினரையும் அவர்களைச் சார்ந்து வாழும் இன்னும் சில மனிதர்களைப் பற்றியுமான கதை. நம் மண், நம் கலாசாரம் என்று சொல்லி, நமது பழக்கப்பட்ட கேளிக்கை ரசனைக்கு அப்பாற்பட்டவற்றை ஒதுக்க விரும்புகிறோமே அப்படி அன்னியப்பட்ட மனிதரையோ வாழ்க்கையோ சொல்ல வில்லை இந்த படம். நவீன கன்னட இலக்கியத்தின் பிதாமகரான சிவராம் காரந்தின் கதை ஒன்றைத் தான் சேஷாத்ரி படமாக்கியுள்ளார்.
17-bettada-jeeva2கதை நிகழ்வது சுதந்திரப் போராட்டம் அதன் உச்சத்தை எட்டிக்கொண்டிருந்த காலம். போன நூற்றாண்டின் நாற்பதுகளில் நிகழ்கிறது இந்தக் கதை. மரங்களும் புதர்களும் மண்டி காடாகிவிட்ட மலைப் பிரதேசத்தில் தன் வழி தவறி திகைத்து நிற்கும் சங்கரன் நகரத்திலிருந்து வருபவன், படத் தொடக்கத்தில் ஒரு நகரத்தில் நிகழும் சுதந்திரப் போராட்டத்தின் போலீஸ் தடியடிக் காட்சிக்கு அடுத்து வரும் காட்சியில், காட்டு வழி நடக்கும் சங்கரன் அப்போராட்டக்காரர்களில் ஒருவன் என்று தெரிகிறது. அவன் வழியில் செல்லும் காட்டு வாசிகளிடம் வழி கேட்கிறான். இருட்டும் நேரம். சிறுத்தை போன்ற காட்டு விலங்குகள் நடமாடும் இடம் அது என்று சொல்லி, அவனுக்கு இரவைக் கழிக்க, பாது காப்பாக தம்முடன் அழைத்துச் சென்று கோபாலய்யா வின் வீட்டுக்கு முன் நிறுத்துகின்றனர். கோபாலய்யாவும் வெளியிலிருந்து, மங்களூரிலிருந்து வந்தவர்தான். ஆனால் வெகு காலம் முன்னரே வந்து அந்த கிராம மக்களின் உதவியோடு அங்குள்ள நிலத்தைச் சீர்படுத்தி விளை நிலமாக்கி, அக்கிராம மக்களுக்கு ஆதரவாக வாழ்ந்து வருபவர். அவனை அழைத்து வந்த தோரன்னாவும் பாத்தியாவும் கோபாலய்யாவின் குடும்பத்தோடு ஒட்டியவர்கள். கோபாலய்யா அவனை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார். ”இரவு தங்குவதற்கு இடம் கொடுத்தால் போதும்,” என்கிறான் சங்கரன். ஆனால் கோபாலய்யா அவனுக்கு வெந்நீர் போட்டு குளிக்கச் சொல்லி, பின் தன்னோடு சாப்பிட வைக்கிறார். கோபாலய்யாவின் மனைவி சங்கரி அவனை கனிவுடன் பார்க்கிறாள். “நம்ப சம்பு மாதிரி இருக்கிறான் இல்லையா?” என்று சொல்கிறாள்..
காலை எழுந்ததும் மீண்டும் அவன் அவர்களிடம் விடைபெறக் கோருகிறான். அவர்கள் விடுவதாயில்லை. சில நாட்கள் அவர்களுடன் தங்கியிருந்து ;பின் செல்லலாம் என்று அவனைத் தடுத்துவிடுகிறார்கள். அருகில் இருக்கும் மலை ஓடையில் குளித்து, அங்கு சுற்றியிருக்கும் மலைகளையும் கிராமங்களையும் சுற்றிக்காட்டுகிறார் கோபாலய்யா. அந்த ரம்மியமான காட்சிகளையும் அமைதியையும் கண்டு சிவராமனுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அங்கு இருக்கும் நாட்களில், அவன் சங்கரிக்கு மிகவும் பிரியமாகிப் போகிறான். அவர்களது உபசரிப்பும் அவனுக்கு சந்தோஷம் தருகிறது. பேச்சினிடையே கோபாலய்யா அங்குள்ள மக்களைப் பற்றியும் தன்னைப் பற்றியும் பேசுகிறார். .தான் மங்களூரிலிருந்து பிழைப்பு தேடி, அங்கு வந்த விவரங்களையும் அங்கு கிராம மக்களோடு சேர்ந்து காடுதிருத்தி விளைநிலங்களை உருவாக்கியதையும் ஒரு சிறுவனாக தன்னிடம் வந்து சேர்ந்த நாராயணன் தன்னிடமே வளர்ந்து பெரியவனாகி, அவனுக்கு லக்ஷ்மி என்னும் பெண்ணை மணம் செய்து கொடுத்து காட்டு மல்லி என்னும் இடத்தில் வீடு கட்டி இப்போது அவனுக்கு என்று நிலமும் உண்டு என்று சொல்கிறார். அவன் குழந்தைகள் இரண்டும் தன்னிடமே தன் குழந்தைகளாக வளர்வதையும் சொல்கிறார். அவருடைய ஒரே மகன், சம்பு மேல் படிப்புக்காக பம்பாய் போனவன் சுதந்திரப் போராட்டத்தில் தன் விருப்பத்துக்கு எதிராக சேர்ந்து விட்டதும் தான் அதை எதிர்த்ததால் கோபித்துக் கொண்டு சென்றவன் வீடு திரும்பாமல் காணாமல் போய்விட்டதாகவும் சொல்கிறார். இடையில் கோபாலய்யரைப் பார்க்க வந்த நாராயணனுக்கு சிவராமன் பம்பாயிலிருந்து வந்தவன் என்று சொல்லக் கேட்டு அவன் காணாமல் போன சிவராமன் அனுப்பித்தான் இங்கு வந்துள்ளானோ, அப்படியானால் கோபாலய்யர் தனக்கு தந்துள்ள நிலம், வீடு எல்லாம் போய்விடும், தன் வாழ்வு கெடும் என்று பயப்படுகிறான். இருப்பினும் இதெல்லாம் அவரது, அவரது மகனுக்குக் கொடுக்க அவருக்கு உரிமை உண்டுதானே என்றும் நினைப்பு ஓடுகிறது. ஒரு சமயம் சிவராமன் மலைச்சரிவில் சுற்றிக்கொண்டிருக்கும் போது அவன் தடுக்கி விழுந்து காலடிபட்டு நடக்க முடியாமல் தவித்தவனை, எதிரே வந்த லக்ஷ்மி அவனைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து ஒத்தடமும் மருந்தும் கொடுக்கிறாள். அங்கு வந்த நாராயணன், தன் கதையையும் கவலையையும் சொல்லி தனக்கு இனி இங்கு இடம் இராது என்றும் வேறு இடமும் வேலையும் தேடிக்கொள்ளத் தான் வேண்டும், தான் கோபாலய்யாவின் மகனோடு போட்டி போடமுடியாது என்றும் சொல்கிறான். சிவராமன் அங்கு காலுக்கு சிகித்சை பெறும் போது கோலா என்னும் கிராம சடங்கு ஒன்று தெய்யம் பூதம் போன்ற கோலா ஆடுபவன்மேல் சாமி வருவதாகவும் ஐதீகம். ஆசி பெறுகிறார்கள். கோலா ஆடுகிறவன் குறி சொல்கிறான் . ஆசிகள் வழங்குகிறான் அங்கு எல்லோரும் கூடியிருக்க, லக்ஷ்மி, சிவராமனைப் பார்த்தாலும் தன் பயத்தைச் சொல்வதில்லை.
bettada-jeeva-03சிவராமன் லக்ஷ்யிடம் விடைபெறும் போது பேச்சு எழுகிறது. அவனிடம் லக்ஷ்மி சொல்கிறாள். நல்ல பையனாக படிப்பு முடிந்து வந்த சம்பு பின் வந்த நாட்களில் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதையும், தான் அதை யாரிடமும் சொல்லவில்லை யென்றும் தனக்கு வாழ்வளித்த கோபாலய்யர், சங்கரி தம்பதியினருக்கு வருத்தம் தர விரும்பவில்லை என்றும், அதன் காரணமாகத் தான் சம்பு காணாமல் போயிருக்கக் கூடும் என்கிறாள். நாராயணனுக்கோ சம்புவின் நடவடிக்கைகள் பிடிப்பதில்லை. கடைசியாக லக்ஷ்மியிடம் சிவராமன் தான் பம்பாயிலிருந்து வந்தவன் இல்லையென்றும் தான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவன், ஒரு காரியமாக இங்கு வந்தவன் என்றும் சொல்கிறான்.
கோபாலய்யாவுடன் பேசுக்கொண்டிருக்கும் போது சிவராமன் தான் இங்கேயே தங்கிவிடத் தோன்றுகிறது என்று சொல்கிறான். இதை கோபாலய்யாவை விளையாட்டுக்குச் சீண்டுவதற்குச் சொல்கிறான். அத்தோடு அங்கு அவர்கள் வாழும் வாழ்க்கையும் அவனுக்குப் பிடித்து போகிறது. அவர்கள் அன்பும் உபசாரமும் கண்டு ஒரு சுதந்திரப் போராளியின் மனமே இளகிப் போகிறது. கோபாலய்யருக்கு ஒரே சந்தோஷம். கோபாலய்யரின் விட்டிலேயே தங்கி விட விரும்புவதாகச் சொல்கிறான். கோபாலய்யர் அது தன் மகனுக்கு என்றும், சிவராமனுக்கு நாராயணனுக்கு செய்தது போல உனக்கும் நிலமும் வீடும் ஏற்பாடு பண்ணிவிடலாம் என்கிறார். சம்பு வந்தால் தனக்கு இங்கு இடம் இருக்காது போய்விடுமோ என்று நாராயணன் பயப்படுவானே என்று கேட்கிறான். அவனுக்கு கொடுத்தது அவனுக்குத் தான். இந்த வீடு சம்புவுக்குத் தான் என்பது போல. நாராயணனின் இரு குழந்தைகளும் வளர்ந்து அவர்கள் திருமணம் ஆகி…என்றெல்லாம் தன் பொறுப்பைப் பற்றிச் சொல்கிறார். ஆனால் இப்போ சம்பு வரணுமே, அவன் சுதந்திரம் போராட்டம் என்று அலைவதைத்தான் கண்டித்தேன் அவன் கோபித்துக்கொண்டு திரும்பாமலேயே போய்விட்டான் என்று வருந்துகிறார்..
அன்று இரவு சங்கரி சிவராமனை எழுப்பி, சம்பு தன்னிடம் கோபம் கொண்டு தான் வராமல் போய்விட்டதாகவும் அவனைப் பார்த்தால் அவனுக்காக வைத்திருக்கும் நகைகளை அவனிடம் கொடுக்க வேண்டும் என்றும் சொல்கிறாள். சிவராமன் மறுத்து விடுகிறான். “சரி அவன் வராவிட்டால் போகட்டும். அவனிஷ்டம். ஆனால் எங்கிருந்தாலும் சுகமாக இருக்கட்டும்” அவனைப் பார்த்தால் அவனிடம் இதைச் சொல்” என்று சொல்லி தன்னைச் சமாதானப் படுத்திக்கொள்கிறாள். பின் சங்கரி சிவராமனிடம் சம்புவின் போட்டோ ஒன்று பழையதைத் தேடி எடுத்துக் காட்டுகிறாள். அது சிவராமன் தன்னோடு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ச,ம்புவின் போட்டோ. அவனை சிவராமனுக்குத் தெரியும் இப்படி ஒவ்வொருவரும் சம்பு கிராமம் திரும்பாமல் காணாமல் போனதற்கு தாங்கள் சம்பந்தப் படும் ஒரு காரணத்தை சொல்கிறார்கள். இப்படியே அவர்கள் காலம் கழிகிறது. அவர்களது அமைதியான வாழ்வும் ஒருவருக்கொருவர் சார்ந்து வாழ்வதும், அந்த மலை சூழ் பிராந்தியத்தில் அதிக ஆசைகள் எதையும் வளர்த்துக்கொள்ளாமல் வாழ்ந்தும் கவலைக்கும் வேதனைக்கும் ஏதாவது ஒன்று அவர்கள் உள்ளத்தில் புதைந்து வருத்துகிறது.
கோபாலய்யா ஒரு நாள் சங்கரியின் துணிகளை கொடியில் உலர்த்திக் கொண்டிருக்கும் போது, சங்கரி பார்த்து அவரைக் கோபித்துக் கொள்கிறாள். உங்களை யார் இந்த வேலையெல்லாம் செய்யச் சொன்னது? என்று. “அதற்கு கோபாலய்யா, “ நான் உன்க்கு என்ன செய்திருக்கிறேன். இது வரை உனக்கு ஏதும் நகை புடவை என்று வாங்கிக் கொடுத்திருக்கிறேனா? என்று மாய்ந்து போகிறார். அது அவர்களது அந்தரங்க கணங்கள். “ தெய்வத்திடம் ஒரே ஒரு வேண்டுகோள் என்னது. நீயோ நானோ தனித்திருக்கக் கூடாது. அதை நீயும் தாங்க முடியாது, என்னாலும் தாங்க முடியாது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சங்கரி, “ஏன் அப்படியெல்லாம் நினைக்கணும், அதைப் பத்தியே நினைப்பு வரக்கூடாது. இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நாராயணனின் குழந்தைகள் வளர்வதைப் பார்க்கவேண்டாமா, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்கப் போவது யார்? நாம் தானே……..” என்று நீள்கிறது அவள் நினைப்பும் பேச்சும்.
மிக உன்னதமான அனுபவம் தரும் படம். அமைதியான அழகும் மகிழ்ச்சியும் பொங்கச் செய்யும் மலைகள் கிராமங்கள் அவை சார்ந்த வாழ்க்கை. சாதாரண எளிய அன்றாட வாழ்க்கை. அந்த சாதாரணத்திலும் பெரிய ஆசைகள் இல்லை எனினும் மனதை அலைக்கழிக்கும் வருத்தங்கள். அதையும் மீறி வாழும் மன உறுதி.
இந்த சாதாரணத்தை அதன் அழகிலும் சாந்தத்திலும் அடக்கமாக சித்தரித்து விடும் தத்தாத்ரேயரின் கோபாலய்யா. அவர் மனைவியாக நம் முன் ஒரு சித்திரத்தை வெகு அநாயாசமாக தந்துவிடும், அனேகமாக அவர் பெயர் ராமேஸ்வரிவர்மாவாக இருக்கவேண்டும். தத்தாத்ரேயர இயக்குனர் சேஷாத்திரியின் பிடித்தமான நடிகராக இருக்கவேண்டும். பாரத் ஸ்டோர்ஸ் என்ற படத்திலும் நடு நாயகமான ஒரு பாத்திரம் அவரது.
இப்படி சாதாரணத்வத்தை சாதாரணமாக, அடக்கமாக, ஆவேசம் இன்றி, அமைதியும் அழகும் தோன்ற உருவாக்க, ஒரு பொய்த் தோற்றம் இன்றி உருவாக்க, ஒரு திறமை வேண்டும். அது தன்னைப் பற்றி ஏதும் அலட்டிக்கொள்ளாத சேஷாத்ரியிடம் நிறையவே இருக்கிறது. அவரது படங்கள் ஏதும் நம்மவர் சொல்லும் வெற்றிப் படங்கள் அல்ல. அது அவருடைய எண்ணமும் இல்லை. தமக்குப் பிடித்தவற்றை, தமக்குப் பிடித்தவாறே எடுக்க முடிந்தால் தான் சந்தோஷப்படுவதாகச் சொல்கிறார் சேஷாத்ரி, ஆனால் அவரது படங்கள் ஏழெட்டு ஒவ்வொன்றும். பரிசு பெற்றவை. அதில் அவருக்கு சந்தோஷம். தன் முதல் படம் தன் ஊரில் வெளியாகி சில நாட்கள் ஓடின. அது பங்களூரில் ஏதோ ஒரு தியேட்டரில் வெளியானது கேட்டு பரவசப் பட்டு தன் பைக்கிலேயே பங்களூருக்கு சென்றார். அங்கு தியேட்டரில் ஒரு பெரும் க்யூ. நீண்டு எங்கேயோ சென்று மறைகிறது. கிட்டப் போய் விசாரித்தால் அது வேறு ஏதோ படத்துக்கு. இவர் படத்தைப் பற்றி அவர்கள் கேட்டதில்லை. இரண்டு தியேட்டர்கள் ஒரே இடத்தில் அடுத்தடுத்து இருந்ததன் விளைவு. இவர் படத்தை வெளியிடும் தியேட்டரில் டிக்கட் வாங்கியவர் இரண்டோ மூன்றோ பேர் தான்.
அது முதல் படத்து அனுபவம். இப்போது தொடர்ந்து அவர் படங்கள் வெளியாகின்றன. அவரும் மனம் தளராது உற்சாகத்துடன் தனக்கு விருப்பமான படங்களை இயக்குகிறார். இயக்கும் அனுபவமில்லை. ஆயினும் அவர் படங்கள் அனேகம் விருதுகள் பெறுகின்றன.
பி. சேஷாத்திரி 2000 ஆண்டிலிருந்து படங்களை இயக்கி வருகிறார். பெடாடே ஜீவா 2005-ம் ஆண்டு வெளியானது. இப்போது அவருக்கு வயது 52.
நம்மூரில், ஒரு படத்தைப் பற்றி மட்டமாகப் பேசவேண்டுமானால், வரும் விமர்சனம், “இது விருது பெறத் தான் லாயக்கு”

வெங்கட் சாமிநாதன்/20.4.2015

Series Navigationஇரைஅப்பா 2100
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *