தொடுவானம் 93. விடுதி விழா.

This entry is part 3 of 14 in the series 8 நவம்பர் 2015
 Untitled-14

மராட்டிய இளமங்கை லலிதா எனக்கு விடுதி நாளன்று விருந்தாளி! உண்மையில் பெரும் உவகை கொண்டேன். அவளை நான் பிரேம் குமாருடன் பகிர்ந்து கொண்டால் பரவாயில்லை. என் அறையில் ஒரு மணி நேரம் இருப்பாளே. அது போதும்.

அன்று மாலை ஆறு மணி போல் பிரேம் குமாரும் நானும் பெண்கள் விடுதி நோக்கி நடையிட்டோம்.என் கையில் அழைப்பிதழ் அட்டை இருந்தது.

பெண்கள் விடுதி கல்லூரி கட்டிடத்துடன் சேர்ந்தாற்போல் அமைந்திருந்தது. அமைப்பில் அது எங்கள் விடுதியைப்போல்தான் இருந்தது. அதன் நுழைவாயிலில் எப்போதும் ஒரு காவலாளி இருப்பான்.

அவனிடம் லலிதாவை அழைத்து வரச் சொன்னோம். அவன் விடுதிக்குள் சென்றான்.சிறிது நேரத்தில் லலிதாவுடன் திரும்பினான்.அவள் அப்போதுதான் நீராடியிருப்பாள் என்பது தெரிந்தது. புதிதாக மலர்ந்த  ரோஜா  மலர்தான் அவள்.

விடுதியைவிட்டு வெளியேறி தாழ்ந்த தோட்டம் அருகேயுள்ள கல்லூரி சிற்றயலத்தினுள் புகுந்தோம்.அங்கு மர இருக்கைகள் உள்ளன. அங்கு அமர்ந்துகொண்டோம். விடுதி நாள் விழா பற்றி கூறிவிட்டு அழைப்பிதழை  நீட்டினோம். அதை அவள் பெற்றுக்கொண்டாள் .

” மிக்க நன்றி. நீங்கள் வருவீர்கள் என்பதும் தெரியும்.நான் காத்திருந்தேன்.” புதிர் போட்டாள் .

” அப்படியா? அது எப்படி உனக்கு தெரிந்தது? ” வியப்புடன் கேட்டான் பிரேம் குமார்.

” நேற்று இரவு நீங்கள் அங்கே கூட்டம் போட்டு பேசிய அதே நேரத்தில் நாங்களும் இங்கு கூட்டம் போட்டோம். எங்களில்  பதினைந்து பேர்களுக்கு நிச்சயம் ஆகிவிட்டது. விடுபட்டவர்கள் பத்து பேர்கள். அவர்களில் நானும் ஒருத்தி. எங்களுக்கு இரண்டு பேர்கள் கிடைப்பார்கள் என்பது தெரியும். அவர்கள் யார் யார் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தோம். உங்களுடைய கூட்டம் முடிந்தவுடனே கணேஷ் இங்கு அல்கா சின்ஹாவுக்கு போன் செய்தான். ” அவள் விளக்கினாள்

” நாங்கள் முறையாக உன்னை அழைக்க வந்துள்ளோம். கட்டாயம் வரவும். ” நான் மீண்டும் அழைப்பு விடுத்தேன்.

” மிக்க நன்றி. கட்டாயம் வருவேன். ”  அவள் சம்மதம் தந்தாள்.

Untitled-20

தேவை ஒரு பாவை பிரச்னை தீர்ந்துவிட்டது.

சம்ருதியும் நானும் பேருந்து ஏறி வேலூர் கடைத் தெருவுக்குச் சென்றோம். காதி சிறப்பு அங்காடியில் அழகான படுக்கை விரிப்புகள்  வாங்கினோம். அறையில் வைக்க பூ ஜாடி வாங்கினோம். புதிய சட்டைகள்கூட வாங்கினோம். முன்பே அறையில் கோட் வைத்துள்ளோம்.  அன்று கட்டாயம் கோட் அணிந்துகொள்ளவேண்டும். விருந்தினருக்கு பிஸ்கட், கேக், முதலிய சில தின்பண்டங்களையும் வாங்கிக்கொண்டோம்.

விடுதி நாள் வந்தது. பரபரப்புடன் செயல்பட்டோம்.

அன்று காலையில் அறையை சுத்தம் செய்தோம். நாங்கள் நான்கு பேர்கள். அதனால் சிரமம் இல்லாமல் கொஞ்ச நேரத்தில் அதை செய்து முடித்தோம். அதற்கு சுலபமான வழி இருந்தது. அவரவர் பகுதியில் கிடந்த அனைத்து பொருட்களையும் கட்டிலின் அடியில் தள்ளிவிட்டு, படுக்கை விரிப்பால் அழகாக மூடிவிட்டோம்.அறை கொஞ்ச நேரத்தில் பளிச்சென்று மாறிவிட்டது! நிச்சயமாக எங்கள் அறைக்குள் வரப்போகும் பெண் விருந்தாளிகள் நாங்கள் அறையை வைத்திருக்கும் அழகைக் கண்டு வியந்துபோவார்கள்!

கணேஷ் அல்கா சின்ஹாவை அழைத்திருந்தான். சம்ருதி , தாமஸ் மாமன், நான் ஆகிய மூவரும் ஆளுக்கு ஒரு பெண்ணை ஒரு மணி நேரம் அறையில் வைத்திருப்போம். மொத்தம் நான்கு பெண்கள் வருகை தருவார்கள்.நாங்கள் நால்வரும்  அந்த   பூச்செண்டு ஜாடியில் பூக்கள் வைத்து அறையின் நடுவில் வைத்தோம். கேக், மிக்சர், பகோடா, பிஸ்கட் போன்றவற்றை அவரவர் மேசையில் வைத்துக்கொண்டோம்.

அன்று சனிக்கிழமை. காலை வகுப்புகள்தான். மதிய உணவுக்குப்பின் கடைசி நேர ஆயத்தங்களில் ஈடுபட்டோம். கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் முகம் களையுடன் இருக்கும். என்பதால் நால்வரும் படுத்துத் தூங்கினோம். அதுதான் சாக்கு என்று சம்ருதி நன்றாகத் தூங்கிவிட்டான்.அவனை எழுப்புவது சிரமமானது.
குறித்த நேரத்தில் எழுந்து உற்சாகத்துடன் புறப்பட்டோம். எல்லாருமே டை கோட்டு அணிந்து ஜம்மென்று இருந்தோம்.

அனைவரும் கீழே உணவகம் முன் கூடினோம். மண் வீதியில் நடந்து பெண்கள் விடுதி நோக்கிச் சென்றோம்.

Untitled-23(1)

பெண்கள் விடுதியின் வெளியில் அனைத்து வகுப்பு மாணவிகளும்  காத்திருந்தனர். பலரை பார்த்தமாத்திரத்தில் அடையாளம் தெரியவில்லை! அவ்வளவு அழகான அலங்காரம்!  பெண்களுக்கு  மட்டுமே ஒரு சிறப்பு உள்ளது. அலங்கரித்துவிட்டால் ஆளே மாறிப்போகிறார்கள்! குறிப்பாக மணப் பெண்கள்  அபாரமாக அலங்காரம் செய்வதுண்டு. பெண்களுக்கு கூந்தலிலிருந்து கால்கள் வரை நிறையவே அலங்காரம் செய்யலாம். அவர்களுக்கு விதவிதமான அலங்கார ஆபரணப் பொருள்களும் உள்ளன.

என் வகுப்பு மாணவிகள் அவர்களின் மாநிலங்களின் கலாச்சாரத்துக்கு ஒப்ப ஆடைகள் அணிந்திருந்தனர். கேரளத்து பெண்கள் பட்டுப் புடவைகளை அணிந்துருந்த விதம் தனி அழகுதான். ஆந்திரப் பெண்  நிர்மலா அவர்கள் பாணியில் சேலை உடுத்தியிருந்தாள். வட நாட்டுப் பெண்கள் பஞ்சாபி உடையில் இந்தி நடிகைகள் போன்று கவர்ச்சியாகக் காணப்பட்டனர்.

அனைவருமே ஒரு பசுமையான  சோலையில் காட்சி தரும் வண்ண மயில்கள் போன்றிருந்தனர்.

பிரேம்குமாரும் நானும் லலிதாவைத் தேடினோம். அவளும் எங்களை நோக்கி வந்தாள். கண்கவர் நீல வண்ணத்தில் சரிகை போட்ட சேலையில் அவள்  தேவதை போன்றிருந்தாள். நீண்ட கருங் கூந்தலில் மணம் கமக்கும் மல்லிகைச் சரம் அணிந்திருந்தாள். புன்னகை பூக்க எங்களிடம் வந்து சேர்ந்தாள். கை குலுக்கி அவளை அழைத்துக்கொண்டோம். மற்றவர்களும் ஜோடிகளைத் தேடி அழைத்துகொண்டனர். அனைவரும் விடுதி நோக்கி மெல்ல நடந்து சென்றோம்.

விடுதியை அடைந்தோம். முதலில் பிரேம் குமார் அறைக்குச் சென்றோம். அங்கும் நான்கு பேர்கள் தங்கியிருந்தனர். லலிதாவை அங்கு விட்டுவிட்டு என்னுடைய அறைக்குத் திரும்பினேன். மற்ற மூன்று பேர்களுடைய பெண்கள் வந்துவிட்டனர். என்னைப் பார்த்து அவர்கள் புன்னகைத்தனர்.

ஒரு மணி நேரமானதும் பிரேம் குமார் லலிதாவை என்னிடம் ஒப்படைத்துவிட்டு சென்றான். நான் அவளை இருக்கையில் அமரச் செய்தேன். நான் வைத்திருந்த தின்பண்டங்களை அவளிடம் நீட்டினேன். அவள் பகோடா எடுத்து சுவைத்தாள்.

” இன்று நீ மிகவும் அழகாக இருக்கிறாய். ” அவளைப் புகழ்ந்தேன். அவள் நாணத்துடன் தலையசைத்தாள். அவள் சிங்கப்பூர் பற்றி கேட்டாள் . நான் மகாராஷ்டிரா பற்றி கேட்டேன். அவள் என்னை அங்கு வரச்சொன்னாள். அங்கு வந்தால் அஜந்தா எல்லோரா குகைகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினாள். அஜந்தா ஓவியங்கள் என்றதும் எனக்கு கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் ஆயனர் சிற்பியின் நினைவு வந்தது.

இருவரும் ஒரு மணி நேரமும் பேசிக்கொண்டிருந்தோம். பிரேம் குமார் வந்துவிட்டான். மூவரும் வெளியேறினோம்.வெளியே எங்கு பார்த்தாலும் ஜோடிகளாகவே காணப்பட்டனர். சீனியர் மாணவிகள் அனைவரும் வந்திருந்தனர். பல்வேறு ஆடைகளில் மிகவும் கவர்ச்சியாக இருந்தனர். அது கண்கொள்ளாக் காட்சி! முதலாம் ஆண்டிலிருந்து இறுதி ஆண்டுவரை பயில்பவர்கள் அனைவரும் வந்திருந்தனர்.

விடுதியின் வெளியே விழா மேடை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  விடுதி இன்னிசைக் குழுவினர் இசைக் கருவிகளை இயக்கி இனிய நாதங்களை வழங்கினர். நாங்கள் புல் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இரவு உணவு தயார் ஆனதும் எங்களுக்கென்று குறிக்கபட்டிருந்த மேசைக்குச் சென்று அமர்ந்தோம்.

சூடான கோழி பிரியாணி கமகமத்தது. மேடையில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. விடுதி செயலாளர் அனைவரையும் வரவேற்றார். ஆடல்,  பாடல், ஓரங்க நாடகம் என கலை நிகழ்சிகள் சிறப்பாக நடந்தன.

விடுதி இசைக்குழுவினர் இனிமையான கீதங்களைத் தந்தனர். ஆனந்த் செல்லாப்பா அருமையாகப் பாடினார். எங்கள் வகுப்பில் நால்வர் ” ஹோர்மோன்கள் ” என்ற பெயரில் பாடினர். சம்ருதி மேடை ஏறி ” தோஸ்த் தோஸ்த் நா ரகா பியார் பியார் நா ரகா ” எனும் சங்கம் பாடலை சோகத்தோடு பாடி பலத்த கைத்தட்டலைப் பெற்றான். சென்ற ஆண்டுதான் ” சங்கம் ” திரைப்படம் வெளிவந்து பெரும் சாதனைப் படைத்தது. அனைவர் மனதையும் கவர்ந்த பாடல் அது.

கலை நிகழ்சிகள் முடிய இரவு மணி பத்தாகியது.

மாணவிகளை பெண்கள் விடுதிக்கு கொண்டு செல்லும் நேரம். சில ஜோடிகள் மீண்டும் அறைக்குச் சென்றனர். சில ஜோடிகள் விளையாட்டு மைதானம் சென்றனர். சிலர் ஆரணி ரோட்டில் நடந்தனர்.  அங்கெல்லாம் இருட்டாக இருக்கும். பாம்புகள் நடமாட்டமும் அதிகம். அதுபற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை! அன்று மட்டும் பெண்கள் விடுதிக்கு விடுமுறை போன்றிருந்தது!

பிரேம் குமாரும் நானும் லலிதாவை வேறு எங்கும் அழைத்துச் செல்லவில்லை.

நேராக விடுதி சென்று அவளை பத்திரமாக விட்டுவிட்டு விடைபெற்றோம்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationமருத்துவக் கட்டுரை – பக்கவாதம்பொன்னியின் செல்வன் படக்கதை – 11
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    BS says:

    தன் வரலாறு தொடர் எப்படி //இலக்கியக்கட்டுரைகல்// தலைப்பில் கீழ் இடம்பெறுகிறது? தன் வரலாறு என்பது உண்மைகளின் தொடர். இலக்கியக் கட்டுரைகள் புனைவுகளாகவும் இருக்கலாம்.

    அடிக்கடி இப்படி சிலர் எழுதுகிறார்கள்; முன்பு சீதாலட்சுமி என்பவர். வெங்கட் சுவாமிநாதன். விட்டுவிட்டு ஜோதிர்லதா கிரிஜா – தன்வரலாறு நினைவுகள் எழுதுகிறார். இவற்றை: நினைவலைகள் என்ற ஒரு புதுத்தலைப்பில் அல்லவா போட வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *