விலை போகும் நம்பிக்கை

This entry is part 10 of 22 in the series 27 செப்டம்பர் 2015

அன்று காலை முதலே அருளினிக்குக் காலும் ஓடல கையும் ஓடல.சம்பாத்தியத்தின்
இறுதி நாளை எட்டிவிட்டோமே என்ற எண்ணம் நெஞ்சுக் குழியில் ஆழமாக இறங்கி
அவரை நிதானமிழக்கச் செய்துக்கொண்டிருந்தது.
மதியம் உணவு வேளை நெருங்கியும் அந்த எண்ணம் தனியாமல் ஆர்பரிக்கும் கடல்
அலையாய் மனதில் அலைமோதியது.இன்னும் அரை நாள் பொழுது மட்டுமே எஞ்சியுள்ளது
என்று கவலை நெற்றிப் பொட்டில் தெரித்துக் கொண்டிருந்த வலி விலைவாசி போல
ஏறிக்கொண்டிருந்தது. உற்சாகத்தை தொலைத்தவராய்த் தளர்ந்த நடையோடு
தோழியுடன் உணவு விடுதிக்குச் செல்கிறார் அருளினி.
“இருபது வயசில இந்த கம்பனியில நீங்க வேலைக்குச் சேர்ந்திங்க அக்கா….”
“ஆமா….வள்ளி. இந்தக் கம்பெனியில நாற்பது வருசமா வேலை
செஞ்சிட்டேன்.பள்ளிப் படிப்பு முடிஞ்சக் கையோட குமரியா வேலையில சேர்ந்த
நான்,இன்றைக்கு அறுபது வயசு ஆன கிழவியா இந்தக் கம்பெனியே விட்டு
வீட்டுக்குப் போகப்போறேன்” மனதுக்குள் மலையாய்க் கூடு கட்டியிருந்த
கவலைகள் எல்லாம் ஒரு நொடியில் பறந்தது போல் வாய்விட்டு சிரிக்கிறார்
அருளினி.
அருளினியுடன் மதிய உணவருந்தி கொண்டிருந்த வள்ளி அருளினி நகைச்சுவையுடன்
பேசுவதைக் கேட்டு கடகட வென்று சிரிக்கிறாள்.அந்த தொழிற்சாலை உணவகத்தில்
பல வருடங்களாக அவர்கள் இருவரும் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ணும்
வழக்கத்தைக் கொண்டவர்கள்.அவர்கள் இருவருக்குமிடையில் ஐந்து வயது
வித்தியாசம். வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் அருளினியைத் தம் உடன் பிறந்த
அக்காவாக எண்ணிப் பழகி வருபவள் வள்ளி.
“அக்கா….நாளையிலிருந்து அதிகாலையிலேயே படுக்கையைவிட்டு நீங்க
அரக்கப்பரக்க எழ வேண்டிய அவசியமில்ல. ஆறவமர அமைதியா எழலாம். உங்களுக்கு
ரொம்ப விருப்பமான நாசிலெமாவை ருசிச்சி…ருசிச்சிச் சாப்பிடலாம்…..!”
“அட….நீ போ வள்ளி…..! என்ன இருந்தாலும்…..நாளு பேரோட இப்படி ஒன்னா
உட்கார்ந்து கலகலப்பா பேசிச் சிரிச்சு, விதவிதமான உணவுகள ஒவ்வொரு நாளும்
சாப்பிடுறது மகிழ்ச்சி இருக்கே…. அந்த மகிழ்ச்சி வீட்டுலத் தன்னந்தனியா
சாப்பிடும் போது கிடைக்குமா?” கவலையுடன் கூறுகிறார் அருளினி.
“ம்….நீங்க சொல்றது உண்மைதான்…….!அதற்காக அறுபது வயச தாண்டியும்
இதே கம்பெனியிலே நீங்க வேலை செய்யலாமுனு சொல்ல வர்ரிங்களா….?” எதையும்
மறைத்துப் பேசும் வழக்கம் இல்லாத வள்ளி தம் மனதில் பட்டதைப் பட்டனக்
கூறுகிறாள்.
“இது நாள் வரையிலும் மாடா உழைச்சுத் துரும்பா போனது போதுமுனு
நினைக்கிறேன் வள்ளி…..! கடவுள் புண்ணியத்தால, உடல் ஆரோக்கியத்தோட
இதுநாள் வரையிலும் எந்தப் பிரச்சனையுமில்லாம வேலை செஞ்சது போதும்….!
இருக்கிற நல்ல பேரோட சோறு போட்ட கம்பெனியவிட்டுப் போயிடுறதுதான்
நல்லதுன்னு நினைக்கிறேன் வள்ளி!” உணர்ச்சியுடன் அருளினி கூறுவதை
அமைதியுடன் கேட்கிறாள் வள்ளி.
“உங்க நினைப்பு சரியானது.அக்கா….நான் கேட்கிறேனு என்னை தப்பா
நினைக்காதிங்க” தயங்கினாள் வள்ளி.
“இதுதானே வேண்டாங்கிறது.உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா
வள்ளி…..?அக்கா தவறா நினைக்க மாட்டேன்…..! நீ….கேட்க நினைக்கிறதத்
தாராளமா கேளு…..! வள்ளி நாம இரண்டு பேரும் ஒரு வயிற்றுலப்
பிறக்கலன்னாலும் நாம இரண்டு பேரும் உடன் பிறக்காத அக்கா தங்கச்சிங்கதான்”
“அப்படிச் சொல்லுங்க அக்கா…..இப்பதான் என் மனசே நிறைஞ்சிருக்கு.
எனக்குக் கூடப்பிறந்த அக்கா இல்லாதக் குறையத் தீர்த்து வைக்க வந்த
புண்ணியவதியாச்சே நீங்க. அக்கா….உங்க பணி ஓய்வுக்குப் பிறகு ….நீங்க
யாரோடத் தங்கப்போறீங்க….?”
“என்ன வள்ளி நீ தெரியாமத்தான் கேட்கிறியா….? நான் ஆசையோடு வளர்த்து
வர்ர அக்காள் மகள் சீதனாவோடுதான் தங்கப் போறேன்!” மகிழ்ச்சியோடு
கூறுகிறார் அருளினி.
இருபது ஆண்டுகளுக்கு முன்,அக்காளும் அவர் கணவரும் மோட்டார் விபத்தில்
காலமான பிறகு,அனாதையாகிப்போன சீதனாவை வளர்க்கும் பொறுப்பினை அருளினி
ஏற்றுக் கொண்டார்.சீதனாவுக்கு அப்போது ஐந்து வயது இருக்கும்.இந்த
உலகத்துல அவருக்கிருந்த ஒரு இரத்த உறவு அக்காதான்.அவரும் விபத்துல
இறந்த போது அருளினி நொறுங்கிப் போனார். வாழ்வு இருண்டு போனதாக எண்ணினார்.
தனது அக்காளுக்குச் செய்யும் கைமாறாக எண்ணி அன்று முதல் சீதனாவைப்
பாசத்தைக் கொட்டி வளர்க்கத் தொடங்கினார். சீதனாதான் அருளினிக்கு
உலகமாகிவிட்டது. தனது திருமணத்தைக்கூட அவர் நினைத்துப் பார்க்காமல்
கண்ணும் கருத்துமாக சீதனாவை வளர்ப்பதிலேயே காலத்தைக் கரையவிட்ட மகராசி
அருளினி அக்கானு வள்ளிதான் பெருமையாகப் பேசுவாள்.
சீதனா பல்கலைக்கழத்துலப் பட்டம் பெற்ற காட்சியை அவளது பெற்றோர்கள்
பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையேனு என்ற கவலையினால் அருளினி
துயரமடைந்தார். எந்தக் குறையுமில்லாமல்,கல்விக்கான செலவுகளையெல்லாம் தானே
ஏற்றுக்கொண்டு,சீதனாவுக்கு எந்த கல்விக்கடன்களையும் வைக்காமல்
பட்டதாரியாக உயர்த்திக்காட்டியதில் மகிழ்ச்சி அடைந்தார்.தற்போது தனியார்
நிறுவனமொன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறாள்; கைநிறைய வருமானம்.
“அக்கா….உங்க நல்ல மனசுக்கு….எந்த குறையுமில்லாம கடவுள் நல்லபடியா
வைச்சிருப்பாரு. நீங்க நினைச்ச மாதிரி சீதனாவோடு சந்தோசமா
இருங்கக்கா.கடைசி காலம் வரை அன்போடு வளர்த்த சீதனா உங்களக் கண் கலங்காமக்
காப்பாற்றுவா….!” வள்ளி உணர்சியுடன் கூறுகிறாள்.
“நான் வணங்கும் ஆத்தா, உன்னோட உருவத்துல நேர்ல வந்து சொன்ன அருள் வாக்கு
போல இருக்கு….! உன்னோட வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் வள்ளி!” அருள்
வந்தவர் போல் ஒரு கணம் சிலையாகிப் போகிறார் அருளினி.மறுகணம் வள்ளியின்
நெற்றியில் முத்தமிடுகிறார்.
ஒன்றாய் அமர்ந்து இருவரும் மதிய உணவு உண்ணும் இறுதி நாள் அதுவென்று
இருவர் மனதிலும் உதித்திருக்க வேண்டும்.இருவர் முகத்திலும் ஒருவித
இறுக்கம் பளிச்சிடவே செய்தது. எனினும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல்
இருவரும் அமைதியுடன் உணவருந்தி கொண்டிருக்கின்றனர்.அணையை உடைத்துக்
கொண்டு பாயவிருக்கும் நீரைப்போல் இருவர் விழியோரங்களிலும் கண்ணீர்
ததும்பி நிற்கிறது.
அப்போது,கண்டினில் ஒலிபெருக்கி ஒலிக்கிறது.அங்கு உணவருந்தி கொண்டிருந்த
அனைவரும் இடம் பெறப்போகும் அறிவிப்பைக் கவனமுடன்
கேட்கின்றனர்.அந்நிறுவனத்தின் நிர்வாகி டத்தோ செல்வாதான் ஆங்கிலத்திலும்
தமிழிலும் பேசினார்.
“இன்று, வேலையிலிருந்து ஓய்வு பெறும் அருளினி அவர்கள், இந்த தொழிற்சாலை
தொடங்கிய போது வேலையில் சேர்ந்தவர்.அவர் கடந்த நாற்பது வருடங்களாக
நேர்மையாகப் பணியாற்றிய அவருக்கு நிர்வாகம் பாராட்டும் நன்றியும்
தெரிவித்துக் கொள்கிறது. அதே வேளை அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டும்
வகையில் அவருக்கு நினைவு பரிசும் பத்தாயிரம் ரிங்கிட்டு சன்மானமும்
வழங்கப்படுகிறது” இந்த அறிவிப்பைக் கேட்டு உணவருந்தி கொண்டிருந்த பலர்
உணர்ச்சி பொங்க அருளினிக்குப் பாராட்டுத்தெரிவிக்கின்றனர்.
“அக்கா….கம்பெனியே உங்க சேவைக்கு அங்கிகாரம் கொடுத்திருக்கு.
உங்களுக்கு என் வாழ்த்துகள்” அருளினியைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில்
முத்தமிடுகிறாள் வள்ளி.அருளினியைச்சுற்றி சிறு கூட்டமே கூடிவிடுகிறது.
இந்நிகழ்வை அருளினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. பலரது வாழ்த்துகள்
திடுதிப்புனு வந்து சேர்ந்ததில் அவர் திக்குமுக்காடிப் போகிறார்.
நிர்வாகம் தம்மை பெருமைப் படுத்தியது கண்டு அருளினி ஆனந்தக் கண்ணீர்
வடிக்கிறார்.பின்னர் விசும்பத்தொடங்குகிறார்.
“அக்கா….ஏன் அழுவிரீங்க….?” வள்ளி ஆறுதல் படுத்துகிறாள்.
“ஒரு பெரிய குடும்பத்தை விட்டுப் பிரிந்து,நாளை முதல் வீட்டில இருக்க
வேண்டுமே என்று நினைக்கும் போதே கவலையா இருக்கு வள்ளி….”அருளினிக்குத்
துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்கிறது. கண்களில் கட்டி நின்ற கண்ணீரைச்
சிரமத்தோடு அடக்கிக் கொள்கிறார்.
“அக்கா….நீங்க நினைச்சா கொமூட்டர்ல ஏறி அரை மணி நேரத்தில கம்பெனியில
எங்கள வந்துப் பார்க்கலாம்.நினைச்ச மாத்திரத்துல கைபேசியில எங்களோடு
பேசலாம்,வாட்சாப்பு மூலமா எங்களுக்கு விபரம் சொல்லலாம்.எதுக்கு வீணா
மனசப்போட்டு குழப்பிக்கிறீங்க…..நான் இருக்கேன் தினமும் உங்களோட
பேசரேன்,கண்ணீரைத் தொடைங்க கவலைய விடுங்க….வாழ்க்கை மகிழ்ச்சியா
வாழத்தான்…” குட்டி தன்னம்பிக்கை உரையை ஆற்றி முடிக்கிறாள் வள்ளி.
அவளது உரையைக்கேட்டு அருளினி அக்கா முகம் மலர்ந்தது வள்ளிக்குப்
பெருமையாகைப் போகிறது.
மாலையில் வேலை முடிந்ததற்கான சைரன் ஒலி வேகமாக
ஒலிக்கிறது.நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தத்தம் இல்லம் நோக்கி மிகுந்த
ஆவலுடன் புறப்படுகின்றனர்.ஆனால்,அருளினி மட்டும் தளர்ந்த நடையுடன் நடந்து
செல்கிறார்.கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தம் சொந்த நிறுவனமாய் நினைத்து
இனிதாய்ப் பணிபுரிந்த நிறுவனத்தைவிட்டு இன்றுடன் விடை பெற்றுச் செல்வதை
எண்ணும் போது அவரையும் அறியாமல் மனம் சஞ்சலம் அடைகிறது.
இதுநாள் வரையிலும் தாம் பணியாற்றிய தொழிற்சாலையில் நாளை முதல் அதன்
வாசலில் கூட கால் வைக்க முடியாது என்ற எண்ணம் மனதில் துளிர்த்த போது
கவலையின் வாட்டம் முகத்தில் வட்டமிடுகிறது.அந்த நிறுவனத்துக்கும்
தனக்குமுள்ள உறவு இன்று முதல் முற்றாய் அறுபடுவதை எண்ணிப்
பார்க்கிறார்.தாம் நேசித்த வேலையகத்தை விட்டுப் பிரிவது அவருக்குப்
பெரும் துயரமாக இருந்தது. அவரையும் மீறி கண்களில் கண்ணீர்.
மனச்சுமையோடு வீடு செல்ல அருளினி சாலையைக் கடக்கிறார். அவரோடு பலரும்
சாலையைக் கடக்கின்றனர்.எல்லாரும் சாலையை விரைவாக கடக்கும்
வேளையில்,அருளனி மட்டும் சாலையை மெதுவாக கடக்கிறார்.
“ஓய்….வீட்டுல சொல்லிட்டு வந்தாச்சா……?” மோட்டோரில் வேகமாக வந்த
இளைஞன் ஒருவன் அருளினியை நோக்கிக் காட்டுக் கத்தாகக் கத்திவிட்டுப்
பறக்கிறான் முகமூடி அணிந்த அந்த இளைஞன்.
“நீங்க வாங்கக்கா…..அவன் கிடக்கிறான் அராத்தல் பிடிச்சவன்….. மெதுவா
போனாதான் என்ன? இவனெல்லாம் உருபடியா வீடு போய் சேரமாட்டானுங்க….!”
கோபத்தில் வாய்க்கு வந்தபடி கரித்துக் கொட்டினால் வள்ளி. அதர்ச்சியில்
அருளியின் உடம்பே ஆடிப்போய்விடுகிறது.அதர்ச்சியில் அவர் உடல்
நடுங்குகிறது.அருளினியை அணைத்தபடி பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க
உதவுகிறாள் வள்ளி.
பத்து நிமிட நடைக்குப் பின் கொமூட்டர் இரயில் பயணம் வழக்கம் போல்
தொடங்குகிறது.“அக்கா…வாங்க இங்க உட்காருங்க….”வள்ளி வழக்கம் போல்
இடம் பிடித்துக் கொடுக்கிறாள்.இருவரும் வசதியாக அமர்ந்து கொள்கின்றனர்.
கொமூட்டர் வசதி வந்த பிறகு அருளினிக்கு வேலைக்கு வந்து போகும் போக்கு
வரத்து சிரமமில்லாமல் போய்விட்டது.பஸ்சில் பயணிக்கும் போதெல்லாம் பட்ட
சிரமங்கள் சொல்லி மாளாது.நெரிசலில் கால் கடுக்க நின்று கொண்டு பயணம்
செய்திருக்கிறார்.இன்று குளுகுளு அறையில் நவீனமான இருக்கைகளில் அமர்ந்து
பயணம் செய்வது நிம்மதியைத் தந்தது.அரை மணி நேர பயணம் என்றாலும்
அலுப்பில்லா நிம்மதியான பயணத்தை அனுபவிக்கும் போதெல்லாம் அரசாங்கம்
மக்களுக்காக ஏற்படுத்தித் தந்ததுள்ள வசதிகளுக்காக மனதுக்குள் நன்றி
சொல்ல அருளினி ஒருநாளும் தவறுவதில்லை.
வள்ளி தனது இருப்பிடம் வந்ததும் இறங்கிக் கொள்கிறாள்.அருளினி அடுத்த சில
நிமிட துரித பயணத்துக்குப் பின் இறங்கிக் கொள்கிறார். தனது பயத்தைத்
தொடங்கும் முன்பே பயணம் செய்த கொமூட்டர் சில வினாடிக்குள் அங்கிருந்து
புறப்பட்டுவிடுகிறது. அங்கு ஒரே அமைதி நிலவுகிறது. சில நிமிடங்களில்
பயணிகள் அனைவரும் காணாமல் போய்விடுகின்றனர்.
அருளினி தம் வீட்டை நோக்கி நடக்கிறார்.ஐந்து நிமிட நேரத்தில் அருளினி
வீட்டை அடைந்துவிடுவார்.வீட்டை அடைவதற்குள் அருளியின் உள்ளத்தில் பல்வேறு
சிந்தனை மலர்கள் பூக்கின்றன.தம்மை வரவேற்க சீதனா வாசலில் விழி வைத்துக்
காத்துக் கொண்டிருப்பாள்.அவள் இருக்கும் வரையில் தமக்கு என்ன கவலை.
தமக்குக் கிடைத்த பரிசுகளை அவளிடம் கொடுத்தாள் மிகவும் மகிழ்வாள்.
சிந்தனை முடிவதற்குள் வீட்டை அடைகிறார்.அவர் கண்கள் வாசலை நோக்கிப்
பாய்கிறது.தாம் ஆவலோடு எதிர்பார்த்த சீதனா அங்கு இல்லாதது கண்டு
வியப்படைகிறார்.உள்ளே ஏதும் வேலையாக இருப்பாள்.தம்மை ஆசுவாசப்படுத்திக்
கொண்டு வாசலை அடைகிறார்.வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது. வேலை முடிந்து
இன்னும் வீடு வரவில்லையோ? இது நாள் வரையிலும் ஒரு நாள் கூட அவள் தாமதமாக
வீடு திரும்பியதில்லையே? இன்று அவளுக்கு என்ன ஆச்சு? அவருக்கு ஒரே
குழப்பமாக இருந்தது.
பூட்டைத்திறந்து வீட்டிற்குள் செல்கிறார்.தனது வாசிப்பிற்காக வரவேற்பு
அறையில் போடப்பட்டிருந்த சிறிய மேசை மீது வெள்ளைத் தாள் ஒன்று
வைக்கப்பட்டிருந்தது.அருளினி அதை எடுத்து பதற்றமுடன் வாசிக்கிறார்.
“சித்தி…. நான் விரும்பியவரோடு வாழ்வதற்காக வெளிநாடு
செல்கிறேன்…..இனி என்னைத் தேடவேண்டாம், கூட் பை ! ”

முற்றும்

Series Navigationகடலோடி கழுகுவளவ. துரையனின் வலையில் மீன்கள்—ஒரு பார்வை
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *