வளவ. துரையனின் வலையில் மீன்கள்—ஒரு பார்வை

This entry is part 11 of 22 in the series 27 செப்டம்பர் 2015

தமிழுக்குக் கிடைத்த அரிய செல்வங்கள் பழம்பெரும் இலக்கியங்கள். அவற்றில் சங்க இலக்கியம், சமய இலக்கியம் எனப் பலவகை உண்டு. ஒவ்வோர் இலக்கியமும் ஒவ்வொரு கால கட்டத்தில் பாடப்பட்டதாகும். அவற்றில் முத்தொள்ளாயிரம் முக்கியமான நூலாகும்.
சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூன்று மன்னர்களையும் புகழ்ந்து பாடிய பாடல்கள் அடங்கிய தொகுப்பு முத்தொள்ளாயிரம். அதில் காதலும் உண்டு வீரமும் உண்டு. அகம், புறம் அடங்கியது. முழுதும் வெண்பாக்களால் ஆனது.
மரபிலக்கியம், சிறுகதை, புதினம், கவிதை, கட்டுரை, விமர்சனம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வமும் ஆற்றலும் மிகுந்த வளவ. துரையன் ’சங்கு’ எனும் ஒரு சிற்றிதழையும் நடத்தும் சிற்றிதழாளரும் ஆவார்.
முத்தொள்ளாயிரம் பாடல்கள் சிலவற்றின் கருத்தை, மையப்படுத்திச் சிறுகதைகளை எழுதித் தொகுத்துள்ளார். உரை எழுதுவோர் உண்டு. கதை எழுதுவோர் குறைவு. கலைஞர் மு. கருணாநிதி குறளை வைத்துக் ‘குறளோவியம்’ எழுதியதுபோல எழுதி உள்ளார்.
“முத்தொள்ளாயிரம் என்பதை மூன்று வகையினதாகிய தொள்ளாயிரம் பாடல்களை உடையது என்று பொருள் கொள்ளலாம். மூன்று வகை என்பது சேரன், சோழன், பாண்டியன் என்ற மூவேந்தரைக் குறிக்கும் பகுப்பு முறையாகும். இவ்வாறு கொண்டால் இந்நூல் மூன்றாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்டதாய் இருக்க வேண்டும். ஆனல் தற்போது நமக்கு இந்நூலில் கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து மொத்தம் நூற்று முப்பது பாடல்களே கிடைத்துள்ளன” என்று என்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மு. வரதராசன் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ தொகுப்பில் 109 பாடல்கள் என்கிறார். டாக்டர் சி. பாலசுப்பிரமணியம் தான் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ தொகுப்பில் 108 என்கிறார். எது சரி என்பது ஆராய்ச்சிக்குரியது. வரலாறு என்பது தவறாகப் பதியப்படக் கூடாது. ஆசிரியர் தவிர மற்றவர் கடவுள் வாழ்த்துக் குறித்துக் கூறவில்லை.
வளவ. துரையன் சிறுகதை எழுதுவதில் தேர்ந்தவர். பல சிறுகதைகளை எழுதி உள்ளார். மூன்று சிறுகதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார். அதனால் இத் தொகுப்பில் உள்ள கதைகளை எளிமையாக எழுதி உள்ளார். பாடல்களின் கருத்திற்கேற்ப சிறுகதைகளை எழுதியதே அவரின் சாமர்த்தியம் ஆகும். வளவ. துரையனாரின் சிந்தனையும், பாடலின் கருத்தும் ஒரே நேர்கோட்டில் ஒத்துப் போவதே வெற்றியாகும். பாடல்களைக் குறிப்பிடாமல் கதைகள் மட்டும் இருந்தாலும் தனித்து சிறுகதைகளாகும் தன்மை பெற்றவையாக விளங்குகின்றன.
முத்தொள்ளாயிரம் தவிர்த்து ஐங்குறுநூற்றில் இருந்தும் ஒரு சில பாடல்களை வைத்தும் சிறுகதைகளை எழுதிஉள்ளார். முத்தொள்ளாயிரம் கி.பி 100 முதல் கி.பி 500 வரையிலுள்ள காலத்தின் நீதி இலக்கியம் வகையைச் சேர்ந்ததாகும். ஐங்குறுநூறு கி.மு. 500 முதல் கி.பி 100 வரை காலத்தின் சங்க காலத்தைச் சேர்ந்தது ஆகும். முத்தொள்ளாயிரம் வைத்தே எழுதி இருக்கலாம். ஐங்குநூறுவை வைத்துத் தனி நூல் தந்து இருக்கலாம்.
”வலையில் மீன்கள்’தொகுப்பில் காணப்படும் முத்தொள்ளாயிரம் பாடல்கள் 1500 ஆண்டுகளுக்கு முந்தையவை. ஐங்குநூறுநூறு பாடல்கள் 2000 ஆண்டுகள் பழமையானவை. வளவ. துரையன் இப்பாடல்களை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தி உள்ளார். பழம்பாடல்களை நினைவு கூர்ந்து உள்ளார். பழைய பாடல்களை வாசிக்கத் தூண்டி உள்ளார். பாடல்களின் பொருளுக்கு விளக்கம் கூறும் வகையில் சிறுகதைகள் இல்லை என்பது ஒரு சிறப்பம்சம். பாடல்கள் அகம், புறம் என்னும் வகையினதாயிருப்பினும் சிறுகதைகளும் அதற்கேற்பப் பொருத்தமாய் உள்ளன.
கவிஞர் வளவ.துரையன் நவீனத்துவத்தில் மட்டுமன்றி மரபிலும் ஆர்வம் கொண்டவர். மரபுப் பாடல்களையும் உள்வாங்கியவர். முத்தொள்ளாயிரம் பாடல்களை உள்வாங்கியதன் விளைவே இத்தொகுப்பு உருவாகி உள்ளது. முத்தொள்ளாயிரத்தில் மூழ்கி எழுந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. “முத்தொள்ளாயிரம் நூலைப் படிக்கப் படிக்க நான் அதில் ஆழ்ந்து போனேன். அந்நூலில் உள்ள பாடல்களில் உள்ள உவமைகள், கருத்துகள் இன்றைய சமூகச் சூழ்நிலையோடு பொருந்துவது எனக்கு வியப்பாய் இருந்தது. அந்தத் தூண்டுதலில்தான் இக்கதைகள் பிறந்தன” என்று ஆசிரியர் வளவ. துரையனே எழுதியிருப்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. இதன் மூலம் பழம் இலக்கியங்களின் ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தியவர் சம காலக் கவிதைகளையும் ஆழ்ந்து வாசித்துள்ளார் என்பதற்குச் சான்றாக கவிஞர் நகுலனின் கவிதையை முன்வைத்து ‘யாரோ இவர் யாரோ’ என்னும் சிறுகதையைத் தொடங்கி உள்ளார்.
”ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்தான் என்றார்.
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவில்லை”
என்னும் நகுலனின் கவிதைக்கேற்ப ஒரு சிறுகதையை உருவாக்கி உள்ளார். ‘’ மொழி முதல்வராது என்பதைப் பெரும்பாலான நவீன எழுத்தாளர்கள் கண்டு கொள்வதே இல்லை என்று நகுலன் உட்பட அனைத்து நவீன கவிஞர்களைச் சாடவும் தவறவில்லை. மொழி முதலில் ‘ர’கரம் வராது என்பதை ‘அந்தத்தலைவனும் வாழ்க’ கதையிலும் உறுதிப்படுத்தி உள்ளார். மொழியை இலக்கணப் பிழையின்றி எழுத வேண்டும் என்பதிலும் தீர்மானமாக உள்ளார் என்பதை உணரச் செய்துள்ளார். இக்கவிதையின் சாரம்சத்தைப் ப்ரதுபலிக்கும் விதமான பாடல்களையும் தந்துள்ளார்.
“இந்திரன் என்னின் இரண்டேகண் ஏறூர்ந்த
அந்தரத்தான் என்னின் பிறையில்லை—-அந்தரத்துக்
கோழியான் என்னின் முகன் ஒன்றே கோதையை
ஆழியான் என்றுணரற் பாற்று”
அவனா இவன் இவனா அவன் என்பதையே இரண்டிலும் காண முடிகிறது. அதேபோல் 2003-ஆம் ஆண்டு தினமணி இதழில் எழுத்தாளர் பிரபஞ்சன் கூறிய “ஒரு மாணவரின் தகுதி அவரது மதிப்பெண்ணில் இல்லை” கருத்தை வைத்தும் ‘வெறுங்கூடு காவல்’ கதையை எழுதி உள்ளார்.
வலையில் மீன்கள் தொகுப்பில் 37 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தை, நீதியை, அறிவுரையைப் போதிக்கின்றன. அறத்தை வலியுறுத்துகின்றன. முத்தொள்ளாயிரப் பாடலின் மையக் கருத்தினை ஒத்துப் போகின்றன. கதையின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு கதையின் முடிவிலும் முத்தொள்ளாயிரப் பாடலை வைத்துள்ளார். வாசகருக்கும் விருந்து படைத்துள்ளார்.
வளவ. துரையன் ஒரு பள்ளி ஆசிரியர்; ஓர் இதழ் ஆசிரியர். மேலும் நூல் ஆசிரியர். கதைகளை ஓர் ஆசிரியராக எழுதியதுடன் தன்னையும் ஒரு பாத்திரமாகப் படைத்துள்ளார். கதைகளைக் கூறிக்கொண்டே வந்து முத்தொள்ளாயிரப் பாடலுடன் இணைத்துள்ளவிதம் பாராட்டுக்குரியது.
இத்தொகுப்பில் இடம் பெற்ற 37 சிறுகதைகளும் ‘சௌந்தரசுகன்’ இதழில் வெளிவந்தவையாகும். இந்த இதழின் ஆசிரியர் சௌந்தரசுகன் ஆவார். முத்தொள்ளாயிரம் பற்றிய கதைகள் மட்டுமன்றி தொடக்க காலத்தில் தன் எழுத்துகளை அதிகமாக வெளியிட்டு ஊக்கமளித்தவர் என்பதால் ‘சௌந்தரசுகனு’க்குக் காணிக்கை ஆக்கி உள்ளார். தற்போது சுகன் உயிரோடு இல்லை.வளவ. துரையனின் வரிகள் சுகனை எண்ணிப் பார்க்கச் செய்கின்றன. சுகன் உயிரோடு இருந்தால் இன்னும் பல வளவ. துரையன்கள் இலக்கிய உலகிற்குக் கிடைத்திருப்பர். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது எனினும் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
வலையில் மீன்கள் தொகுப்பு வாச்கர்களின் சிறு கதைகளின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது. முத்தொள்ளாயிரம் போன்ற பழம் மரபுப் பாடல்களையும் வாசிக்கும் ஆவலையும் தூண்டுகிறது. வளவ. துரையன் மீதான மதிப்பையும் கூட்டுகிறது. அவரின் தொகுப்பு வரிசையில் ‘வலயில் மீன்கள்’ தனித்து விளங்குகிறது. வலையில் மீன்களை மட்டுமல்ல வாசகர்களையும் சிக்கச் செய்துள்ளார். ”அன்றைய அகத்துறைப் பாடல்களை இன்றைய புறச் சூழல்களுடன் புனைந்து படைப்பது ஒரு சவாலாகத்தான் இருந்தது. நான் அதில் வெற்றி பெற்று இருப்பதாகவே நம்புகிறேன்” என்று கூறிய வளவ. துரையன் அவர்கள் வெற்றி. துரையன் ஆகியுள்ளார். அவரின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள்.
[ வலையில் மீன்கள்—வளவ. துரையன். வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்; 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 600 011. விலை : ரூ 100ச்ச்ச்ச்
==========================================================================================================================================================================

Series Navigationவிலை போகும் நம்பிக்கைபூனைகள்
author

பொன்.குமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *