தொடுவானம் 98. குடும்பமாக கிராமத்தில்

This entry is part 4 of 14 in the series 13 டிசம்பர் 2015

சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் உறவினரிடம் எனக்கு புது சட்டைகளும் சிலுவார் துணிகளும் அனுப்புபிவைப்பார் அப்பா. நான் அணிந்தது எல்லாமே சிங்கப்பூர் துணிமணிகள்தான். கோபுர சின்னம் சீன பனியன்கள், காலுறைகள், கைக்குட்டைகள் போன்றவையும் அவற்றில் அடங்கும்.  ( அனேகமாக நான் மருத்துவம் படித்து முடிக்கும்வரை இந்த நிலை நீடித்தது. )  அவருடைய நண்பர்கள் சிலர் வேறு ஊர்களுக்குத்  திரும்பினால்கூட அவர்களிடமும் துணிமணிகள் கொடுத்தனுப்புவார்.அவற்றை வாங்கிக்கொள்ள நான் திருவெண்காடு, பெரம்பலூர், திருச்சி போன்ற ஊர்களுச்குச் சென்று வந்துள்ளேன்..அவர்களின் வீடுகளில் எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும். பெரும்பாலும் கோழிக்கறி சமைத்து விருந்து வைப்பார்கள். அப்பா சிங்கப்பூரில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியதால் அவர்மீது நல்ல மரியாதை வைத்திருந்தனர். அதோடு நான் மருத்துவம் பயில்கிறேன். அப்போது அதுவும் அபூர்வமாகவே கருதப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து திரும்புவது அப்போதெல்லாம் பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. அங்கு அவர்கள் சாதாரண வேலைதான் செய்துகொண்டிருப்பார்கள். அனால் ஊர் திரும்பும்போது பெரும் செல்வந்தர்போல் காணப்படுவர். அவர்களின் நடத்தையும் பேச்சும் வேறு விதமாகத்தான் இருக்கும். எனக்கு கொண்டு வந்துள்ள பொருள்களில் பெயர் எழுதி ஒட்டியிருப்பார் அப்பா. என்னைப்போல் இன்னும் ஒரு சிலருக்கு பொருள்கள் கொண்டுவந்திருப்பார்கள். கப்பல் பிரயாணம்தான். அதனால் பெட்டிகளுக்கு அளவில்லை. எடையும் கிடையாது. ஒரு சிலர் அதுபோன்று ஐந்து ஆறு பெட்டிகளுக்கு மேலும் கொண்டுவருவார்கள்.தெரிந்த ஒருவர் ஊர் புறப்படுகிறார் என்று தெரிந்தாலே போதும். அவருடைய உறவினரும் நண்பர்களும் ஊருக்கு சாமான்கள் கொடுத்தனுப்பத் தவறமாட்டார்கள். ஒரு முறை செல்லப்பெருமாள் மாமா ஊர் சென்றபோது அண்ணனுக்கு அப்பா ஒரு ராலீக் சைக்கள் கொடுத்தனுப்பினார். அதுதான் விலை உயர்ந்த சைக்கிள்.. அதை ஏற்றும்போதும் இறக்கும்போதும் கீறல் விழாதவண்ணம் பழைய துணியால் முழுதும் சுற்றிவிடுவோம். சக்கரங்கள் மட்டுமே துணியால் சுற்றாமல் இருக்கும்.

சிங்கபூரிலும் மலாயாவிலும் அவர்கள் மாதச் சம்பளம் வாங்கிய சாதாரண தொழிலாளர்கள்தான். அதில் மாதந்தோறும் ஊருக்கு பணம் அனுப்பிவிட்டு தங்களுடைய  செலவுக்கும் கொஞ்சம் கையில் வைத்திருப்பார்கள். சேமிப்பு என்பது கிடையாதுதான். சிலர் மாலையில் ஆங்கிலேயர்களின் பங்களாக்களில் தோட்டவேலையும் செய்து வருமானம் ஈட்டுவார்கள். அது சொற்பமாகவே இருக்கும். அதைத்தான் கைச்செலவுக்கு வைத்துக்கொள்வார்கள். அன்றாடம் கடையில் சாப்பிடுபவர்கள் பலர் இருந்தனர். ஒன்றாகக் குடியிருந்தவர்கள் சொந்தமாக சமைத்துக்கொள்வார்கள்.
ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் கப்பல் பிரயாணச் செலவுடன் கொண்டுசெல்ல வேண்டிய பொருள்களை வாங்க நிறையவே செலவாகும். ஊரில் உள்ள அத்தனை உறவினருக்கும் துணிமணிகள் வாங்கிச் செல்லவேண்டும். ஒருவருக்குக் கொடுத்துவிட்டு இன்னொருவருக்குக் கொடுக்கவில்லையெனில் பகை உண்டாகும். இவற்றையெல்லாம் சமாளிக்க கூட்டு கட்டுவார்கள். அதற்கு ஏலக் கூட்டு என்று பெயர்.  அதில் சுமார் இருபது முப்பது பேர்கள் சேர்ந்திருப்பார்கள். பெரும்பாலும் உறவினர்களும் நெருங்கிய நம்பிக்கையான நண்பர்களும் அதில் இருப்பார்கள். கூட்டை தள்ளி எடுக்கலாம். அவசரமானவர் ஒரு தொகையைக் கூறுவார். அதை விட அவசரமானவர் அதிவிட கூடுதல் தொகையைக் கூறுவார். அதுபோன்று தொகையின் அளவு கூடிக்கொண்டே போகும்.ஒரு குறிப்பிட்ட தொகை வந்ததும் வேறு யாரும் கேட்கமாட்டார்கள்.  அப்போது கடைசியாகக் கேட்டவருக்கு ஏலம்  விடப்படும். அவர் கேட்ட தொகை மொத்தத்திலிருந்து கழிக்கப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
கூட்டு எடுத்தவர் ஊருக்கு புறப்படுவார். இப்படிதான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஊர் திரும்புவர். பணம் சம்பாதித்துக்கொண்டு ஊர் திரும்பும் நோக்கத்தில்தான் வாழ்ந்தனர். சிலர் பல வருடங்களாக வெறும் பெட்டி படுக்கையுடந்தான் காலத்தைக் கழித்தனர். ஆனால் என்னதான் இப்படி தியாகம் செய்து பணம் சம்பாதித்தாலும், வாழ்கையின் முக்கியமான பருவத்தில் இவர்கள் தனிமையில் வாழ்ந்து குடும்ப வாழ்க்கையை இழந்தவர்கள்தான்.

சிங்கபூருக்கும் மலாயாவுக்கும் இந்தியர்களைப்போல்தான் சீனர்களையும் ஆங்கிலேயர்கள் குடியேற்றினர். இந்தியர்கள் ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக வாழ்ந்துவந்தனர். குடியிரிமை வழங்கும்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஆயிரக்கணக்கானோர் ஊர் திரும்பிவிட்டனர். சிங்கப்பூரில் இந்தியர்களின் மக்கள்தொகை குறைந்துபோனது. ஆனால் சீனர்கள் அப்படியில்லை. அவர்கள் கம்யூனிஸ்டு சீனாவுக்குத் திரும்ப விரும்பவில்லை. அவர்கள் இங்கேயே நிரந்தரமாகக் குடியேறிவிட்டனர். அவர்களின் ஜனத்தொகையும் உயர்ந்தது. சிங்கப்பூர் அவர்கள் வசமானது. சிங்கப்பூரில் சீனர்களுக்கு அடுத்துதான் மலாய்க்காரர்கள் அவர்களுக்கு அடுத்தவர்கள்தான்  இந்தியர்கள்..( இன்று சிங்கப்பூர் மக்கள் தொகையில் சீனர்கள் 75.9 சதவிகிதமும், மலாய்க்காரர்கள் 12.1 சதவிகிதமும், இந்தியர்கள் 9.1 சதவிகிதமும் உள்ளனர்.)

இந்த விடுமுறையில் அண்ணனுக்கும் எனக்கும் நிறைய சட்டைகள் அப்பா அனுப்பியிருந்தார். அம்மா அவற்றை வாங்கி பத்திரமாக வைத்திருந்தார். அண்ணனும் அண்ணியும் திருச்சியிலிருந்து வந்து சேர எப்படியும்   ஒரு வாரமாகலாம்.அதுவரைதான் கோகிலம் அடிக்கடி வீட்டுக்கு வந்து போக முடியும். அண்ணி வந்ததும் அவளை நிச்சயம் கண்காணிப்பார். இப்போதே இராஜகிளியின் மனதில் எதோ ஓர் உறுத்தல் இருப்பது தெரிந்தது. ” தம்பி வந்துவிட்டால் இவள் ஏன் இப்படி ஆடுகிறாள்? ” என்று அம்மாவிடம் இராஜகிளி சொன்னது என் காதில் விழுந்தது.

வழக்கமாக குளத்தங்கர அரசமரத்தடியில் அவளைச் சந்தித்தபோது அவளிடம் அதைக் கூறி கவனமாக இருக்கச் சொன்னேன். அவள் அது  பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அண்ணி வருவார் என்று சொன்னதும் அவளுடைய முகம் வாடியது.

          அண்ணன் அண்ணி வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. முதல் முறையாக கிராமத்தில் நாங்கள் ஒரு குடும்பமாக இந்த விடுமுறையைக் கழிக்கப்போகிறோம். அண்ணிக்கு கிராமம் பிடித்தால்தான் அண்ணன் இங்கு வருவார். நான் தொலைவில் இருப்பேன். தரங்கம்பாடி பக்கம்தான். அவர் குடும்பத்தில் மூத்தவர். அடிக்கடி இங்கு வந்து சென்றால் அம்மாவுக்கு துணையாக இருக்கும். தங்கைகளை போர்டிங் பள்ளியில் சேர்த்துவிடலாம். வயல்களையும் நேரம் வாய்க்கும்போது கவனித்துக்கொள்ளலாம். முக்கியமாக நடவு நடும்போதும் அறுவடையின்போதும் அண்ணன் ஊரில் இருப்பது நல்லது. இப்போது அம்மாதான் வயல்களையும் கண்காணித்துவருகிறார். அவருக்கு மதியழகனும் சண்முகமும் பண்ணையாட்களாக உதவி வருகின்றனர்.
          கிராமங்களில் பிறந்து வளர்ந்து ஓரளவு படித்த இளைஞர்கள் பட்டணங்களிலேயே குடி புகுந்துவிட்டு கிராமத்தை மறந்த நிலையில் வாழ்வது பெருகி வருகிறது. வெளியூர்களில் வேலைக்குச் சென்றாலும் பிறந்த ஊரையும் வயதான தாய் தந்தையரையும் மறந்துபோகாமல் அடிக்கடி வந்துபோவது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. எங்கள் தெருவில் சிவலிங்கம் என்பவர் வெளியூரில் தங்கி தாலுக்கா ஆபீசில் பணிபுரிகிறார். விடுமுறையில் கட்டாயமாக ஊர் வந்துவிடுகிறார். சிறு வயதில் இவர் என்னுடன்தான் அற்புதநாதர் கோவில் பள்ளியில் பயின்றவர். நான் சிங்கப்பூரில் வளர்ந்திருந்தாலும் கிராமத்தையும் விவசாயத்தையும் பெரிதும் விரும்பினேன். அண்ணனும் அப்படியே இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கு அண்ணியின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்பட்டது.

கோகிலத்தைப் பார்க்கும்போதெல்லாம் அதே பழைய  பல்லவிதான்.புதிதாக ஏதுமில்லை. ஆனால் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. என்னைப் பார்க்கவே அவளுக்கு அவ்வளவு ஆனந்தம். அன்புடன் பேசினால் அதைவிட ஆனந்தம். நீண்ட விடுமுறை என்றால் சொல்லவும் வேண்டுமா? அப்படி இருக்கையில் இடையிடையில் சாகப்போவதாகக் கூறுவதுதான் எனக்குப் புரியவில்லை. செத்துவிட்டால் இனிமேல் என்னைப் பார்க்கக்கூட முடியாது என்பது அவளுக்குத் தெரியாதா என்ன?

மாலை நேரத்தில் இராஜகிளி வந்துவிடுவார். மருத்துவப் படிப்பு பற்றி ஆர்வமுடன் கேட்பார். கையில் ஆனந்த விகடன் அல்லது குமுதம் வைத்திருப்பார். அவர் படித்த கதைகளைக் காட்டி என்னையும் படிக்கச் சொல்வார். அவர்தான் ஊர்த் தலைவி. கணவர் குப்புசாமி சித்தப்பா பஞ்சாயத்து தலைவர். அதனால் அவர்கள் வீட்டுக்கு தினசரி தினமணி பத்திரிகையும் வாரந்தோறும் ஆனந்த விகடனும் குமுதமும் வந்துவிடும். கிராம மக்கள் படிக்க விரும்பினால் அவரின் வீடு சென்று திண்ணையில் உட்கார்ந்து படிக்கலாம். இராஜகிளியின் வரவால் கோகிலம் அம்மாவுக்கு உதவுவதோடு நிறுத்திக்கொண்டாள். அவள் பால்பிள்ளை மூலமாக செய்தி அனுப்புவாள். அவன் உடன் தூண்டில்களுடன் வந்துவிடுவான்.அவள் ஆற்றங்கரையில்  புல் அறுப்பாள். நான் தூண்டில் போட்டு தக்கையைப் பார்த்துக்கொண்டே அவளிடம் பேசுவேன். பால்பிள்ளை சற்று தொலைவில் தூண்டிலுடன் காத்திருப்பான்.

அன்று சனிக்கிழமை மாலை. அண்ணனும் அண்ணியும் தவ்ர்த்தாம்பட்டு பேருந்து நிற்கும் இடத்தில காத்திருப்பதாக செய்தி வந்தது. குமராட்சிக்கு சைக்கிளில் சென்றுவந்த ஒருவர் சொன்னார். உடன் கூண்டு வண்டியில் இரண்டு உயரமான காளைகளைப் பூட்டிக்கொண்டு பால்பிள்ளை விரைந்தான்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationமூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலிசெவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸ் முறிந்து எதிர்காலத்தில் வளையமாய்ச் சுற்றலாம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *