ஐ-போன் வியாதி

This entry is part 10 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

“உள்ள வாங்க”, கண்ணாடி அணிந்து, மூன்று முறை குளித்து, ‘கம கம’வென வந்து உட்கார்ந்த மருத்துவர், தன் முதல் நோயாளியை உள்ளே அழைத்தார். ‘தாய்-சேய்’ என்று அழைக்கும்படியான இருவர் உள்ளே நுழைந்தனர். அந்தப் பெண், தயங்கித் தயங்கி நடக்க, உடன் வந்திருந்த வாலிபன் மட்டும் பயமே இல்லாமல் நுழைந்தான்.

“என்ன பிரச்சனை?” சிரித்த முகத்துடன் மருத்துவர் கேட்டார்.

“இவனுக்கு தான் பாக்கணும் டாக்டர்”, என்றார் அந்த பெண்.

“அவரு ஜாலியா வராரு. நீங்க ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க மேடம்? சொல்லுங்க என்ன பிரச்சனை?” டிப் டாப் உடையுடன் எதையும் நோண்டாமல் கைகளை தொடையின் மீது வைத்திருந்த சுந்தரிடம், டாக்டர்.

“எனக்கு பைத்தியம் எல்லாம் பிடிக்கல டாக்டர். இவங்க தான் பயந்து போய் இங்க கூட்டிகிட்டு வந்துருக்காங்க”

” அது இருக்கட்டும். உங்க பேரு என்ன?”

“சுந்தர்”

“எங்க வேல பாக்குறீங்க?”

“சொந்தமா பானர் டிசைன் செண்டர் வெச்சிருக்கேன்”

“ஓ! நல்ல வருமானம் வரும் இல்ல? மாசா மாசம் படம்; கட்சி போஸ்டர்-னு களை கட்டும் இல்ல?”

“ஆமா சார். மாசம் இருபது நிக்கும்”

“வெரி குட். இவங்க உங்க அம்மாவா?”

“ஆமா சார். எங்க அம்மா”

“சொல்லுங்க அம்மா. பையன் நல்லா தானே பேசுறான்? என்ன பிரச்சனை?”

“இவன கொஞ்சம் எழுந்து நிக்க சொல்லுங்க சார். அப்போ புரியும்”, என்றார் சுந்தரின் அம்மா. அதை கேட்டதும் மருத்துவருக்கு ஆர்வம் அதிகரித்தது.
“எழுந்து நில்லு பா கொஞ்சம்” என்றார். சுந்தரும் எழுந்தான். அப்போது தான் புரிந்தது. சுந்தர், தன் கைகளைத் தொடையின் மீது வைக்கவில்லை. அவன் முகம் மருத்துவரை நோக்கிக் கொண்டிருக்க, விரல்கள் மட்டும் ஐபோனில் இயங்கிக் கொண்டிருந்தன.

“என்ன பா இது? இடுப்புக்கு மேல பாத்தா நார்மலா இருக்க. கை மட்டும் நார்மலா இல்லையே. அப்படி என்ன தான் செஞ்சிட்டு இருக்க?”

“நான் ஒண்ணும் செய்யலியே சார்”, ‘கைகளை அசைப்பது நான் இல்லை!’ என்பதைப் போல் நின்றான்.

“இப்படி தான் சார். எப்பவும் கையில போனை வெச்சிட்டு இருக்கான். நம்ம கிட்ட பேசிகிட்டே இருப்பான்.ஆனா கை மட்டும் வேற எதோ செஞ்சிட்டு இருக்கும். கேட்டா எதுவும் இல்ல-னு சொல்றான்”, கவலையுடன் அவன் அம்மா.

“அந்த போனை கொஞ்சம் இங்க குடு பாக்கலாம்”, கை நீட்டினார் மருத்துவர்.

“எந்த போன் சார்?” கேள்வியை கேட்டுக் கொண்டே கையையும் அசைத்தான்.

“உன் கையில இருக்குதே. அது தான். குடு”

“இல்லையே. எங்க?” அவன் கேள்வி மருத்துவரை வெறுப்பேற்ற, கையிலிருந்து ஐபோனை பிடுங்கினார். உடனே,

“ஆய்..ஊய்..டாய்..” என்ற கூச்சலுடன் அறையினுள் இங்கும் அங்குமாக ஓடினான் சுந்தர். அதை பார்த்து திடுக்கிட்ட மருத்துவர்,

“என்னமா? அசையாம உக்காந்திருக்கீங்க. இப்படி குதிப்பான்னு சொல்ல வேணாமா?” என்றார்.

“இப்படித் தான் சார். போனை பிடுங்கினா கைய கடிப்பான்”, அவர் கூறுவதற்கும், சுந்தர், மருத்துவரை நெருங்குவதற்கும் சரியாய் இருந்தது. அருகில் வந்தவுடன் அமைதியாக நின்றான். அவனைப் பார்த்த மருத்துவர்,

“என்ன பா? கைய கடிசிப்பியாமே! வலிக்கும் இல்ல? ஆஆ” என்றார்.

“என்ன டாக்டர் கத்துறாரு? நல்லா தானே பேசிகிட்டு இருந்தாரு”, என்று நடந்ததை கவனித்த சுந்தரின் அம்மா, டாக்டரின் கை விரல், தன் மகனின் வாயினுள் இருப்பதை பார்த்தார்.

“டேய் விடு டா! விடு டா!” அவனை அடக்கிப் பார்த்தார். முடியாத நிலையில்,

“இப்படி தான் டாக்டர். எப்பவும் அடுத்தவங்க கைய கடிச்சிடுவான். உடனே அந்த போனை அவன் கையில குடுங்க. அது தான் ஒரே மருந்து”, என்று மருத்துவருக்கே மருத்துவம் கர்ப்பித்தார். அவரும் அதை செய்ய, பழைய படி ஒன்றுமே செய்யாததைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு, செல் போன் பொத்தானை ‘சக்கு சக்கு’ என்று அழுத்தலானான்.

“இப்படி..”, என்று ஆரம்பித்த அவன் அம்மாவை மடக்கி,

“இப்படி தான் சார். திரும்பவும் போனை குடுத்துட்டா சரியாயிடுவான். அதானே சொல்ல வரீங்க? போதும். புரியிது. போய் உக்காருங்க”, என்று இடுப்பை பிடித்துக் கொண்டே தானும் அமர்ந்தார்.

“என்ன டாக்டர்? உங்க கையில ரத்தம் வருது?” என்றான் சுந்தர்.

“இவன் உண்மையாவே லூசா? இல்ல நடிக்கிறானா?” என்று யோசித்துக் கொண்டே, சுந்தரின் பின்னால் சென்று நின்றார் மருத்துவர். அவரை அண்ணாந்து பார்த்த சுந்தர்,

“ஏன் சார் தலை கீழ நிக்கிறீங்க”, என்றான்.

“இப்போ தான் சிம்ப்டம்ஸ் தெரியிது. ஹ்ம்ம்”, என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே, அவன் கைகள் என்ன செய்கின்றன என்று பார்வையிட்டார். அதில்,

“டாக்டர் சுந்தரிடம் கேட்கிறார்: உங்க பேரு என்ன?
சுந்தர் டாக்டருக்கு பதில் அளிக்கிறான்: சுந்தர்
…” என்று தானும், அவனும் பேசியவை அனைத்தும் எழுத்து வடிவத்தில் எழுதப் பட்டிருந்தது. தான் என்ன செய்கிறோம் என்பதை வரிக்கு வரி மெசேஜ் அடிப்பது தான் அவன் வியாதி. கடைசி வரியை மருத்துவர் படித்தார்.

“சுந்தர் டாக்டரிடம் கேட்கிறான்: ஏன் சார் தலை கீழா நிக்கிறீங்க?
டாக்டர் சுந்தரிடம் ஒன்றும் சொல்ல வில்லை. பேந்த பேந்த முழுக்கிறார்”, என்று இருந்தது.
“நம்ம முழி அவ்வளவு மோசமாவா இருக்கு?” என்ற யோசனையுடன் தாடியை சொறிந்துக் கொண்டே திரும்பவும் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தார்.

“இப்படி தான் சார். கை ஒண்ணு செய்யும். வாய் ஒண்ணுத்த பேசும். இப்படி தான் எப்பவும்”, என்று தலையை தொங்கப் போட்டார் அம்மா.

“ஷப்பா..இவன் ஐபோன் பைத்தியம். இவங்க ‘இப்படி தான் சார்’ பைத்தியம் போல இருக்கே. புதுசு புதுசா வியாதி வந்தா நான் என்ன செய்யிறது ஆண்டவா?” முணுமுணுத்துவிட்டு,

“இப்படி எவ்ளோ நாளா இருக்கு?”

“இப்படி தன் சார் ஒரு ரெண்டு வருஷமா”, என்றார் அம்மா.

“ஆரம்பத்துலையே கூட்டிகிட்டு வரவேண்டியது தானே? இப்போ வியாதி முத்தின பிறகு என்ன செய்ய முடியும்?”

“கொஞ்ச நாளா தான் கொஞ்சம் கடுமையா நடந்துக்கிறான். கொஞ்சம் நல்லா தான் இருந்தான். மருந்து கொஞ்சம் சாப்பிட்டான்னா, கொஞ்சம் கொஞ்சமா சரியாயிடுவான்”, என்று சுந்தரின் முடியை கோதிவிட்டார் அவன் அம்மா. இருவரும் பாசத்தை பொழிய, மருத்துவர், மறுபடியும் பேந்த பேந்த விழித்தார்.

இப்படித் தான்-ல இருந்து, கொஞ்சத்துக்கு மாறிட்டாங்க போல. இது சரியா வராது”, முடிவெடுத்த பின்,

“நர்ஸ். இங்க கொஞ்சம் வாங்க”, அழைத்துவிட்டு,

“நான் கொஞ்சம் மருந்து எழுதி கொடுக்குறேன். அத சாப்டா சரியாயிடும். நர்ஸ் கூப்பிடுற எடத்துக்கு போங்க. ஊசி போடுவாங்க. அம்மா, உங்க டென்ஷன் குறைக்கவும் ஊசி போடச் சொல்றேன். போட்டுக்கணும். என்ன சரியா?”, என்றார். அவர்களும் தலை ஆட்டினர்.

“இவங்க ரெண்டு பேர் மேலயும் எனக்கு சந்தேகமா இருக்கு. பேசாம மயக்க ஊசி போட்டு டெஸ்ட் பண்ணு”, நர்ஸ் காதுகளில் முணுமுணுத்துவிட்டு, இருவரையும் வெளியேறச் சொன்னார். கடைசியாக,

“தம்பி கொஞ்சம் நில்லு”, என்று சுந்தரை நிறுத்திவிட்டு, அவன் கைகள் என்ன எழுதுகின்றன என்று பார்த்தார்.
“டாக்டர் கிஸ்ஸிங் நர்ஸ்”, என்று இருந்தது.

“இன்னும் கொஞ்ச நேரம் இங்க இவன் இருந்தான்-னா எனக்கு குடும்பமே இல்லாம செஞ்சிடுவான்”, என்ற யோசனைக்குப் பின், இதை கூறிவிட்டு,

“போய்டுவா தம்பி. பத்திரம்”, அவ்விருவரையும் அனுப்பிவைத்தார். அடுத்து வந்த நோயாளிகளை கவனிப்பதில் அவர் கவனம் சென்றது.

சில மணி நேரம் கழித்து..

“டாக்டர். டாக்டர். சீரியஸ் “, என்று அந்த நர்ஸ் சொல்ல, இருக்கையிலிருந்து எழுந்து ஓடினார். நோயாளிகள் பிரிவில் எல்லோரும் அமைதியாக அவரை நோக்கினர். பின்னால் ஓடிவரும் நர்சை பார்த்து,

“எங்க சீரியஸ்? எல்லாரும் நல்லா தானே இருக்காங்க?” என்றார்.

“கொஞ்சம் கீழ குனிஞ்சி பாருங்க டாக்டர்”, என்றார் அந்த நர்ஸ். அவர் குனிந்து உட்கார்ந்திருந்தவர்கள் கையை பார்த்தாதும் அதிர்ச்சி.

“என்னமா இது? எல்லாரும் ஒரு போனை வெச்சு தட்டிகிட்டு இருக்காங்க? அந்த பையனுக்கு வந்தது தொத்து வியாதி போல இருக்கே”, என்று பதறினார்.

“அது சரி தான் டாக்டர். ஆனா, நான் கீழ குனிஞ்சு பாக்க சொன்னது உங்க கைய”, என்றாள் நர்ஸ்.

“என் கையில என்ன?” மருத்துவர் குனிந்த போது, அவர் கையிலும் போன் இருந்தது. அவர் கையும் எதையோ தட்டிக் கொண்டு இருந்தது. அது என்ன என்று அவரும், நர்சும் படித்தனர்.

“டாக்டர் யோசிக்கிறார்: நர்ஸ் இடுப்பில் கச்சிதமான மடிப்பு”, உடனே, அவர் முகத்தில் ஒரு அரை விழுந்தது.

கன்னத்தில் கை வைத்துக் கொண்டே, நர்ஸ் கையைப் பார்த்தார் மருத்துவர். அது மட்டும் சும்மா இருந்தது.

“உன்ன மட்டும் அந்த நோய் தாக்கலையே! உன் கிட்ட இருந்து தடுப்பு ஊசி தயாரிக்கப் போறேன்”
“இப்படி தான் டாக்டர். நேத்து நெருப்பு பட்ட போது கூட ஒண்ணும் ஆகல.கொஞ்சம் வலிச்சுது. கொஞ்சமா பர்னால் தடவினேன். கொஞ்ச நேரத்துல வலி கொஞ்சம் ஆயிடுச்சு”, என்றாள் நர்ஸ்.

“அது சரி. உன்ன அவன் அம்மா கடிசிட்டாங்க போல”

Series Navigationதமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்வாக்குறுதியின் நகல்..
author

கண்ணன் ராமசாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *